Paris Review, 2025-Spring Issueஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, நஸீர் றபாவின், 'போர் முடிந்துவிட்டது' (The War Is Over) கவிதைகளைக் கண்டேன். நஸீர் 1963 காஸாவில் பிறந்தவர். இந்த கவிதைகள் இப்போது பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை மட்டுமில்லை, என்னைப் போன்ற போருக்குள் வாழ்ந்த அனைவருக்கும் அதன் கொடுமைகளை நினைவுபடுத்துபவை. இதைத் தமிழாக்குவதன் மூலம் ஒருவகையில் நானெனது யுத்தகால அனுபவங்களை மீள நினைத்துக் கொள்கிறேன். அரபிக்கில் எழுதப்பட்ட இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் Wiam El-Tamami மொழியாக்கம் செய்திருக்கின்றார்.
**
போர் முடிந்துவிட்டது
-நஸீர் றபா
(தமிழில்: இளங்கோ)
1.
போர் முடிந்துவிட்டது.
நான் என் உடலைப் பரிசோதிக்கிறேன்—
என் தலை, விரல்கள், கைகள்—
எல்லாம் அங்கே இருக்கிறது.
அவையெல்லாம் இப்போதுதான், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது போல.
2.
போர் முடிந்துவிட்டது.
நான் வானத்தைப் பார்க்கிறேன்.
பறவைகள், மேகங்கள் என அனைத்தையும் நான் தவறவிட்டிருக்கின்றேன்,
போர் விமானங்களைத் தவிர.
3.
போர் முடிந்துவிட்டது.
துடைப்பம் உடைந்த கதவின் தூசை, கண்ணாடித் துண்டுகளை, திருகாணிகளைத் துடைக்கிறது.
அது சிதைக்கப்பட்ட சுவரின் கற்களை,
விளிம்பில் தங்கமுலாம் பூசப்பட்ட தேநீர்க் குவளைகளை,
குடும்ப புகைப்படங்களின் சட்டகங்களை துடைக்கிறது.
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள்; இரவுணவு தட்டுக்கள்.
இவை அனைத்தும் துடைத்தெடுக்கப்பட்டு, என் இதயத்தில் எங்கோ ஓரிடத்தில் குவிந்தன.
4.
போர் முடிந்துவிட்டது.
அம்மா மன்னிப்போடு வந்தார்.
நீ அடைக்கலம் பெற எந்த இடமும் இல்லை -
கல்லறைகள் எல்லாம் அதன் விளிம்புவரை நிரம்பி வழிகின்றதென
அவர் சொன்னார்.
5.
போர் முடிந்துவிட்டது.
நானென் கைகளால் தலையை மூடிக்கொண்டு ஓடினேன்.
மழை பெய்யவில்லை, அவ்வளவு வெயிலும் இல்லை -
நான் பயப்பிடவும் இல்லை -
இப்படியாக ஓடுவதற்கு நான் பழக்கப்பட்டு விட்டிருந்தேன்.
6.
போர் முடிந்துவிட்டது.
நான் ரொட்டியை எடுக்கிறேன், நிறையப் ரொட்டிகளை.
ஒவ்வோர் நண்பனுக்கும் ஒரு ரொட்டியென எடுத்துக்கொண்டு
கல்லறைத்தோட்டத்தை நோக்கிச் செல்கிறேன்.
7.
போர் முடிந்துவிட்டது.
உறக்கத்துக்குப் போவது குறித்து நான் யோசிக்கிறேன்.
தங்கள் பயணங்களுக்குப் போன நண்பர்கள் அனைவரும்
என்னோடு மாலையைக் கழிக்க திரும்பி வருகிறார்கள்.
தனித்து, நானெனது தேநீரை அருந்துகிறேன்.
8.
போர் முடிந்துவிட்டது.
குழந்தைகள பள்ளிக்குத் திரும்புகின்றார்கள்
அங்கே போரால் இடம்பெயர்ந்தவர்கள் வாழ்வதைப் பார்க்கிறார்கள்.
தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குத் திரும்புகின்றார்கள்
அங்கே சிதைந்த இடிபாடுகளைப் பார்க்கின்றார்கள்.
வைத்தியர்கள் மருத்துவமனைக்குத் திரும்புகின்றார்கள்,
அது நோய்களால் நிரம்பியிருப்பதைப் பார்க்கிறார்கள்.
அனைவரும் தமது வீடுகளுக்குத் திரும்ப இப்போது அஞ்சுகிறார்கள்.
அதுவும் இப்படி காணாமற் போயிருக்குமோவெனும் பயத்தால்.
9.
போர் முடிந்துவிட்டது.
எல்லாவற்றையும், எல்லாவற்றையும்
பார்த்த பறவைகள்
பாடியபடி இருக்கின்றன.
இராணுவத்தினரும் தொடர்ந்து பாடியபடி இருக்கின்றனர்.
10.
போர் முடிந்துவிட்டது.
கட்டடங்களைக் கட்டுபவர்கள் வருகின்றார்கள்:
அவர்கள் வளைவுகளுடன் கூடிய கதவுகளைக் கட்டுகிறார்கள்;
கூரைகள் உயரமாக உள்ளன;
யுத்தத்தில் உயிர்பிழைத்தவர்கள் முன்னரைவிட உயரமாக இருக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்துள் டாங்கிகள் நுழைகின்றன,
தலைகள் சாய்கின்றன.
11.
போர் முடிந்துவிட்டது.
பலகணிகளில் நின்று ஆயிரக்கணக்கான குழந்தைகள்
கடந்துசெல்பவர்கள் மீது பரிசு மழையைப் பொழிகிறார்கள்:
ஈத் ஆடைகள், வர்ணக் காலணிகள், அவர்களுக்கு இனி தேவையில்லாத புத்தகங்கள்,
உறைந்த சிரிப்புகள், அவர்களின் அம்மாக்களின் கண்ணீர்.
வழிப்போக்கர்களோ இரத்த ஆற்றுக்குள் நின்று போரின் முடிவைக் கொண்டாடுகின்றார்கள்.
12.
போர் முடிந்துவிட்டது.
நான் எனது தொலைக்காட்சியை அணைக்கிறேன்,
பின்னர் எனது அலைபேசியையும் அணைத்துவிட்டு தூக்கத்துக்குப் போகின்றேன்.
என் கொடுங்கனவுக்குள் இன்னொரு போர் தொடங்குகின்றது.
*
(Apr 11 ,2025)
0 comments:
Post a Comment