ஜூலைக் கலவரத்தின்போது, குழந்தைகளையும் முதியவர்களையும் கூடக்கொல்லும் நாட்டில் தன் பிள்ளைகளை வளர்க்கமாட்டேன என்று கூறி, இந்தக் கதைசொல்லியின் தாய் வெளிநாடொன்றுக்கு குடும்பத்தினருடன் வெளியேறுகின்றார். நாவலில் சிங்களக் குடும்பங்களும் தமிழ்க்குடும்பங்களும் ஒன்றாய் வாழ்ந்த, அவர்களின் பிள்ளைகள் தமிழும் சிங்களமும், ஆங்கிலமும் கலந்த ஒரு கலப்புமொழியைப் பேசிய காலங்கள் இனி என்றைக்குமே வராதா என்பதைப் பற்றியே நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன்.
1983 நிகழ்வுகளால் மிகுந்த குற்றவுணர்வு அடைந்த ஒரு சிங்களச் சமூகம் இருந்ததை, இப்போதும் அதற்காய் வருந்திக்கொண்டிருப்பவர்களை அவர்களின் எழுததுக்களினூடாகப் பார்க்கலாம். இந்த நாவல், முன்பொருமுறை (2007) தமிழாக்கம் செய்த சிங்களக் கவிதையொன்றை வாசிக்க மீண்டும் நினைவுபடுத்தியது.
வன்மையான பிரார்த்தனை
சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.
கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்
போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.
இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது
இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.
எனக்கு ஞாபகத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை
கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.
நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு விகாரை
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.
-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
*Dagoda
(mar 11)
குறிப்பு 02:
Island of a Thousands Mirrors ஐ இப்போது வாசித்து முடித்தாலும், அதில் கடந்துபோக முடியாத பகுதிகள் எனப் பல இருக்கின்றன. முக்கியமான ஒரு தமிழ்ப்பெண் இராணுவத்தால் கூட்டாய் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்குவதை சில வரிகளால் கடந்துசெல்லாது, விபரமாக எழுதிய பகுதி மனதுக்கு மிகவும் அழுத்ததைக் கொண்டுவந்திருந்தது. நாவலை அப்படியே நிறுத்திவிட்டு நண்பரொருவருக்கு தொடர்ந்து வாசிக்கவே கஷ்டமாயிருக்கிறதென text செய்திருந்தேன். அவருக்கும் தொடக்கத்தில் இலங்கையில் நிகழ்ந்தது பற்றி அறியவிரும்புகின்றவர் என்பதால் இதை பரிந்துரைக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு அழுத்தமான பகுதிகளையெல்லாம் தாங்குவாரா என இப்போது யோசிக்கிறேன்.
நாவலின் முற்பகுதியில் ஒரு தற்கொலைப்போராளியின் சம்பவம் விபரிக்கப்பட்டு எப்படி இவர்களால் எளிதாய் உயிரைத் துறக்கமுடிகிறதென கேள்வி எழுப்பப்படும். அதன் காரணங்களைத் தேடிப்போகின்ற ஒருபுள்ளியாக பாலியல் வன்புணர்வு இருப்பதை வாசிப்பவர்கள் கண்டுணரமுடியும்.
(mar 12)
குறிப்பு 03:
நீங்கள் வாசிக்குமொரு நாவல் உங்களைப் பாதிக்கிறது. உங்கள் பதின்மக் காலங்களையும், போர் பற்றிய ஞாபகங்களையும் கிளறும் அந்த எழுத்தின் வீரியத்தை வியக்கின்றீர்கள். நாவலாசிரியருடன் உங்கள் வாசிப்பையும் நெகிழ்வையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றீர்கள். அவர் உடனேயே உங்களுக்குப் பதிலளித்தால் எப்படியிருக்கும்? அவ்வாறான ஒரு சந்தர்ப்பம்...
Hi Elanko,
I am so happy to hear from you and that you liked the book. I was very scared when I was writing it that I didn't know anything about the war zone and what you all went through. So it makes me very happy to hear that you connected with what I wrote.
-Nayomi
(apr 03)
0 comments:
Post a Comment