அடிப்படையில் ஓர் இடதுசாரியாக சேர்ஜியோ இருப்பதால், ஐ.நாவில் பணியாற்றும்போதும், இயன்றளவு மக்களின் சார்பில் நின்று பார்க்க முயல்கின்றார். அதை அவர் கிழக்கு திமோர் போராளிகளோடு அதிகாரத்தைப் பகிரும்போது, தெளிவாக நாங்கள் உங்களோடு ஆட்சி நிர்வாகத்தைப் பகிர்கின்றோமே தவிர, நாங்கள் ஆள்பவர்கள் என்கின்றார். சேர்ஜியோவின் நண்பரொருவர் அந்த நாட்களை நினைவுகூரும்போது, ஒருபோதும் சேர்ஜியோ, போராளிக்குழுவின் எண்ணத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செய்ததுமில்லை என்கின்றார்.
இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின், ஐ.நா. அலுவலகம் மீதான குண்டுவெடிப்பில் சேர்ஜியோ கொல்லப்படுகின்றார். கிழக்கு திமோரை இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இருந்து பிரித்துக்கொடுத்தவர், அவர் கொல்லப்படவேண்டியவர் என ஒசாமா பின் லாடன் உள்ளிட்ட பலரால் சேர்ஜியோ இலக்கு வைக்கப்படுகின்றார். வழமையாக ஐ.நா. அலுவலகங்களுக்கு இருக்கும் அமெரிக்காவின் அதிபாதுகாப்பையும் சேர்ஜியோ விலத்திவைக்கின்றார். ஐ.நா.சபை தனித்தியங்கும் அமைப்பு, அமெரிக்காவின் இருப்பு எமது வளாகத்தில் இருப்பது மக்களை இன்னும் ஐ.நாவை விலத்திவைக்கும் என்று பாதுகாப்புச் சேவையையும் சேர்ஜியோ விலத்திவைக்கும் காலங்களில் இந்தக் குண்டுவெடிப்பு நடக்கிறது.
சேர்ஜியோவாக இருந்தாலும், அல்லது சிரியாவில் உயிரைக் கொடுத்த பத்திரிகையாளரான மெர்வின் கொலின்ஸாக (Private war) இருந்தாலும், ஏதோ ஒருவகையில் அமெரிக்க/ஜரோப்பிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் இவர்களைப் பற்றிப் பேசும் திரைப்படங்களில் blur ஆக்கப்படுவதை நாம் காணலாம். மூலகாரணங்களுக்குப் போகாமல் நாம் இந்த உதிரி மனிதர்களை வைத்து இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை/யுத்தங்களை ஒருபோதும் அணுகமுடியாது. ஆனால் இவ்வாறாகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போகும் மனிதர்களாலேயே ஒரளவாவது போர் நிகழும்/நிகழ்ந்த இடங்களில் மக்களுக்கான தேவைகள்/மீள்குடியிருப்புக்கள் சாத்தியமாக்கப்படுவதையும், அங்கே நிகழும் கொடூரங்கள் சற்றேனும் வெளிச்சத்துக்கு வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு தீவிர கலகக்காரனாக பாரிஸ்-68ல் எழுந்த சேர்ஜியோ இறுதிவரை மக்களுக்காகவே தமது பயணத்தைத் தொடர்ந்து இருக்கின்றார். அதற்கு அவரது இடதுசாரித்தன்மை நிச்சயம் உதவியிருக்கும். அதேசமயம் சேர்ஜியோ மணமானவராக இருந்தபோதும் பல்வேறு நாடுகளில் நிறையக் காதலிகளையும் கொண்டிருந்திருக்கின்றார். இது வேறுவகையான சூழல், வேறுவிதமான உரையாடல்களுக்கும் கொண்டு செல்லக்கூடியவை.
சேர்ஜியோ பற்றிய திரைப்படம் நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கின்றது. அவரைப் பற்றிய ஆவணப்படம், இதே நெறியாளரால் 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டையும் சேர்த்துப் பார்ப்பது சுவாரசியமானது. உணர்ச்சிகள்/தடுமாற்றங்கள்/நம்பிக்கைகள் என கண்ணீர்த்துளிகளோடு அசல் மனிதர்கள் பேசும் ஆவணப்படங்கள், திரைப்படங்களை விட ஏதோ ஒருவகையில் நமக்கு நெருக்கமாகிவிடவும் கூடியது.
(Apr 18, 2020)
0 comments:
Post a Comment