1.
"Thus Spoke Zarathustra" இல் நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின் 'ஆண் எழுத்து + பெண் எழுத்து= ஆபெண் எழுத்து' நாவலிலும் கதைசொல்லி தனது கடவுள் இறந்துவிட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்பதுடன், புத்தரை ஒரு ஆன்மீக நாத்திகன் எனவும் கொண்டாடவும் செய்கின்றார். இந்த நாவல் மீபுனைவின் வழியே எழுதப்பட்டதால் தன்னிலையில் சொல்லப்படுகின்றது. ஆனால் கதையைச் சொல்பவர் ஒற்றை அடையாளத்தை மறுக்கிறார். பன்மைத் தளங்களில் உரையாடல்களில் நிகழ்த்தி, பலவற்றைச் சிதைத்து தனது பன்மைத்துவத்தை நமக்கு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வெளிப்படுத்துகின்றார்.
இந்நாவலில் வருகின்றவர் தன்னைப் பால் நிலைகளைக் கடந்தவர் என்று சொல்கின்றார். இன்னொரு இடத்தில் தன்னைத் தாயுமானவன் என்றும், பாலுறுப்புகள் திரிவடைந்து திருநங்கையாக மாறினேன் என்றும் குறிப்பிடுகின்றார். வேறோர் இடத்தில், தன்னை லூவ்ர் மியூசியத்தில் சல்வதோர் டாலி அடைகாத்த முட்டையிலிருந்து வந்தவன் தான் என்றும் சொல்கின்றார். அப்படிச் சொல்கின்வர் இன்னொரு இடத்தில் 'நான் மொழிவழி உயிரி. எனது கட்டமைப்பு புனைவால் அமைந்தது. வெற்று சொற்களாய் என்னை உதிர்த்துக் கூட்டிக் குவித்துக் கூடையில் அள்ளி குப்பை லாரியில் கொட்டிவிடலாம்' என்றும் கூறுகின்றார். இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தக் கதைசொல்லி பிறந்தும், உருமாறியும், மரணமடைந்தும், புதுப்பிறப்பு எடுத்தபடியும் இருக்கின்றார். ஆகவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது ஒரு சுவாரசியமாக விடயமாக இந்த நாவலின் இடையே ஓடிக்கொண்டிருக்கின்றது.
2.
இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாங்களும் இரண்டு பக்கங்களுக்கு மேலே நீள்வதில்லை. ஆனால் அதில் அவர் செய்யும் எழுத்து விநோதங்களுக்கு இதை வாசித்துப் பாருங்கள்:
"இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? எனது கவிதைகளும் கதைகளும் பெண்ணுடம்புகளிலிருந்தே அகழ்ந்தெடுக்கப்பட்டவை. பெண் கவிச்சை வீசாத பிற எழுத்துக்களை என்னால் வாசிக்க இயல்வதில்லை. சில பொழுது எழுதும் எத்தனிப்பில் நானே பெண்ணாகப் பால் திரிவதும் நேரும். ஆணுடம்பில் பெண் உள்ளடக்கம். என்னைப் பெற்ற அம்மாவுக்கும் நான் பெற்ற மகளுக்கும் நடுவே இணைப்புப் பாலமாகக் கிடத்தப்பட்ட என் உடம்புக்குக் கீழே வற்றாமலோடும் பால்வரலாறு; அதில் மூழ்கி எழும் ஆண், பெண்ணாகிறான்.
எனது படைப்புகளைத் தின்று மெய் வளர்க்கும் ஆண், பெண்ணாகி விடுவதால் பலவகைக் குழப்பங்கள் விளைந்து சமூக மன ஒருமைக் குலைவதாக உளவியல் மருத்துவக் குழுவினரின் அறிக்கை சொல்கிறது. இதன் வழி, திருநங்கைச் சமூகம் வளர்ந்து தனி இனக்குழுவாக உருவாவதை ஏற்கமுடியாது என்ற காரணத்தை முன்வைத்து எனது வாழ்நாள் எழுத்துக்களை அரசு தடைச்செய்திருக்கிறது.
ஆண் இலக்கியம், பெண் இலக்கியம் கடந்த ஆபெண் இலக்கியம் என்ற புதிய வகைமை ஒரு படைப்பியல் உத்தி மட்டும் இல்லை; அது பாலரசியல் அனார்க்கிய முறைமை. ஆண் மனத்தின் ஃபாசிச ஒருமையைக் குலைத்துப் பால் திரிபை உண்டாக்கிப் பெண்ணாக்குவது. அதிகார இச்சை பால்நிலைக் கடந்தது; ஆபெண் மனம் ஒரு பால் முற்றொருமை கடந்த பாவனை. மதம் என்பது கடவுளை முன்வைத்த முற்றதிகார பாவனை. பாவனை மதவியல், பாவனை அரசியல், பாவனை அறிவியல் என்னும் மூன்று முற்றொருமை அதிகார மையங்கள் தர்க்கம் இடறும்போது பாவனையைக் கைக்கொள்வது போன்ற ஒரு புலன் கடந்த உயிரியல் அரசியல் பாவனையே ஆபெண் நிலை.
ஆண் உடம்பில் பெண் சமைந்த ஆபெண் தன்மையைப் புதிய பாலினமாக ஏற்கமுடியாது என்று அரசியல் அமைப்புகள், மத அமைப்புகள் ஒருங்கிணைந்து எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆண், பெண்ணாவது என்பது எனது பிரதியின் அரசியல் இயங்கியல் பண்பு. திருக்குறளின் அறம், பொருள், காமம் என்னும் முப்பரிமாணத்தை ஒட்டி விழைவு அல்லது இச்சை என்னும் நான்காவது பக்கத்தை எழுதிப்பார்க்கும் எத்தனம். அதற்கு ஆபெண்ணிலை வாதம், மூன்றாம் பாலரசியலை உள்ளடக்கமாகக் கொண்டக் கவிதையியலை எழுதிப்பார்க்க உதவுமா என்ற பிரதியியல் முயற்சி. இதில் மதம், பண்பாடு, மருத்துவ உளவியல், பாராளுமன்ற அரசியல் அடிப்படைவாதிகள் தலையிடுவது மானுட விடுதலை அரசியல் அமைப்பிற்கு எதிரானது. எழுத்துக்களைத் தடைச்செய்வதன் மூலம் தேவையில்லாமல் என்னை விளம்பரப்படுத்துகிறீர். பாதுகாப்பு வேண்டி திருக்குறளுக்குள் அடைக்கலம் தேடுவதாக, அடிப்படை இலக்கிய அறிதலற்றவர் என்னைப் பகடிசெய்வதன் மூலம் தமக்கு விளம்பரம் தேடுகிறார்.
உடம்பில் செயல்படுத்தாத வன்முறையை என்னால் எதிர்கொள்ள முடியும். எழுதாமல் பேசாமல் வெற்றுப் பார்வையாலும் தொலை எண்ணத் தொடர்பினாலும் பிறருடைய சிந்தனைக்குள் என்னால் ஊடுருவமுடியும். இந்த அதிகார அமைப்பு சமூகச் செயல்பாடுகளிலிருந்து என்னைத் தனிமைப்படுத்த முடியாது. என்னை வெல்வதற்கான எளிய வழி, கொன்றுவிடுவது. நான் ஒத்துழைக்காமல் என்னைக் கொல்லமுடியாது; எனது யோசனையின் வேகத்தில் இடம்பெயரும் இயல்பினன். எனது வேகத்தைத் தடுத்து மறிக்கும் அறிவியல் வளர்ச்சியை அடைவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு உங்களுக்குத் தேவைப்படும்.
எனக்குத் தொல்லைத்தராமல் ஒதுங்கி நிற்பதே எல்லாருக்கும் நல்லது. அடிப்படையில், நான் ஆண் கலப்படம் இல்லாதவன்; தன் நிழலைத் தானே புணர்ந்து என்னைக் கருத்தரித்ததாக அம்மா சொன்னது புனைவு இல்லை. என்னை விட்டு வெளியேறுவதே இனியான உங்கள் அரசியல். ஆம், என்னால் நீங்கள் இயக்கப்படுகிறீர். ஃபாசிசம் என்பது திட திரவ வாயு நிலைகளில் தன்னை உருமாற்றும் பாவனை; அதை ஒரு நகைப்பில் கடந்துவிடுவேன்.
(87, ப 173-174)"
3.
இவ்வாறுதான் ஒவ்வொரு அத்தியாயங்களும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்லும் பறவைகள் போல இருக்கின்றன. பறவைகள் வானத்தில் தடங்களை விட்டுச் செல்லாததுபோல, ஒரு அத்தியாயத்தில் இன்னொரு அத்தியாயத்தில் சிதைத்து புதிய கதையாடல்களை எழுப்பி நாம் பின் தொடரும் எழுத்தின் வழித்தடங்களையே ரமேஷ் மறைத்துவிடுகின்றார். இது ஒருவகையில் முடிவுறா 'அலகிலா' விளையாட்டு. இன்னொருவகையில் போர்ஹேஸில் மாயபுதிர்வட்டங்களுக்குள் தொலைந்துபோவது போன்றது அல்லது டாலியின் சர்ரிலிசத்தில் உருமறைந்து இன்னொன்றாகத் தோன்றுவதாகும்.
இந்த நாவலில் கதைசொல்லி தொடர்ந்து தான் பல்வேறு நூற்றாண்டுகளில் பிறப்பெடுத்தும், இறந்தும், மீள்பிறப்பெடுப்பதுமாகச் சொல்கின்றார். அவரின் சில பிறப்புக்கள் பற்றித் தெளிவான ஞாபகங்களைக் கொண்டிருக்கின்றார். ஐம்பூதங்களான தனது உடம்பும், ஐந்திணைகளான தனது உள்ளமும் ஒருபோதும் அழிவதில்லை, வெவ்வேறு வடிவங்களில் உருமாறக்கூடியது மட்டுமே என்பதோடு எனது மொழியின் வயது எதுவோ அதுவே எனது உடம்பின் வயதும் என்கின்றார்.
ஒருவகையில் நாம் காலத்தையும் வெளியையும் நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால், நமக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களும், இந்தப் பொழுதில் 'வாழ்ந்து' கொண்டிருப்பவர்களும், இனி வாழப்போகின்றவர்களும் ஒரே தளத்தில் நடமாடிக்கொண்டிருப்பதாய்க் கற்பனை செய்துபார்க்கலாம். அவ்வாறே ரமேஷின் அநேக கதைசொல்லிகள் பல்வேறு நூற்றாண்டுகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த உடம்பிலிருந்து 'தற்செயலாக' வெளியேறுவதே மரணம் என்கின்றார் ரமேஷ். ஆகவே எந்தக் காலத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவன் என்பதோடு பல நூற்றாண்டு ஞாபகங்களைத் தன்னோடு காவிக்கொண்டிருக்கின்றேன் என்று கூறுவதோடு மட்டுமின்றி, தனது பாத்திரங்கள் போல தன்னையே ஒரு மீபுனைவாகவும் ரமேஷ் அவ்வப்போதுவெளிப்படுத்தியபடியும் இருப்பவர்.
ரமேஷ் பிரேதனின் "நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை", "ஐந்தவித்தான்" போன்ற நாவல்களின் தொடர்ச்சியில் 'ஆண் எழுத்து - பெண் எழுத்து - ஆபெண் எழுத்து"ம் இன்னொரு முக்கியமான படைப்பே! நம் சூழலில் யதார்த்தவாதப் பாம்பு மொழியை அளவுக்கதிகமாக கட்டித் தழுவி நம் மூச்சைத் திணறவைக்கும்போதெல்லாம், ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் இவ்வாறான எழுத்துக்கள் நமக்குப் புதிய திசையைக் காட்டி இதமூட்டுகின்றன.
............................
0 comments:
Post a Comment