நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Thich Nhat Hanh உரைத்தவை..

Sunday, May 09, 2021

1.

'நிரந்தரமில்லை' என்பதில் அவதானமாக இருப்பது நல்லது. நாங்களும் எமது நேசத்துக்குரியவர்களும் என்றும் வாழ்ந்துகொண்டிருப்போம் என்று நாங்கள் வாழும் நிலையிலிருந்து இது எங்களை விடுதலை பெறச்செய்கின்றது.

எதன் மீதும் அளவுக்கு அதிகமாய் ஆசையில்லாது அவதானமாக இருப்பது, எது உண்மையான மகிழ்ச்சியென்பதை ஆறுதலாக நேரமெடுத்து அமர்ந்து யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தரும்.

நாங்கள் ஆனந்தமாய் இருப்பதற்கான எல்லா நிபந்தனைகளும் இங்கே, இந்தத் தருணத்தில் ஏற்கனவே எங்களுக்குத் தரப்பட்டு இருப்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.

'எல்லாவற்றையும் போகவிடு'வதில் (letting go) கவனமாக இருப்பது, எங்கள் துன்பங்களிலிருந்து விடுபடச் செய்வதோடு, எங்கள் துயரமான உணர்ச்சிகளை மாற்றவும் உதவும்.

"The Art of Living”


2.

உங்களது ஆழமான விருப்பின் குரலைக் கேட்காது, உங்கள் முழுவாழ்வையும் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் வெறும் தகவல்களைக் கேட்க மட்டும் நீங்கள் செலவழிக்க முடியும். உங்கள் மனதின் ஆழமான குரலைக் கேட்பதற்கு நீங்கள் ஒரு துறவியாகவோ அல்லது தியாகியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை.

உங்களுக்குள் அமைதியும், வெளியும் ஆழமாய்க் கேட்பதற்கு இருக்குமாயின், மற்றவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்கு காதலையும் கருணையும் கொண்டுவரவும், இந்த உலகை நல்லதொன்றாக மாற்றம் செய்யவும் மிகப்பெரும் விருப்பு இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

எந்தவகையான வேலை என்றாலும்- ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவராக, உணவைப் பரிமாறுபவராக, இல்லை மற்றவர்களைப் பராமரிக்கின்றவராக இருந்தால் என்ன- நீங்கள் ஆழமும், தெளிவுமான புரிந்துணர்வையும் உங்கள் நோக்கில் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்களது தொழில் மகிழ்ச்சியை நிறைய உங்களுக்குக் கொண்டுவரும்.

“Silence”3.
ஒவ்வொரு காலையிலும், நாங்கள் விழித்தெழும்போது, எங்களிடம் அவ்வளவு புதிதான இருபத்து நான்கு மணித்தியாலங்கள் வாழ்வதற்காய் இருக்கின்றது. எவ்வளவு அற்புதமான வெகுமதி!

அமைதியையும், இன்பத்தையும், மகிழ்ச்சியையும் எங்களுக்கும், பிறருக்கும் கொண்டுவரக்கூடியமாதிரி இந்த இருபத்து நான்கு மணிகளை நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு வழிகள் இருக்கின்றன.

அமைதி, எங்களுக்கிடையிலும், நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் இந்தக் கணத்தில் இந்த இடத்தில் இருக்கின்றது. கேள்வி என்னவென்றால் நாங்கள் அதை உணர்கின்றோமா, இல்லையா என்பதேயாகும்.

நாங்கள் அவ்வளவு தொலைவிற்குப் பயணித்து நீலவானத்தை இரசிக்கவேண்டும் என்பதில்லை. நாங்கள் எங்கள் நகரையோ அல்லது அயலவர்களையோ விட்டுவிலகித்தான், ஒரு அழகான குழந்தையின் விழிகளை இரசிக்கவேண்டும் என்றில்லை. நாங்கள் சுவாசிக்கும் காற்றுக்கூட எங்களுக்கு மகிழ்ச்சியின் ஊற்றைக் கொண்டுவர முடியும்.

"Peace is Every Step"4.

யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், " இந்த உலகத்தின் நிலைமை கண்டு நீங்கள் கவலைப்படவில்லையா?" நான் மூச்சை எனக்குள் அனுமதித்துவிட்டுச் சொன்னேன், "எது முக்கியமானது என்றால், என்ன உலகில் நடக்கின்றதென்ற பதற்றத்தை உங்கள் இதயத்திற்குள் நிரப்பிக் கொள்ளாது இருப்பதாகும். உங்கள் இதயம் பதற்றத்தால் நிரப்பப்படுமாயின், நீங்கள் நோயில் வீழ்வதுடன், உங்களால் எந்த உதவியையும் பிறருக்குச் செய்யமுடியாதிருக்கும்.

பெரியதும், சிறியதுமான போர்கள் பல இடங்களில் நிகழ்வதுடன், அவை எங்கள் நிம்மதியை இழப்பதற்கும் காரணங்களாகவும் இருக்கின்றன.

பதற்றம், எங்கள் காலத்தின் நோயாகும். நாங்கள் எங்களைப் பற்றி, எங்கள் குடும்பம் பற்றி, எங்கள் நண்பர்கள் பற்றி, எங்கள் வேலை பற்றி, இந்த உலகின் நிலை பற்றி கவலைப்படுகின்றோம். எங்கள் இதயத்தை கவலை நிரம்ப நாங்கள் அனுமதிப்போமாயின், விரைவாகவோ அல்லது பிறகோ நாங்கள் நோய்மை அடைவோம்.5.

எங்கள் தனிப்பட்ட உணர்ச்சிகள், கூட்டு மனச்சாட்சியைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொருத்தரும் இப்போதே எங்களின் கோபத்தை நிதானமாக்கி, எங்கள் சமூகத்திலும், உலகத்திலுமுள்ள வெறுப்பினதும், வன்முறையினதும் ஆழமான வேர்களைப் பார்க்கத் தொடங்கவேண்டும். ஒவ்வொருத்தரும் கருணையுடன், ஆழமாக மற்றவர்கள் கூறுவதைக் கேட்கப் பழகும்போது, இதுவரை நாம் கேட்காததையும் விளங்காததையும், கேட்கவும், விளங்கிக்கொள்ளவும் தொடங்குவோம்.

நாங்கள் கேட்கவும், ஆழமாய்ப் பார்க்கவும் செய்யும்போது, ஒவ்வோரு நாடுகளுக்கிடையில் சகோதரத்துவத்தை உருவாக்கவும் முடியும். அதுவே அனைத்து மதங்களினதும், கலாசாரங்களினதும் உண்மையான ஆன்மீக மரபாகும்.

இந்த முறையால், சமாதானமும் புரிந்துணர்வும் முழு உலகத்திற்குள்ளும் ஒவ்வொரு நாளும் அதிகரிக்க முடியும். கருணையின் அமிர்தத்தை எங்களின் இதயத்தில் உருவாக்குவதே, வெறுப்பிற்கும் வன்முறைக்குமான, பிரயோசனமான ஆன்மீக எதிர்வினையாகும்.

“At Home in the World”6.

ஆன்மீகம் என்பது மதம் அல்ல. இது மகிழ்ச்சியையும், புரிந்துணர்வையும், அன்பையும் உருவாக்கும் ஒரு பாதையாகும்.

அவ்வண்ணமே, நாங்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஆழமாய் வாழவும் முடியும். ஒரு ஆன்மீக பாதையைக் கொண்டிருப்பது என்பது வாழ்க்கையிலிருந்து தப்பியோடுவதோ அல்லது இந்த உலகிற்கு வெளியே ஒரு மகிழ்ச்சியான இடத்தைத் தேடுவதோ அல்ல. மாறாக வாழ்வியல் பிரச்சினைகளை எப்படிக் கையாள்வதெனக் கண்டுபிடிப்பதும், அமைதி, உவகை, ஆனந்தம் என்பவற்றை உருவாக்கி இப்போதே இந்தப் பூமியில் வாழ்வதுமாகும்.

"The Art of Living”7.

சிலவேளைகளில் ஏதோ பெரும் விடயத்தை இழந்தமாதிரி, நாங்கள் வெறுமையையும், வெற்றிடத்தையும் உணர்வோம். எங்களுக்கு இதன் காரணந்தெரியாது, இது மிகவும் தெளிவற்றும் இருக்கும். ஆனால், வெறுமையாக இருக்கும் அந்த உணர்வு எங்களுக்குள் மிக உறுதியாக இருக்கும். நாங்கள் ஏதோ நல்லது நிகழ்ந்து, எங்கள் தனிமையும், வெறுமையும் குறையும் என்று எதிர்பார்க்கவும், நம்பிக்கை கொள்ளவும் செய்வோம்.

எங்களை அறிந்துகொள்வதற்கும், வாழ்க்கையை புரிந்துகொள்வதற்குமான வேட்கை தீவிரமாக எழுவதைப் பார்ப்போம். அத்துடன் நேசிக்கவும், நேசிக்கப்படுவதற்கான ஆழமான தாகமும் இருக்கும். நாங்கள் நேசிக்கவும், நேசிக்கப்படுவதற்கும் கூடத் தயாராக இருப்போம். இவை மிகவும் இயல்பானவை. ஆனால் நாங்கள் மிகவும் வெறுமையாக இருப்பதனால், நாங்கள் எங்கள் காதலை அதற்கான ஒரு மாற்றாகப் பார்க்கின்றோம் .

சில நேரங்களில் எங்களை நாங்கள் விளங்கிக்கொள்வதற்கான நேரம் கிடைப்பதில்லை, இருந்தும் நாங்கள் காதலில் நமக்கான மாற்றைக் கண்டுபிடித்துவிட்டதாய் நினைப்போம். எங்கள் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் இன்னொரு நபரால் பூர்த்தி செய்ய முடியாதென்று அறியும்போது, நாங்கள் தொடர்ந்தும் வெறுமையை உணர்வோம்.

நீங்கள் எதையோ கண்டடைய வேண்டுமென விரும்புவீர்கள், ஆனால் என்ன தேடுகின்றீர்கள் என உங்களுக்குத் தெரியாது இருக்கும். எல்லோருக்குள்ளும் தொடர்ச்சியான ஆசைகளும், எதிர்பார்ப்புக்களும் இருக்கும். ஏதாவது நல்லது நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்மன ஆழத்தில் இருக்கும். ஆகவேதான் உங்கள் மின்னஞ்சல்களை ஒரு நாளில் நிறைய நேரம் திறந்துபார்த்தபடி இருக்கின்றீர்கள்.

"How to Love"8.

உங்கள் துயரத்தை அரவணைத்துக் கொள்ளுங்கள், அதைப் பார்த்து புன்னகையுங்கள், அத்துடன் (உங்கள்) மகிழ்ச்சியிற்கான ஊற்று அங்கே- அதற்குள்ளேதான் இருக்கின்றதென்பதையும் கண்டுபிடியுங்கள். புத்தர்களும், போதிசத்துவர்களும் கூட துயரத்தை அனுபவிக்கின்றார்கள். அவர்களுக்கும், எங்களுக்குமிடையிலான வித்தியாசம் என்னவெனில், அவர்களுக்கு எப்படி துயரத்தை மகிழ்ச்சியாகவும், கருணையாகவும் மாற்றுவது என்பது தெரிந்திருக்கின்றது.

இதற்கு ஒரு உதாரணம் சொல்வதாயின், நல்ல தோட்டக்காரர்கள், பூக்களுக்கு சாதகமாகவோ அல்லது (பசளையாகப் போடும்) குப்பைகளுக்கு எதிராகவோ இல்லாதிருப்பதைப் போன்றது. குப்பையை எப்படிப் பூக்களாக்குவது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே உங்கள் துயரத்தை தூக்கி எறியாதீர்கள். உங்கள் துயரத்தை தொட்டுப் பாருங்கள். நேரடியாக அதைச் சந்திக்கும்போது உங்கள் மகிழ்ச்சி இன்னும் ஆழமாகப் போகும். துயரமும் உவகையும் நிரந்தரமானவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியை எப்படிப் பண்படுத்துவது என்கிற கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்.9.

நீங்கள் மலைகளில் தனியே மின்சாரம் இல்லாது வாழ்ந்தால் அன்றி, மற்றும்படி தொடர்ச்சியாக சத்தங்களையும், தகவல்களையும் தடையின்றிக் கேட்கத்தான் செய்வீர்கள்.
உங்களுக்கு பேசுவதற்கு ஒருவர் இல்லையென்றாலும், கேட்பதற்கு ரேடியோ இல்லையென்றாலும், விளம்பரப் பலகைகள், தொலைபேசி அழைப்புக்கள், டெக்ஸ் மெஸெஜ்கள், சோஸல் மீடியா, கணனித் திரை, பில்கள், பிளேயர்ஸ் மற்றும் இன்னுமின்னும் பல வழிகளில் வார்த்தைகளும், சத்தங்களும் உங்களை வந்து அடைந்தே தீரும்.

சிலவேளைகளில் விமானநிலையத்தின் ஓரு ஓரமான இருக்கையைக் கூட தொலைக்காட்சியின் அலறல் இல்லாது கண்டுபிடிக்கக் கடினமாக இருக்கும். பலரது காலைப் பயணம், ரூவீட்டர், மெஸேஜ், செய்தி, கேம்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் பதிதல் என்று தொலைபேசியிலேயே கழிகிறது.

சிலசமயம் டெக்ஸோ, வேறு தகவல்களோ, ஒலியோ வெளியிலிருந்து வராதபோதும், எங்களின் தலைகள், யோசனைகள் என்னும் பெரும் தொடர் அலைகளால் நிரம்பியிருக்கின்றது.

ஒரு நாளில் எவ்வளவு நிமிடங்களை, உண்மையான தனிமையில் உங்களால் கழிக்க முடிகிறது?10.

காலம் மிக விரைவாக ஓடும்; ஒருநாள் எமது வாழ்வு முடிவதற்கு நெருங்கி விட்டதென்பதைக் கண்டுபிடித்தும், இதுவரை வாழ்வில் என்ன செய்தோம் என்பதை அறியோம் என நினைத்தும் வியப்படையவும் கூடும். சிலவேளைகளில் எங்களின் முழு நாட்களையும் கோபம், பயம் மற்றும் பொறாமையிற்காய் வீணாக்கியிருக்கவும் கூடும். நாங்கள் எங்களுக்குக் கொடுக்கவேண்டிய நேரத்தையும், காலத்தையும் அரிதாகவே கொடுத்திருப்போம்.

எனது வாழ்வில் எதை மிகவும் செய்யவேண்டும் என நினைத்தேனோ அதைச் செய்து கொண்டிருக்கின்றேனா? அது என்னவென நான் எப்போதாவது அறிந்திருக்கின்றேனா?

எங்களின் தலைகளுக்குள்ள சத்தமும், சுற்றியுள்ள இரைச்சலும், எங்களுக்குள் 'இன்னமும் உள்ள அந்தச் சிறிய குரலை' மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் ' எதையோ' செய்வதில் ஓடிக்கொண்டிருப்பதால், எங்களுக்குள் ஆழமாய்ப்பார்த்து, எமது விருப்பங்கள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் தருணங்கள் அரிதாகவே எமக்கு வாய்க்கின்றன.

******************************************

0 comments: