கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Theory of Everything

Thursday, July 23, 2015


லகில் தம் திறமைகளினால் பிரபல்யமடைந்தவர்கள் நமது கவனத்தை எப்போதும் ஈர்த்தபடியிருப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் எமக்குத் தெரிவது அவர்களின் ஒருபக்க வாழ்க்கையென்றால், இன்னொருபுறம் அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு அவர்களைப்பற்றிய வேறொருவிதமான வாழ்க்கை தெரியவும் கூடும். முக்கியமாய், பிரபல்யம் அடைந்தவர்களின் துணைகள் அவர்களைப் பற்றி மனந்திறந்து பேசும்போது/ எழுதும்போது சிலவேளை நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் விம்பங்கள் உடைந்து நொறுங்கிவிடவும் கூடியவை. அந்த 'உடைத்தல்' எழுத்துலகத்திலிருந்து, விஞ்ஞான உலகம் வரை எல்லாப் பக்கங்களிலும் விரியக்கூடியது. 'The thory of everything' என்கின்ற இப்படம் ஸ்ரிபனின் (Stephen Hawking) முன்னாள் மனைவி ஜேன் எழுதிய 'Travelling to Infinity – My Life with Stephen' என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், ஸ்ரிபனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை விட அவரின் தனிப்பட்ட வாழ்வையே அதிகம் இந்தப்படம் ஊடுருவிச் செல்கிறது.

முக்கியமாய் motor neuron நோயினால் 20களிலேயே பாதிக்கப்பட்டு  2 ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழமுடியும் எனச் சொல்லப்பட்ட ஸ்ரிபனைக் காதலித்து திருமணமும் செய்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஜேன் சேர்ந்து வாழ்ந்துமிருக்கின்றார். கடவுளை மறுத்து பிரபஞ்சம் கருந்துளைகளிலிருந்து உருவாகியதென நம்பும் ஒருவரும், கடவுளிடமும் தேவாலயத்திலும் நம்பிக்கை கொள்கின்ற இன்னொருவரும் சேர்ந்து வாழ்வதற்கு காதலின்றி வேறெது காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

ஸ்ரிபனோடு வாழுங்காலத்திலே ஜேனுக்கு இன்னொருவருடன் காதல் வருவதும், அதை ஸ்ரிபன் ஒருவகையில் ஏற்றுக்கொள்வதுமென யதார்த்தத்தை உணர்ச்சித்தளத்திற்குள் அதிகம் கொண்டு செல்லாது படம் விரித்துச்செல்கின்றது. பிறகு அவரைப் பராமரிக்கும் தாதியோடு சேர்ந்து வாழ்வதற்காய் ஸ்ரிபன் ஜேனை விட்டுப் பிரிந்து போகின்றார். நிஜவாழ்வில் (படத்தில் இக்காட்சிகளில்லை) இதன்பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளின் பின் ஜேனும் ஸ்ரிபனும் விவாகரத்துப் பெற்று, இருவரும் தமக்குப் பிடித்தவர்களை திருமணஞ்செய்தும் கொள்கின்றனர்.

2008 திருத்தி/திருப்பி எழுதப்பட்ட ஜேனின் நினைவுகளின் நூலையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டபோதும், ஜேன் 1999ல்எழுதிய 'Music to Move the Stars: A Life with Stephen' நூலில் தன் திருமணம் குறித்து சற்று கர்ரசாரமாகவும் எழுதியதாகவும், பின்னர் சிலவற்றை மென்மையாக -திருத்திய நூலில்- மாற்றி எழுதியதாகவும் கூறப்படுகின்றது. ஆக, இரண்டாவது நூல் வெளிவந்தபோது ஜேனுக்கும் ஸ்ரிபனுக்கும் இடையில் ஒரு சுமுகமான உறவு மீண்டும் முகிழ்ந்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 
ன்னுடைய நோய் பற்றியோ அதன் வலியோ எதையும் தன் குடும்பத்திடம் மட்டுமின்றி, தன் நெருங்கிய துணையான ஜேனிடம் கூட ஸ்ரிபன் மனந்திறந்து பேசியதில்லை எனப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதுபோலவே ஜேன் நிறையக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எழுதிய Music to Move the Stars: A Life with Stephen பற்றிக் கருத்துக்கேட்டபோது, தான் தன்னைப் பற்றி எழுதப்படும் எந்த biography யையும் வாசிப்பதில்லை என்றே
ஸ்ரிபன் கூறியிருக்கின்றார். ஆனால் இந்தப் படத்தை ஸ்ரிபன் பார்த்ததோடு சில இடங்களில் தனது சொந்தக்குரலைப் பாவிக்கவும் அனுமதி கொடுத்திருக்கின்றார் என்றால், இத்திரைப்படம் அவரது சொந்தவாழ்க்கையிற்கு நெருக்கமாகத் திரைப் படமாக்கப்பட்டிருக்கிறதெனவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

The Beautiful Mind ற்குப் பிறகு பிரபல்யமான ஒருவரைப் பின் தொடர்ந்து எடுக்கப்பட்ட படங்களில் கவனிக்கத்தக்கதொரு படமிது. The Beautiful Mindல் நாஷ் தொடக்க காலத்தில் அவரைப் பராமரித்த தாதியொருவருடன் நெருங்கிப் பழகியதும், பின்னர் அந்தப் பெண் தான் கர்ப்பமெனக் கூறியபோது தன் குடும்ப வரலாறு/அந்தஸ்து காரணமாக அந்தப் பெண்ணை விட்டு நாஷ் விலகியவர் எனவும், ஆனால் அதைப் படமாக்கியபோது நேர்மையாகத் திரையில் காட்டவில்லை என்ற விமர்சனம் பின்னர் அப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு The Thory of Everythingல் முக்கியமான எதுவும் மறைக்கப்பட்டிருக்காதெனவே நம்புகிறேன்.

(Dec 17,2014)

0 comments: