9 grader nord - இசைக்குழு
In இசைTuesday, May 26, 2020
9 grader nord (நி கிராதர் நூர்) என்பது நமது தமிழ்ப் பிள்ளைகள் முதன்மையாக இருக்கும் ஓர் இசைக்குழு (band). எப்போதும் தனித்துவமான திசைகளைக் கலைகளில் தேடுபவர்களை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் தமக்கான பிரபல்யம், பொருளாதார வசதிகள் பற்றி அவ்வளவு கவலைப்படாது தம் இயல்பில் கலையில் ஊறியிருப்பார்கள். மாயா (M.I.A),அப்படித்தான் ஒருகாலத்தில் "Galang" என்ற single trackயோடு வந்தபோது அவர் மீது பிடித்த பித்து இன்னும் இறங்காது எனக்குள் இருக்கிறது.
பழக்கப்பட்டுப்போன இசைக்கும், பரிட்சயமான குரல்களுக்கும் பழகிய நமக்கு புதிய முயற்சிகள் முதலில் உள்ளே இறங்காது. மாயாவைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதெல்லாம் இசையா என கேலி செய்து கொண்டிருந்த நண்பரை, மாயாவின் நேரடி இசை (Live ) நிகழ்வுக்குக் கூட்டிக்கொண்டுபோனதன்பின் மாயாவின் இரசிகராக அவர் மாறியிருந்தார். இசை மட்டுமில்லை, மாயா அந்த அரங்கை எப்படி ஒரு intimate இசை நிகழ்வாக மாற்றினார் என்பதை நேரில் கண்டுகளித்தவர்கள் நாங்கள்.
அதுபோலவே 9 grader nordஇன் இசையை இப்படி ஒரு அறைக்குள் இருந்து கேட்பதை விட, அவர்கள் பாடும்போது அரங்கில் நேரில் இருந்து கேட்பது வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லுமென நம்புகின்றேன். போலச் செய்தல் இலக்கியம் உள்ளிட்ட எந்த கலையிலும் செய்தல் எளிது. அரிதானவர்களே அதைத் தாண்டி, புதிதாய் எதையோ தேடிப் போகின்றார்கள். அப்போது அவர்களின் படைப்புக்கள் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் அவர்களை நம் வாழ்வில் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரமுடிகிறது.
எட்வாட் முங்கின் (Edward Munch) ஓவியமான 'அலறலை'ப் (scream) போல இன்னொரு பிரல்யம் வாய்ந்த ஓவியம் 'நோயுற்ற குழந்தை' (sick child). இந்த ஓவியம் முங்கின் வாழ்வோடு மிகுந்த நெருக்கமுடையது. அவரும் அவரது சகோதரியும் காசநோயால் பதின்மத்தில் பாதிக்கப்பட்டு, முங் தப்பிவிட, சகோதரியோ அவரின் 15வயதில் மரணமாகின்றார். இந்த நிகழ்வு முங்கின் வாழ்வு முழுதும் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருந்தது. முங்கின் 'நோயுற்ற குழந்தை' ஓவியத்தில் இருப்பது அவரது சகோதரி. இந்த ஓவியத்தின் மூலம் இறவாத்தன்மையாக அந்த நிகழ்வை முங்க் மாற்றியிருக்கின்றார்.
9 grader nord இசைக்குழு (நோர்வேஜியப் பெயரைத் தமிழாக்கினால் வருவது, உலக வரைபடத்தில் இலங்கை அமைந்திருக்கும் '9 டிகிரிஸ் வடக்கு') ஒரு சந்தர்ப்பத்தில் முங்கின் ஓவியங்களின் பாதிப்பில் ஓர் இசைக்கோர்வையைத் தயாரிக்கச் சொல்லிக் கேட்கப்பட்டபோது, இதன் முன்னணிப்பாடகரான மீரா இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
சிறுவயதிலேயே இந்த ஓவியத்தைப் பார்த்தபோது அது தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். ஓவியத்தில் இருக்கும் குழந்தை ஏதோ ஒருவகையில் தனது நோயை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அவரைப் பராமரிக்கும் பெண்ணால் அதைத் தாங்க முடியாது இருப்பதாலேயே தலைகுனிந்து நோயுற்ற குழந்தையை நேரே பார்க்காது இருக்கின்றார் என்கின்றார்.
ஆகவே, இந்த 'நோயுற்ற குழந்தை' ஒரு தாலாட்டுப்பாடலாகப் பாடப்படுகின்றது. தாலாட்டுப்பாடல்கள் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவை. வழக்கத்துக்கு மாறாக மீரா இந்தத் தாலாட்டுப் பாடல், ஒரு குழந்தை இந்த உலகைவிட்டுப் போகும்போது கடைசியாகப் பாடுகின்ற பாடல் என்கின்றார்.
நோர்வேயின் பிரபல்யம் வாய்ந்த முங்கின் ஓவியமும், நமது தமிழ் மொழியும் இணைந்து இசையாகும்போது அது யூனிவேர்சல் நிலையை அடைகிறது. அதுவும் நிலமெங்கும் பனி மூடத்தொடங்கி மனசும் பரிசுத்தமாகும் நிலையில் கேட்பதற்கு மிகப் பொருத்தமான பாடல் இது என்பேன்.
...........
(1) 'The Sick Child' ஐக் கேட்பதற்கு
https://www.youtube.com/watch?v=TIKIjFr0bVQ
(2) 9 grader nord இன் புதிய இசைத்தொகுப்பான "Jaffna" விலுள்ள பத்துப்பாடல்களையும் கேட்க sportify இன் இந்த இணைப்பைத் தட்டுங்கள்.
https://open.spotify.com/album/05w6PGViE6ZQZQMOXZjn96
(Dec, 2019)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment