கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Zen is right here

Sunday, December 26, 2021

Zen is right here என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இது Shunryu Suzuki Roshi என்ற ஜப்பானிய ஸென் ஆசிரியரிடம் கற்ற மாணவர்/கள் தொகுத்த நூல். அதில் சிலவற்றை இங்கே தமிழாக்கிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பு வந்தது. அவற்றில் சில...


ஒரு மாலை நேர விரிவுரையின் பின், கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார், "நீங்கள் ஸென் எல்லா இடத்திலும் இருக்கின்றது எனச் சொல்கின்றீர்கள். அப்படியெனில் ஏன் இந்த ஸென் நிலையத்துக்கு நாங்கள் வரவேண்டும்?"

"ஸென் எல்லா இடத்திலும் இருக்கின்றது, உண்மைதான்" சூஸுகி ரோஸி ஏற்றுக்கொண்டார். "ஆனால் உனக்கு, ஸென் என்பது இந்தக் கணத்தில் இங்கே இருக்கிறது" என்றார்.

**************

"சூஸுகி ரோஸி, நீங்கள் பேசுவதை நான் பல வருடங்களாய்க் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், ஆனால் என்னால் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கின்றது. தயவுசெய்து இவற்றைச் சுருக்கிச் சொல்லமுடியுமா? ஆகக்குறைந்தது புத்தமதத்தை ஒரு சொற்றொடருக்குள் குறுக்கிச் சொல்லமுடியுமா?" என்று ஒரு மாணவர் கேள்வி பதில் நேரத்தின்போது கேட்டார்.

எல்லோரும் சிரித்தார்கள். சூஸுகியும் சிரித்தார்.

"எல்லாமே மாறிக்கொண்டிருப்பது," என சூஸூகி சுருக்கிச் சொன்னார்.

********************

ஒருநாள் தேநீர் இடைவெளியின்போது சூஸூகி ரோஸியின் பக்கத்தில் அமர்ந்த ஒரு மாணவர் கேட்டார், "என்னைப் போன்ற பைத்தியக்காரத்தனமான ஸென் மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?"

ரோஸி சொன்னார், " நீங்கள் அனைவரும் ஞானம் அடைந்தவர்களென நான் நினைக்கின்றேன், நீங்கள் வாயைத் திறக்காதவரை."
************

கடுமையான நான்காம் நாள் தியான வகுப்பின்பின், நாங்கள் நோகும் கால்களுடனும், வலிக்கும் முதுகுகளுடனும், இந்த வகுப்பு பிரயோசனமானதா என நம்பிக்கைகளோடும், குழப்பங்களோடும் இருந்தபோது, சூஸுகி ரோஸி தனது பேச்சை மெதுவாக, "இப்போது நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாம்...." என்று தொடங்கியபோது, அவர் "விரைவில் இவை உங்களை விட்டு விலகிவிடும்" எனச் சொல்வார் என் நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால், "இவை அனைத்தும் உங்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்துவரும்" என்று சொல்லி முடித்தபோது, நாங்கள் எல்லோரும் சிரிக்கத் தொடங்கினோம்.

*************************************

தியான வகுப்பின்போது, ஒரு மாணவர் தன்னால் யோசிப்பதை ஒருபோதும் தியானத்தின்போது நிறுத்தமுடியவில்லை எனச் சொன்னார்.

சூஸூகி ரோஸி, "ஏன், ஏதாவது பிணக்குப்பாடு உங்களுக்கு யோசிப்பதோடு இருக்கின்றதா" என்று கேட்டார்.

******************
நான் வாழ்வுக்கும் மரணத்துக்கும் ஏதேனும் அர்த்தமிருக்கின்றதா என்கின்ற கேள்விகளால் திண்டாடிக்கொண்டிருந்தேன். சூஸுகி ரோஸியிடம், நான் இருத்தலியத் தத்துவத் தேடலில் இருக்கின்றேன் எனச் சொன்னேன். அத்துடன் அவரிடம் இதில் அமிழ்வது எனக்கு சுவாரசியமாக இருக்கின்றது, நான் சரியான பாதையில் செல்கின்றேனா எனக் கேட்டேன்.

"இவ்வகையான தேடலுக்கு ஒருபோதும் முடிவு என்பதே கிடையாது" என அவர் சொன்னார்.

********************
ஒருநாள் நான் சூஸூகி ரோஸியிடம் "நிர்வாணமடைதல் என்றால் என்ன"எனக் கேட்டேன்.

"ஒரு விடயத்தை அதன் முடிவுவரை பார்ப்பது" என்று அவர் சொன்னார்.

***********

(Nov 08, 2021)

0 comments: