இந்நாவல் சிலியில் 1985ல் நிகழும் பூகம்பத்துடன் ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் நினைவுகளுடன் தொடங்குகின்றது. நகரொன்றில் தமக்கான தனித்துவங்களுடனும் தனிமையுடனும் இருக்கும் மனிதர்களை பூகப்பம் ஒரேயிடத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றது. அப்போது சிலியில் பினோச்சேயின் இருண்ட ஆட்சி நடக்கின்றது. இந்தவேளை ஒன்பது வயதுச் சிறுவன், தன்னிலும் மூன்று வயது மூத்த கிளாடியாவைச் சந்திக்கின்றார். அவர் மீது வயதுக்கு மீறிய மெல்லிய ஈர்ப்பு சிறுவனுக்கு இருக்கின்றது. கிளாடியாவை ஈர்க்கும் நோக்கில், கிளாடியாவின் வேண்டுகோளிற்கிணங்க, அவரின் மாமா ஒருவரை இந்தச் சிறுவன் உளவு பார்க்கச் சம்மதிக்கின்றார். தனியே வசிக்கும் கிளாடியாவின் மாமாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காய், தன் பெற்றோரிடம் வயிற்றுக்குப்பிரச்சினை எனப் பொய்சொல்லி பாடசாலைக்குக் கூடச் செல்லாது, தீவிரமாய் வேவு பார்க்கின்றார்.
ஒருமுறை கிளாடியாவின் வீட்டில் ஒரு இளம்பெண் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அந்தப் பெண் எங்கே போகின்றார் என பின் தொடர்ந்து தொலைதூரத்திற்கு பஸ்சில் இச்சிறுவன் போகின்றார். பின்னாளில் கிளாடியா இன்னொரு பதின்மரை தன் நண்பராக அறிமுகப்படுத்துகின்றார். இனிமேல் கிளாடியா தன்னைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை என்கின்ற பொறாமை காரணமாக, இந்த உளவு பார்க்கும் வேலை, தானாகவே இல்லாமற்போகின்றது.
இரண்டாவது அத்தியாயம், இந்நாவலை எழுதும் எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இன்னும் சொல்லப்போனால் மேலே கூறப்பட்ட முதலாவது அத்தியாயம், இந்த நாவலாசிரியரால் எழுதப்படும் ஒருநாவலின் பகுதியே ஆகும், இவ்வாறாக ஒரு நாவலிற்குள் இன்னொரு நாவலாக கதை வளர்கின்றது. நாவலாசிரியருக்கு எமெ என்கின்ற பெண்ணோடு நீண்டகால உறவு இருந்து இப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாவலாசிரியருக்குள் இன்னும் எமெ மீதான காதல் இருக்கின்றது.
மூன்றாம் பாகம், மீண்டும் நாவலாசிரியர் எழுதும் நாவலிற்குள் போகின்றது. முதலாம் பாகத்தில் சிறுவனாக இருக்கும் சிறுவன், தற்செயலாக தன் குழந்தைமைக்கால நண்பியான கிளாடியாவை நீண்ட வருடங்களின் பின் சந்திக்கின்றார். கிளாடியா இப்போது நியூ யோக்கில் வசிக்கின்றார். அவருக்கு ஆர்ஜென்ரீனா காதலர் ஒருவரும் இருக்கின்றார். கிளாடியா, தன் தகப்பனின் மறைவிற்காய் சிலியிற்குத் திரும்பி வருகின்றார்.
அப்போது கிளாடியா தன் சிறுவயது இரகசியத்தை இந்த -வளர்ந்துவிட்ட- சிறுவனுக்குச் சொல்கிறார். பினோச்சேயின் ஆட்சிக்காலத்தில் கிளாடியாவின் மாமா எனப்பட்டவர் பினோச்சேயின் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பும் இயக்கத்திற்காய் ஒரு தலைமறைவுப் போராளியாகச் செயற்படுகின்றார். அத்துடன் கிளாடியாவின் மாமா எனப்பட்ட ராகுல், உண்மையில் கிளாடியாவின் தந்தையாகிய ரொபர்டோவே.
அன்றைய இருண்டகாலத்தில் கிளாடியாவின் மாமாவான ராகுலை ஆர்ஜென்ரீனாவிற்கு அனுப்பிவிட்டு, அவரின் அடையாளத்தில் ரொபர்டோ தலைமறைவாக சிலியில் இயங்குகின்றார். ஆகவே இயக்க இரகசியங்கள் அரசால் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதற்காய், அவர் கிளாடியாவின் குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்கின்றார். இப்படி ஒரு தலைமறைவு வாழ்வை தன் தகப்பனார் வாழ்கிறார் என்று கிளாடியாவிற்கு அவரின் தாயாரின் கூறப்பட்டாலும், அதை இரகசியமாக வைத்திருக்கச் சொல்லப்படுகின்றது. முதல்பாகத்தில் சிறுவனாக இருக்கும்போது அவர் பின் தொடர்ந்து பஸ்சில் போகின்ற இளம்பெண் வேறு யாருமல்ல, கிளாடியாவின் மூத்த சகோதரியே அது.
இந்த நாவலின் ஓரிடத்தில், 'நாம் யாரோ ஒருவரின் கதையை சொல்லத் தொடங்குகின்றோம், ஆனால் இறுதியில் நாம் நமது கதையையே சொல்லி முடிகின்றோம்' எனச் சொல்லப்படுவதைப் போல இந்நாவலாசிரியர் முதல் அத்தியாயத்தில் எழுதுவதாய்க் கூறும் கதையும், இரண்டாம் அத்தியாயத்தில் அவரைப் பற்றிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுவதும்.... எது நிஜம் எது புனைவு என்கின்ற இரண்டும் கலக்கப்பட்ட ஓர் இடத்திற்கு இந்நாவலை வாசிக்கும் நாங்கள் மூன்றாம் பாகத்தில் வந்தடைகின்றோம்.
தகப்பனின் மறைவிற்காய் நாடு திரும்பும் கிளாடியாவிற்கும் அவரின் மூத்த சகோதரிக்கும் -பூர்வீக வீடு யாருக்கு உரித்து என்பதில்- சச்சரவு வருகின்றது. கிளாடியா நமக்குக் கதையைச் சொல்பவரோடு வந்து தங்குகின்றார். பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் அவருக்கும் கிளாடியாவிற்குமிடையில் உடல்சார்ந்த உறவும் இயல்பாய் மலர்கிறது. ஒருநாள் சடுதியாய் கிளாடியா கதைசொல்லியின் பெற்றோரைச் சந்திக்கவேண்டும் எனவும், தான் சிறுவயதில் கழித்த நகருக்குப் போகவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார். கதை சொல்லியிற்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை. எனெனில் தன் இருபதாவது வயதில் வீட்டை விட்டு விலகியோடி, பகுதிநேரமாய் தானே உழைத்து பல்கலைக்கழகப் படிப்பையும் முடித்தவர். பெற்றோருக்கும் அவருக்குமிடையில் விலகல் வந்தற்கு, சொல்லப்படாத நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
மீண்டும் பெற்றோரிடம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரும்பும், கதைசொல்லியிற்கும் அவரின் தந்தையிற்கும் அரசியல் குறித்த புள்ளிகளில் முரண் உரையாடல் நிகழ்கின்றது. தந்தை பினோச்சேயின் மறைமுகமான ஒரு ஆதரவாளரென கதைசொல்லி குற்றஞ்சாட்டுகின்றார். அரசியல் சூடாகும் இரவுணவு வேளையில் எல்லோரும் ஒவ்வொரு தனித் தீவுகளாகின்றார்கள். கிளாடியா ஒரு பினோச்சே எதிர்ப்பாளரின் மகள் என கிளாடியா இல்லாத சமயத்தில் கோபத்துடன் கதைசொல்லி பெற்றோரிடம் கூறுகின்றார். மகனுக்கும் தந்தையிற்கும் விரிசல் வந்ததைப் பார்த்த தாய், தாங்கள் அலெண்டேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லாததுபோல, பினோச்சேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லை என்கின்றார்.
உண்மையில் இது இவ்வாறான சர்வாதிகார/கொடூர ஆட்சியில் வாழ்ந்த தலைமுறையினருக்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் இடையில் வரும் -அவ்வளவு எளிதில் தீர்க்கமுடியாத- மிகப்பெரும் சிக்கல். ஹிடலரின் ஆட்சியில் இருந்த ஜேர்மனியின் தலைமுறையிற்கும், அத்ற்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கும் வந்த முரணும் இதுவே. அதைப் போன்றே சிலேயின் பினோச்சேயின் காலங்களில் தப்பிப்பிழைத்த தலைமுறையினர், பினோச்சேயின் காலங்களின் பின்னாலும் கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாவலின் ஓரிடத்தில் 'நாம் போர் முடிந்துவிட்டதென மீண்டும் வீடு திரும்புகின்றோம். ஆனால் உண்மை என்னவென்றால், போர் இன்னும் எங்களின் மனங்களில் முடியவே இல்லை என்பதாகும்' எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு பெரும் அழிவின் பின்னாலோ/கொடுங்கோல் ஆட்சியின் பின்னாலும் அவற்றின் வடுக்கள் அவ்வளவு எளிதில் மறைவதுமில்லை, மறைக்கவும் முடியாது.
ஒருநாள் தங்கலே இனிதாய் அமையாத நிகழ்வாய் கதைசொல்லியிற்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்பட்டுவிடுகின்றது. மீண்டும் தமது சொந்த நகருக்கு கதைசொல்லியும் கிளாடியாவும் திரும்புகின்றனர். கிளாடியாவும் சிலநாட்களுக்குள், சண்டைபிடித்த தன் சகோதரியோடு போய்ச் சேர்ந்ததோடு, சிலியில் தனக்கு எதுவுமில்லை அமெரிக்கா மீளப்போகின்றேன் என்கின்றார். 'என்னை விட்டு உனக்கு இன்னொருத்தன் மீது பிடிப்பு வந்துவிட்டதா?' என கிளாடியாவின் ஆர்ஜென்ரினாக காதலரை நினைவில் வைத்து கதைசொல்லி கேட்கின்றார். 'என் மனதில் இப்போது எந்தக் காதலரும் இல்லை. ஆனால் அப்படியொருவர் இருப்பதாய் நீ நினைத்துக்கொள்வதுதான் நல்லது. எனென்றால் அப்போதுதான் என்னை உன்னால் மறக்கமுடியும்' என்கின்றார்.
இறுதி அத்தியாயத்தில், நாவலாசிரியர் எமெயிடம் 'நான் உன்னைப் பற்றித்தான் என் நாவலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நீ வாசிக்கவேண்டும்' என்கிறார். அந்தப் பிரதியை வாசிக்கும் எமெ, 'நீ நன்றாக நாவல் எழுதியிருக்கின்றாய். ஆனால் என்னைப் பற்றி நீ எழுதியதைவிட, நீ உனக்கான கதையைத்தான் இதில் எழுதியிருக்கின்றாய்' என்கின்றார். இப்படி முன்னர் கணவன்-மனைவியாய் இருந்த இவர்கள் பிரிந்து மீண்டும் இணைந்தாலும், எந்த இடத்திலும் தாங்கள் பிறரைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எனெனில் அந்தத் திசையில் மீண்டும் போனால் இன்னொரு பிரிவே வரும் என்பதை இருவரும் நன்கு அறிந்திருக்கின்றனர் ஆனால் அதேசமயம் ஒரு இயல்பான உறவு தங்களுக்கிடையில் இப்போது இருக்கவில்லை என்பதையும் உணர்கின்றார்கள். ஒருநாள் எமெ -மீண்டும்- நாவலாசிரியரை விட்டுப் பிரிந்து போகின்றார்.
நாவலாசிரியர் மீண்டும் தனிமையுடனும், எழுதி முடியா நாவலின் பிரதியுடனும் இருக்கின்றார். சிறுவயதில் வந்த பூகம்பத்தைப் போன்று திரும்பவும் ஒரு பூமியதிர்ச்சி நகரத்தில் ஏற்படுகின்றது. 'எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா?' என விசாரித்தபடி நாவலாசிரியர் வீதிகளினூடாகச் செல்கின்றார். எமெயின் வீட்டிற்குள் சென்று எமெ எவ்வித ஆபத்துமில்லாது இருக்கின்றாரா எனக் கேட்க விரும்புகின்றார். ஆனால் எமெ நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு எமெயைச் சந்திக்காது அவரது வீட்டைத் தாண்டிச் செல்கின்றார். எமெயிடம் அவருக்கு இன்னும் அன்பும் பரிவும் இருந்தாலும் அவர்களுக்கிடையில் இனி காதல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதாக நாவல் முடிகின்றது.
நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த இரண்டு நாவல்களைச் சேர்ந்த மூன்றாவது நாவலை வாசகர்களான நாங்கள் என வாசிப்பதென மாயச்சுழல் நிறைந்த வாசிப்பைத் தருகின்ற புதினம் இது. கிளாடியாவும், எமெயும் ஒரே பாத்திரத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்று தோன்றச் செய்வது போல கதைசொல்லியும், நாவலாசிரியரும் ஒருவரோ எனச் சந்தேகத்தையும் வாசிக்கும்போது இது தரக்கூடியது.
இந்நாவலில் வரும் நாவலாசிரியர், கிளாடியாவின் பாத்திரத்தை உருவாக்கி நாவலொன்றை எழுதத்தொடங்குவது, அவர் தன் நடைமுறைவாழ்வில் தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்ட மனைவியான எமெயுடன் மீண்டும் இணைந்துகொள்வதற்கான முயற்சியேயாகும். ஆகவேதான் தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை எமெ வாசிக்கவேண்டுமென ஒவ்வொருபொழுதும் விரும்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த நாவலை வாசிப்பதை எமெ ஒத்திவைப்பதுடன் இறுதியாய் வாசிக்கும்போதுகூட நீ என்னைப் பற்றி எழுதியிருக்கின்றாய். அது உன் பார்வையினூடு பார்க்கும் நானே தவிர, உண்மையான நான் அல்ல எனத்தான் சொல்லவும் செய்கின்றார்.
இறுதியில், நாவலாசிரியரால் அந்த நாவல் பூர்த்தியாக்கப்படவுமில்லை. எமெ மீண்டும் திரும்பி வந்து அவருடன் சேரவுமில்லை. ஆனால் பினோச்சே காலத்தின் இருண்ட பக்கங்களும், அமைதியாக்கப்பட்ட குரல்களும், மனச்சாட்சிகளின் குற்ற வாக்குமூலங்களும் முடிக்கப்படாத பிரதியிலிருந்து வாசிக்கும் நமக்கு கடத்தப்படுகின்றன. அதுவும் முக்கியமானதே.
வீடு திரும்புதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அவ்வாறு வீடு திரும்பியவர்களுக்கும், அவர்கள் விட்டு விலகிச் சென்றதைப் போல, அந்தப் பழைய சூழ்நிலைகள் அப்படியே திரும்பவும் வாய்ப்பதுமில்லை. எவரெனினும் வீடு திரும்புகின்றார்களோ, இல்லையோ, அவர்களால் நினைவுகள் என்றென்றைக்குமாய் சுமந்துகொண்டிருக்கும் வரலாறு எனும் வீடுகளிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பியோடவும் முடிவதில்லை.
(நன்றி: 'அம்ருதா' - 2015, ஜூன் இதழ்)
0 comments:
Post a Comment