கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நம் தன்னிலைகளை உரையாட அழைக்கும் நகுலன்

Thursday, March 17, 2022


1.

வாழ்வில் வெறுமை, அதன் நிமித்தம் ஏற்படும் சலிப்பு, முடிவில் நீளும் தனிமை போன்றவற்றைக் கடந்து செல்லாத மனிதர்கள் அரிதாகவே இருப்பார்கள். நான் என்கின்ற தனியன்கள் பலவாறாக பெருகிப் பரவ அதில் திளைத்துத் திகைந்தும், கரைந்தும் காணாமலும் போனவர்கள் பலர். சிலருக்கு தனிமையும் வெறுமையையும் வேறு லெளதீக விடயங்களைத் தேடிச் செல்லவும், வேறு பலருக்கு தமக்குள் அமிழ்ந்து, ஆழ்ந்து போகவும் செய்திருக்கும்.

இந்த வெறுமையைக் கடக்கத்தான் ப்யூகோவ்ஸ்கியும், ஹெமிங்வேயும் பெண்களையும் குடியை நோக்கியும் தம் வாழ்வை நகர்த்தியவர்கள். இந்த தனிமையோடு, கூடவே யுத்தங்கள் கொடுத்த வெறுமையினால், தம்மை போதையிலும், நாடோடித்தனத்திலும் தொலைத்து வாழ்வின் அர்த்தங்களைத் தேடுவதாய் 'பீட் ஜெனரேசன்' வெளிப்பட்டது. அதேகாலகட்டத்தில் ஐரோப்பியாவிலிருந்து சார்த்தர், காம்யூ போன்றவர்கள் இருத்தலின் அர்த்தத்தை/அர்த்தமின்மையைத் தேடத் தொடங்கினார்கள்.

தமிழ்ச்சூழலில் நமது நகுலனோ வார்த்தைகளினூடாக தன் வாழ்வின் அர்த்தத்தைத் தேட முயன்றவர். சொற்களை உடைத்து உடைத்து, இன்னும் ஆழம் போகமுடியுமென்று நினைத்து சொற்களின் சுழலுக்குள் சிக்கிய ஒரு படைப்பாளியாகவும் நகுலனைச் சொல்லலாம்.

எப்படி ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களை வாசிக்கும்போது, அவரின் கவிதைகளையும் சமாந்தரமாக வைத்து வாசித்தால் ஒரு சித்திரம் முழுதாகத் தீட்டப்பட்டு துலங்கமுறுவதைப் போல இருக்குமோ, அவ்வாறே நகுலனின் கவிதைகளின் மூலத்தை ( or vice versa) அவரின் நாவல்களில் இருந்து எளிதாகக் கண்டுபிடித்து வியக்கலாம்.


நகுலனின் 'நினைவுப் பாதை'யில் எழுத்து, எழுத்தாளர்களின் அவதி, அவர்களுக்கிடையில் இருக்கும் பொறாமை/வியப்பு, பதிப்புச் சூழலின் அவலம் என எவ்வளவு இருந்தாலும், நான் 'நினைவுப்பாதை'யை சுசீலாவுக்கு காணிக்கை செய்யப்பட்ட ஒரு சிறந்த ஒரு புனைவாகவே பார்ப்பேன். ஏனெனில் அதுவரை நகுலன் அல்லது நவீனன் அல்லது கதைசொல்லி என்கின்ற தன்னிலைகள் பல்வேறாக வெவ்வேறு விடயங்களைக் கதைத்துக் கொண்டிருந்தாலும், இந்த டயரிக்குறிப்புக்களினான நாவல் சுசீலாவைப் பற்றிப் பேசத்தொடங்கும்போதே இன்னொரு வடிவத்தைப் பெறுகின்றது. அதுவே கனதியாக மாறுகின்றது.

ஒருவகையில் இங்கே கதைசொல்லிக்கு அதுவரை பார்க்குந்தூரத்தில் இருந்த சுசீலா, சடுதியாகத் திருமணஞ்செய்து பிள்ளை பெற்றபிறகும் அந்தத் தாய்மையை இரசித்துக்கொண்டிருந்த நவீனனின் மனதுக்கு, சுசீலா கணவருடன் வேறொரு நகருக்குப் போவதுதான் பலத்த இழப்பாக இருக்கின்றது. அதுவே ஒருவகையில் இந்தப் புனைவை டயரிக்குறிப்புக்களாக கதைசொல்லியை எழுதவைக்கின்றது.

இன்றைய காலத்தில், ஆகக்கூடியது 'நான்கு நிமிடங்களே தொடர்ச்சியாகப் பேசிய' ஒரு பெண்ணுக்காக ஒருவன் தன் வாழ்க்கையே காணிக்கை செய்வானா என்பது சிரிப்பாக இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு ஒருவன் இருந்ததால், அவன் காதலின் ஆழத்தில் இவ்வாறாகச் சென்றதால், நமக்கு நினைவுப்பாதை கிடைத்திருக்கின்றது.

காதலித்திருக்கும் நமக்குப் பலருக்குத் தெரிந்திருக்கும்- காதல் என்பதை அடைந்த சொற்ப காலங்களிலேயே அதுவரை அது தந்துகொண்டிருந்த சிலிர்ப்புக்களும், வியப்புக்களும் வடிந்துபோகத்தொடங்குவதை அவதானித்திருப்போம். அப்போது காதல் என்பது நாம் உருவாக்கி வைத்திருக்கும் உணர்வுகளின் அடிப்படையில்தான் எழுகின்றதே தவிர இன்னொருவரின் வருகையினால் உருவாக்கப்படுவதில்லை என்கின்ற யதார்த்தம் நம்மை எதிர்க்காற்றாய் விரட்டியடிக்கும்.

அதேயேதான் நகுலன் சுசீலாவின் காதலில் காண்கின்றார். அவர் சில பொழுதுகளை சந்திக்கும், அதைவிடச் சொற்ப வார்த்தைகளையே பேசும் ஒரு பெண்ணை தனக்கான கற்பனையில் ஒரு அற்புதமான பாத்திரமாக உருவகிக்கின்றார். நகுலனுக்கு மட்டுமில்லை, நமக்கும் இந்தப் புனைவில் வருபவன், சுசீலாவை காதலால் அடைந்து, சேர்ந்து வாழ்ந்திருந்தால் சுசீலா என்கின்ற காலங்கள்தாண்டி வாழும் ஒரு காதற்பாத்திரம் ஒருபோதும் நிகழ்ந்தேயிருக்காது என்பது தெரியும்.

'உன்னை நான் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் என்னையே நான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றேன்' என்று நவீனன் சுசீலாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூறுகின்றார். இதைப் பார்க்கும்போது நவீனன் காதலின் ஊடு சுசீலாவையல்ல, தன்னைத் தானேதான் தேடுகின்றார் என்பது நமக்கு விளங்குகின்றது. அதேபோன்று 'உண்மையான அன்பு என்பது பேச்சு, ஸ்பர்சம் என்ற நிலைகளைக் கடந்த ஒன்றுதானோ என்று நான் என்னையே கேட்டுக் கொள்கின்றேன்' என்று கதைசொல்லி கூறும்போதும் காதலுக்கான வேறொரு வரைவிலக்கணத்தை நாம் கண்டடைந்தும் கொள்கின்றோம்.

2.

நகுலனின் (அல்லது இந்தப் புனைவில் வரும் நவீனனின்) வாழ்க்கை ஒருவகையில் போர்ஹேஸை நினைவுபடுத்துவது. போர்ஹேஸூக்கு தாய் ஒரு நிழல் போல் இருந்தாரென்றால் இங்கே நவீனனுக்கும் -சொல்லாமலே எல்லாவற்றையும் புரிந்துகொள்கின்ற- ஒரு தாயார் இருக்கின்றார். இரவுகளில் முழித்திருந்து எழுதும் நவீனனை எட்டிப் பார்த்து இன்னும் தூங்கவில்லையா என்று மட்டும் கேட்டுவிட்டு, அந்த அறையைக் கடந்து போகின்ற, அவரின் தனிமையைத் தொந்தரவுபடுத்தாத தாயாரே நவீனனுக்கு வாய்த்திருக்கின்றார்.

அதேபோன்று ஒரு திருமணத்தைக் காரணங்காட்டி நான் நாகர்கோயிலுக்கு ஒரு வாரம் போய் தங்கப்போகின்றேன் என்கின்றபோதும், தாய் நல்லதுதான் நீ போ என்று சொல்கின்றாரே தவிர, அதற்குப் பிறகு எங்கே நிற்பாய், யாரின் திருமணம் என்று ஒன்றையுமே கேட்பதில்லை. அதேபோல நாகர்கோயில் விடுதியொன்றில் இரண்டு நாட்கள் மட்டும் சும்மா தங்கிவிட்டு, திரும்பி வருகின்ற நவீனனிடமும் தாய், ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய், கல்யாணம் எப்படி நடந்தது என்பது பற்றி எதையும் கேட்பதில்லை. அவ்வளவு விளங்கிக்கொண்ட ஒரு தாய் அவர்.

தாயின் நெருங்கிய நிழலோடு வாழ்ந்த ஆண்பிள்ளைகள் அவ்வளவு எளிதில் வெளியில் காதல்களைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் 'ஏனின்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றாய்' என்று குடும்பமும் உறவுகளும் நெருக்குகின்றபோதும் நவீனன் அதை வேறுவிதமாகக் கடந்துபோகின்றார். மேலும் தாயின் நிழல்களோடு வளரும் ஆண்களை, இணையராக் கொள்ளும் பெண்களுக்கு இப்படிப்பட ஆண்களை எதிர்கொள்ளல் என்பதும் அவ்வளவு எளிதுமல்ல.

கண்ணுக்குத் தெரியாத தொப்புள் கொடிகளால் இந்தப் பிள்ளைகள் தமது தாய்களோடு இன்னும் இணைந்தேயிருக்கின்றார்கள். இது சரியா, பிழையா என்கின்ற உரையாடல்கள் வேறொரு தளத்தில் வைத்துப் பேசவேண்டியவை. ஆனால் அவ்வாறு இருக்கும் நவீனனையே நாம் பார்க்கின்றோம். அது பிறகு தாயிலிருந்து தமக்கைக்கு இடம் மாறுவதையும் 'நினைவுப்பாதை'யை நுட்பமாக வாசிக்கும் ஒரு வாசகர் கண்டுகொள்ளமுடியும்.

3.

ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும் என்று நாவலின் இறுதி அத்தியாயத்தில் சொல்லப்படுகின்றது. இவ்வாறான ஒரு உளவியல் மையத்தில்தான் நவீனனுக்கும், இன்னொரு எழுத்தாளரான நாயருக்கும் உரையாடல் நிகழ்கின்றது. இவற்றுக்கிடையில் ஒரு இயந்திரத்தனமான, மொழியின் கவனம் சிதறிய, மனப் பிறழ்வை அண்டிய எழுத்துக்களின் தெறிப்புக்களைப் பார்க்கின்றோம். பிறகு நாயருடன் நடக்கும் உரையாடல் உச்சத்தைத் தொடுபவை.

'நிறுத்தாதீர்கள், அப்படியே தொடர்ந்து பேசுங்கள்' என நாயர் சொல்லச் சொல்ல நவீனன் மடைதிறந்ததைப் போலப் பேசுவது, ஒரு படைபாளியின் ஆழ்மனதை அப்படியே வெளிப்படையாக முன்வைக்கும் இடங்கள். ஒவ்வொரு படைப்பாளியும் பிறழ்வுக்கு உள்ளாகாது ஒரு படைப்பை முழுமையாக எழுதமுடியாது என்பதற்கு இந்த நாவல் தன்னையே எவ்வித அலங்காரமுமில்லாது காட்சிப்படுத்துகின்றது. அதையேதான் 'அவனுக்கு அப்பொழுது தன் ஒவ்வொரு நாவலை எழுதி முடித்த பிறகும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல்தானே என்று ஒரு உணர்ச்சி தோன்றியது' எனச் சொல்லப்படுகின்றது.

இந்த நாவலில் சங்ககால கவிதைகள் தொடக்கம் லா.ச.ராவின் 'புத்ர'விலிருந்து, ஹெமிங்வேயின் 'The moveable Feast' வரை பல்வேறு புத்தகங்கள் பற்றிப் பேசப்படுகின்றன. ஓரிடத்தில் சுசீலா, நவீனன் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து தன் தோழி கொடுத்தாள் என அவரிடம் கொடுக்க வருவார். நவீனன் அதை வாசிக்காதபோதும், நான் வாசித்துவிட்டேன் என்று பொய்சொல்லி அதைப் பெற்றுக்கொள்வதை மறுத்துவிட்டுச் செல்வார். பிறகு ஏன் அப்படி மறுத்தேன் என்று உள்மனதின் ஆழங்களுக்கு எம்மை சில பக்கங்களுக்கு அழைத்துச் செல்வார். இதை எல்லோராலும் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது அல்லது இதென்ன முட்டாள்தனமென்றுதான் பலர் எளிதாகக் கடந்தும் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கிருந்து எழுவதே வாழ்வின் இருப்புக் குறித்துக் கேள்வி. அதுவே பிறகு நம் எல்லோரினதும் இருத்தலியக் சிக்கலாகின்றது.

சுசீலா - ஆகக்குறைந்தது அவளுக்காக எழுதப்பட்ட பக்கங்களை வாசிக்கவேண்டும் என்ற தவிப்பும், எழுதப்படும் இந்த '400 பக்க' நாவல் பிரசுரமாக்கப்படுமா என்ற அச்சமும் கலந்த ஒரு படைப்பாளியின் பதற்றத்தை, நவீனன் என்கின்ற கதைசொல்லிக்குள் வாசகராகிய நாம் நுழையாமல், நம்மால் ஒருபோதும் அதை எளிதாகப் புரிந்துகொள்ளவேமுடியாது.

"நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை!"

என்ற நகுலனின் கவிதையை விரித்துப் பார்த்தால் எழுவதே நினைவுப்பாதை என்கின்ற இந்த நாவல். நவீனன் பயமாக இருந்தாலும் பார்க்காமல் இருக்க முடியாத அவதியினால் தனது கதையை நமக்குச் சொல்கின்றார். ஊர்ந்து செல்லும் நமது நினைவுகளை நம்மால் அதே நேர்மையுடன் எழுதவோ பார்க்கவோ முடிந்தால், நம்மால் நினைவுப்பாதையை நெருக்கமாகிக் கொள்ளமுடியும். அதற்கு முன் நிபந்தனையாக 'நாவல்' என்கின்ற சட்டகங்களை ஒருவர் தாண்டி செய்பவராக இருத்தல் அவசியம். அதையும் விட முக்கியமானது நீங்கள் தனிமையில் தோய்ந்து உங்களோடு நீங்களே ஓர் உரையாடலை தயவுதாட்சண்யமின்றிச் செய்பவராகவும் இருக்க வேண்டும்.

*******************

(நன்றி: 'கலைமுகம்' - இதழ்-73)
ஓவியம்: மருது /நன்றி: இணையம்

0 comments: