கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

உதிராக் கடைசி இலை!

Thursday, February 24, 2022

 1.


இலையுதிர்காலத்தில் முதல் இலை மஞ்சளாவதை யன்னலுக்குள்ளால் பார்த்துக்கொண்டிருந்தேன். கனடா வந்த புதிதில் ESL (English as a Second Language) வகுப்பில் சேர்ந்தபோது, படித்த ஓ'ஹென்றியின்  'கடைசி இலை' கதை நினைவுக்கு வந்தது. கதையில் ஒரு பெண்ணுக்கு நிமோனியா வந்து மோசமான நிலையில் இருப்பார். அவர் தனது அறையிலிருந்து வெளியே இலைகள் உதிர்த்துக்கொண்டிருக்கும் மரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்.  


அதுவும் ஒரு இலைதுளிர்க்காலம்! என்றோ ஒருநாள் அந்த மரத்தின் கடைசி இலையுதிரும்போது தானும் இறந்துவிடுவார் என்று அவர் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத்தொடங்கிவிடுவார். 


இந்தத் தீவிர நம்பிக்கை அவரின் உயிரை உண்மையில் பறித்துவிடுமோ என்ற கவலையில் அவரது அறைத்தோழி கீழ்த்தளத்தில் இருக்கும் ஒரு ஓவியரைக் கொண்டு ஒர் 'தத்ரூபமான' இலையை அந்தச் சுவரில் படர்ந்திருக்கும் மரத்தில் (சுவரில்) வரையச் செய்துவிடுவார். இதை அறியாத நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பெண், கடைசி இலை இன்னமும் மரத்தில் இருக்கிறதென்ற நம்பிக்கையில் அந்த நோயிலிருந்து மீண்டுவிடுவார். பிறகுதான் அவருக்குத் தெரியும், அந்த இலை அசலான இலையில்லை, வரையப்பட்டது என்பது. ஆனால் துயரம் என்னவென்றால் இந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் நிமோனியா வந்து  இறுதியில் இறந்துபோய்விடுவார். 


ஒருவகையில் இது எதையோ பெறுவதற்காய், நாம் எதையோ இழக்கவேண்டியிருக்கவேண்டியதை மறைமுகமாய்ச் சொல்வதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மேலும் எவ்வளவு முயற்சித்தாலும் சிலவிடயங்கள் நமது அறிதலுக்கு அப்பாலாக இருக்கலாம். அதற்குள் கூட அமிழ்ந்து நிலைமையை மேலும் சிக்கலாக்காது, முகில்களைப் போல கடந்து செல்லவேண்டிய சந்தர்ப்பங்களையும் நாம் சந்திக்கவேண்டி வரலாம்.


பிரான்சிஸ் கிருபாவுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் கார்த்திக் நேத்தாவின் உரையைக் கேட்டபோது, அவரின் அகவுலகிற்குள் ஓர் உடைப்பு ஏற்பட்டு மீண்டெழுந்தது போல, ஏன் பிரான்சிஸ்ஸிற்கு ஏற்படாதுபோனது என்ற கேள்வி எழுந்தது. பின்னர் அது அவ்வாறே நிகழ்ந்துவிட்டது,  அதில் தொக்கி நிற்கும் 'ஏன்'களை விட்டுவிட்டு நகர்வதுதான் நல்லது போல மனசுக்குத் தோன்றியது. 


2.


சிலநாட்களுக்கு முன் என் முதல் -பதின்ம- காதலியைச் சந்தித்திருந்தேன். அவர் உலகின் இன்னொருமூலையில் நிம்மதியாக வசித்துக் கொண்டிருக்கின்றார். நீண்ட வருடங்களின் பின் இப்போது சந்திக்கின்றேன்.  அவர் எனக்கு காதலை மட்டுமல்ல, தற்கொலையெனும் சாவின் விளிம்பையும் அறிமுகப்படுத்தியவர். அந்தளவுக்குக் காதல் பித்துப் பிடித்த காலமது. 


அதன் பிறகு நிறைய நிறையக் காதல்களையும், பிரிவுகளையும் அனுபவித்தாயிற்று. எனினும் மனம் பிறழ்ந்து உழன்றபோதுகூட ஒருபோதும் தற்கொலையை நாடிப் போக பின்னர் ஒருபோதும் மனது விரும்பியதில்லை. மரணத்தைப் புரிந்துகொண்டாலே வாழ்க்கை இனிக்குமென்று ஓஷோ சொல்வதைப்போல, ஒருமுறை சாவின் விளிம்பைக் கண்டுவிட்டதால், வாழ்வு இன்னும் சுவைக்கின்றது போலும். 


காதலைப் போல காதலின் பிரிவும் எம்மை அலைக்கழிக்கும் பெரும்சுழல். அதிலிருந்து மீளும் வழிகள் எனக்குக் கிடைத்தது போல பிரான்ஸ்ஸிற்கும் ஏதோ ஒருவகையில் தெரிந்திருந்தால் காதலிலிருந்து மட்டுமல்ல, வாழ்க்கையிலிருந்து மீளும் வழி தெரிந்து என்னைப் போல காதல்கள் பலதை அனுபவித்துக்கொண்டு, தனது கடந்தகாலக் காதலியோடு (அவருக்கு அப்படியொருவர் இருந்திருந்தால்), இப்போது எனது பதின்மக் காதலியுடன் நான் பேசிக் கொண்டிருப்பதைப்போல அவரும் பேசித்திரிந்திருப்பாரெனத் தோன்றியது. 


ஆகக்குறைந்தது நானும் அவரும்


"பெண்ணைக் கண்டு

பேரிரைச்சிலிடுகிறாய் மனமே...

பெண் யார்?

பெற்றுக்கொண்டால்  மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை."


(ப 24, வலியோடு முறியும் மின்னல்)


என்ற அவரது கவிதையை முன்வைத்து 'இல்லை பிரான்சிஸ், சிலவேளைகளில் பெண் இதைத்தாண்டியும் இருக்கிறாள்' என உரையாடிக் கொண்டு கூட இருந்திருக்கலாம். ஆனால் திரும்பவும், இது கூட ஒற்றைப்படையாக பிரான்ஸிஸ்ஸை விளங்கிவைத்திருப்பதன் என் பலவீனந்தானோ என்றும் மனம் யோசிக்கிறது. 


பிரான்ஸிஸ் நாம் அறியாத எத்தனையோ காரணங்களை அவரின் அகவுலகிற்குள் வைத்திருந்திருக்கலாம். ஆக நாமெல்லோருமே நமக்குத் தெரிந்த அனுபவங்களின் நீட்சியில் வைத்து பிரான்ஸிசைப் பார்க்கின்றோமே தவிர, அவர் கையில் அள்ளுகின்ற தண்ணீரைப்போல அகப்படாமல் தப்பிப்போய்க்கொண்டிருக்கின்ற  ஒருவர் என்பதும் புரிகிறது. இப்போது இதையெல்லாம் ஏன் நினைத்துக் குழம்பிகொண்டிருக்கின்றேன் என்பதற்கும் ஏதேனும் காரணங்கள் இருக்கா என்ன?


3.


நானும், நண்பரும் உணவருந்தியபடி கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் ஒரு வைத்தியர் என்பதால் கொரானா இறப்புக்கள் முதல் பல்வேறு வன்கொடுமைக் கதைகள் வரை நிறையச் சொல்லிக்கொண்டிருந்தார்.  ஒரு உடல் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுஞ் சம்பவத்தைப் பார்த்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியபோது முழுப்போத்தல் வைனை வாங்கிக்கொண்டுபோய் முழுதாய் அருந்திய பின்னாலேயே தன்னால் அந்தத் துயரைக் கொஞ்சமாவது கடக்க முடிந்தது என்றார். இந்தத் துயர்களை எவ்வளவு முயன்றாலும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவை.


இப்படி அங்குமிங்குமாய் அலைந்த கதையின் நடுவில் have you ever felt loneliness என வினாவினார். நான் அதைத் தத்துவார்த்துவ விளக்கமாய் சொல்லத் தொடங்கி,  இது தேவையில்லாததென சட்டென ஒரு புள்ளியில் நிறுத்தினேன். தனித்து இருக்க விரும்புபவன் என்றாலும், புறவயமாய் நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை, எப்போதும் குடும்பத்தவர்,நண்பர்கள், காதலிகள் என அருகிலோ தூரத்திலோ இருக்க வாய்க்கப் பெற்றவன் எனச் சொன்னேன். எனினும் வாசிப்பு ஆழமாகின்றபோது, நகுலனை வாசிக்கும்போது தனிமைக்குள்ளும், ப்யூகோவ்ஸ்கியை வாசிக்கும்போது பெண்பித்தனாகவும், ஹெமிங்வேயை வாசிக்கும்போது குடிபோதையில் அமிழ்பவனாகவும் என்னைக் கற்பனை செய்துகொள்ளும் பழக்கம்  அவ்வப்போது இருக்கிறதென எப்படி இந்த நண்பருக்கு விளங்கப்படுத்துவது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன்.


பின்னர் நாம் படித்த பாடசாலையை பார்த்தபடி, நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்டபடி நகரத்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தோம்.


உயர்கல்லூரி நாட்கள், காதல் நினைவுகள், பிரிவின் வாதைகள், தியாகம்/துரோகம் என்கின்ற பெயர்சூட்டல்கள் எல்லாம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இப்போது தெரிகிறது.


நேசமே முழுதாய் முகையவிழ்க்காத 16 வயதுப் பெண்ணாக ஒருகாலத்தில் இருந்த இவரால்தான் என் வாழ்வு கானலாயிற்றென கற்பிதம் செய்த காலங்களை நினைக்க ஒரு புன்னகை அரும்பிற்று.


எதிரெதிர் காலங்கள்

.............................

 

என் காலம் 

தவழ்கிறது

தத்துகிறது

நடந்து செல்கிறது

தலை தெறிக்க ஓடுகிறது

தள்ளாடிச் சரிகிறது

திரும்பிப் பார்க்கிறது

தேங்கிக் கிடக்கிறது

இன்னும் என்னவென்னவோ செய்கிறது

என் காலம்.


உன் காலமோ

காலை மாலைகளற்ற

வாடாத பூவாகத் தன் தீராத இதழ்களில்

மலர்ந்து கொண்டேயிருக்கிறது.


(ப 75, நிழலன்றி ஏதுமற்றவன், ஜெ. பிரான்ஸிஸ் கிருபா)


4.


ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளின் தமிழாக்கத்தை திருத்தியும், வெட்டியும் செய்து தொகுப்பாக்கி, பதிப்பகத்துக்கு அனுப்ப முன்னர் ஒரு நண்பருக்கு வாசிக்க அனுப்பி வைத்திருந்தேன். அதில் 'படையல்: என்னை நேசித்த பெண்களுக்கு...' என காணிக்கை செய்திருந்தேன்.  இந்த நண்பரும் என் மதிப்புக்குரியவர் என்பதால் என் படையலில் அவரும் இருக்கின்றார் என்பது அவருக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும். வாசித்துவிட்டு எனக்காய் ஒரு திருத்தம் செய்கின்றாயா என்றார். என்னவெனக் கேட்டேன். 'என்னை நேசித்த பெண்களை' - 'என்னை நேசிக்கும் பெண்களுக்கு' என மாற்ற முடியுமா என வினாவினார். 'உன் மீதான நேசம் முடிவடையாதது, அப்போதுதான் நான் விடுபடமாட்டேன்' என்றார். 


என் பதின்ம நண்பரிலிருந்து, இப்போது படையலில் திருத்தஞ்செய்யக் கேட்ட  நண்பர் வரை, எல்லாப் பிரியப் பெண்கள் மீதும் காலம் வாடாத பூவாக அவர்களின் தீராத இதழ்களில், என்றும் மலர்ந்து கொண்டேயிருக்கட்டும்.


எனக்கான உதிராத 'கடைசி இலை'களாக இவர்களே இருந்துகொண்டிருக்கின்றனர்.


************************


(செப்ரெம்பர் 28, 2021)
நன்றி: புகைப்படம்-இணையம்

0 comments: