மூன்று திரைப்படங்கள்-
It's a Diaster
நான்கு
இணைகள் அடிக்கடி வாரவிறுதிகளில் சந்தித்துக்கொள்கின்றார்கள். அவ்வாறு
சந்திக்கும் வாரவிறுதியில் ஒரு நண்பர் தனது புதிய இணையை அறிமுகப்படுத்த
அழைத்துவருகின்றார். சாதாரணமாய் உரையாடல்களில் தொடங்கி, விருந்துடன்
முடியும் சந்திப்புக்களில், இமமுறை திருமணமான ஒரு இணை தாங்கள் பிரிவதற்கான
செய்தியை விருந்திற்குப் பிறகு கூறுவதற்குக் காத்திருக்கின்றனர். இடையில்
அந்த வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியும், இணையமும் ஒழுங்காய் இயங்காது
போகின்றது.
பிரியவிருக்கும் இணையின் ஆண், தன்
துணைவிதான -வேண்டுமென்று- பில் கட்டாமல் இருக்கின்றார் எனக்
குற்றஞ்சாட்டுகின்றார். இதனால் துரதிஷ்டவசமாய் விருந்திற்குப் பிறகு கூற
விரும்பிய 'பிரியும் செய்தி' முன்னரே மற்ற நண்பர்களுக்குள்
பரவிவிடுகின்றது. மகிழ்ச்சியாய் ஒரு விருந்தை நண்பர்களுக்குக்
கொடுத்துவிட்டு பிரிய நினைத்த திட்டம் இப்படி ஆயிற்றே எனக் கோபத்தில்
அந்தப் பெண் துணை வீட்டை விட்டு வெளியேறுகின்றார். அதேசமயம்,
அயல்வீட்டுக்காரர் உடம்பு முழுக்க பாதுகாப்பான ஆடைகளால் மூடி,
அமெரிக்காவின் ப்ல்வேறு நகர்களில் இரசாயனத்தாக்குதல் நடக்கின்றது. ஒருவரும்
வீட்டை விட்டு வெளியே போகவேண்டாம் என்று எச்சரிக்கின்றார்.
இப்போது
சூழ்நிலை மாறுகின்றது. நான்கு இணைகளும், வீட்டின் கதவுகளை விஷக்காற்று
புகமுடியாதவாறு டேப்பால் ஒட்டிவிட்டு உள்ளே இருந்துகொண்டு அடுத்து என்ன
செய்வதென்று யோசிக்கின்றனர். தங்களால் இந்த இரசாயனத்தாக்குதலில் இருந்து
தப்பமுடியுமா என்ற அச்சத்திடையே தமக்கிடையிருக்கும் உறவுகள் பற்றி இதுதான்
கடைசித்தருணம் போல உரையாடத் தொடங்குகின்றனர். பிரிய நினைத்த இணை பழைய
நினைவுகளில் தம்மைத் தோய்த்து மீண்டும் ஒன்றாகச் சேவதற்கான சமிக்ஞைகளைக்
காட்டத் தொடங்குகின்றனர். பிரிவதற்கான எந்த த்டயததையும் கொண்டிராத
-விரைவில் திருமணம் செய்யவிருக்கும்- இன்னொரு இணை எதிர்பார்க்காமல்
பிரிந்துபோகின்றனர். தமது துணைகளை நேசித்துக்கொண்டு, பிற நண்பர்களோடும்
உறவு கொண்ட சில இணைகளின் புதையுண்ட உண்மைகளும் வெளியில் மிதக்கத்
தொடங்குகின்றன. இவ்வாறாக நினைத்துப் பார்க்காத காட்சிகளும்,பதற்றங்களும்
இந்த இணைகளுக்கிடையில் மாறி மாறி வரத்தொடங்குகின்றன.
இறுதியில்
எப்படியோ வெளியே நடக்கும் இரசாயனத்தாக்குதலில் இறக்கத்தான் போகின்றோம்
என்று இந்த இணைகள் முடிவெடுத்துக் கொள்கின்றனர். இப்போது அவர்களுக்கு
இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று இரசாயனத்தாக்குதல் தங்கள் வீட்டை
நெருங்கும்வரை காத்திருந்து, இறப்பது. ஆனால் அது மிகவும் கொடூரமாய்
இருக்கும். எனெனில் இரசாயனம் உடலோடு கலந்து உடலுறுப்புக்களை ஒவ்வொன்றாக
செயலிழக்கச்செய்துதான் இறுதியில் இறப்பு நிகழுமென அந்த இணைகளில் இரசாயனம்
கற்பிக்கும் ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். இன்னொரு தெரிவு, வீட்டில்
இருக்கும் பல்வேறு வகையான மாத்திரைகளை வைனோடு கலந்து உடனேயே வலியின்றி
இறந்துபோவது. இதில் இரண்டாவது தெரிவை கிறிஸ்தவத்தோடு நெருங்கிய
தொடர்புடையவர் முன்வைக்கிறார். இதில் எந்தத் தெரிவை இந்த இணைகள்
எடுக்கின்றார்கள் என்பதுதான் சுவாரசியமானது.
இப்படத்தில்
வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒன்றையும் காட்டாது -இரசாயனத்தாக்குதலைக்
கூட- அந்தப் பதற்றத்தையும், அவ்வாறு நடந்திருக்கக்கூடிய சாத்தியங்களையும்
சில காட்சிகளால் மட்டும் காட்சிப்படுத்தியபடி, முற்றுமுழுதாக வீட்டுக்குள்
நடப்பவற்றையே திரைப்படமாக்கியிருப்பார்கள். சாதாரணமாய்ப் பார்த்தால்,
கதையென்று ஒன்றுமில்லாத, இப்படி நிகழவே சாத்தியமில்லாத ஒரு திரைப்படம்
போலிருக்கும், ஆனால் வலுவான திரைக்கதையால் அலுப்பின்றி நகர்த்திக்கொண்டே
சென்றிருப்பார்கள். உலகின் கடைசிக்கணம் இப்படித்தான் இருக்கப்போகின்றது
என்றால் நாமெல்லோரும் என்ன செய்வோம் என்று ஒருகணமாவது பார்ப்பவரை ஆழ
யோசிக்க வைக்கின்றார்கள். ஆனால் வாழ்க்கை திட்டமிட்ட பாதையில் செல்வதோ
அல்லது விரும்பியபடி விடயங்கள் நிகழ்வதில்லை என்பதைத்தான் ஏற்கன்னவே
திட்டமிட்டு பிரிய நினைத்த தம்பதிகள் மீண்டும் இணைவதையும், திருமணஞ்செய்யக்
காத்திருக்கும் இன்னொரு இணை திடீரென்று பிரிவதையும்
காட்சிப்படுத்தினார்களோ தெரியவில்லை. இப்படம் நெருக்கமானதற்கு -எவ்வித
எதிர்பார்ப்புமில்லாது- கதை எதுவென்று தற்செயலாய் பார்க்கத் தொடங்கியதும்
ஒரு காரணமோ இருந்திருக்குமோ தெரியாது.
As luck would have it
வேலையில்லாவிட்டாலும்
கணவனை/தகப்பனை நேசிக்கும் குடும்பம். மனைவியுடனான காதலை
மீளக்கண்டுபிடிக்கச் செல்லும் இடத்தில் விபத்து. 18 வருடமாய் ஒழுங்காய்
வீட்டுக்கடனைக் கட்டினாலும் வேலை இல்லாததால் 2 மாதம் கட்டத்தவறியவுடனேயே
கள்ளனைப் போல நடத்தும் வங்கி. அனைவரின் மீதான கோபத்தில் விபத்தை வைத்து
விளம்பரம் செய்ய முயல்தல். ஊடகங்கள் -சிலியில் சுரங்கத்திற்குள் சிக்கிய
தொழிலாளிகளைப் போல- இங்கேயும் நடந்த விபத்தைச் சுரண்ட அவசரப்படுதல். ஆனால்
இங்கே விபத்து நடந்தவர் இறந்தால்தான் 200 மில்லியன் யூரோ என்கின்றது
ஊடகம்.
இறுதியில் என்ன நடக்கிறது... பின் தலையில் குத்திய இரும்புக்கோலுடன்
படுத்திருக்கும் மனிதரோடோ முழுப்படம் நகர்ந்தாலும், மனித
உறவுக்களுக்கிடையிலான அழகான மெல்லிய தருணங்களையும், பணத்தை மீறிய
மனிதாபிமானத்தை நோக்கியும் கவனத்தைக் குவிப்பதால் பார்க்கலாம். இவ்வளவு
நீளத்துக்குப் படத்தை இழுத்திருக்கத் தேவையில்லை. எனினும் எப்போதும்
கவர்ந்திழுக்கும் Salma Hayekற்காகவும், தற்செயலாய்க் கண்டுபிடித்த
Carolina Bangற்காகவும் படத்தின் நீளத்தைக் கூட சற்று மன்னித்துவிடலாம்.
Eat Pray Love
உறவுகள்
என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கதகதப்பானவையோ அந்தளவுக்கு சிக்கலானவையும்
கூட. மேலும் ஒவ்வொருவரும் தத்தம் துணைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே
விசித்திரமான பாதையைப் போன்றதுதான். தந்தையையோ, தாயையோ தேர்ந்தெடுக்கும்
தெரிவுகள் நமக்கிருப்பதில்லை. ஆனால் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது நமதே
நமக்கான தெரிவாக இருக்கின்றது. அந்த ஒரு தெரிவுக்கே வாழ்வில் எத்தனை
கஷ்டப்படவேண்டியிருக்கின்றது. சிலவேளைகளில் த்ம் வாழ்க்கைக் காலம்
முழுதையுமே சிலர் தொலைத்துமிருக்கின்றார்கள்.
இவ்வாறாகத்
தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தத் துணையோடு தொடர்ந்து
வாழமுடியாத ஒரு வெறுமை ஏற்படுகின்றது. திருமண உறவை முறித்துவிட்டு இன்னொரு
ஆடவனோடு ஒரே வீட்டில் வாழத்தொடங்கினாலும் அங்கும் வாழ்வில் எதுவோ ஒன்று
இல்லாதது போலத் தோன்றுகின்றது. ஆகவே அவரையும் கைவிட்டு ஒரு நெடும்பயணத்தை
இத்தாலி - இந்தியா- பாலி என ஆரம்பிக்கின்றார். இத்ற்கு சில வருடங்களுக்கு
முன் பாலிக்குச் சென்றபோது அங்கேயிருக்கும் முதியவர் ஒருவர் இப்பெண்ணின்
கையைப் பார்த்து, நீ உன் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சக்காலத்தில்
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மீண்டும் பாலிக்கு வருவாய் என்பதும்
இவருக்கு நினைவுக்கு வருகின்றது.
பல்வேறு
வகையான உணவுகளுக்கு பிரபல்யம் வாய்ந்த ரோமின் வீதிகளில் மீண்டும் தனக்கான
ருசியைக் கண்டுபிடிக்கின்றார். இதுவரை அமெரிக்காவில் எல்லாவற்றையும் - உடல்
எடை கூடிவிடும்- எனறு கவனமான டயட்டில் இருந்ததையெல்லாம் துறந்துவிட்டு
தனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகின்றார்.
ஒரு இத்தாலியர் 'அமெரிக்கரான உங்களுக்கு வாழ்வில் என்ன எல்லாம் வேண்டும் என
நன்கு தெரியும், ஆனால் அவற்றை அனுபவிக்கத்தான் தெரியாது. நாங்கள்
அவ்வாறானவர்கள் அல்ல, வாழ்வை அனுபவித்து இரசிப்பவர்கள்' என்கிறார்.
இறுதியில் புதிதாய் இத்தாலியில் கிடைத்த நண்பர்களுக்கு அமெரிக்க வகையில்
Thanks Giving Dinner Turkey செய்துகொடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்று
இந்தியாவிற்குப் பயணமாகின்றார்.
இந்தியாவில் ஒரு
சுவாமிஜியின் ஆச்சிரமத்திற்குச் செல்வதே இவரது இலக்கு. இந்தச் சாமியாரை,
அமெரிக்காவிலிருக்கும் அவரின் ஆண் நண்பரே அறிமுகஞ்செய்து
வைத்திருக்கின்றார். மனதுக்கு நிம்மதி நிச்சயம் கிடைக்கும் என
ஆச்சிரமத்திற்குப் போகின்றவர் அங்கே சாமியார் அமெரிக்காவிற்குப்
போய்விட்டார் என்ற முதல செய்திலேயே ஏமாற்றத்தை அடைகிறார். மேலும் அவரால்
அந்த ஆச்சிரமத்தின் சூழலுக்கு எளிதாய்த் த்கவ்மைக்கவும் முடியாதிருக்கிறது,
அமெரிக்காவில் அவருக்கு நெருக்கமான இரு ஆடவரின் நினைவுகளும் அடிக்கடி
வந்து குறுக்கிடுகின்றன. இறுதியில் இன்னொரு நண்பரின் உதவியுடன்
மனதிலிருக்கும் துயரங்களையும், பாவங்களையும் இறக்குகின்றார். இப்போது
எல்லாப் பழைய நினைவுகளையும் உதிர்ந்துவிட்ட தெளிவுடன் பாலிக்குச் செல்லும்
அவர், ஏற்கனவே இவரின் எதிர்காலத்தைக் கணித்த முதியவரைச் சந்திக்கின்றார்.
அவர் இந்தியாவில் கற்ற தியானத்தை தினமும் காலையில் செய்யச் சொல்கிறார்.
வாழ்க்கையின் வெற்றிடம் மெல்ல மெல்லமாய் நிரப்பப்படுகிறது. எதிர்காலம் எதை
தன் கரங்களில் வைத்திருக்கின்றது என்று தெரியாவிட்டாலும் இப்பெண் தனக்குரிய
கணங்களில் வாழத்தொடங்குகின்றார். வெளியில் மட்டுமில்லை மனதிற்குள்ளும்
அழகிய வர்ணங்கள் பரவததொடங்குவதுடன் படம் நிறைவுறுகிறது.
இந்தப்
படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்தபோது, ஓஷோ முன்வைத்த Loneliness
மற்றும் Aloneness குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். Alonenessஐ
நேர்மறையாகவும், Alonenesஐ எதிர்மறையான சக்தியாகவும் ஓஷோ பார்ப்பது
நினைவில் வந்தது. இன்று உலகில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தனிமையில்
உழன்று தம்மைத் தொலைத்துக்கொண்டிருகின்றார்கள். ஒரே வீட்டில் ஒரே வெளியைப்
பகிர்ந்துகொள்ளும் இணைகளில் கூட இந்த loneliness ஒரு துயரைப் போல
படிந்திருக்கிறதென ஓஷோ குறிப்பிடுகின்றார். அதேவேளை alonenessஐ
தன்னையொருவர் அறிவதற்கான, புதிய செயல்களை நிகழ்த்திக்காட்டுவதற்கான
நேர்மறையான விடயமாய்ப் பார்க்கின்றார். அதுவும் முக்கிய்யமாய்
காதலர்க்கிடையில் இருக்கும் -தனித்து இருத்தல்- என்பது அவர்கள்
இருவருக்கும் இடையிலான உறவை இன்னும் ஆழமாக்குவதாகவும், அவ்வாறு
தனித்திருந்துவிட்டு சந்திக்கையில் அந்த உறவு இன்னொரு பரிமாணத்தை அடையவும்
கூடுமெனக் கூறும் ஓஷோ, அவ்வாறு நீண்டகாலம் தனித்து இருந்தவர்களே புத்தர்
உள்ளிட்ட பல போதிசத்துவர்கள் என்கிறார்.
இந்த இடத்திலேயே
ஓஷோ, சார்த்தரின் மிகவும் சர்ச்சிக்கப்பட்ட 'Other is hell' என்ற
விளக்கத்தை எடுத்துக்கொள்கிறார். ஒருவர் தன்னை, த்ன் அகமனதை
நேசிக்காமல்/கண்டுபிடிக்காமல், மற்றவரை/மற்றதை நேசித்தல் சாத்தியமில்லை.
ஆகவே 'மற்றது' என்பது அப்படி தன்னை நேசிக்காத் ஒருவருக்கு நரகமாகவே
இருக்குமென ஓஷோ தான் இதில் கண்டுபிடித்த விளக்கத்தை அளிக்கிறார். அதேவேளை
சார்த்தரில் விளக்கம் வேறுமாதிரியாக இருந்ததாலேயே அவர் பிற்காலத்தில்
இவ்வாறு கூறியதற்காய் வருத்தப்பட்டு அதை மாற்றவும் விரும்பினார் என்பதையும்
நாம் கவனித்தாக வேண்டும்.
Eat, Pray, Love என்கின்ற
இப்படம் முதலில் நாவலாக எழுதப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டே
எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஒருவர் தன் அகமனதை மெல்ல மெல்லமாகப்
பார்க்கத் தொடங்குகின்றபோது தனக்கான ஆனந்த்தை அடைந்துகொள்ளத்
தொடங்குகின்றார். ஆனால் நாளாந்த வாழ்க்கையில் எல்லாமே எங்களை
துரிதப்படுத்திக்கொண்டு இயந்திரமாக்கும் சூழலிலும், நாம் கடந்தகாலததின்
சுவடுகளை காவிக்கொண்டும் வருகின்றபோதும் இவ்வாறு எமக்கான வெளியைக்
கண்டடைதல் என்பது அவ்வளவு எளிதானதுமல்ல. நம்மை நாமே அறிதல் என்பதோ, நம்
சுயத்தில் நம்பிக்கை வைப்பது என்பதோ சுயநலமாய் இருப்பது என்ற அர்த்தமல்ல.
நம்மை நாமே அறியத்தொடங்குகையில் பிறரையும் நேசிக்கத்தொடங்கும் இன்னொரு
உயிர்ப்பான விடயமும் நிகழத்தொடங்குகிறது. அதுவேதான் அனைவருக்கும்
அவசியமானதும், முக்கியமானதுமான விடயமாகும். இன்றைய உலகில் எல்லாமே
பண்டமாகவும், நுகர்வாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் Eat Pray
Love நம்மை நாமே அறிவதற்கு வயதோ, சூழலோ, வசதியோ அவ்வளவு முக்கியமில்லை
என்பதை முன்வைப்பதே என்னளவில் முக்கியமானதாயிருக்கிறது.
(September 12, 2013 at 11:54am)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment