கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 01

Monday, February 21, 2022


சில வாரங்களுக்கு முன்னர் நண்பர்கள் இருவருடன் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தபோது, பயணிப்பவர்களால்தான் நிறைய எழுதமுடியுமென ஒரு நண்பர் சொன்னார். அத்துடன் தமிழில் இன்று ஒரளவு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களையும் உதாரணங்களாய்க் காட்டினார். அவர் சொல்வதில் ஒருவகையில் நியாயம் இருக்கிறதென்றாலும், அதை ஒரு நிபந்தனையாக முன்வைக்க முடியாதெனச் சொன்னேன். 


தமிழில் எனக்குப் பிடித்த அசோகமித்திரனோ, நகுலனோ அவ்வளவாகப் பயணித்ததில்லை. அசோகமித்திரனாவது அவரின் வாழ்வின் முற்பகுதியில் கொஞ்சமாவது பயணித்திருக்கின்றார். நகுலனுக்கு அதுகூட அவ்வளவாக வாய்க்கவில்லை. ஆனால் இப்போதும் அவரைத் தேடித் தேடிப்போய் என்னைப் போன்ற பலர் வாசித்துக்கொண்டிருக்கின்றோம். இத்தனைக்கும் அவரின் கதை சொல்லும் பரப்பு என்பது மிகவும் சுருங்கியது. ஆனாலும் அவர் ஏன் இப்போதும் காலங்கடந்தும் எங்களை ஈர்த்துக்கொண்டிருக்கின்றார்? அவரின் தனிமையும், அவர் வாழ்ந்த வாழ்வும் அந்த மஞ்சள் நிறப்பூனையைப் போல அலைந்துகொண்டிருப்பதால்தான் நகுலன் இன்னமும் காலத்தில் வற்றாப் படைப்பாளியாக இருக்கின்றாரா?  இல்லையெனில் இந்தக் காலத்தில் எனக்கு யதார்த்தத்தின் மீது நின்று கதை சொல்வதை வாசிப்பது அலுத்துக்கொண்டிருப்பதால்தான் நகுலன் நெருக்கமாகின்றாரா என்றும் தெரியவில்லை.


இதை எழுதும் இந்தப் பொழுதில் பெருமாள் முருகனின் 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை'யை வாசித்து முடித்திருக்கின்றேன். என் இருபதுகளில் வாசித்தபோது பெருமாள் முருகனின் 'கூளமாதாரி'யையும், கண்மணி குணசேகரனின் 'கோரை'யும், சோ.தருமனின் 'கூகை'யையும் யதார்த்தவாத கதைகளுக்கு மிகப்பெரும் உதாரணமாக வைத்திருந்திருக்கின்றேன். இப்போதும் அதில் பெரும் மாற்றம் எதுவும் வரவில்லை. ஆனால் இன்று பெருமாள் முருகனின் நாவல்கள் சாதாரணமாக வாசித்து, பக்கங்களை எளிதாகக் கடந்துபோகின்றமாதிரியான நிலைக்கு வந்துவிட்டது. அவரின் 'மாதொருபாகன்' அதன் சர்ச்சைக்குரிய விடயத்துக்காய் கவனத்தைப் பெற (அதற்கு முன்னரே நான் வாசித்துவிட்டேன்), அதன் முடிவில்  இருந்து தொடங்கும் கதையை இரண்டுவிதமாக எழுதிய 'ஆலவாயனை'யும், 'அர்த்தநாரி'யையும் வாங்கி ஒன்றை மட்டும் வாசித்துவிட்டு இதுவே போதுமென மற்றதை இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கின்றேன். 'பூனாச்சி' நாவலெல்லாம் ஆங்கிலத்தில் அவ்வளவு விரைவில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதில் அதிலென்ன அப்படிச் சிறப்பாக இருக்கிறதென, எனக்குத் தனிப்பட்டவகையில் கேள்வி இருக்கிறது. இவ்வாறு நேரடியாக கதை சொல்லல் பாணி எனக்குரியதாக இல்லாது போனது துயரமென்றாலும், நான் அடைக்கலம் அடைய நகுலனும், லா.ச.ராவும், சமகாலத்தில் ரமேஷ் பிரேதனும் எனக்கு இருக்கின்றார்கள் என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றது.


ஆகவேதான் கோணங்கியும் அவருக்கு கொடுக்கப்பட்ட விஜயா பதிப்பக விருதில் பேசும்போது, யதார்த்த எழுத்தைக் கைவிட்டு கற்பனையின் விளைநிலத்தில் வாருங்களென நம்மைத் தன்னோடு அழைக்கிறார். அவர் பேசுவதே ஒருவர் மாயக்கம்பளத்தில் அடிக்கும் காற்றுக்கேற்ப அலைவதுபோல எம்பி எம்பி ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்குப் போவது கூட எனக்கு நெருக்கமாயிருந்தது. அதை நகுலன் எழுத்தில் செய்துகொண்டு போகின்றார், அதனால்தான் சிலருக்கு அவர் 'இயந்திரத்தனமாய்' எழுதிக்கொண்டுபோகின்றார் என்கின்ற விமர்சனத்தையும் நகுலன் மீது வைக்கச் செய்திருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி என்னைப் போன்றவர்களைத் தேடி நகுலன் தொடர்ந்து வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றார். எனக்கு அடுத்த தலைமுறையில் ஒரு நண்பர், எனது தோழியொருத்தியுடன் நகுலனின் 'அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி'யை சேர்ந்து வாசிக்க வாஞ்சையுடன் அழைக்கிறார், அங்கே நகுலன் இன்னமும் இறக்காது நம்மோடு வருகிறார். 15 வருடஙகளுக்கு முன் அறிமுகமான நகுலன், அம்பை எல்லாம் அவர்களின் (புனை)பெயரால் என்றும் குன்றா இளமையுடந்தான் எனக்குள் புகுந்து இன்றும் அப்படியேதான் இருக்கின்றார்கள். பெயர்களால் மட்டுமில்லை எழுத்துக்களாலும் அவர்களுக்கு வயதாவதில்லை, அதில் கூடவே அசோகமித்திரனையும், எஸ்.பொவையும் சேர்த்துக்கொள்வேன்.


ரேமாதிரி எழுதப்படும் எழுத்துச் சூழலில் இருந்து புதியவகை எழுத்துக்களை எழுதப்போகின்றோம் என்றால் முதலில் அதுகுறித்து அச்சங்களைக் களையவேண்டும். இரண்டாவது நாங்கள் யாரோடோ போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற மனப்பான்மையை முற்றாகத் துரத்த வேண்டும். மேலும் இவ்வாறாக எழுதினால்தான் இன்றையகாலத்தில் வாசிப்பார்கள் என்கின்ற நினைப்பின் சுழிப்பை அகற்றவும் வேண்டியிருக்கிறது. ஆகவேதான் நகுலன் தன் சமகாலத்தில் எவரும் வாசிக்கவில்லை, தானே சொந்த செலவில் பதிப்பித்த புத்தகங்கள் விற்காமல் இருக்கிறது என்று அவ்வப்போது சலித்துக்கொண்டிருந்தபோதும், அவர் தனக்கு விரும்பியதை எழுதுவதிலிருந்து விலகவே இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும் நான் எழுதவிரும்புவதை எழுதியே தீர்ப்பேன் என மறைமுகமாய்ச் சொல்லியிருக்கின்றார். 


இன்னொருவகையில் உங்களுக்குள் 'ஊற்று'ப் பெருகும்போது மட்டும் எழுதுங்களென ஹெமிங்வே சொல்வதையும், 'சாறு' இல்லாமல் எதையும் எழுதித் தொலைக்காதீர்களென்று ப்யூகோவ்ஸ்கி எழுதியதையும் இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். நாங்கள் எழுதுவது ஏதாவதாக இருந்தாலும் அந்தத் தருணத்திற்கு நாங்கள் உண்மையாக இருந்தோமா என்று ஒருதடவை எங்களைச் சரிபார்த்தும் கொள்ளலாம். எழுதிக்கொண்டிருந்த தான், ரஷ்ய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு-1, 2 என்பவற்றை வாசித்ததோடு இதல்லவா எழுத்து என்று வியந்து எழுத்தின் உறங்குநிலைக்குக் கூட என் நண்பரைப் போல, விரும்பினால் போகலாம். அது தவறொன்றுமில்லை. எழுத்துக்குக் கொடுக்கும் ஒருவகை மரியாதைதான் அதுவும்.

 

மேலும் சமகால எழுத்தாளர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைப்பதைவிட, என்ன தோன்றுகின்றதோ அதை எழுதலாம். ஏனெனில் எழுத்து 'ஊற்றாகி' நல்ல 'சாறாகி' வரும்போது, அது தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்கின்றது. அந்த வாசகர்கள் காலத்தின் மீது  இப்படைப்புக்களை வைத்து, அடுத்த சந்ததியினருக்குக் கடத்தவும் செய்யவுங்கூடும்.


அந்தவகையில் துன்பங்கள் அல்ல, படைப்பாளிதான் நல்ல எழுத்துக்குத் தேவையென்று ப்யூகோவ்ஸ்கி சொன்னதுபோல, பயணங்கள் அல்ல, எழுத்தாளர்கள்தான் சிறந்த படைப்புக்களை எழுத வேண்டுமெனச் சொல்கிறேன். இன்று தமிழில் முன்னணி எழுத்தாளராக ஒருவர் சஞ்சிகையொன்றுக்கு அனுப்பிய படைப்பை வாசித்துவிட்டு, நண்பரொருவர் 15 வருடங்களுக்கு முன் எழுதியமாதிரியே அவர் இப்போதும் எழுதுகின்றார், கவலையாக இருக்கிறது என்றார் அந்த நண்பர். ஒன்றையே அதேமாதிரி எழுதுவது பெரிய தவறொன்றுமில்லை. நகுலன் ஒரு குறிப்பிட்ட சில விடயங்களையே திருப்பத் திருப்ப எழுதினவர். ஆனால் அவரிடம் வற்றாத சாறு எழுத்துக்களில் பெருகிக்கொண்டிருந்தது. தன் பலத்தை மட்டுமில்லை, தனது பலவீனங்களையும், தன்னை உந்தித்தள்ளும் எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டி எழுதும் நேர்மையும் நகுலனுக்கு வாய்த்தது. மேலும் எந்த கட்டுக்குள்ளும் இயங்காது தன்போக்கில் சூரியன் எழுந்து மறைவதைப் போல எழுதிக்கொண்டே, அலுப்பான வாழ்க்கையையும் கோடிட்டுக் காட்டிப் போய்க்கொண்டிருப்பவராகவும் நகுலன் இருந்திருக்கின்றார்.


மீண்டும், பயணங்கள்  நம் அலுப்பான அன்றாடங்களைக் கொஞ்சம் மாற்றியமைக்கவும், புதிய மனிதர்களைச் சந்திக்கவும் வைக்கவும் கூடும் போன்ற சில அனுகூலங்கள் இருந்தாலும், அதற்கும் எழுத்துக்கும் ஒருபோதும் நேரடித் தொடர்பில்லை, அப்படியான கற்பிதங்களில் நாமிருக்கத் தேவையில்லையெனவும் பயணிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்க்குச் சொல்வேன். நகுலனையும், ரமேஷ் பிரேதனையும் பிடித்தவர்க்கு, இது இன்னும் சொல்லாமலே நன்கு விளங்கும்.


*************

(நன்றி: 'அம்ருதா' - தை, 2022)



0 comments: