உறவுகள் என்பது எவ்வளவு அழகானவையோ அதேயளவிற்கு சிக்கலானவையும் கூட. ஏதோ ஒரு தருணத்தில் உறவுகளில் ஏற்படும் சிறுகீறல்கள், சிலவேளைகளில் ஒரு அழகானபாடலைப் போன்று இசைத்துக்கொண்டிருக்கும் வாழ்வைச் சிதைத்தும் விடக்கூடியவை. மைக்கல், ஜோனா என்ற தம்பதிகளிற்குள் இரு இரவுகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், 'கடந்த இரவு' எப்படி எல்லாவற்றையும் சிக்கலாக்கின்றது என்பதையும் பேசமுயல்கின்றது இத்திரைப்படம்.
எல்லாம் போதுமானதாய் இருந்தும், அதற்கப்பால் எதையோ மகிழ்விற்காய்த் தேட விரும்பும் மனங்களையும், இயல்பிலேயே மனிதர்கள் polygamy ஆனவர்களா, அதனால்தான் infidelity மீது மறைமுகமான ஈர்ப்புடையவர்களாய் இருக்கின்றார்களா என்பதையும் பார்ப்பவரிடையே கேள்விகளாய் இது முன்வைக்கின்றது.
அதேநாளில் ஜோனா தற்செயலாய் தன் பழைய காதலனான அலெக்ஸை கோப்பிக்கடையொன்றில் சந்திக்கின்றார். அவரோடு அன்றைய பகலும் இரவும் கழிகின்றது. ஜோனாவிற்கு அலெக்ஸ் மீது ஈர்ப்பு வந்து அவரோடு நெருக்கமாய் அன்றைய பொழுதைக் கழித்தாலும், உடலுறவு சார்ந்த ஒரு புள்ளியிற்கு அது போகும்போது விலகிக்கொள்கிறார்.
ஜோனா யன்னலினூடாக அழுதபடி எதையோ வெறித்துப் பார்த்தபடியிருக்கின்றார். அவருக்கு மைக்கலின் -முன்னரான- வீடு திரும்பல் ஆச்சரியத்தைத் தருகின்றது. ஏன் கருத்தரங்கு முடியமுன்னர் திரும்பினார் என வினாவுகின்றார். 'நான் உன்னைக் காதலிக்கின்றேன், அதனால்..' என்கின்றார். இன்றைய நாளில் அருமையான மதியவுணவுடன் நமது பொழுதைக் கொண்டாடுவோம் எனச் சொல்லவும் செய்கின்றார்.
'அப்படியே செய்வோம்' எனச் சொல்லும் ஜோனாவை மைக்கல் அணைக்கும்போது, ஜோனா கடந்த இரவு அணிந்துசென்ற பார்ட்டி ஸூ அவரது கண்களுக்குத் தெரிவதோடு, ஜோனா அணிந்திருக்கும் உள்ளாடைகள் விருந்தொன்றுக்காய் அணிவதற்கானவை என்பதையும் கண்டுகொள்கிறார். அத்தோடு சட்டென்று இருண்ட திரை மூடி, படம் முடிகின்றது.
உறவுகள் அழகாய் இருந்தாலும் மனித மனங்கள் அதற்கப்பால் எதையாவது தேட விழைகின்றதா என்பதோடு, infidelity என்பதை உடலுறவு சார்ந்து மட்டும் மதிப்பிடமுடியுமா என்பதையும் கேள்வியாக இத்திரைப்படம் முன்வைக்கின்றது. ஜோனா, மைக்கலுடன் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனபோதும், அவர் தன் பழைய காதலன் அலெக்ஸ் பற்றி எதுவுமே சொல்லவில்லை. மேலும் மைக்கல் மற்ற நகருக்குப் போய் தொலைபேசி அழைக்கும்போதுகூட - அலெக்ஸோடு பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் ஜோனா- தான் தன் நண்பனோடு நிற்கின்றேன் என்பதைச் சொல்வதுமில்லை. ஆனால் மைக்கலுக்கு லோராவோடு நிகழ்ந்த உடல்சார்ந்த உறவு போன்ற சந்தர்ப்பம் ஜோனாவிற்கு அலெக்ஸோடு வந்தாலும் அவர் அதைத் தடுக்கின்றார், தாண்டிப் போகின்றார்.
மைக்கலின் ஜோனாவுடனான உறவு, பெளதீக உடல் சார்ந்தது என்பதால் நமக்கு infidelity வெளிப்படையாகத் தெரிகின்றது, ஆனால் ஜோனா அலெக்ஸோடு முத்தமிட்டு தனக்கு இருக்கும் காதலை வெளிப்படையாகக் காட்டினாலும் ஏதோ ஒரு இடத்தில் விலகிப்போகின்ற இடம் நுட்பமானது. அவ்வாறு நிகழ்வது பலருக்குள் இருக்கும் 'ஒழுக்கம்' சார்ந்த மீறமுடியாத ஒரு மதிப்பீட்டின் நிமித்தமாய்க் கூட இருக்கலாம். அப்படியாயின் இன்னொருவனின் மீது இயல்பாய்க் காதல் கொள்ளும் ஜோனாவை infidelityயிற்குள் சேர்க்கமுடியுமா என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
Last Night தவறவிடக்கூடாத ஒரு வித்தியாசமான படமல்ல. எனக்குப் பிடித்த Keira Knightley, Eva Mendes போன்ற நடிகைகள் இருந்தாலும் அவர்களை சரியாய்ப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாய் இதைப் படமாயிருக்கமுடியும். மைக்கலுக்கும் லோராவிற்கும் முகிழும் உறவு -முக்கியமாய் அவர்களுக்கிடையிலான உரையாடல்கள்- செயற்கைத்தனமாகவே இருக்கின்றது.
இப்படத்தின் கச்சிதமற்ற திரைக்கதையிற்கப்பாலும் இது எழுப்பும் மனித மனம் சார்ந்த சில சிக்கலான கேள்விகள்தான் முக்கியமாய்ப்படுகின்றது.
(Apr 24, 2015)
படங்கள்: கூகிள் தேடல்
1 comments:
வாழ்த்துக்களும் நன்றிகளும் இளங்கோ
7/16/2015 04:50:00 AMPost a Comment