GV Prakash இசையில் சைந்தவி பாடும் பாடல் ஒன்று. " நிழல் தேடும் ஆண்மையும், நிஜம் தேடும் பெண்மையும் ஒருபோர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?" ஏனோ இந்தப்பாடல் வரிகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.
"நீ இந்தக் காலையில் படகில் போகும்போது உன் நாட்டிற்குப் போகும் கனவைப் பற்றிச் சொன்னாய். இன்னமும் கடந்தகாலத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதால், உனக்கு எதிர்காலமும் ஒரு கனவாய் இருக்கிறது. எனக்கு அப்படியில்லை. இந்த அதிகாலை, இந்தச் சூரியன், அரிதாய் வாய்த்த படகுப் பயணமென அதில் மட்டுமே திளைத்திருந்தேன். எனக்கு இந்தக் கணமே முக்கியம். எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி ராகுலோடும், உன்னோடும் சுற்றித் திரியவே முடிந்திருக்காது. அடுத்தகணத்தில் என்ன நிகழுமெனத் தெரியாதபோது எதிர்காலத்தைப் பற்றி எப்படி தீர்மானிக்க முடியும் எனச் சொல்லியபடி, காற்றுக் கலைத்த கேசத்தை ஒரு பக்கமாய் ஒதுக்கினாள்." காதலியின் பிரிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னைத் தனிமைப்படுத்துபவனுக்கு அவளின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கிறது. அவள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவள். மோதலில் தொடங்கிய அவர்களின் நட்பு, அது வளர்ந்த விதமும், அந்த அவளினூடான வாழ்வின் தரிசனமும், வாழ்ந்தால் அவளைப்போல ரசனையானவளாக, தெளிந்த மனநிலையுடையவளாக வாழவேண்டுமென்ற அவாவைத் தூண்டும் விதமான வர்ணிப்புகள்! அவளை எந்தவிதத்திலுமேனும் தாழ்த்திவிடாது வார்த்தைகளால் வர்ணித்த விதங்கள். ஆசிரியரின் கெட்டித்தனம் என்னவென்றால், அவளை ஒரு ஸ்பானியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்ததுவே! ஏனென்றால் எம் பெண்களிடமில்லாத வாழ்வு தொடர்பான மாற்றுப் பார்வையை, தரிசனத்தை முன்வைக்க அந்த அவளின் வருகை அவசியமாக இருக்கிறது. கடைசிவரை அவள் என்னவானாள் என்று அறிவதற்கிடையில், அவன் அவளோடான அந்த அற்புத வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டு கடைசியில் மனநல மருத்துவரின் வாயிலிருந்து அப்படியான ஒருத்தி அவன் வாழ்வில் வரவேயில்லையென்று சொல்லவைத்து நியாயம் செய்துவிட்டுத் தப்பித்துவிடுகிறார் ஆசிரியர். வாழ்த்துகள் இளங்கோ. உங்கள் எழுத்துகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துவருகிறேன். நீண்ட காத்திருப்பின் பின் உங்கள் புத்தகம் கைவசம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்களைப் போல விமர்சனமெல்லாம் எழுதமுடியாது. ஆனாலும் ஒரு வாசகியாக நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதில் ஐயமில்லை. "Ich Erzähler" என்று சொல்லப்படும் வகையில் எழுத்தாளர் கதையை நகர்த்தும் விதமும், சொல்லாடல்களும் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன!நன்றி: சுகிர்தா சண்முகநாதன்
0 comments:
Post a Comment