கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்.பொ (என்கின்ற எஸ்.பொன்னுத்துரை)

Saturday, February 26, 2022

(தொடர்)

பகுதி-01


சான்களைப் பற்றி எழுதும்போது எங்கிருந்தோ ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகின்றது. அதேவேளை அந்த நெகிழ்ச்சி, ஆசானாகியபோதும் தேவையற்று ஒருவரை விதந்தோத்திவிடக்கூடாது என்கின்ற மெல்லிய பதற்றத்தையும் கூடவே கொண்டுவருகின்றது. இவ்வாறுதான் ஒவ்வொரு பொழுதும் எழுத்து சார்ந்து என் ஆசான்களாகிய ஒருவரான எஸ்.பொவை வாசிக்கும்போதோ, நினைக்கும்போதோ எனக்குள் பல்வேறு உணர்வுகள் வந்துவிடுகின்றன. எஸ்.பொவைப் போல நம் ஈழச்சூழலில் நீண்டகாலம் இலக்கியத்தோடு உறவாடிய ஒருவரைக் கண்டெடுத்தல் அவ்வளவு எளிதல்ல. 'தீ' (1957) என்று தமிழ் இலக்கியச் சூழலை சலனப்படுத்திய நாவலை எழுதியபோது  எஸ்.பொவுக்கு வயது இருபத்தைந்து. அவரின் முக்கிய நாவலாக நான் நினைக்கும் 'சடங்கு' தொடராக சுதந்திரனில் வெளிவந்தபோது அவருக்கு 34 வயது. அதே வருடத்தில் அவரின் முக்கியமான 'வீ' (1966) என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றது.


கே. டானியல், டொமினிக் ஜீவா போன்றோருடன் நட்புடன் இருந்ததுடன், முற்போக்கு அணியிலும் தீவிரமாக ஒருகாலத்தில் எஸ்.பொ இருந்திருக்கின்றார். அப்போது இவர்கள் மூன்று பெரும் 'புரட்சி' என்ற பெயருடன் தொடங்கும் புனைபெயர்களை வைத்து எழுதியிருக்கின்றனர். முற்போக்கு அணியும் பிற்காலத்தில் சீன-சோவியத் அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்பப் பிரிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே எஸ்.பொ தனது 28வயதிலேயே முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு அங்கிருந்து வெளியேறுகின்றார். அப்போது 'நற்போக்கு அணி' என்ற இன்னொரு அணியைத் தொடங்குகின்றார். 'நற்போக்கு' அணி தொடங்கிய கொஞ்ச வருடங்களிலேயே நீர்த்துப்போனாலும், எஸ்.பொ ஒருபோதும் தன் 'தாய்க்கழகத்துக்கு'த் திரும்பிப் போக ஒருபோதும் பிரியப்பட்டவருமில்லை.


தனித்து நின்று தனக்கான வெளியை உருவாக்கிய எஸ்.பொவைப் பேசாது ஈழத்திலக்கியம் ஒருபோதும் முழுமை பெறாது. ஒரு பெரும் ஆளுமையாக எஸ்.பொ இருப்பதால் அவர் முழுமையடைந்த மனிதராக வாழ்ந்துதான் இல்லாமற்போனார் என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரின் ஆளுமை அவருக்கிருந்த எல்லாப் பலவீனங்களுக்கும் அப்பால் விகசித்து நின்றிருக்கின்றது எனக் கொள்க. இன்று எல்லோரும் தம்மைத் திருவுருவாக்கும் மடங்களை உருவாக்க எத்தனிக்கும்போது, எந்தக் கூட்டத்துக்குள்ளும் சிக்காதது மட்டுமின்றி, தன்னைத்தானே தன் படைப்புக்களிலேயே எள்ளல் செய்து தன் வழி தனித்துவமான பாதையென்று அவர் வாழ்ந்த காலங்களில் காட்டிவிட்டுப் போயிருக்கின்றார்.


ஒருமுறை அவர் காலத்தைய ஒரு பெண் பேசும்போது, 'இவர் 'தீ'யை எழுதிவிட்டு இருந்தகாலம். தீயைத் தீயிலிட்டுக் கொழுத்துங்கள் என எல்லோரும் அதற்காய்த் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தீயை இப்படி எழுதிவிட்டேன் என்ற எந்த பயமுமில்லாது சிகரெட்டையும் புகைத்துக்கொண்டு ரோட்டில் போன அந்தத் திமிர் இருக்கிறதே' என்று எஸ்.பொவைப் பற்றிச் சொன்னபோது எழுத்தில் திமிர்த்த அழகன் என எஸ்.பொவை உருவகித்திருக்கின்றேன். இன்று எனக்கு ஒரு மானசீகக் குருவாக இருப்பதுபோல அன்று எஸ்.பொ எத்தனையோ பெண்களின் இரகசியக் காதலனாக இருந்திருப்பார் என்று நினைத்து மெல்லியதாகப் புன்னகைத்திருக்கின்றேன்.


ஸ்.பொ, அவர் காலமாகும்வரை 40ற்கும் மேலான நூல்களை எழுதியிருக்கின்றார். எஸ்.பொ தொடாத இலக்கியத்தின் வகை இல்லையெனச் சொல்லுமளவுக்கு எல்லாவற்றிலும் கை நனைத்திருக்கின்றார். எஸ்.பொவின் தீயும், சடங்கும், நனவிடைதோய்தலும் பேசப்பட்ட அளவுக்கு அவருக்கு "?" (கேள்விக்குறி) என்ற நூல் அவ்வளவு பேசப்படவில்லை. 1972ல் வெளிவந்த "?" ஒரு சிறந்த பின் நவீனத்துவ எழுத்துவகையெனச் சொல்லலாம். பின் நவீனத்துவம் தமிழ்ச்சூழலில் அறிமுகமே ஆகாத ஒருகாலத்தில் நிறைய அடிக்குறிப்புக்களுடன் ஒரு பனுவல் எழுதப்பட்டது மட்டுமல்ல, அதன் எல்லாப் பக்கங்களிலும் எள்ளல் பொங்கி வழிகின்றது.


அதில் 1ம், 2ம் பதிப்பு 40களில் வந்ததெனக் கூறி நாம் வாசிக்கும் இந்த பதிப்பு (1972) 3ம் பதிப்பெனச் சொல்லப்படுகின்றது. இதற்கான பின்னீட்டை கொண்டோடி சுப்பர் என்பவர் எழுதுகின்றார். சுப்பரும் எஸ்.பொதான் என்றாலும் அதில் எஸ்.பொவுக்கும் திட்டு விழுகின்றது. இதை எழுதுகின்ற நேரத்துக்கு ஒரு சோக்கான நாவலை எஸ்.பொ எழுதியிருக்கலாமென்று விமர்சனம் கொண்டோடி சுப்பரால் வைக்கப்படுகின்றது.


"இந்தப் புத்தகத்திலும் இந்திரியக் திறிக்கீஸுகள் ஏதேனும் எஸ்.பொ விட்டிருப்பான் எண்ட ஆசையோடைதான் வாசிக்கத் துவங்கினனான். அந்த அறுவான் சரியா ஏமாத்திப் போட்டான். ஒண்டைச் சொல்ல வேண்டும். வழக்கம் போலை எல்லாதையும் பச்சை, பச்சையாகத்தான் புட்டுக் காட்டுறான் போலைத்தான் கிடக்கு" என்று மட்டுமில்லாது, மேலும் 'கண்ணானை எனக்கெண்டால் இந்தப் புத்தகத்திலை பல பகுதிகள் விளங்கேல்லை. என்னிலும் பார்க்க உங்களுக்கு அதிக பகுதிகள் விளங்கிச்சு தெண்டால் நீங்கள் குடுத்து வைச்சவங்கள்" என்றும் கொண்டோடி சுப்பர் பிரதியின் 'கரடுமுரடு' தன்மை பற்றி எழுதிச் செல்கின்றார்.


காலம், வெளி, கணித சூத்திரம், பாயிரம், பாயிரங்களுக்கான தெளிவுரை, அநுபந்தம், நூல் முடிய இப்பதிப்பில் வெளிவந்த ஆட்பெயர்கள், நூல்பெயர்கள், திருக்கடைக் காப்பு என்று எஸ்.பொ இந்தப் புதினத்தில் செய்யும் வித்தகத்தனம் சிலாகிக்க வேண்டியது. ஒருவகையில் இது அன்றைய காலத்து நிகழ்வுகளையும், முற்போக்கு அணியினர் மீதான தனது நக்கல்களையும், விமர்சனங்களையுந்தான் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்று அந்தக் காலத்தின் மீது முன்வைத்து இதை வாசிக்கும்போது விளங்கிக்கொள்ளமுடியும்.


நச்சினார்க்கினியர் பரம்பரையின் தூரத்துச் சொந்தமான நச்சாதாக்குமினியர்தான் இதை எழுதுகின்றார். இதன் அசல் பிரதியைப் பெற அவர் 2147ல் இருக்கும் நூலகத்திற்குப் போகின்றார். அதைப் பயன்படுத்த லைசன்ஸும் தேவையாயிருக்கின்றது என்று நீளும் இதன் முன்னீட்டை வாசிப்பதே சுவாரசியமானது.


பிறகு சார்பியல் விதி சூத்திரத்துடன் தரப்பட்டு விளக்கப்படுகின்றது. அது இன்னும் விளங்குவதற்கு ஆங்கிலக் குறும்பா ஒன்றும் வாசகருக்குத் தரபப்டுகின்றது.

"There was once a lady called Bright.

who could travel faster than light.

She went out one day

In a relative way

And returned the previous day"

என்று சொல்லிவிட்டு, 'குறும்பாவிலே சுட்டப்படும் சீமாட்டி எதிர்காலத்தையும் இறந்தகாலமாக மாற்றிவிட்டாளே! 2147ம் ஆண்டு 1972 இல் இறந்த காலமாகிவிட்டதல்லவா? " என்று காலம் என்பது நாம் நினைக்கும் காலமாகத்தான் இருக்கவேண்டுமா எனவும் வினாவப்படுகின்றது.


இதை எஸ்.பொ எழுதும்போது 1972ம் ஆண்டு, அதுவும் சார்பியல் விதியை இவ்வளவு எளிதாக எவர் புனைவுக்கு அந்தக்காலத்தில் கொண்டுவந்திருப்பர். ஆகவேதான் நான் எஸ்.பொவினது சடங்கு நாவலைப் போல, "?" முக்கியமாகக் கொள்கின்றேன். இந்த "?" இன்னமும் வாசிக்காத வாசகருக்காய் நாமறியாத பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வைத்திருக்கின்றது எனத்தான் சொல்வேன்.


சிலவேளை நம் மொழி அழியாமல் 22ம் நூற்றாண்டிலும் இருப்பின், ஒருவாசகர் இதை 2147 ஆண்டில் எடுத்து வாசித்தால் எப்படியிருக்கும்? ஒருவகையில் ரமேஷ் பிரேதன், "இன்றிருக்கும் நானல்ல, நான் நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய தாய்மொழியின் நீட்சி. ஆகவே என் சிந்தனைகள் ஆதியிலிருந்தே தொடங்குகின்றன. நான் பேசுவது இந்தக் காலத்துக்கு மட்டும் உரித்தானல்ல. நான் இங்கே இப்போது இருக்கின்றேனே தவிர, நான் பல்வேறு காலங்களில், வெளிகளிலும் உலாவித்திரிபவன்" என்று சொல்வதற்கு நிகர்த்து இந்த "?" வாசித்துப் பார்ப்பது ஒரு மொழி விளையாட்டைப் போல இருக்கும்.

 

0000000000000000000000000


ஓவியம்: மூனா? (நன்றி இணையம்)

0 comments: