நீங்கள் முன்பு படித்த வளாகத்திற்கு, பின் எப்போதாவது போனதுண்டா? ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாயிருந்த இடங்கள் அந்நியமாகிப் போயிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது புதிய மாணவர்களின் மலர்ச்சியான முகங்களைப் பார்த்தபின், இன்னும் கொஞ்சக் காலம் வளாகத்தில் இருந்து படித்திருக்கலாமோ என்று யோசித்திருக்கின்றீர்களா? கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகள் அழியாமல் இருப்பதும், ஆனால் அதை பின் தொடர்ந்து போக முடியாதென யதார்த்தம் உணர்த்தவும், என்ன செய்வதென்று திகைக்கவும் செய்கின்ற ஒருவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்களா? அப்படியாயின் நீங்கள் உங்களை ஜெஸியில் அடையாளங கண்டுகொள்ள முடியும்.
கலைத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு, இன்னொரு வளாகத்தில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் துறையில் ஜெஸி வேலை செய்துகொண்டிருக்கின்றார். வாழ்க்கையும் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சேர்ந்து வாழ்ந்த காதலி பிரிந்து போகின்றார், ஆடைகளைத் துவைக்கச் செல்லும் இடத்தில் யாரோ ஒருவர் அனைத்து ஆடைகளையும் களவாடியும் செல்கின்றார். வாழ்க்கை என்பது ஆச்சரியங்களினால் மட்டுமில்லை, எதிர்பாராத நெருக்கடிகளினாலும் சூழ்ந்ததென சோர்ந்து போயிருக்கும் ஜெஸியிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அவருக்குக் கற்பித்த, மார்க்சியத்தில் ஈடுபாடுடைய பேராசிரியர் கற்பித்தலிருந்து ஓய்வுபெறப் போகின்றார் எனவும், தனது பிரிவு உபசார விழாவில் ஜெஸியும் கலந்துகொள்ளவேண்டுமென அழைப்பு விடுகின்றார். விழாவில் கலந்துகொள்ள அவ்வளவு பிரியப்படாதபோதும், வாழ்வின் தினசரி நெருக்கடியிலிருந்து தப்பிவிடலாமென்பதால் தான் படித்த வளாகத்திற்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு ஜெஸி போவதற்குச் சம்மதிக்கின்றார்.
பதின்மம் மெல்லியதாகக் கரைந்து முடிகின்ற ஒருகாலத்தில் வளாகம் சென்றிருக்கின்றீர்களா? அப்படியானால் என்னோடும், என்னை அடையாளங் கண்டுகொள்கின்ற ஜெஸியோடும் சேர்ந்து சற்று வாருங்கள். ஜெஸியைப் போலவே மீண்டும் நீண்ட காலங்களுக்குப் பின் வளாகம் செல்லும் உங்களையும் அந்தச் சூழல் வசீகரிக்கவே செய்யும். வாழ்வில் கசப்பான காலங்களைச் சந்தித்திருந்தாலும் வாழவு இன்னும் சலிக்காது உயிர்ப்புடன் இருப்பதைப் போல, உங்களுக்கு வளாகம் எவ்வகையான நினைவுகளைத் தந்திருந்தாலும், நீங்கள் நுழையும்போது உங்களையறியாது goosebumps களைத் தருவதை இப்போது உணர்கின்றீர்களல்லவா?
ஜெஸி வளாகத்திற்குள் நுழையும்போதே ஒரு பதினமராகிவிடுகின்றார். வழி நெடுக இருக்கும் பெஞ்சுகளில் ஏறிக்குதிக்கிறார். கடந்து போகும் அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கின்றார். உற்சாகமிகுதியில் புல்வெளியில் படுத்துக் கிடந்தபடி திறந்த வானத்தை மனம் நிறைந்து இரசிக்கிறார். இனி ஜெஸியைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. நீங்கள், நான், ஜெஸி எல்லோரும் கிட்டத்தட்ட ஒருவராகப் போய்விடுகின்றோம்.
நாம் இப்போது எமக்குப் பிடித்த பேராசிரியரைச் சந்திக்கின்றோம். பிரிவுபசார நிகழ்வில் பேராசிரியரின் நண்பர்களுடன் அளாவுகின்றோம். அங்கே தற்செயலாக அந்த நண்பர் ஒருவரின் மகளையும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு நீங்கள் எப்படியும் பெயரிட்டுக் கொள்ளல்லாம். எளிதாக இருப்பதற்கு ஸிபி என அவளை அழைத்துக் கொள்கின்றேன். ஆரமப அறிமுகத்திற்குப் பிறகு அவளை நீங்கள் சந்திக்கும் எத்தனையோ பெண்களில் ஒருவரென மறந்தும் விடுகின்றீர்கள்.
இடையில் நீங்கள் நீளுமொருவிரவில் ஒரு வித்தியாசமான மனிதனை வளாகத்துப் பெஞ்சில் சந்திக்கின்றீர்கள். அவன் உங்களுக்கு விநோதமானவாத் தெரிந்தாலும், அவனை உங்களுக்குப் பிடித்துவிடுகின்றது. அவன் எளிதில் உங்களுடைய அலுப்பான வாழ்க்கையைக் கண்டுகொண்டதில் இன்னும் ஆச்சரியமடைகின்றீர்கள். இந்த இரவு இப்படியே முடிந்துவிடக்கூடாதென, இசை அதிரும் மாணவர்களின் கொண்டாடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். மகிழ்ச்சியாயிருக்கும் மாணவர்களிடையே உங்களை ஒருவராகப் பொருத்திக் கொள்ள முடியாதிருக்கின்றது. நீங்கள் அங்கிருந்து விடைபெற விரும்புகின்றீர்கள்.
அப்போது தற்செயலாய் ஸிபியை மீண்டும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு உங்கள்
வரவு ஆச்சரியமாயிருக்கின்றது. இவ்வாறான இடங்களிற்குரிய ஆடையை நீங்கள்
அணிந்திருக்கவில்லையெனக் கூறிவிட்டு, உங்கள் கழுத்துப் பட்டியை
நெகிழ்த்துவிடுகின்றாள். நெகிழ்ந்தது உங்கள் கழுத்துப்பட்டி மட்டுமல்ல,
நீங்கள் இறுக்கி மூடியிருந்த இதயத்தின் வாசல்களுமே. எனினும் வெளியே போகவே
இன்னும் விரும்புகின்றீர்கள்.விநோதமான உங்கள் நண்பன், ஸிபியிற்கு உங்கள்
மீது ஏதோ ஈர்ப்பு இருக்கிறதெனச் சொல்லி, நீங்கள் சுதாகரிப்பதற்குள்ளேயே,
ஸிபியுடன் அடுத்தநாள் காலை தேநீர் அருந்துவதற்கான சந்திப்பையும் ஏற்பாடு
செய்துவிடுகின்றான்.
ஸிபியைச் சந்திக்கக் காத்திருக்கின்றீர்கள். இடையில், நீங்கள் வளாக
காலத்தில் வாசித்த பெரும்புத்தகம் ஒன்றை வாசிக்கும் ஒருவனைக் கண்டு
நெருக்கம் கொள்கின்றீர்கள். ஸிபி உற்சாகமாய் வருகின்றாள். தேநீருடன்,
அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பரிட்சயமான
இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் கடந்தகால நினைவுகளை ஸிபியுடன்
உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கின்றீர்கள். ஸிபி இரண்டாமாண்டு மாணவி
என்றாலும் அறிவுக்கூர்மையுடைய பெண். உங்களுக்கு நிகராக எல்லாவற்றையும்
கதைக்க, நீங்கள் இன்னும் நெருக்கத்தை உணர்கின்றீர்கள். அவளுக்குப்
பிடித்தமான நாடக மேடையில், அவள் தன் நினைவுகளைப் பகிர்கிறாள்.
மகிழ்ச்சியின் விளிம்பில் உங்களை முத்தமிட விரும்புகின்றாள். உங்களுக்கு
அச்சமாயிருக்கின்றது. உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஸிபி நெற்றியிலும்,
கன்னங்களிலும் முத்தமிட அனுமதி கேட்கின்றாள்.
வளாகததிற்குள் இருந்த கொஞ்சநாட்களிற்குள் இந்த வாழ்க்கை இவ்வளவு அழகானதா
என்று தோன்றுகின்றது. அதற்கு ஸிபிதான் முக்கிய காரணம் என்பதையும்
நினைவுபடுத்தத் தேவையும் இல்லை. ஸிபியிடமும், வளாகத்திடமிருந்தும்
விடைபெற்றுக் கொள்கின்றீர்கள். ஸிபி, உங்களுக்குக் கடிதம் எழுதச்
சொல்கிறாள். கடிதம் என்பது மின்னஞ்சல்களோ, ரெக்ஸ் மெஸேஜ் போன்ற நவீன
தொழில்நுட்பத்தினால் விளைந்தவற்றையல்ல அவள் குறிப்பிடுவது. கையால், மை
நிறைந்து எழுதபட்ட எழுததுக்கள் என நினைவுபடுத்துகின்றாள். அதுமட்டுமில்லாது
செவ்வியல் மற்றும் ஓபரா இசைகளை அறிமுகப்படுத்துகின்றாள். எப்படி உரிய
முறையில் கேட்பது எனவும் கற்றுத் தருகின்றாள். எழுதும் கடிதங்களினால்
மட்டுமே நீங்களிருவரும் தொடர்பில் இருக்கின்றீர்கள்.ஸிபியின் கடிதங்கள் இப்போதும் உங்களின் வாழ்க்கையின் ஒருபகுதியாகிவிட்டது. கலை என்பது எப்படி வாழ்க்கையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நகர நெருக்கடி வாழ்க்கையிற்குள் இருந்தபோதும் தெளிவாக உணர்ந்துகொள்கின்றீர்கள். நகரத்தில் தனித்திருந்தாலும், வெளியில் காணும் எல்லோரையும் பார்த்து முகம் மலர்ந்து சிரிக்கின்றீர்கள். அவர்கள் பதிலாய்த் தரும் சிரிப்பில் ஸிபியை நினைவு கூருகின்றீர்கள்.
இப்போது சட்டென்று இந்த உறவு எங்கே போய் முடியப்போகின்றதென்று யோசிக்கத் தொடங்குகின்றீர்கள். 19 வயதில் இருக்கும் பெண்ணோடு 30களில் இருக்கும் உங்களுக்கான வயது வித்தியாசம் நெருடலைத் தருகின்றது. வெவ்வேறு காலங்களில் நீங்களும் அவளும் என்ன வய்தில் இருப்பீர்களென தாளில் எழுதியெழுதிப் பார்க்கின்றீர்கள்.நீங்கள் 80களில் இருக்கும்போது அவளுக்கு 70 வயதாக இருக்குமென நினைத்து அந்த நினைவுகளை சற்று ஒதுக்கி வைக்கின்றீர்கள்.
ஒருநாள் ஸிபி உங்களை நேரில் காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். உங்களை அவளின் கடிதங்கள் நெகிழ்த்தியதுபோல, அவளையும் நீங்கள் எழுதியவை மலர வைத்திருக்குமல்லவா? உங்களுக்கு அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்ற தயக்கம் இருக்கிறது. நிறைய யோசித்தபின், வருவது வரட்டுமென ஸிபியைச் சந்திக்க, நீங்கள் படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். உங்கள் எதிர்பாராத வருகை ஸிபியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
அவளது மாணவ அறையில் நீங்கள் இருவரும் இருந்து நிறையக் கதைக்கின்றீர்கள். தற்செயலாய் ஸிபி vampire வகை Twilight நாவல்களைப் படிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படும் நீங்கள் ஸிபியோடு ஒரு விவாதத்தைத் தொடங்குகின்றீர்கள். இவ்வளவு அறிவுக்கூர்மையுள்ள ஸிபி இவ்வாறான நாவல்களை வாசிப்பாள் என்பதை நம்பமுடியாதிருக்கின்றது. ‘இதையேன் வாசிக்கிறாய்?’ என்று கேட்கின்றீர்கள். ‘வாசிக்கும் எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்கவேண்டியிருக்கா, பிடித்திருக்கிறது வாசிக்கிறேன்’ எனகிறாள் ஸிபி. நீங்கள் தொடர்ந்து அது வாசிப்பதற்குரிய நாவலே இல்லை என விவாதிக்கின்றீர்கள். ‘நாவலை வாசிக்காமல், அது குறித்துக் கருத்துச் சொல்வது தவறு, உனக்குப் பிடிக்காதவை எல்லாவற்றையும் எரிக்கச் சொல்லிவிடுவாய் போலிருக்கிறது, இவ்வாறு விவாதிப்பதே ஆபத்து’ என்கிறாள்.
உங்களை ஏதோ ஒருவகையில் ஸிபி தீண்டிவிடுகிறாள். நான் இந்த நாவல்களை வாசிக்கும்வரை உன்னோடு பேசப்போவதில்லையென நாவலையெடுத்துக்கொண்டு போய் வாசிக்கத் தொடங்குகின்றீர்கள். அடுத்த நாள் ஸிபியைச் சந்தித்து, ‘வாசித்து முடித்துவிட்டேன், இதுவே நான் ஆங்கிலத்தில் வாசித்த மிக மோசமான நாவல் ‘என்கின்றீர்கள். ‘அப்படியாயின் மற்றமொழிகளில் இதைவிட மோசமான நாவல்கள் இருக்கின்றதா’ எனத் துடுக்குத்தனமாய் ஸிபி கேட்கிறாள். ‘தெரியவில்லை, ஆனால் இந்த நாவலை மற்ற நாவல்களில் மொழிபெயர்க்கும்போது இதுவே அந்தந்த மொழிகளிலும் மோசமான நாவலாய் இருக்கும் என்பது உறுதி’ என பதிலிறுக்கின்றீர்கள். இங்கேதான் நீங்கள் ஒரு வளாகத்து மாணவர் இல்லையென்பதையும், அதேபோல் நீங்கள் ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஆணாக மாறவில்லை என்பதையும் காலம் உங்களுக்குச் சுட்டி நிற்கின்றது.
அன்றிரவு ஸிபி தன்னோடு தங்கியிருந்த தோழியை வெளியே அனுப்பிவிட்டு, உங்களை தன் அறைக்கு அழைக்கிறாள். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ‘இதுதான் எனக்கு முதன்முறை என்னைக் கவனமாகக் கையாளு’ என்கின்றாள். உங்களுக்கு ஸிபி மீது நட்பை மீறிய காதல் இருக்கிறது. ஏன் காமம் கூட அவ்வப்போது தலைதூக்கிப் பார்ப்பதுண்டு. ஆனால் இத்தனை வயது வித்தியாசமுள்ள பெண்ணோடு, உறவுக்குப் போவது நெருடலாயிருக்கின்றது. நீங்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தவிர்க்கப் பார்க்கின்றீர்கள். ‘எனக்கு எல்லாம் தெரியும், நான் நிறைய யோசித்தே மனமுவந்து என்னைத் தருகின்றேன்’ என்கிறாள் ஸிபி. நீங்கள் அவளை வேறு வழியில் திசை திருப்ப முயல்கின்றீர்கள். ஸிபியிற்கு தன் ஆசை நிராகரிப்பட்டதால் கோபம் வருகின்றது. இனி என்னைச் சந்திக்காதேயென உங்களை அறையை விட்டு வெளியே போகச் சொல்கின்றாள்..
உங்களுக்கு இந்த இரவு மிக நீண்ட இன்னொரு துயர் மிகுந்த இரவாய்ப் போய்விடுகின்றது. பாரிற்குப் போய் நிறைய மதுவை அருந்துகின்றீர்கள். அங்கே உங்களுக்கு ஆங்கில இலக்கியம் படிப்பித்த, புத்தகங்கள் மீது காதல் வரச் செய்த உங்கள் ஆங்கிலப் பேராசிரியையைச் சந்திக்கின்றீர்கள். அவருக்கும் அன்றைய இரவு நிம்மதியற்றதாக இருந்திருக்கும் போலும். இரவிரவாய் நிறையக் கதைத்து, பேராசிரியையின் வீட்டுப் படுக்கையறை வரை போகச் செய்கின்றது. நீங்கள் அவரோடு நெருக்கமாய் இருந்த பொழுதில், ‘நீங்கள்தான் கவிதையை இந்தளவிற்கு வாழ்வோடு நெருக்கம் கொள்ளமுடியும்’ என சொல்லித் தந்தவர் என நெகிழ்கின்றீர்கள். அவர், ‘கவிதையும் வாழ்க்கையையும் ஒன்றென முட்டாள்தனமாய் ஒப்பிட்டுக்கொள்ளாதே’ என் இன்னொரு பாடத்தைக் கற்பித்து விடியமுன்னரே தன் வீட்டை விட்டுத் துரத்திவிடுகின்றார்.
நீங்கள் இப்போது மீண்டும் உங்களின் அலுப்பான வாழ்க்கையிற்குள் நுழைந்துவிட்டீர்கள். இடையில் ஸிபியோடு சந்தித்த இன்னொரு மாணவனின் தற்கொலையைக் காப்பாற்ற படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். அவனுக்கு, ‘புத்திசாலியாக இருப்பதால் இளமையில் சாகலாம் என்று நினைக்காதே, வயது முதிர்ந்து கூட இயற்கையாகச் சாகலாம்’ என்று அறிவுரை கூறுகின்றீர்கள். நீங்கள் வளாக காலத்தில் கனதியான புத்தகங்களை வாசித்ததுபோல, வாசிக்கும் அவனிடம் இன்னும் மனச்சிக்கல்களை ஏற்படுத்தும் புத்தகங்களை பிடுத்தெறிந்துவிட்டு, மனதை இன்னொருபக்கம் திருப்பக்கூடிய, vampire வகை நூற்களை வாசிக்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஸிபியைச் சந்திக்கவே இல்லை.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள் திரும்பவும் புத்தக உலகிற்குள் மூழ்கின்றீர்கள். உங்களின் புத்தக வாசிப்பு, புத்தகக் கடையில் வாசிக்கும் பெண்ணொருத்தியுடன் நட்பைக் கொண்டு வருகிறது. புத்தகங்கள் எப்போதும் எங்களை வேறு உலகில் எங்களையறியாமலே வாழ வைக்கின்றன. புத்தகங்களுடன் எனக்குரிய உலகிற்குள் இருந்துவிட்டேன். இப்போதுதான் கொஞ்சம் வெளி வாழ்க்கையிற்கும், வெளி மனிதர்களோடும் பழக முயற்சிக்கின்றேன்’ எனத் தன் தவிப்பைச் சொல்லும் அனா உங்களுக்குரிய நெருக்கமான அலைவரிசையில் இருப்பதைக் கண்டுகொள்கின்றீரகள்.
பிறகான காலங்களில் உங்களுக்குரிய காதலை அனாவால் மட்டுமே தரமுடியுமென்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் ஸிபியின்றி, அனாவின் அருமையை உணர்ந்திருக்க முடியாது என்பதும் உங்களுக்கும் நன்கு தெரிகிறது. ஸிபி உங்கள் வாழ்வில் வந்ததை நினைவுகூருமுகமாகவும், அவள் தந்த அழகிய நாட்களுக்கு நன்றி செலுத்தவும் அவளுக்கு vampire வகையான ‘டிராகுலா’ புத்தகத்தை அனுப்பி வைக்கின்றீர்கள்.
ஸிபி அந்த நூலைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தருணத்தில் உங்களுக்கான இன்னொரு நாள் அழகாகின்றது. நீங்கள் ஸிபியையோ அல்லது ஸிபி உங்களையோ மறப்பது அவ்வளவு எளிதன்று. எனெனில் எதையும் எதிர்பார்க்காத காதல் என்பது அடியாழங்களில் புதையுண்டு போகாது என்றுமே உயிர்ப்புடன் இருப்பதுதானில்லையா?
( Liberal Arts திரைப்பட பாதிப்பில் எழுதியது)
நன்றி: எனில்
0 comments:
Post a Comment