சரவணன் சந்திரனின் 'ஐந்து முதலைகளின் கதை'யை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் வாசிக்கும் அவரின் முதல் நாவலும் இதுவே. நூலகத்தில் இதைக்கண்டு எடுத்துவரும்போது நண்பர், 'உனக்குத்தானே சரவணன் சந்திரன் பிடிப்பதில்லை, பிறகேன் எடுத்து வந்தாய்' என்றார் . உண்மைதான், நான் எனக்குப் பிடித்த/வாசித்த படைப்பாளிகள் என்று நண்பருடன் அவ்வப்போது பேசும்போது சரவணன் சந்திரன் என் உரையாடலில் ஒருபோதும் வந்ததில்லை. அத்துடன் சரவணன் சந்திரன் எழுதிக்குவிக்கும் வேகத்தில், நான் அவரை எனக்குரிய ஒரு படைப்பாளியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் உண்மை
இப்போது சரவணனே பரவாயில்லை என்றளவிற்கு பெருமாள் முருகன் அவ்வளவு எழுதிக்குவிக்கின்றார் என்பது வேறுவிடயம். காலச்சுவடில் ஒருகாலத்தில் வேலை பார்த்த சரவணன் சந்திரனோ அல்லது அதனோடு இப்போதும் நெருக்கமாக இருக்கும் பெருமாள் முருகனோ, காலச்சுவடைத் தொடங்கிய சுந்தர ராமசாமி தன் வாழ்க்கைக் காலத்தில் மூன்றே முன்று நாவல்களை மட்டும் எழுதினார் என்ற அரிய விடயத்தையும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருந்திருக்கலாம்.
நண்பரிடம் நான் கூறினேன், 'உண்மைதான், சரவணனின் எழுத்து நடை எப்படியிருக்கின்றது என்பதற்காகவேனும் நான் ஒருமுறை அவரை வாசித்துப் பார்க்கவேண்டும் என்பதற்காய் எடுத்தேன்' என்று. சரவணனின் நடை மட்டுமில்லை, அவரின் ஐந்து முதலைகளின் கதை கூட எனக்கு ஒருவகையில் பிடித்திருந்தது. கோவாவிற்கு போனாலென்ன, தாய்லாந்திற்குப் போனாலென்ன, அந்த நிலப்பரப்பின்/மக்களின் பின்னணி பற்றிய எந்தப் பிரக்ஞையின்றி அரைகுறையாய் கதைகள் எழுதும் அராத்து போன்றவர்களை விட சரவணன் சந்திரன் எவ்வளவோ மேலே உயர்ந்து இந்த நாவலில் நிற்கின்றார்.
தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட குழுவைச் சேர்ந்த ஒருவன் சட்டென்று (சசிகலாவின் கைகளிலிருந்து?) அதிகாரம் கைமாறுவதால், வேறொரு நாட்டிற்கு தப்பியோட வேண்டியிருக்கின்றது. அப்படி வேறொரு நாட்டிலிருந்து அடுத்த வியாபாரத்திற்கு வலையை விரிக்கும்போதுதான், அப்போதுதான் 'சுதந்திரமடைந்த' கிழக்கு திமோர் சிக்குகின்றது. கடலட்டை வியாபாரத்தை ஐந்து முதலைகளுடன் தொடங்குவதுதான் இந்த நாவல். வியாபாரம் என்ற பெயரில் எப்படி அந்நாட்டை இவர்கள் உட்பட பலர் சுரண்டுகொண்டிருக்கின்றனர் என்பது இந்த நாவலினூடு விபரிக்கப்படுகின்றது. கதைசொல்லி தான் செய்யும் சுரண்டல்களோடு, உள்ளூர் மக்களின் மனோநிலைகளையும் நமக்கு மறைக்காமல் விபரிக்கும்போதுதான் இந்த நாவல் முக்கியமாகின்றது.
வாசிக்க அலுப்பில்லாத ஒரு மொழிநடை என்றாலும், அடிக்கடி கதைசொல்லி 'நான் உண்மையாக சத்தியமாக சொல்கின்றேன்' என்பதெல்லாம் ஏன் இதில் வருகின்றது என்று புரியவில்லை. சரவணன் சந்திரன் சுயசரிதையா எழுதுகின்றார், இல்லை புனைவுதானே எழுதுகின்றார், பிறகேன் இப்படி சுயவாக்குமுலங்கள் இந்தநாவலில் வருகின்றன என்பது விளங்கவில்லை. அதேபோல வியாபாரத்தில் எப்படி இந்தக்கதைசொல்லி ஏமாற்றப்படுகின்றார் என்பது குறித்தும் விபரிக்க அதிகம் மெனக்கிடவில்லை. எல்லா முதலைகளும்- கதை சொல்லி உள்பட- அடுத்தவரை வாரிக்கொண்டிருக்கும்போது, ஏன் இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிறகு தமிழகம் திரும்புகின்றார் என்பதும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
நாவலின் முக்கால்வாசிப்பகுதியிலிருந்து 'நான் மீண்டும் திரும்பிவருவேன், மற்ற முதலைகளுக்கு என்னை நிரூபித்துக்காட்டுகின்றேன்' என்று அடிக்கடி சொல்லப்படுகின்றது. அப்படி ஏதாவது நிகழுமா என்று இறுதிவரை சென்றுபார்த்தால் அதற்கான எந்தத் தடயமும் தென்படவில்லை.
கதைகளைப் பற்றிச் சொல்லும்போது தேய்வழக்காகி விட்ட உதாரணமான, கதையில் துப்பாக்கியைப் பற்றிக் குறிப்பிட்டால் கதை முடிவதற்குள் வெடித்தாகிவிடவேண்டும் என்பதுபோல, ஏன் கிழக்கு திமோருக்கு மீண்டும் திரும்பிவரவில்லை என்பதையோ அல்லது ஏன் திரும்பிவரமுடியாமல் போனது என்பது பற்றியோ சரவணன் சந்திரன் இந்தநாவலில் இறுதியில் (மணல் மாஃபியா மீண்டும் திரும்பிக்கிடைக்கின்றது என்பது தவிர) அழுத்தமாய் எழுதியிருக்கலாம். சிலவேளை அவர் அடுத்த 2 வருடங்களில் எழுதிமுடித்தத அவரின் மற்ற 5 நாவல்களில் ஒன்றில் இதைச் சொல்லியிருக்கவும் கூடும். ஆனால் தனித்து ஒரு நாவலை மட்டும் வாசித்த/வாசிக்கும் என்னைப்போன்ற வாசகர்களையும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மற்றும்படி 'ஐந்த முதலைகளின் கதை'யை வாசித்தபிறகு அவரின் பிற நாவல்களையும் வாசித்துப் பார்க்கலாம் என்கின்ற ஆர்வத்தை இது கொடுத்திருக்கின்றது. 'உயிர்மை' போன்ற பதிப்பகங்களால் சிலவேளை அளவுக்கதிகமாய் ஊதிப்பெருப்பிக்கப்படும் விம்பங்கள் குறித்து (அவர்கள் நல்லதொரு படைப்பாளியாக இருப்பினும்) எனக்கு ஓர் ஒவ்வாமை இருக்கும். அப்படி முன்னர் விநாயக முருகனையும் விலத்தி வைத்திருந்து பின்னர் அவரின் 'ராஜீவ் காந்தி சாலை'யை தற்செயலாக வாசித்து, அடுத்த அவரின் நாவலான 'சென்னைக்கு மிக அருகிலே'யும் தேடிவாசித்தேன் (எனினும் அவரின் அண்மைய நாவலான 'நீர்' என்னைக் கவரவில்லை). அப்படித்தான் சரவணன் சந்திரனையும் வைத்திருந்தேன் (ஆமாம், இப்போது உயிர்மையில் இருந்து எம்பிப்பறந்து கிழக்குப் பதிப்பகத்திற்கு இவரும் போய்விட்டார் அல்லவா?). ஆனால் ஐந்து முதலைகளின் கதை'யை வாசித்தபின் மற்ற நாவல்களையும் தேடி வாசிக்கலாம் போலத் தோன்றுகின்றது.
எனது முகநூல் நண்பராகவோ அல்லது நான் பின் தொடர்பவராகவோ இல்லாத சரவணன் சந்திரனின் முகநூலை, இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்னர் அவர் தற்சமயம் என்ன எழுதுகின்றார் எனப் பார்ப்பதற்காய்ச் சென்று 'நோட்டம்' விட்டேன். ஓரிடத்தில் சரவணன் சந்திரன், 'என்னால் எழுதாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது, அவ்வளவு பதற்றம் வந்துவிடும்' என்பது மாதிரியாக எழுதியிருந்தார். சிலருக்கு சிகரெட் புகைக்காவிட்டால் வேலை ஒன்றும் செய்யமுடியாது போன்ற மனப்பிராந்திதான் இதுவும், எளிதாய் மாற்றிவிடலாம் முக்கியமாய் பார்வதிபுரம் பக்கம் போய்விடாதீர்கள் எனச் சொல்லலாமென நினைத்திருந்தேன். ஆனால், அந்தோ என்ன பரிதாபம், மேலும் வாசித்துக்கொண்டு போனால், ஜெயமோகனைப் போய்ச் சந்தித்து அவர் தனக்கு மாம்பழங்கள் கொடுத்து அனுப்பியிருந்ததாகவும் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார்.
இனிச் சொல்வதற்கு ஏதுமில்லை, ஆகக்குறைந்தது அவர் எழுதிய மிகுதி ஐந்து(?) நாவல்களையாவது என்னைப்போன்ற வாசகர்கள் வாசித்து முடிப்பதற்கு - புதிதாய் எந்த நாவலையும் வெளியிடாது- கொஞ்சக்காலம் அவகாசம் தாருங்கள் என்று அவரிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.
(Jun,2018)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment