கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Hand of God

Wednesday, February 23, 2022

 

பால்யத்தைப் பற்றிச் சொல்ல நம்மிடம் நிறையக் கதைகள் இருக்கின்றன. ஏனெனில் அப்பாவித்தனத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல விலகிச் செல்கின்ற பருவமது. புதிய விடயங்கள் அறிமுகமாகின்றபோது தடுமாறுகின்ற காலங்களும் அதுவாகவே இருக்கும். ஆனால் அதை அக்காலத்திற்குரிய குறும்புகளோடும், கசப்புக்களோடும், குதூகலத்தோடும், இழப்புக்களுடனும் சொல்ல முடியுமா என்பதுதான் நம் முன்னாலிருக்கும் சவால்.


'The hand of god' ஒரு பதின்மனுடைய வாழ்க்கையை இத்தாலியப் பின்புலத்தில் வைத்துச் சொல்கின்றது. இது இத்திரைப்பட நெறியாள்கையாளர் (பாலோ சொரொண்டினோ) சொந்தக் கதையுங்கூட. இத்தாலியின் நேப்பிள்ஸில் பிறந்த சொரொண்டினோ அவரின் பதினாறு வயதில் தனது பெற்றோரை ஒரே நேரத்தில் இழந்தவர். அந்தத் துயரினூடாகப் பெற்றோரை நினைவு கொண்டாலும், பெரும்பாலான குடும்பங்களுக்குள் இருக்கும் இரகசியங்களையும் இந்தப் படத்தில் ஒரு பதின்மனுடைய பார்வையில் இருந்து கொண்டுவர அவர் தவறவும் இல்லை. கம்யூனிச சார்புடைய, பிள்ளைகள் மீது அக்கறை கொள்கின்ற தகப்பனுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பது அறிந்து, குடும்பம் உடைகின்ற நிலை வருகின்றது. அதேசமயம் நாபாலி உதைபந்தாட்டக் கழகத்துக்கு டியாகோ மரடோனா விளையாட வருவது பெரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. ஒரு துயரத்தை இன்னொரு மகிழ்வான செய்தி ஒரளவுக்கு பிள்ளைகளைச் சமன் செய்துவிடுகின்றது.

பின்னர் கிட்டத்தட்ட மரடோனா அந்நகரின் ஒரு அடையாளமாகவே மாறிவிடுகின்றார். மரடோனா ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக ஊரிலே தங்கி நிற்பதாலேயே இந்தத் திரைப்படத்தின் நாயகன் பபியோத்தே (அசலில் சொரொண்டினோ) பெற்றோர்கள் சென்ற சுற்றுலாப் பயணத்துக்குச் செல்லாததால் உயிர் தப்புகின்றார். ஒருவகையில் மரடோனாதான் பபியோத்தையைக் காப்பாற்றியிருக்கின்றார் என உறவுகளால் சொல்லப்படுகின்றது.


உதைபந்தாட்ட வீரனாக வரும் கனவை உடைத்து ஒரு திரைப்பட இயக்குநனராக வரவேண்டுமென பபியோத்தே பின்னர் விரும்புகின்றார். அந்தவேளையில் பிரபல்யமான ஒர் இயக்குநரைச் சந்திக்கின்றார். எல்லோரும் ரோமுக்குப் போய் படம் எடுப்பதுபோல நினைக்காது, உன் சொந்த நகரில் இருந்து உனது கதையை திரைப்படமாக்கு என்கின்றார். ஆக, இப்போது எமக்கு சொரொண்டினோ தனது பதின்மத்துக் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார்.


னப் பிறழ்வுடைய அத்தை, பிள்ளையொன்றும் பிறக்காத அவர் அதற்காக முயற்சித்து, அரிதாகவே சிலரின் கண்களுக்குத் தெரியுமெனச் சொல்லப்படும் Little Monk ஐத் தேடிப் போய் பிற ஆண்களிடம் தன்னை இழக்கின்றார். இவ்வாறு நிகழும் ஒவ்வொரு பொழுதும் அத்தையின் கணவர் அதையறிந்து கடும் வன்முறையை அவர் பிரயோகிக்கின்றார். அம்மாவின் மீது அயலில் இருக்கும் ஆணொருவருக்கு இருக்கும் மென் காதல், உன் பெற்றோரின் இழப்பில் உன்னைத் தொலைத்துவிடாதே, நீ எதிர்காலத்துச் செல்வதற்கு இதென, காமத்தை முதன்முதலாகக் கற்பித்து அனுப்பும் ஒரு முதிய பெண்மணி, நேசமும் விலகலும் இருக்கும் சகோதரன் என எல்லாவிதமான அனுபவங்களையும் இத்திரைப்படத்தினூடாக நாம் கடந்து போக முடிகின்றது.


இப்படத்தை இத்தாலியப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது எனக்குள் சமாந்தரமாக ஓடிய இன்னொரு படம் ஃபெலினியின் 'Amarcord'. அது எனக்கு மிக நெருக்கமான படமென்பதால்தான் அந்தப் படமே திரைப்படங்கள் குறித்து வெளிவந்த எனது தொகுப்பான 'உதிரும் நினைவின் வர்ணங்களில்' முதல் கட்டுரையாகச் சேர்த்திருப்பேன். ஃபெலினியுக்கு அவரது பால்யம் முசோலினியின் பாஸிசக் காலத்திலும், சொரொண்டினோவுக்கு அவரது பால்யம் மரடோனாவின் பொற்காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றது.


ஏற்கனவே வெளிவந்த சொரொண்டினோவின் 'Youth' பிடித்த படங்களிலொன்று. அதில் மரடோனா, மரடோனா என்ற பாத்திரமாகவே வந்திருப்பார். அதுபோலவே நிர்வாணக் காட்சிகளையும், இளமையின் பிரவாகங்களையும், வாழ்வின் அபத்தங்களையும் எவ்வாறு கலையாக்குவதென்பதற்கு சொரொண்டினோவின் மேலே குறிப்பிட்ட படங்களை மட்டுமில்லை, அவரின் "The Great Beauty' , 'Loro' போன்ற படங்களையும் திரைப்படங்களை எடுக்க ஆர்வமிருப்பவர்கள் கவனிக்கவேண்டும்.


இவ்வாறான படங்களைப் பார்க்கும்போதுதான் நமக்குச் சொல்ல இவ்வாறு எவ்வளவோ கதைகள் இருக்க, நாம் என்னவிதமான படங்களை எடுக்க ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றிய எண்ணங்களும் இடைவெட்டிப் போகின்றன.



0000000000000


(Dec 20, 2021)

0 comments: