(எஸ்.பொ - பகுதி - 04)
1.
'ஆண்மை' தொகுப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய கதையாக 14ஆவதைச் சொல்வேன். இந்தக் கதை ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் உரையாடிக்கொள்கின்ற காட்சிகளாக விரிகின்றது. இருவரும் தியேட்டருக்குப் படம் பார்க்கத் தனித்தனியே செல்கின்றனர். இதில் வரும் மிகத்தீவிரமான பெண்ணியவாதி, ஆண்கள் 'ஆண்களுக்கு மட்டும்' எனச் செல்கின்ற, மட்டுநகரிலுள்ள தியேட்டருக்குள் படம் பார்க்கப் போகின்றாள். இப்படி, தான் தனியே படம் பார்க்கப் போவதும் பெண்ணியமென அந்தப் பெண் சிந்திக்கின்றவள். அவளுக்குப் பக்கத்தில் தற்செயலாக இருக்கின்ற ஆண் ஒரு நாடகக் கலைஞன். அவன் தன்னோடு நடிக்கும் நடிகைகளையே பணியவைக்கின்றவன். இப்படி ஒரு பெண் தனியே வந்து 'வயது வந்தோர்க்கான' படம் பார்ப்பது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மற்றப் பெண்களைப் போல இந்தப் பெண்ணையும் அடைந்துவிடலாமெனக் ‘கணக்கு’ப் போடுகின்றான்.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு சிங்களப் பெண்ணியவாதியுடன் காதல் இருந்திருக்கின்றது.. இந்தப் பெண் தன் உடலை தானே 'I have conquered myself' என் நினைக்கும் லெஸ்பியன்காரி. 'என் உடம்பு ஆண்களாகிய உங்கள் தீண்டல்களினால் tune செய்யப்படாது. அதுதான் ஆணாதிக்கத்தின் முதுகில் கொடுக்கும் முதல் சாட்டையடி' என நினைக்கின்றவள்.
இந்த ஆணோ அவளின் இயல்பு அறியாதவன், அவளை எப்படியும் இந்தப் படம் முடிவதற்குள் தன் விருப்புக்கு சம்மதிக்க வைத்துவிடலாமென நினைக்கின்றவன். ஆகவே மெல்ல மெல்லமாக அவளின் உடலின் மீதான இச்சைகளைத் தீண்டி ஆழம் பார்க்க விரும்புகின்றான். அவளும் இவனின் மெல்லிய துலங்கல்களுக்கு தூண்டல்களைக் காட்டுவதைப் போல நடித்து, இறுதியில் தன் வித்தையைக் காட்டிவிடுகின்றாள். இவனோ படத்தின் நடுவில் ஐயோ என்று துள்ளி எழுகின்றான். படம் பார்க்கின்றவர்கள் என்னவெனக் கேட்கின்றனர்.
இவளோ, "ஏதோ நட்டுவக்காலியோ, தேளோ கடிச்சுப் போட்டுதாம். சேர், படம் பார்க்கிறவங்களைத் தொந்தரவு செய்யாமல், Bar பக்கம் போய் வேட்டியை நல்ல உதறிப் பாருங்கள்' எனச் சொல்கின்றாள். அவளை 'கொல்கின்ற வெறி'யோடு தியேட்டரை விட்டு ஆண் விலகிச் செல்வதோடு கதை முடிகின்றது.
கதை முடியும்போது மட்டுமல்ல, அதை வளர்த்திக் கொண்டும்போகும்போதும், ஆண்Xபெண் என்கின்ற எதிரெதிர்நிலைகளின் சிந்தித்தல்/உணர்வுகள் போன்றவற்றை இறுக்கமாக எஸ்.பொ எழுதிச் செல்கின்றார். ஒரு பெண் தன் உடலை லெஸ்பியன் உறவின் மூலம் கண்டுகொள்வதைக் கூட விரசமில்லாமல், கூரிய அவதாதங்களுடன் எஸ்.பொ எழுதிச் செல்லும்போது 1930களில் பிறந்த எஸ்.பொவின் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் படைப்புமனம் நீர்த்துச் செல்லவில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம்.
இவ்வாறு ஒரு gay ஆணான டொமினிக்கின் கதையை ஆண்மை-03ல் எழுதிச் செல்லும் எழுதும்போது எஸ்.பொவுக்கு வரும் சில குழப்பங்கள் கூட, இந்தக் கதையில் இருக்கவில்லை. அவ்வளவு தெளிவாக லெஸ்பியன் உறவை, பெண்களின் மீட்பை, எந்தப் பெண்ணாகினும் சரணடைய வைக்க முடியுமென்கின்ற ஆண்களின் திமிரைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு நவீனமான எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் காண்கின்றோம்.
2.
ஆண்மை-01 இல் இலங்கையில் அரசர்களில் ஒருவராக இருந்த துட்டகைமுனுவின் மகனொருவனின் கதை சொல்லப்படுகின்றது. துட்டகைமுனுவின் போர் வெறியையும், அதிகார ஆசையும் வெறுத்து தனக்குப் பிடித்த ஒரு சாதாரண குடியானப் பெண்ணோடு வாழும் ஒருவனின் கதை இது. அந்தப் பெண்ணுக்கோ இப்படி அரச இடாம்பீகத்தைத் துறந்து, தந்தையின் கோபத்தையும் சம்பாதித்து வரும் அரசிளங்குமரனை எப்படி வைத்துத் தாங்குவதென்ற கவலை வருகின்றதது. அவன் தனது விருப்பைப் புரியவைக்கின்றான். எனதும் உனதும் குழந்தை இந்தக் காட்டுக்குள் -போலித்தனமான அரச மரியாதைகள் இல்லாது- இயற்கையுடன் இயைந்து வாழட்டுமெனச் சொல்கின்றான்.
ஆண்மை -02 கதையில் ஒரு இளமைக்கால எஸ்.பொவைச் சந்திக்கின்றோம். எஸ்.பொ தொடக்க காலத்தில் தீவுப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கின்றார். இந்தக் கதை அவ்வாறான ஒரு பாடசாலையிலிருந்து திரும்பவும் யாழ் நகருக்குத் திரும்பும் பஸ் பயணத்தில், சந்திக்கும் ஒரு பெண்ணோடு தொடங்கி அந்தப் பெண் தனக்கான தரிப்பிடத்தில் இறங்குவதில் முடிகின்றது.
கதைசொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகின்ற அவரின் மாணவர்களின் ஒருவன் கூட எமக்கு நெருக்கமாகின்றவன். அவன் அவ்வளவு படிக்காதவன் என்கின்றபோதும் குறும்புத்தனமானவன். அவன் வலித்துச் செல்லும் சிறுபடகில் இவரையும் அந்த ஆசிரியையும் ஏற்றிவருகின்றான். இந்த ஆசிரியையோ வேறொரு பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றவர். அவரை ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்திக்கின்றார். ஆண் ஆசிரியர்கள் நூலோடு ஓடிச் சென்று, பெண் ஆசிரியைகள் வைத்திருக்கும் ஊசியில் இந்த நூலைக் கோர்க்கவேண்டும். கதை சொல்லி, இந்த ஆசிரியையில் ஒரு ஈர்ப்பு வந்து அவரை நோக்கி ஓட, இன்னொரு ஆசிரியர் குறுக்காய் நுழைந்து அந்தச் சந்தர்ப்பதை தடுத்துவிடுகின்றார்.
இப்போது அவர்கள் இருவரும் சிறுபடகில் போகும் சந்தர்ப்பம். அது பிறகு பஸ்சிலும் அடுத்தடுத்த இருக்கைகளில் செல்லும் பயணமாக மாறுகின்றது. இந்த ஆசிரியையே எப்படியாவது ஈர்த்து நேசித்துவிடவேண்டுமென்கின்ற ஆசை இவருக்குள் பெருகுகின்றது. ஆனால் நல்ல சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் -மற்ற ஆசிரியர் நூலோடு குறுக்கே புகுந்தமாதிரி- இடையில் கைகூடாது நழுவிவிடுகின்றன. வாசிக்கும் நமக்கும் இவர்கள் இருவரும் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றுகின்றது. ஆனால் அந்தோ பரிதாபம். இறுதியில் நடக்கும் ஒரு நிகழ்வால் எல்லாக் கனவுகளும் கலைந்துவிடுகின்றன.
இவ்வாறாக ஒரு அந்நியமான பெண்ணில் ஈர்ப்புவருவதும், பிறகு அவை கலைந்துபோகின்றதுமான சந்தர்ப்பங்களை நாம் நம் வாழ்வில் கண்டிருப்போம். எஸ்.பொவின் இந்தக் கதையைப் போல, நான் பஸ்களில் போகும்போது ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கின்றேன். அவருக்குச் சுருள் சுருளான தலைமயிர் என்பதும் ஞாபகம். தொடக்கத்தில் சாதாரண ஒருவரைக் கடந்துபோகின்றதுமாதிரி இருந்த எனக்கு ஒருநாள் அவரை சற்று ஆழமாக அவதானித்தபோது மூக்குத்தி அணிந்திருப்பது தெரிந்தது. அதன் பின் எப்படி எனக்குள் ஒரு வசீகரம் அவரைப் பற்றி வந்ததெனத் தெரியாது. அவரைக் காணும்போதெல்லாம் உள்ளம் நெகிழ்ச்சியுறும். புன்னகைக்கின்றாரா இல்லையா, பேச விரும்புகின்றாரா இல்லையா என்பதைத் தெரியாமலே அப்படி ஒரு விளையாட்டை நாம் இருவரும் ஆடிக்கொண்டிருந்தது சுவாரசியமாக இருந்துமிருக்கிறது.
3.
இன்னொரு கதை கள்ளுச் சீவுகின்ற தொழிலாளியைப் பற்றியது. வீட்டோடு கள்ளுக்கொட்டிலை வைத்திருந்ததால், தனது பிள்ளைகளின் படிப்புக் கெடுகின்றது என்பதையும் அந்தத் தந்தை அறிந்தே இருக்கின்றார். அவரின் மகன் சென்னையில் படிக்கும் இடைவெளியில், வீட்டில் வந்து தங்கி நிற்கின்றான். கள்ளுக்குடிக்க வரும் வின்ஸர் தியேட்டர் நிர்வாகி, வீட்டுப் பிரச்சினையுடன் கள்ளுப்போதையில் கொஞ்சம் எகிறுகின்றார். தூசணமெல்லாம் பேசுகின்றார். அப்போது அடைப்புக்குறிக்குள் எஸ்.பொ கூட இந்தளவுக்குத் தூஷணமெல்லாம் பேசமாட்டான் என்கின்ற குறிப்பில் தெரிவதுதான் எஸ்.பொவின் குறும்புத்தனம்..
'நாங்கள் யார், நீங்கள் எளிய சாதிகள்' என்று அரைகுறைத் தமிழிலும் சிங்களத்திலும் அந்த முதலாளி பேசுகின்றார். ஒரளவுக்குத் தாங்கிக் கொள்ளும் கள்ளுக்கடைக்காரர் ஒரு அறைபோட்டு சாத்தி அவரை அமைதியாக்கின்றார். அப்பாவோடு யார் இப்படி சண்டையிடுகின்றதென்ற சினத்தில் சென்னையில் படிக்கும் மகன் உலக்கையோடு ஓடிவருகின்றான். 'இது சின்னப்பிரச்சினை இப்படி உலக்கையோடு வரவா நானுன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிப்பிக்கின்றேன்' என்கின்றார் தகப்பன்.
இந்தக் கதையில் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதி அடையாளத்தை படிப்பாலும், பொருளாதாரத்திலும் மீற முயலும் ஒரு அழகான குடும்பத்தை நாம் பார்க்கின்றோம். அடித்ததால், அந்த வின்ஸர் நிர்வாகி மயங்கிவிழுந்தாலும் அவரைத் தூக்கிக்கொண்டு அவரின் பட்டறைக்குள் விட்டுவிட்டே திரும்பி இந்தத் தந்தை வருகின்றார். இப்படி அறைந்ததால் மனம் சரியில்லை என்று கொட்டிலுக்குள்ளேயே படுக்கின்றவருக்கு அவரின் மனைவி சாப்பாடு கொடுத்து தூங்க வைப்பதுடன் கதை முடிகின்றது.
ஒடுக்கப்பட்ட சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறையுடன், தம் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத மனிதர்களை நாம் இங்கே பார்க்கின்றோம். இந்தத் தந்தையின் பிள்ளைகள் இன்னும் உறுதியாய் தம் மீது திணிக்கப்படும் சாதிய வன்மங்களை வீரியமாய் எதிர்கொண்டு முன்னகர்ந்து செல்வார்கள் என்பதை எமக்கு எஸ்.பொ இந்தக் கதையில் மட்டுமில்லை, வரலாற்றில் வாழ்தலிலும் சொல்லியிருக்கின்றார். இவ்வாறான கள்ளுக்கொட்டில் அனுபவங்களை தெணியான் தனது சுயசரிதையாக எழுதிய 'இன்னும் சொல்லாதவை' இல் நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கின்றோம். கள்ளுக்கொட்டிலை வைத்திருக்கும் அவர் தகப்பன் ஒருகட்டத்தில் உதவிக்குக் கூட படிக்கின்ற மகனை (தெணியான்) வரவேண்டாம் என்று நிறுத்துவதில் இருந்து சாதிய ஒடுக்குதல்களின் பல திசைகள் நமக்குப் புலப்படுகின்றது.
ஆண்மை 9வது கதையில், பராசக்தி அக்கா தான் சிறுவனாக இருந்தபோது ஆண்மையை விழிக்கச் செய்ததாக கதைசொல்லி தனது பேரப்பிள்ளைகள் வந்துவிட்ட காலத்தில் இருந்தபடி அசைபோடுகின்றார். அவர் அடிக்கடி விளையாட்டைக் காரணஞ்சொல்லி பராசக்தி அக்கா வீட்டுக்குபோனது கண்டுபிடிக்கப்பட்டு வெண்தாடிக்கிழவர் எனப்படும் அவரது அப்பையாவினாலும், மாமாவினாலும் அடிகொடுக்கப்பட்டு 'திருத்தப்படுகின்றார்'. சிறுவர்களாகிய நாம் எப்போது இளைஞர்களாகின்றோம், அது நம்மெல்லோருக்கும் இனிய அனுபவமாகத்தான் இருக்கின்றதா என இந்தக் கதையை முன்வைத்து நாம் நனவிடைதோய்ந்தும் பார்க்கலாம்.
*****************
(புகைப்படங்கள்: நன்றி/இணையம்)
0 comments:
Post a Comment