கியூபாவில் புரட்சி நடந்து இன்று கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் ஆகப் போகின்றதென்றாலும், கியூபா அதன் தூய்மையான கடற்கரைகளுக்காகவும், ஹாவானாவிலிருக்கும் புராதன நகருக்காகவும் இன்று அதிகம் நினைவு கொள்ளப்படுகின்றது. ஸ்பானியக் கலாச்சாரத்திற்குரிய இசையும், உணவும், மதுவும் கியூபாவின் எந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் நாம் எளிதாக அவதானிக்க முடியும்.
கியூபாப் புரட்சியின்போது ஃபிடல் காஸ்ரோ, சே குவேரா உள்ளிட்ட எண்பதிற்கும் மேற்பட்டவர்கள் 'கிரான்மா' என்கின்ற படகில் மெக்ஸிக்கோவிலிருந்து புறப்பட்டு கியூபாவை வந்தடைக்கின்றார்கள். எனினும் அவர்களின் தரையிறக்கம் அவ்வளவு சுமூகமாய் நடக்கவில்லை. அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நின்ற பாட்டிஸ்டாவின் படைகளுடன் சண்டை மூள்கின்றது. இறுதியில் சதுப்புநிலங்களிலும், உவர்நில மரங்களிடையேயும் பதுங்கி ஒளிந்து தப்பிவந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள் மட்டுமே. பெரும் எண்ணிக்கையான தோழர்களை இழந்து புரட்சியிற்கான முதலடியே பெரும் சறுக்கலாய் இருந்தபோதும், தமது கனவுகளோடு தொடர்ந்து மலைகளில் ஒளிந்திருந்து புரட்சியை இவர்கள் நடத்திக்காட்டியது ஒரு அதிசயம் போலத்தான் இன்று தோன்றும்.
கியூபாவின் கிழக்குக்கரையில் தரையிறங்கித் தப்பிப் பிழைத்தபின், ஒரு கெரில்லா இயக்கமாய் மூன்றாண்டுகளாய் வளர்ந்திருக்கின்றார்கள். பின்னர், சான்டா கிளாராவில் பெரும் தாக்குதலை சேயின் தலைமையில் இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வென்றபோது, கியூபாவில் புரட்சி சாத்தியமென்கின்ற நிலை வந்துவிட்டது.
இதற்கு முன் 1953ல் காஸ்ரோவும், அவரது தோழர்களும், ஜூலை 26ல் சாண்டியகோ டீ கூபாவில் ஆயுதத் தாக்குதலை நடத்திப் பிடிபடுகின்றார்கள். சட்டம் பிடித்த காஸ்ரோ, தனக்காகவும் நண்பர்களுக்காகவும் தானே வாதாடுகின்றார். அதிலேயே 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பிரபல்யமான வாக்கியத்தைச் சொல்கிறார். எனினும் ஃபிடல் உள்ளிட்ட பலருக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. பிறகு இரண்டு வருடங்களாகத் தண்டனை குறைக்கப்பட்டு காஸ்ரோ மெக்ஸிக்கோ சென்று, சே, ராகுல் உள்ளிட்ட தோழர்களுடன் திரும்பிவந்து, 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் புரட்சியை நடத்திக் காட்டியது கடந்தகால வரலாறு.
ஒரு காலத்தில் பாட்டிஸ்டாவின் ஜனாதிபதி வாசல்தலமாக இருந்த 'மாளிகை' இன்று புரட்சியின் மியூசியமாக (Museum of the Revolution)ஹாவானவில் இருக்கின்றது.1957 மார்ச்சில், இங்கே மாணவர்கள் ஜனாதிபதி பாட்டிஸ்டாவை கொலை செய்த எடுத்த முயற்சி தோற்று, கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜோஸே மார்டி உள்ளிட்ட பல மாணவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இன்றும் இந்த இடத்தில் அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளத்தைக் காணமுடியும். இந்தச் சம்பவம் ஹெமிங்வே பற்றிய திரைப்படமான "Papa: Hemingway in Cuba"வில் கூட சித்தரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
பின்னர் 1959 ஃபிடல் காஸ்ரோ தலைமையிலான படை ஹாவானாவிற்குள் நுழைந்தபோது பாட்டிஸ்டா இந்த மாளிகையிலிருந்தே தப்பியோடுகின்றார். . இப்போது ஹாவானாவிலிருக்கும் தேசிய நூதனசாலையில் புரட்சியின்போது (ஜூலை 26 இயக்கம்)பாவித்த பொருட்களைக் காட்சியிற்கு வைத்திருக்கின்றனர்.
கியூபா என்கின்ற நாடு, வெளியுலகிற்கு ஒரு புரட்சியின் அடையாளமாக இன்னும் வீழ்ந்துவிடாது இருந்து கொண்டிருக்கின்றதென்றால், இலக்கிய வாசகர்களுக்கு கியூபா என்றவுடன் , ஹெமிங்வே நீண்டகாலம் வசித்த ஒரு நாடு என்பதும் நினைவிற்கும் வரும். இன்றும் ஹெமிங்வே தங்கி நின்ற ஹொட்டல், அவர் அடிக்கடி மதுபானம் அருந்திய பார் என எங்கும் ஹெமிங்வேயின் நினைவுகளை அழியவிடாமல் நினைவுபடுத்தியபடி இருக்கின்றனர்.
ஹெமிங்வேயிற்குப் பிடித்த பார்களில் ஒன்று Floridita. அவர் இறந்தபின் அவரின் இருப்பை நினைவூட்ட, அவர் அமர்ந்து மது அருந்துவதுபோல சிலை ஒன்றை வடிவமைத்திருக்கின்றனர். ஹெமிங்வேயிற்காகவே சனம் அலை போல இங்கு குவிந்து கொண்டிருந்தபோதும், அவரின் 'சாகச' எழுத்துக்குள் ஒளிந்திருக்கும் அமைதியைப்போல ஒரு பெண் ஹெமிங்வேயுடன் அமர்ந்து நிதானமாய் தனக்கான பானத்தை அருந்திய கணத்தைத் தரிசிக்க முடிந்தது அழகு வாய்ந்த தருணம் எனத்தான் கூறவேண்டும்..
அதேபோல, ஹாவானாவிலிருக்கும் Ambos Mundos ஹொட்டலில், எர்னெஸ்ட் ஹெமிங்வே 1930களில் அதிக வருடங்களைக் கழித்திருக்கின்றார். ஸ்பானிய உள்நாட்டுப்போரை நேரடிச் சாட்சியாகப் பார்த்திருந்த ஹெமிங்வே, இந்த இடத்திலிருந்தே 'யாருக்காக மணி ஒலிக்கிறது' (For Whom the Bell Tolls) என்கின்ற நாவலை எழுதத் தொடங்கியிருக்கின்றார். இன்று இந்த ஹொட்டலின் முதல்தளத்தில் ஒருபகுதி ஹெமிங்வேயின் நினைவுகளுக்காகவே என ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
ஹாவானாவின் அழகுகளில் ஒன்று எங்கும் நிரம்பியிருக்கும் இசை. அநேகமான உணவகங்களில் live band இருக்கும். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எங்களுக்காக பாடிய பாடல்களிடம், ஒரு புரட்சிப் பாடலைப் பாட முடியுமா என்றபோது, சே குவேரா பற்றிய பாடலைப் பாடினார்கள். ஆர்ஜெண்டீனா என்கின்ற ஒரு தொலைதூர நாட்டில் பிறந்து, இன்னொரு நாடான கியூபாவிற்கு வந்து புரட்சியிற்குத் துணை நின்ற சே குவேராவை நினைவூட்டாத ஓரிடம் இல்லையென்கின்றமாதிரி எங்கெங்குகாணினும் சேயே கியூபாவில் நிறைந்திருக்கின்றார்.
இதமான காலநிலை, அழகான கடற்கரைகள், புராதன நகர்கள், புரட்சியின் அடையாளங்கள், இனிமையான இசை, அருமையான உணவு என்பவற்றை அனுபவிக்க கியூபாவிற்கு ஒருமுறை பயணித்துப் பார்க்கலாம்.
................................
(Feb 25, 2018)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment