கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna'

Thursday, February 17, 2022

னக்கு திரைத்துறை சார்ந்தும், இசை சார்ந்தும் இருக்கும் நண்பர்கள்  குறைவு. அதைவிட இலக்கியஞ்சார்ந்து இருக்கும் நண்பர்கள் மிகக்குறைவு என்பது வேறுவிடயம்.  அவ்வளவு பரிட்சயமில்லாத இவ்வாறான துறைகள் சார்ந்திருக்கும் நண்பர்களிடம் அவர்கள் சார்ந்த துறையில், அசல் படைப்புக்களை -அது எவ்வாறான தரத்தில் இருந்தாலும்- கொண்டுவர முயற்சியுங்களென அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பேன்.


ஒன்றையே தொடர்ந்து ஒருவர் பிரதி/பாவனை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தம் விருப்பம் சார்ந்த விடயங்களில் இருந்து மிக விரைவில் விலகிப் போய்விடுவார்கள் என்பதை ஓர் அவதானமாகச் சொல்வேன். மேலும் ஒருவர் ஏற்கனவே பாடப்பட்டுவிட்ட பாடல்களை மட்டும் பாடிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம் இருக்கப்போகின்றது?  எமக்குப் பிடித்த படைப்பாளிகளைப் போல, நாங்களும் படைப்புக்களை எழுதிக்கொண்டிருந்தால் நமக்கான எழுத்தின் ஆன்மாவை நாம் கண்டுபிடித்துவிடுவோமா என்ன?  இதுதான் இன்றையகால 'மோஸ்தர்' என  நாம் நம் 'முன்னத்தி ஏர்களை'ப் போல எழுதிக் கொண்டிருந்தால் வாசிப்பவர்க்கு அலுப்பு வந்துவிடாதா என்ன?


அவ்வாறான மோஸ்தருக்குள் சிக்குப்பட்டு போகாமல், தனக்குரிய அசல் பாடல்களை இசைத்ததால்தான் இன்று நவீனி (Navz-47) கவனிக்கப்படும் ஒருவராக இருக்கின்றார். இத்தனைக்கும் கனடாவில் வசித்துக்கொண்டிருக்கும் அவரால் ஆங்கிலத்தில் பாடவோ, ஆங்கிலவரிகளை பாடல்களில் கலக்கவோ முடியுமென்றாலும், முற்றுமுழுதாக தமிழிலேயே பாடல்களை  எழுதிப் பாடுகின்றார். அது இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் 'மாஜா'வில் அவரை ஒரு சுயாதீன இசைக்கலைஞராக அடையாளங் காணவைத்திருக்கின்றது. இதே இடத்தில் தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடச் சென்ற பல்வேறு பாடகர்கள் ஏன் காணாமற் போய்க்கொண்டேயிருக்கின்றார்கள் அல்லது ஒரு சிறுவட்டத்திற்குள் மட்டும் பாடி ஏன் சுருங்கியபடியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.


இதேபோல ஷான் வின்செட் இன்னொரு சுயாதீன பாடகராகப் பாடிக்கொண்டிருக்கின்றார். ஒருவகையில் Tupacம்,  Eminemம் கலந்த கலவையென நான் அவரின் பாடல்களைக் கேட்டு என்னளவில் அடையாளப்படுத்தியபோது அவருக்கு முன்னோடிகளென அவர் வேறு சில பாடகர்களைச் சொல்கின்றார். அதுவும் ஒருவகையில் சுவாரசியமானதுதான். 


இப்போது அவரும் நவீனியைப் போல ஒரு சுயாதீனப் பாடகராக 'மாஜா'வில் இருக்கின்றார்.  Made in Jaffna  என்கின்ற புதிய இசைத்தொகுப்போடு  விரைவில் வரபோகின்றார். அவரின் பிற பல பாடல்களைப் போல Made in Jaffna என்கின்ற தனிப் பாடலிலும் நமக்கு ஒரு கதை சொல்கின்றார். ஒருவகையில் இது அவர் கடந்து வாழ்க்கையைப் பற்றிய  'புதிய ஏற்பாடு'  என்கின்றார். 


நான்கு வயதில் யாழிலிருந்து மொன்றியலிலுக்கு வந்து, பின்னர் ரொறொண்டோவில் பள்ளிக்காலம் கழிகையில் இனவாதம், வெறுப்புவாதம் என்பவற்றுக்கால் வாழ்ந்து, வன்முறைக்குள்ளாலும் தப்பி வந்ததைச் சொல்கின்றார். இது என்னைப் போன்று கனடாவிற்கு பதின்மத்தில் வந்த பலர் நுழைந்து, அருந்தப்பில் தப்பி வந்த பாதையுங்கூட. ஆகவே யாழ்ப்பாணத்தில் இருந்து எனத் தொடங்குகின்ற இந்தப்பாடலில் இருப்பது என்னைப் போன்றவர்களுக்கான கதையேதான். 


அதை மட்டும் ஷான் சொல்லவில்லை.  வெள்ளை ஆசிரியர், வெள்ளை ஜீஸஸ்,  வெள்ளைப் பாடசாலை, வெள்ளை சட்டங்களுக்குள் என எல்லாமே வெள்ளையினத்தவர்களால் சூழப்பட்டு, அதில் சிக்குப்பட்ட ஒரு மண்ணிறக்காரனின் தத்தளிப்புக்களையும் சொல்கின்றார். மேலும் அவர் வெளியிட்ட முதல் இசைத்தொகுப்பு அவ்வளவு கவனிக்கப்படாது போக, வாழ்க்கை அவருக்கு ஒரு மகளையும் கையளிக்க, எதையும் செய்யவியலாத இயலாமையில் அலைந்து திரிந்த வாழ்க்கையின் புள்ளிகளையும் இங்கே கூறுகின்றார். ஆனால் இதையும் தாண்டி அவருக்கு இசை மீதிருந்த காதல், இன்று கவனிக்கத்தொரு இசைக் கலைஞராக அவரை நம்முன்னே நிறுத்தியிருக்கின்றது. 


அதேபோன்று 'உயிரே' என்ற பாடல் ஒரு குழந்தை பிறந்தபின் விவாகரத்துப் பெறும் இணையைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச்சூழலில் விவாகரத்து என்பது இன்னும் ஓர் எளிதான விடயமாக இருப்பதில்லை. ஆணொருத்தன் தன் தாயாரிடம் இந்த விவாகரத்து விடயத்தைச் சொல்கின்றான். எதிர்முனையில் அமைதி. ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் துயரம், அவன் அறிவான். அதைவிட தனது இணையிடம் இந்தக் காதலை எவ்வளவு முயன்றாலும் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியவில்லை என்பதைச் சொல்கின்றான். 


தங்களுக்கிடையில் காதல் இல்லாமல், ஒரு குழந்தையை வளர்க்கமுடியாதென்று, குழந்தை மிமியின் தாயாரிடமும் வலியுடன் இந்தப் பாடலில் தன்னை முன்வைக்கின்றான்.  ஆனால்  தன் இணையிடம் உன்னைவிட ஒரு அருமையான தாயார் தன் பிள்ளைக்குக் கிடைக்காதிருக்க மாட்டார் என்கின்ற அவன், எம் பிள்ளையின் நிமித்தம் நமது பிரிவை கடினப்படுத்தாமல் கொண்டுசெல்லலாம் எனவும் வேண்டுகின்றான். 


நான் இப்போது உன்னிடம் என்னை மன்னிக்கச் சொல்லிக் கேட்க வரவில்லை. இந்த வாழ்க்கையின் ஒரு நாள் நீ என்னை உனக்குள் மன்னிப்பாய் என்பதற்காய் பிரார்த்தனை செய்கின்றேன்.  இந்தக் கோடையில் நான் எடுத்த இந்த முடிவானது என் வாழ்வின் இறுதிவரை தொந்தரவுபடுத்தியபடியே வருமென்பதையும் அறிவேன் என்பதையும் சொல்கின்றான். இதுவே இந்தப் பாடல் பிரிவைப்பற்றிப் பாடினாலும் கூட,  அதனூடாக வெறுப்பை உமிழாது, ஒரு காதல் இருந்தது, இப்போதில்லை என்பது கடினமானது, ஆனால் காதலில்லாத வீட்டில் அன்பு வாழாது, அது குழந்தையையும் பாதிக்கும் என்பதால் இந்த உறவிலிருந்து நாம் வெளியேறுவதே சிறந்ததெனன எவரையும் காயப்படுத்தாது பாடப்படுவதால் இந்தப் பாடல் ஒரு முக்கியபாடலாகின்றது.


ஷான் வின்சென்ட் கடந்து வந்த இந்தப் பாதை நெடியதும், கடியதுங்கூட.  அது நம்மாலும் எளிதாக அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய வாழ்வின் பாதை என்பதாலேயே இந்தப் பாடல்கள் நம்மை இன்னும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றது போலும். 


நாளை ஷானை நினைவுகொள்ள இந்தப் பாடல்களே நமக்குப் போதுமாகவும் இருக்கவும் கூடும். கலையின் மீது பித்தங்கொண்டு, அசல் படைப்புக்களைத் தருகின்ற எவருமே தோற்றுப்போனவர்கள் அல்ல, அவர்கள் சில்வேளைகளில் சமகாலத்தில் கவனிக்கப்படாத படைப்பாளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றிபேச வெளியில் தெரியாத (என்னைப் போன்ற) இரசிகர்கள் இருப்பார்கள். பெருங்காதலுடன் இரகசியமாகப் இவர்களைப் போன்றோரைப் பின் தொடர்ந்தபடியும் இருப்போம். அப்படி அவர்களைச் சமகாலம் கைவிட்டால் கூட, கலையின் மீது பித்தங்கொண்டவர்களை அடுத்த தலைமுறை கவனிக்கவே செய்யும்.


*********************


(நன்றி: 'காலம்' - 2022)

0 comments: