கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்

Wednesday, November 16, 2011

Midwinter
by Thomas Transtromer

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

[Translated from the Swedish by Robert Bly]

இடைப‌னிக்கால‌ம்

ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
இடைப‌னிக்கால‌ம்.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
..............

இம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.

சுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.

உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.

இந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து.  இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

ப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌  நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.

என‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு  இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன்.  நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே.  அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.

அடுத்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள்.  அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு.    இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து.  நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.

இறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.

இக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.


நன் பனிக்காலம்
-தமிழாக்க‌ம்; சுகுமார‌ன்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.
.....

இடைகுளிர்காலம்(Midwinter)
-த‌மிழாக்க‌ம்: கார்த்திக்

என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

.............
ஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌  Robert Blyன்   க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.
.................

முத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.

April and Silence
 by Tomas Tranströmer

Spring lies abandoned.
A ditch the color of dark violet
moves alongside me
giving no images back.

The only thing that shines
are some yellow flowers.

I am carried inside
my own shadow like a violin
in its black case.

The only thing I want to say
hovers just out of reach
like the family silver
at the pawnbroker’s.

~ from The Winged Energy of Delight, Selected
Translations, Robert Bly (Perennial, 2004)


இள‌வேனிலும் அமைதியும்

வ‌ச‌ந்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டுக் கிட‌க்கிற‌து.
அட‌ர்ந்த‌ ஊதாக் கால்வாய்
எதையும் பிர‌திப‌லிக்காது
ந‌க‌ர்கிற‌து என்னோடு.

ஒளிர்வ‌ன‌
சில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே

க‌றுப்புப் பெட்டிக்குள்
வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌லினைப் போல‌
என‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.

நான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்
அட‌குக்க‌டையில் வைத்த‌
வீட்டு வெள்ளி போல‌
அடைய‌முடியாத் தூர‌த்தில் மின்னுகின்ற‌து.

8 comments:

பாஸ்கர் said...

அருமையான பதிவு. மிக்க நன்றி.

இதையும் கருத்தில் கொள்ளலாமே?


Thomas Transtromer பயன்படுத்தும் ஸ்வீடிஷ் சொல்- tamburiner என்பது. http://www.blackbird.vcu.edu/v10n1/poetry/transtromer_t/017_page.shtml

கூகுள் இமேஜஸ் தரும் இசைக்கருவிகள் இவை:
http://www.google.co.in/search?hl=en&q=tamburiner&nfpr=1&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&biw=1024&bih=643&sei=M-vDTuOHNdHorQeq6vXeCw

ஆங்கிலம்: http://www.google.co.in/search?q=tambourine&hl=en&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=z-rDTomRA4murAfetLHJCw&ved=0CEoQsAQ&biw=1024&bih=643&sei=1urDTvqGNtDtrQeHz8XJCw

மிக்க நன்றி.

A clinking tambour made of ice என்பதன் பொருள் மிக எளிமையாகவும் அருமையாகவும் உணர்த்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.

11/16/2011 12:00:00 PM
dj said...

நன்றி பாஸ்கர்,நிச்சயம் நீங்கள் குறிப்பிடுபவையும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றேன்.உங்களின் இணைப்புக்கள் ராம்போரின் பற்றிய விரிவான சித்திரத்தைத் தருகின்றன. நன்றி.

11/16/2011 07:03:00 PM
றியாஸ் குரானா said...

நான் கவிதையின் வரியமைப்பை
மாற்றி அமைத்திருக்கிறேன் மொழிபெயர்க்கவில்லை.
இதுகூட ஒருவகை கவிதையாக்கம் என்றே கருதுகிறேன்.

''நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
இடைப‌னிக்கால‌ம்.'

11/17/2011 10:04:00 AM
மீராபாரதி meerabharathy said...

ம்ம்....
நல்லதொரு முயற்சி....
ரசித்தேன்...
சிந்திக்கின்றேன்....
இன்றைய நமது சூழ்நிலைக்கும் பொருந்திப்போகிறதோ.....?

11/17/2011 12:18:00 PM
DJ said...

றியாஸ் குரானா: வித்தியாசமான முயற்சி :)
.....
மீரா: இக் கவிதைகளையும் இதன் மொழிபெயர்ப்புக்களையும் வாசிக்கும்போது பிடித்திருந்தன. அவ்வளவுதான். அதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் தமிழாக்கியபோது இருக்கவில்லை.

11/17/2011 11:33:00 PM
DJ said...

இந்தப் பதிவோடு தொடர்புடைய இன்னொரு சுவாரசியமான பதிவு:
http://livelyplanet.wordpress.com/2011/11/17/for-expats/#comment-1694

2/13/2012 03:26:00 AM
Anonymous said...

உண்மையில் முதல் மூன்று மொழிபெயர்ப்புக்களிலும் ஒரு இழவும் விளங்கல்ல.உங்கள் வரிசைமாற்றம் வாசகனை கவிதைக்குள் அழலக்கிறதே.நன்றி.

6/28/2022 09:01:00 PM
Anonymous said...

சிறப்பான மொழிபெயர்ப்பு நண்பரே
ந க துறைவன் வேலூர்.

6/29/2022 10:40:00 AM