(எஸ்.பொ - பகுதி 05)
1.
எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுதியில் உச்சக்கதையாக வெளிப்பட்டிருப்பது ஆண்மை- 15. அதைக் கதையெனக் கூடச் சொல்லமுடியாது. இயக்கத்துக்குப் போய் சாவடைந்து விட்ட தனது மகனைப் பற்றிய எஸ்.பொவின் நினைவிடை தோய்தலெனச் சொல்லலே திருத்தமானது. நமது ஆயுதப்போராட்டம் தந்தையர்கள் கண்முன்னே உயிரோடு இருக்க, தனயர்கள் இல்லாமற்போய் இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக்கி இருந்தது. எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம், மு.வாஞ்சிநாதன் போன்ற பல்வேறு படைப்பாளிகளின் பிள்ளைகள் இளவயதில் இறந்துபோக, இவர்களைப் போன்ற தந்தையர்கள் அந்தத் துயரத்தோடோ காலம் முழுக்க வாழ வேண்டியிருந்திருக்கின்றது.
தான் எழுதியவற்றை ஆறு மாதமோ, ஒரு வருடமோ 'ஊறுகாய்' போட்டு வைத்திருக்கத் தயங்காதவரும், சில கதைகளை மூன்று நான்கு தடவைகளுக்கு திரும்பவும் எழுதுவற்கு அலுப்புப்படவே மாட்டாதவருமான எஸ்.பொ, அப்படியே ஒரு அமர்வில் குந்தி எழுதிய கதையென்றால் அது அவரது மகனான மித்தி பற்றிச் சொல்கின்ற ஆண்மை-15 கதைதான். எழுதியதை திருப்பிப் பார்க்காததற்கும், புதுக்கி மீண்டும் எழுதாததற்கும், 'என் எண்ணமே எழுத்தாக வேண்டும் என்ற வெறி' என எஸ்.பொ முன்னீட்டில் எழுதுகின்றார். இது ஒருவகையில் தனது மனதில் இருந்த எல்லாத் துயர்களையும், பாரங்களையும் இறக்கிவைக்க எஸ்.பொ விரும்பியிருக்கின்றார் என எடுத்துக்கொள்ளலாம். கல் குவாறிகளினூடாக ஏறிய இயேசு தனது சிலுவையை இறக்கிவைக்கின்ற ஒரு தருணம்.
அப்படி அந்த வீதிக்கு அருச்சுனா வீதியெனப் பெயரிடப்பட்டிருந்தற்கு, போராளியாகிக் காலமாகிவிட்ட எஸ்.பொவின் மகனென அறிய எனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. எஸ்.பொவின் மகன் மித்திரா எனப்படும் அருச்சுனா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. புலிகள் ஒளிப்பதிவுக்கென ஒரு புதிய கூடத்தை உருவாக்கியபோது அதற்கும் 'அருச்சுனா புகைப்படக் கலையகம்' எனப் பெயரிட்டிருந்தார்கள். இளவயதிலேயே (20களில்) இறந்து போய்விட்டாலும், சிறந்த ஆளுமையாக வந்திருப்பதற்கான தெறிப்புக்களைக் கொண்ட ஒருவர் மித்தி போலும்.
2.
ஒரு தந்தையாக மித்தியின் ஞாபகத்தை எஸ்.பொ நமக்கு ஓவியமாக வரைகின்றார். ஐந்து பிள்ளைகளுக்கு நடுவிலன் என்பதால் அவரைப் பார்த்தன் என அழைக்க, அந்தப் பெயருக்கு நிகர்த்த அருச்சுனாவை, மித்தி தன் இயக்கப் பெயராக மாற்றியதாக எஸ்.பொவுக்கு கடிதம் எழுதுகிறார். மித்தி இளவயதில் நிறைய வாசிப்பவராக, 1978ல் கிழக்கில் வந்த சூறாவளியில் எஸ்.பொ சிக்குகின்றபோது காப்பாற்றுகின்றவராக, தோழிகளுடன் மிகுந்த இயல்பாகப் பழகுகின்றவராக நமக்கு இந்த நனவிடைதோய்தலின் மூலம் காட்டப்படுகின்றார்.
மித்தி தனது தோழிகளில் ஒருத்தியை, தான் காதலிக்கின்றேன் எனச் சொல்ல எஸ்.பொ, 'டேய் நான் உனது வயதில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்பிள்ளைகளைத் துரத்திக்கொண்டு திரிந்தேன்' என்று பதில் சொல்லிச் சிரிக்கின்றார். அந்தளவுக்கு மகனோடு ஓர் அந்நியோன்னிய உறவை எஸ்.பொ பேணியிருக்கின்றார். தனது மகன்களில் மித்தியே தன்னைப் போல எழுத்துலகிற்கு வருவான் என எஸ்.பொ கனவு காண்கின்றபோது, மித்தி இயக்கத்தில் சேருகின்றார். இந்தக் கதையில் நேரடியாக சொல்லாவிட்டாலும், பழ.நெடுமாறன் இலங்கைக்குக்குப் போன முதல் பயணத்தில் மித்தியே அந்தப் பயணத்தையும், அந்தக்காலத்தில் மக்கள்படும் கஷ்டங்களையும் 1985 இல் ஒளிப்பதிவாக ஆவணப்படுத்துகின்றார். 40 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்ட அந்த ஆவணம், பிறகு 2 மணித்தியாலங்களாய்ச் சுருக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயக்கத்தின் பிரச்சாரத்துக்காய்ப் பாவிக்கவும் பட்டிருக்கின்றது.
மித்தி இறந்தபின் அவரின் புகைப்படத்தோடு, தெருவுக்கு அருச்சுனா என்று பெயரிட்டிருப்பதை, எஸ்.பொவின் மார்க்சியத் தோழர் நீங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காசு அனுப்பி செல்வாக்கு செலுத்தித்தான் இவ்வாறு செய்திருக்கின்றீர்கள் என்று சொன்னதை, எஸ்.பொவால் ஒருபோதும் இந்த நனவிடைதோய்தலில் மறக்கமுடியாதிருக்கின்றது. தன் மகன் இழந்த சோகத்தை ஏன் இவரால் புரிந்துகொள்ள முடியவில்லையென எஸ்.பொ வருந்துகின்றார். எனினும் அதைச் சம்பவமாக மட்டும் சொல்லிவிட்டு எஸ்.பொ நகர்ந்திருக்கலாமென எனக்கு இந்த நனவிடை தோய்தலை வாசித்தபோது தோன்றியது. அவர் யாரென நேராகப் பெயர் சொல்லாவிட்டாலும், எஸ்.பொ விவரித்த வகையில் அவர் யாரென அடையாளங் கண்டுகொள்ள முடியும். அவரும் ஒரு முக்கியமான படைப்பாளிதான்.
இந்தக் கதையின் முதல் பகுதி நினைவோடையில் எழுதப்பட்டதென்றால், 2ம் பகுதி மித்தியைப் பற்றி அறிந்தவர்கள் கூறியது, மித்தியைப் பற்றி பிறர் எழுதியது என்பதைத் தொகுத்து எஸ்.பொ எழுதியிருக்கின்றார். மித்தி தனது 23வது வயதில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வரும்போது இலங்கைக் கடற்படையோடு ஏற்பட்ட மோதலில் கடலில் இறந்துபோகின்றார். எஸ்.பொ தொடர்ந்தும் மித்தி கொடுத்த சிறுபரிசுகளால் மித்தியை நினைத்துக்கொள்ளவும், தனது முக்கியமான தருணங்களில் மித்தியின் இருப்பில்லாதபோது அந்த வெற்றிடத்தை உணரவும் செய்கின்றார். எஸ்.பொ இதை உணர்வுக்கு முக்கியம் கொடுத்து எழுதியதால் இக் கதையை இதுவரை நான்கைந்து தடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் கண்களில் நீர் மெல்லிய திரையிடுவதைத் தடுக்க முடியவில்லை.
************
(புகைப்படம்: இணையம்)
0 comments:
Post a Comment