சாந்தன், எங்கள் வீட்டு நூலகத்திலிருந்த 'ஒரே ஒரு ஊரிலே' என்ற நூலின் மூலந்தான் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது எனக்கு 11/12 வயதாகியிருக்கக் கூடும். எனவே அந்த வயதுக்குரிய விளங்கா வாசிப்பினூடாக அவரைக் கொஞ்சம் வாசித்திருந்தேன். பொறியியலாளராக கட்டுப்பெத்தையில் கல்வி கற்று, கொழும்பில் வேலையும் செய்த சாந்தன் 1977 இனக்கலவரத்தோடு யாழுக்குத் திரும்பினார். அதன்பிறகு யாழை விட்டு இன்றும் வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றபோதும், அன்றைய சோவியத்து ஒன்றியம், கென்யா போன்றவற்றுக்குப் பயணித்திருக்கின்றார். அந்தப் பயண அனுபவங்களை விரிவாக எழுதி நூல்களாகவும் வெளியிட்டிருக்கின்றார்.
'சித்தன் சரிதம்' என்பது நாவலெனச் சொல்லப்பட்டாலும் அது இன்னொருவகையில் சாந்தனின் auto fiction என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். சித்தன் என்ற பாத்திரத்தினூடாக அவரின் அரிவரி வகுப்பிலிருந்து யாழ் வெளியேற்றம்/மீள் குடியேறுதல் வரை -கிட்டத்தட்ட 50 வருட- தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார்.
இந்த 50 வருடக் காலத்தில் இலங்கையில் முக்கியமாக யாழ் மண்ணில் நடக்கும் அரசியல் மாற்றங்களை மேலோட்டமாகவும், அதைவேளை தனிமனிதர் ஒருவரை அது எப்படி பாதிக்கின்றதென்பதை ஆழமாகவும், சாந்தன் சித்தன் என்ற பாத்திரத்தினூடாக எழுதிச் சொல்கின்றார்.
இந்த நாவலில் வரும் சித்தனும், அவரது நண்பரான செகம் எனப்படும் செகராஸ்வரனும் சந்திக்கும் ஓர் நிகழ்வை குறிப்பிடவேண்டும். 90களில் வெளியுலகம் முற்றாகத் தடைப்பட்ட காலத்தில் இருவரும் புத்தகங்களைத் தேடித்தேடி பழைய புத்தக கடைக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இத்தனை புத்தகங்களை யாழ்ப்பாணத்தவர் வாசித்திருக்கின்றனரோ என்று சித்தன் வியந்தாலும், அவருக்கு யாரோ விட்டுப்போன புத்தகங்களை இந்தப் புத்தகசாலையில் விற்கப்பட, வாங்குவதில் தயக்கமிருக்கின்றது. செகம் தான், நாங்கள் வாங்கவிட்டால் வேறு யாரோ வாங்குவார்கள் இல்லாதுபோயினும் வீணாய் அழிந்துபோகும் என்று சித்தனின் குற்றவுணர்வைப் போக்குகின்றார்.
அப்படியான பொழுதில் தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' வாங்குகின்றார். ஏற்கனவே அதைத் தொடராக கல்கியில் வந்தபோது சித்தன் வாசித்திருந்தபோதும், நூலாக இப்போது வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டுசெல்கின்றார். அதன் முதல் பக்கத்தைத் திறந்தவுடன், 'என்னில் பாதியான என் பாசமிகு மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், 82'ம் ஆண்டு என எழுதப்பட்டிருப்பதைக் கண்டவுடன் சித்தன் பதறிப்போகின்றார். எவ்வளவு அந்தரங்கமான புத்தகமிது, இதை எப்படியாயினும் அவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அனுப்பிவைத்துவிடவேண்டுமென சித்தன் அவதிப்படுகின்றார்.
தன் மனைவிக்கு புத்தகம் கொடுக்கும் ஒரு கணவன் எப்படியிருப்பான். அதுவும் தி.ஜாவின் 'அன்பே ஆரமுதே' கொடுத்தவன் எவ்வளவு உயர்ந்தவன். மனைவியும் அப்படிப் புத்தகம் கொடுத்திருப்பாளா? அவர்களுக்கு இப்போது பிள்ளைகள் இருப்பார்களா? அவர்களுக்கும் புத்தகங்களை இந்தத் தம்பதிகள் பரிசளிப்பார்களா? எவ்வளவு உன்னதமான குடும்பம்? இப்படி நமக்கு வெளித்தெரியாமல் எத்தனைபேர் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்கள்?' என்று சித்தனின் சிந்தனை பல்வேறு திசைகளுக்குப் போகின்றது. ஒரு பழைய புத்தகம் எத்தனை நினைவுகளை ஒருவருக்கு அருட்டிவிடுகின்றது. இந்தப் புத்தகம் இப்படி பரிசளிக்கப்பட்டிருப்பதன் மகிமையால் அதை பிறபுத்தகங்களோடு சேர்த்து வைக்காமல், தனக்கென்று தனது அப்பு தந்த புத்தகங்களோடு இந்தப் புத்தகத்தை வைத்து சித்தன் அதற்கொரு மதிப்பளிக்கின்றார்.
இதை வாசிக்கும்போதுதான் நாங்கள் புலம்பெயர்ந்தபோது சங்கானை வரை கொண்டுபோயிருந்த நூற்றுக்கணக்கான நூல்களை இறுதியில் அங்கே விட்டுவிட்டு வந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அங்கே எந்தக் கவனிப்புமின்றி கரையான்கள் அரிக்கின்றது என்று கேள்விப்பட்டு நாங்கள் படித்த பாடசாலையினர் வந்து எடுக்கச் சொன்னபோது, அவர்கள் எடுத்தும் மிஞ்சிய புத்தகங்கள் வீணாய்ப் போயிற்றெனன எனப் பின்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன். அப்படியாயின் நான் சிறுவயதில் வாசித்த சாந்தனின் 'ஓரே ஒரு ஊரிலே', 'கிருஷ்ணன் தூது' போன்றவை அடையாளமின்றிப் போயிருக்குமா அல்லது யாரினதோ சேகரத்தில் இன்னுமிருக்குமா என்ற யோசனையும் சடைத்து வளர்ந்தது. ஒரு தனிநபர் அனுபவம் பொது உணர்வாக மாறி வாசிப்பவரையும் தனக்குள் உள்ளடக்குவதல்லவா கலை?
இந்த நாவலின் முதற்பகுதியை இன்னும் செம்மை செய்து சிலவற்றை சுருக்கியிருந்தால் இந்த நாவல் வாசிப்பின் தொடக்கத்தில் அலுப்படைய வைத்திருக்காது. ஆனால் பிற்பகுதியில் அது வாசிப்பில் சோர்வைத் தராமல் தன்னை மாற்றியமைத்து வேகமெடுத்துச் செல்வதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த நாவலை சாந்தன் 1997-1998 காலப்பகுதியில் எழுதி முடித்துவிட்டார் என்று குறிப்பிடுகின்றார். கையெழுத்துப் பிரதியில் இருந்ததை நூலாக மாற்ற இவ்வளவு காலத்தை அது எடுத்திருந்தாலும் இன்றும் காலத்தில் பிந்தங்காது வாசிக்கவேண்டிய பிரதியாகத் தன்னை முன்வைப்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டிய விடயமாகும்.
நான் சாந்தனை அசோகமித்திரனின் வழிவந்த ஒருவராக நினைத்துக் கொள்பவன். தனது சிறுகதைகளுக்கும் அதிக பக்கங்களை விவரிக்க எடுக்காது, சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லி முடிப்பவர். அத்துடன் ஒரு தேர்ந்தெடுத்த மொழியையும் தனதாகக் கொண்டிருப்பதால் வாசகராகிய நமக்கு அவரின் கதைகளை வாசிக்கும்போது அலுப்புத் தெரிவதில்லை. இன்று சட்டென்று பிரபல்யமாகும் குறுங்கதைகளை அவர் 1970களில் எழுதி, எஸ்.பொவின் முன்னுரையுடன் 'கடுகுக்கதைகள்' என்று வெளியிட்ட ஒரு முன்னோடியுங்கூட.
00000000000000
(மார்கழி 21, 2021)
0 comments:
Post a Comment