1.
அண்மையில் இந்தியா சென்றபோது கேரளாவே பயணத்தின் இலக்காக இருந்தாலும், திரும்புகையில் சென்னையிலிருந்து விமானம் ஏற விரும்பியதற்கு, புத்தங்களை வாங்கவும், இயன்றால் நண்பர்களைச் சந்திக்கலாம் என்பதாகவுமே இருந்தது. சென்னையில் நின்ற சொற்பநாட்களில், எதிர்பாராத நடந்த நிகழ்வால் எதெதெற்கோ அலையவேண்டியதால், நினைத்தவற்றைச் செய்து முடிக்கவில்லை. பயணங்கள் என்பதே எதிர்பாராத தருணங்களின் கூட்டுருவாக்கந்தானே, ஆகவே அப்படியானதில் பெரிதாக ஏமாற்றம் எதுவும் இருக்கவில்லை.
ஒரு புத்தகக் கடைக்கு மட்டும் போய் ஆறாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கியதைத் தவிர, நான் விரும்பிய பல புத்தகங்களைத் தேடி வாங்க முடியவில்லை என்கின்ற சிறு துயர் மட்டும் இருந்தது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் சிறந்த படைப்புக்கள் என சிலாகிக்கப்பட்ட சில புத்தங்களை வாங்கி வந்து வாசித்தபோது பல ஏமாற்றத்தையே தந்திருந்தன.ஒன்று எனக்கு வயதாகி வாசிக்கும் ஆர்வம் இப்போது இல்லாது போயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்ச்சூழல் துதிகளின் பின்னே மட்டும் வலம் வரத்தொடங்கியிருக்கவேண்டும்.
இன்று தமிழ்ச்சூழலில் பகிடிக்கவிதைகளை எழுதுகின்றார் என்று சிலாகிக்கப்படும் ஒருவரின் அண்மைத் தொகுப்புக்கள் இரண்டையும் வாங்கியிருந்தேன். முகநூலில் இதைவிட நன்றாகவே எழுதுகின்றார்களே, இதிலென்ன இருக்கின்றதென வியப்பதற்கென நினைத்தேன். இன்னொருவரின் தொகுப்பும் அப்படி ஒரு அனுபவத்தைத் தந்திருந்தது. அச்சில் வெளியாகும் அவரின் சிறுகதைகளை நான் விரும்பி அவ்வப்போது வாசிக்கின்றவன். ஆனால் ஒரு தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கையில் ஜெயமோகனின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிந்தபோது சற்று ஏமாற்றமாக இருந்தது. அதற்காய் இங்கே எனக்குப் பிடிக்காத புத்தகங்களைப் பட்டியலிடப்போவதில்லை. ஆகவே இதைத் தொடர்ந்து பேசாது விடுவோம்.
அவ்வாறே தமிழ்ச்சூழலில் மிகவும் பாராட்டப்பட்ட இன்னொரு தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொகுப்பு ஓரு நகரத்தில் முக்கிய சம்பவத்தைப் பற்றி பல்வேறு பார்வைகளில் கதைகளைச் சொல்கின்றது. அந்தச் சோகமான சம்பவம் குறித்து நாம் மிகவும் கவலைப்படவும் வெட்கப்படவும் வேண்டுந்தான். ஆனால் ஏற்கனவே விபரமாகப் பேசப்பட்ட சம்பவத்தை புனைவிற்குள் கொண்டுவரும்போது நிகழ்ச்சிகளை அப்படியே பேசுவது மட்டும் என்பது புனைவிற்கு நியாயம் சேர்க்காது. அது அதற்கப்பாலும் விரிந்து சென்று வாசிப்பவரோடு உரையாடவேண்டும்.
இந்தக் குறையோடு, ஏற்கனவே ஒரு தரப்பை எதிர்த்தரப்பாக முன்வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததும் அதில் அலுப்பாக இருந்தது. புனைவு அப்படி ஒரு எதிர்த்தரப்பை தெளிவான 'எதிரியாக முன்வைக்கும்போதே' அதிலொரு பிரச்சாரத்தன்மை வந்துவிடுகின்றது. மேலும் ஒரு சம்பவமே பிரதான நிகழ்வென்பதால் தொகுப்பாக வாசிக்கும்போது கூறியது கூறல் மாதிரி பல கதைகளில் ஒரே விடயம் குறிப்பிடப்படுவது மாதிரி இருந்தது (உதாரணத்திற்கு 'கொல்லப்பட்ட பொலிஸ்காரர் உண்மையில் இந்து இல்லை. கிறிஸ்தவர். ஆனால் இந்துத்துவ அமைப்புக்கள் இந்து எனச்சொல்லி கலவரத்துக்கு வித்திட்டன' என்பது மூன்று நான்கு கதைகளிலாவது ஒரேமாதிரி வந்துகொண்டிருந்தது).
அப்படியிருந்தும் நம்பிக்கை இழக்காது தொடர்ந்து கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக இந்தத் தொகுப்பை விலகிச் செல்ல முடியாதென்பதற்காய் எனக்கு இறுதிக்கதையான '144' காத்திருந்தது. ஒரேயொரு கதையால் என்னை அ.கரீமின் 'தாழிடப்படாத கதவுகள்' தொகுப்பு பின்னர் பிடித்தமாகிப்போயிருந்தது. ஏன் '144' கதை எனக்குப் பிடித்திருந்தது என்றால், அந்தக் கதை கோவைக் கலவரத்தோடு '144' என்ற பெயரைப் பாவிக்காது எங்கும் பொதுக்கூட்டம் போடமுடியாது என்ற சட்ட உத்தரவை 'துப்பறியும்' ஒரு பத்திரிகையாளனின் பார்வையில் கதையில் சொல்லப்பட்டு, அது இறுதியில் எதிர்பாராத ஒரு கோணத்தில் வந்து நிற்பதால் ஆகும்.
இங்கே கதை, இந்துக்களின் வன்முறையை மட்டுமில்லை, அதற்காய் எதிர் வன்முறையைக் கையாண்ட முஸ்லிம்களால் தன் காதலியையும், தன்னிரு கால்களையும் இழந்த ஒரு அப்பாவியின் கதையைச் சொல்கின்றது. அத்தோடு எப்படி இந்துத்துவ அமைப்புக்கள் தலித்துக்களை தமது வன்முறைக்குப் பாவிக்கின்றார்கள் என்பதையும் கவனப்படுத்தியிருக்கின்றது (குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலிலும் எப்படி தலித்துக்கள் பகடைக்காய்களாகப் பாவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அந்த வன்முறை குறித்த ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து அறியமுடியும்)
கோவையில் நடந்த வன்முறையில் இந்துத்துவ அமைப்புக்களின் தந்திரங்களை நாம் நன்கறிவோம். ஆனால் புனைவில் அதை செய்தி அறிக்கையாக நாம் எழுதித் தீர்த்துவிடமுடியாது. ஏனெனில் இவ்வாறான 'எரியும் பிரச்சினைகளில்' புனைவு பாதிக்கப்பட்டவருக்குள் ஊடுருவுவதைவிட, பாதிப்பைச் செய்தவர்களிலும் (நடுநிலைப் பூனைகளாக அலைபாய்வர்களிடையேயும்) சென்று அவர்களைக் குற்ற மனதுடையவராக உணரச்செய்வதிலுமே அதிகம் மினக்கெடவேண்டும் என நினைப்பவன் நான்.
மிகுதி அநேக கதைகளிலும் இந்துத்துவக் கும்பல்களை எதிர்த்தரப்பாக வைத்து ஒருவகை பிரச்சார நெடியில் சொல்லப்பட்டதைவிட, கரீம் இதில் மனித மனங்களுக்குள் இன்னும் ஆழமாகப் போகின்றார். வன்முறை என்பது ஒரு தரப்புக்கு மட்டும் உரியதாக இருப்பதில்லை. அது உக்கிரமாகும்போது இரண்டு தரப்பையும் - முக்கிய இதில் பங்கேற்காத அப்பாவிச்சனங்களையும்- பலியெடுக்கும் என்பதையும் இந்த '144' கதை விபரிக்கின்றது என்பதாலே இந்தத் தொகுப்பை நான் விலத்திவைக்கமுடியாததாகச் செய்திருந்தது.
2.
இப்படிப் புத்தகங்களை வாசிக்கும்போதுதான் அண்மைக்காலமாக நம்மவரிடையே இருந்தும் உருப்படியாகப் பேசக்கூடிய எந்தப் படைப்பும் வரவில்லை என்ற எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு(?) முன்னர் ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் சிலதைப் பட்டியலிட்டு நாம் நம்பிக்கை கொள்ளும் ஆண்டுகளாக இனியிருக்கும் என ஓரிடத்தில் எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அது கானல் நம்பிக்கை போலத் தோன்றுகின்றது. நம்மிடையே constructive ஆன விமர்சனந்தான் இல்லையென்றால், எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தாலும் பொறுமையாக இருந்து எழுதுவதற்குக் கூட நம்மிடையே ஆட்களே இல்லாது அல்லாடிக்கொண்டிருக்கின்றோம்.
சி.மோகன் இப்போது தனக்குப் பரிட்சயமான படைப்பாளிகளைப் பற்றி எழுதுவதைப் போன்று கூட ஏன் நம்மிலிருந்து எவரும் வெளிவரவில்லை என நினைத்து ஏங்க வேண்டியிருக்கிறது. சி.மோகனை நீண்டகாலம் பின் தொடர்பவர்க்கு இந்தத் தொடர்களில் எழுதப்படும் முக்கால்வாசியை சி.மோகன் ஏற்கனவே எழுதிவிட்டார் என்பதை அறிவார்கள். இந்தத் தொடரில் இருந்து நான் புதிதாக எதையும் பெரிதாக அறிவதற்கில்லை எனினும் தொடர்ந்து அதை வாசிக்கத்தான் செய்கின்றேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன், முருகேசபாண்டியன் (என் தொடக்க வாசிப்பில் பாதிப்புச் செய்த 'இலக்கிய நண்பர்கள்' தொகுப்பு) போன்றவர்கள் தொடர்ந்து தமக்குப் பிடித்த ஆளுமைகளை எழுதி எழுதி நம் சூழலில் அவர்களின் இடங்களை நிரூபிக்கின்றனர்.
கு.அழகிரிசாமி பிடித்த அளவுக்கு புதுமைப்பித்தனோ, இல்லை நகுலன் கவர்ந்த அளவுக்கு மெளனியோ என்னைப் பாதிக்கவில்லை என்றாலும், அவர்களும் தவிர்க்கமுடியாதவர்கள் என்றளவுக்கு ஓர் எண்ணம் என்னில் ஆழ ஊன்றியிருப்பதற்கு இவர்களைப் போன்றோர்கள் எழுதியிருப்பதை வாசித்ததே ஒரு காரணமாகச் சொல்லவேண்டும். ஆனால் நம் சூழலில் பார்த்தால் வ.அ.ராசரத்தினம் போன்றோர் எழுதிய ஒரு சில நீங்கலாக பதிவுகளே இல்லை எனலாம். அந்தளவுக்குச் சோம்பலாகவும், அநேகவேளைகளில் தேவை இல்லாதவற்றுக்கு நேரத்தைச் செலவழிப்பவர்களாகவும் இருக்கின்றோம்.
எப்போதும் சொல்வதைப் போல நம்மிடையே பெரும்பாலானோர் இன்னும் தம் அரசியலில் இருந்தே இலக்கியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இலக்கியத்தினூடு அரசியலைப் பார்ப்பவர்கள் மிக அரிதே. இப்படிச் சொல்வதால் 'அரசியல் நீக்கம் செய்து இலக்கியம் படைப்பது' என்பதல்ல அர்த்தம்.
3.
அண்மையில் ஒரு ஸ்பானியத் திரைப்படம் Nuestros amantes (Our Lovers) பார்த்தேன். ஒரு பெண்ணும், ஆணும் சந்தித்துப் பழகுகின்றார்கள். ஒரே ஒரு விதி, இரண்டு பேரும் காதலில் விழுந்துவிடக்கூடாது என்பது. அந்தக் கதையினூடாக அவர்களின் கடந்தகாலம் வருகின்றது. அது எங்கையோ இவர்களிடையே இடைவெட்டுவதும் சொல்லப்படுகிறது. கனவு காண்கின்ற ஒரு பெண்ணுக்கும், கனவு காண்பதையே விட்டுவிட்ட ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கும் இடையிலான உரையாடல்களாலே படம் நகர்த்தப்படுகின்றது.
நகைச்சுவையாக ஏனோதானாக பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தில் Truman Capoteம் Charles Bukowskiம் வந்தபோது எனக்குச் சுவாரசியம் கூடியது. அதிலும் அந்தப் பெண் ப்யூகோவ்ஸ்கி எப்படி seduce செய்வார் என்று எனக்குச் செய்துகாட்டு என்கின்றபோது அந்த ஆண் நான் fuck machine கதைகளை எழுதியவென நடித்துக்கொண்டிருக்கும் போது, நீ அவரின் 'piece of meat'ஐப் பாவிக்காது என்னை எப்படி நெருங்குவாய் என எதிர்க்கேள்வி கேட்கும் பெண்ணின் பாத்திரம் சிலாகிக்கக்கூடியது. அது போலவே அந்தப் பெண் பாத்திரம் தன் பழைய காதலன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவனில் இருக்கும் சில நல்ல விடயங்களால் அவனை விலத்த முடியாது என்பார். திரைப்படங்களில் வேண்டுமானால் ஒருவன் கெட்டவன் என்று பெயர் சூட்டிவிட்டு எளிதாக விலத்தி விட்டு வந்துவிடலாம், ஆனால் யதார்த்த வாழ்க்கையில் ஒருவன் கெட்டவன் போலத் தெரிந்தாலும், முற்றாக விலக்கமுடியாது என்பார்.
இந்த இருவரும் தங்கள் பழைய காதலர்களிடம் பிடித்த விடயம் என்ன பிடிக்காத விடயம் எனப் பட்டியலிடும்போது இந்தப் பெண் தன் பழைய காதலனான கவிஞனிடம் பிடித்த விடயம், 'அவனுக்குள் இருக்கும் ஒரு குழந்தை' என்பார். பிடிக்காத விடயம் எதுவெனும்போது 'அந்தக் குழந்தைக்கு தான் ஒரு வளர்ந்த ஆண் என்பது அநேக பொழுதுகளில் தெரியாமல் போய்விடுவதுதான்' என்று சொல்கின்ற இடமும் அழகு.
Our Lovers, Once Again, Sudani from Nigeria போன்ற திரைப்படங்களைப் பார்க்கும்போது, பெரும் பணத்தைத் செலவு செய்யாது, நட்சத்திரங்களுக்காய் காத்திருக்காது, எளிய கதைகளால் பார்ப்பவரை எப்படி இலகுவாகக் கட்டிப்போட முடிகின்றது என்று வியக்கவும், நம் தமிழ்ச்சூழலில் இப்படியெல்லாம் எப்போது வருமென ஏங்கவுந்தான் முடிகிறது.
(Sep 30, 2018)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment