கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 02

Tuesday, February 22, 2022


ழுத்தாளர்களை சிலவேளைகளில் இரண்டு வகையினராகப் பிரித்துப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஒருவகையினர் தமதில்லாத பிற கதைகளை எழுதியவர்கள், மற்றவகையினர் தாம் சம்பந்தப்பட்டக் கதைகளை எழுதியவர்கள். தமது வாழ்க்கைக் கதைகளை எழுதியவர்கள் என்று நினைப்பவரும் தமது கதைகளை அப்படியே சொல்லிருப்பார்கள் என நம்பத்தேவையில்லை. புனைவு என்பது நடந்தவையிலிருந்தும்/நடக்காதவைகளிலிருந்தும் மேலும் மேலும் கற்பனைகளை விரித்துப் பார்ப்பதுதானே. நகுலனின் சுசீலா என்று அவர் 'நினைவுப்பாதை' போன்ற புனைவுகளில் வைக்கும் கதாபாத்திரத்திற்கு அப்பால்தான் சுசீலா இருக்கின்றாரென்பதை நகுலனின் நேர்காணலை வாசிக்கும்போது அறியலாம். ஆக 'நகுலனின் நினைவுப்பாதை'யில் வரும் சுசீலா, நவீனனின் சுசீலாதானேயன்றி அசலான சுசீலா  இல்லை என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்கின்றோம்.

 

அவ்வாறேதான் சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஆட்டோபிக்‌ஷன் வகையில், சின்னாஸ்கி என்ற கதைசொல்லியின் மூலம் 'பெண்கள்' (women) நாவலை எழுதிச் செல்வதுங்கூட. அதில் சின்னாஸ்கி என்பது ப்யூகோவ்ஸ்கி என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை. ஆனால் ப்யூகோவ்ஸ்கி இத்தனை பெண்களைச் சந்தித்திருந்தாலும், அந்த நிகழ்வுகளை அப்படியே அசல்குலையாது எழுதிச் சென்றிருப்பார் என்று நாம் நம்பத் தேவையில்லை.

 

நகுலனின் 'நிழல்களில்' சாரதி என்ற பாத்திரத்தில் வருவது கிருஷ்ணன் நம்பி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த 'சாரதி'யின் கதையை அப்படியே கிருஷ்ணன் நம்பியின் கதையாக நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இத்தனைக்கும் 'நிழல்களில்' வரும் கேசவ மாதவன் என்ற பாத்திரமாகிய சுந்தர ராமசாமி இந்நாவலுக்கு ஒரு முன்னுரையும் எழுதியிருக்கின்றார். ஆக கிருஷ்ணன்நம்பி மட்டுமில்லை, சுராவும் 'நிழல்களை' நகுலன் எழுதி வெளியிடும்போது ஆட்சேபணை செய்யவில்லை என்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

 

நகுலன் ஒரே கதையைத்தான் எல்லா இடங்களிலும் வெவ்வேறுமாதிரியாகக் கூறுகின்றார் என்ற விமர்சனம் இருந்தாலும் (நகுலனே இதனை புனைவுகளிலும், அதற்கு அப்பாலும் பல்வேறு இடங்களில் இதைச் சொல்கின்றார்), நகுலனின் படைப்புக்களுக்கு ஒரு முக்கிய இடம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றது. அது அவரது 'தனிமை'க்கு கிடைத்ததால் வந்தது அல்ல. அவர் அப்படி 'தனித்து' இருந்ததது ஒரு மேலதிக் காரணமாக இருக்குமே தவிர, அந்தத் 'தனிமை'யை நாம் காதலரோடோ, துணைகளோடோ, யாரோடோ இருந்தாலும் உணர்ந்துகொள்ளக்கூடிய இருத்தலியத் தனிமைதான் அது. ஆகவேதான் அது எல்லோருக்கும் பொதுவான தனிமையாக நகுலனின் புனைவுகளில் இருந்து  விகசித்தெழுகிறது. ஒருவகையில் நகுலன் தமிழில் இதைத் தொடர்ந்து எழுதிச் சென்றதால்தான் அது முக்கியத்துவம் வாய்ந்த இடத்தையும் எடுத்துச் செல்கின்றது. டயரிக்குறிப்புக்களில் எழுதுவதாக சொல்லும் நவீனனின் கதைகளே பின்னரான காலத்தில் சுந்தர ராமசாமி போன்றோர் எழுதிய முக்கிய படைப்புக்களான 'ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு' ஒரு உந்துதலையும் கொடுத்திருக்கவும் கூடும்.

 

தினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி'யை வாசித்திருந்தேன். அதை அன்றைய இளமையின் உற்சாகத்தில் எஸ்.பொவின் 'தீ' கொஞ்சம் ஆழமான வடிவம் என்று எழுதியதும் ஞாபகம் இருக்கிறது. அப்படித்தான் ஜெமோவின் 'காட்டை' வாசித்துவிட்டு அவ்வளவு ஈர்க்கவில்லை என்று அப்போது எழுதியிருந்தாலும் இப்போது காட்டை மீள்வாசிப்புச் செய்தபோது எனக்கு நெருக்கமான ஒரு நாவலாக அது மாறியிருந்தது. அதேபோல இப்போது இருபதுகளில் இருக்கும் ஒருவர், ஒரு platonic உறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா என்று காட்டை நிராகரித்ததைப் பார்த்தபோது -அன்றைய என்னைப்போன்ற ஒருவர் எனும்- மெல்லிய சிரிப்பு வந்தது.

 

அப்படி காடு எனக்குரிய நாவலாக பின்னாட்களில் மாறியதுபோல 'கன்னியாகுமரி'யும் மாறக்கூடுமென்று திரும்ப வாசித்துப் பார்த்திருந்தேன். ஆனால் காடு என்னை மாற்றியதுபோல கன்னியாகுமரி மாற்றவேயில்லை. காட்டில் கிரிதரனில் ஜெமோவின் சாயலை அதிகம் படியவிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளமுடிந்தது. ஆனால் கன்னியாகுமரியில் வரும் ரவியில் மட்டுமில்லை பெண்கள் பாத்திரங்களிலும் ஜெமோவின் என்ற ஆளுமை தன்னை மீறித் துருத்திக்கொண்டு நிற்க, அந்தந்த பாத்திரங்கள் தன்னை எழுதிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது எளிதாகப் புரிந்தது.

 

ஜெமோவின் பெண்கள் பாத்திரங்கள் எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், அவை ஆண் பாத்திரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களுக்குத் தம்மை 'அடிபணியும்' பாத்திரமாக எளிதாக மாற்றிக்கொள்வதன் நுட்பம் எனக்கு இன்னும் விளங்கவில்லை. இத்தகைய ஆண் Xபெண் முரணை ஆதவன் அற்புதமாக எழுதிக்கொண்டே செல்வார். ஒருபோதும் அவர் சிந்திக்கக்கூடிய பெண்களை இரண்டாம்பாத்திரமாக (secondary character) ஆக்குவதில்லை. ஆகவேதான் அந்த முரண் கூர்மையாகவும், முடிவுறாத உரையாடல்களாகவும் ஆதவனின் 'காகித மலர்களிலும்' என் பெயர் ஆதிசேஷனிலும் வந்தபடியே இருக்கும்.

 

'கன்னியாகுமரி'யில் வரும் பிரவீணா எவ்வளவு புத்திசாலியாகவும், நிறைய வாசிப்பவராக இருக்கின்றவராக இருப்பினும், ரவியின் அப்பாவி மனைவி ரமணியைப் போலவே பல இடங்களில் பிரவீணா பரிதாபமாகக் காட்சியளிக்கின்றார். பிரவீணாவுக்கு ரவியின் மனைவியைப் போல எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டிய எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் ரவி அவரை 'அடிமை'யைப் போல நடத்த நடத்த,  திருப்பத் திருப்ப ரவியை நோக்கி வந்துகொண்டிருப்பதில் வாசிக்கும் எங்களுக்கு எரிச்சல் வருகின்றது.

 

அதைவிட மிகுந்த அவதி வந்த இடமென்னவென்றால், விமலாவை நான்கு காடையர்கள் பாலியல் வன்புணர்வை 20 வருடங்களுக்கு முன்னர் செய்ததை, ரவியின் முன்னிலையில் பிரவீணா கேட்கும்போது, அங்கேதான் ஜெமோ என்கின்ற ஆண் தன்னை முன்னிலைப்படுத்தப்படுவது தெரியவருகின்றது. அவர் பிரவீணாவை அல்ல, விமலாவைக் கூடச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ரவி  மோசமாக விமலாவை இன்னும் அவமானப்படுத்,த விமலாவை பாலியல் வன்புணர்ந்த ஸ்டீபனை மீண்டும் கொண்டுவந்து நேரில் காட்டினாலும், இந்தப் பெண்களின் பாத்திரங்களுக்குள் நுழையவே முடியாத அபத்தத்தின் புள்ளியை நாம் கண்டடைகின்றோம். பாலியல் வன்புணர்வு வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதை விட மோசமான  உரையாடல்கள் இரு பெண்களுக்கு இடையில் நிகழ்த்தும் கொடுமையை நாம் 'கன்னியாகுமரி'யில் சகித்துக் கொள்ளவேண்டியவராகின்றோம்.

 

விமலா அந்தப் பாலியல் வன்புணர்வு சம்பவத்தை உதாசீனப்படுத்துகின்ற விடயத்தை ஏற்கனவே நான் என் 12/13 வயதுகளில் வாசித்த சுஜாதாவின் நாவலில் வாசித்தும் விட்டேன். நாவல் பெயர் இப்போது நினைவினில்லை. அதில் ஒரு கணவன் மனைவியும் எங்கோ போகும்போது இப்படி அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார். அப்படிச் செய்த குற்றவாளிகளை எப்படியேனும் கண்டுபிடித்துவிடவேண்டுமென்ற வெறியுடன் அந்தப் பெண் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பார். இறுதியில் அந்த  குற்றவாளி  சிறையில் அடைக்கப்படும்போது, அவரைப் பார்த்துவிட்டு ஒன்றும்பேசாமல் அந்தப்பெண் அமைதியாகத் திரும்புவார் என்பதாக அந்நாவல் முடியும்.

 

விமலா ஸ்டீபனுக்கு முன் செய்வதும் அதைத்தான். ஆக அதில் கூட பெரிய விடயம் இல்லை. இப்படி அண்மையில் ஒரு நூற்றுக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு நாவலில் தொடக்கத்திலே இலங்கை இராணுவம் ஒரு தமிழ்ப்பெணை பாலியல் வன்புணர்வு செய்தபின், அந்தப் பெண்  பின்னர் அந்த இராணுவத்தைத் தொடர்ந்துபோய் காதல் செய்வதுபோல வந்தவுடன், எவ்வளவு பெரிய அபத்தமென அந்த நாவலை அப்படியே வாசிக்காது வைத்துவிட்டதும் நினைவில் எழுகிறது.

 

ஆக மீண்டும் 'கன்னியாகுமரி'யை வாசித்தபோது ஜெமோவின் 'காடு', 'இரவு' போன்றவற்றை மீள வாசித்தபோது பிடித்துப்போனது போல, இது அப்படியொரு நெருக்கமான நாவலாக ஆகவில்லை என்பது சற்றுக் கவலையானதுதான். அந்தவகையில் நான் 10/15 வருடங்களின் முன் நிகழ்த்திய வாசிப்புக்கள் அனைத்தையும் முற்றாகப் புறக்கணிக்கவும் தேவையுமில்லை என்று கொஞ்சம் நிம்மதியும் வருகின்றது.

 

இப்படியாக நகுலனை, ஜெமோகனை மீள்வாசிப்புச் செய்யும்போது ஒருவர் எவ்வளவு படைப்புக்களை எழுதியிருக்கின்றபோதும் காலத்தின் நீட்சியில் நாம் சுருக்கி வைத்துத்தான் அவற்றையெல்லாம் பார்க்க விரும்புகின்றோம் என்றும் சிந்தித்துப் பார்க்க முடிந்தது . ஜெயமோகன் எவ்வளவு எழுதியிருந்தாலும் அவரையும் காலம் முன்னோக்கிச் செல்ல ஒரு சிமிழுக்குள்தான் அடக்கப்போகின்றது. அது சுந்தர ராமசாமிக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றது.

 

அப்படியெனில் மீச்சிறு உலகிற்குள் நின்று படைத்த நகுலனுக்கும், இரண்டு நாவல்களை மட்டும் எழுதிய ப.சிங்காரத்திற்கும், ஏன் இன்னும் கொஞ்சவருடங்களில் பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'க்கும் அதுதான் நிகழப்போகின்றதென்றால், எல்லோர்க்கும் அவரவர்க்குரிய இடமிருக்கும் இலக்கிய உலகில், ஆரவாரங்களுக்கும், அலட்டல்களும் சமகாலத்தில் ஏன் இவ்வளவு அவசியம் என்ற வினாவையும் நாம் எழுப்பிப் பார்க்கலாம்.


000000000000000


(நன்றி: 'அம்ருதா' - தை, 2022)

0 comments: