கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Prisoner #1056

Monday, September 18, 2023

 

1. மனவடுக்களின் காலம்

 

Prisoner #105 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள், மற்றப் பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள்.

 

இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. கொழும்பில் ரோய் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் ரோய் யாழ்ப்பாணத்து பருத்தித்துறைக்கு அவரது தாயாரோடும், தமையனோடும் அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் கொழும்பில் தங்கி வேலை பார்க்கின்றார். அதுவரையும் ரோயின் குடும்பத்தார் வாடகைக்கு கொழும்பில் இருக்கும் இடம் ஒரு இலங்கை இராணுவ கேர்ணலின் வீடாகும்.

 

ரோய் பருத்தித்துறையில் இருக்கும்போது, இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் (1987) நடவடிக்கையின்போது பெற்றோரின் முன்னால் இராணுவத்தால் கைது செய்யப்படுகின்றார். அவ்வாறு கைது செய்யப்படும் ரோய் கப்பலின் மூலம் பூசா ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றார். கிட்டத்தட்ட 2700 பேர் தன்னைப் போல கைதுசெய்யப்பட்டு விலங்கோடு கப்பலில் இருந்து  காலி  நகரின் தெருக்களில் ஜெயிலுக்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்டதாக ரோய் குறிப்பிடுகின்றார். 


அங்கே அவருக்குக் கொடுக்கப்படும் இலக்கமே கைதி #1056.

 

கிட்டத்தட்ட 2 மாதங்கள் சிறைச்சாலைக்குள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ரோய், அன்றைய  பாதுகாப்புத் துறை அமைச்சரான லலித் அத்துலக் முதலியின் மனைவியான சிறிமணியைச் சந்திக்கின்றார். அவரிடம் சிறைப்பட்டிருக்கும் தனது நிலவரத்தை, தங்களின் குடும்பத்து நண்பரான கேர்ணல் பெர்னாண்டோவிற்குச் சொல்லும்படி கூறுகின்றார்.

 

கேர்ணல் பெர்னாண்டோ அதற்கு முதல் வருடம் (1986)  அவரது  மகன்களில் ஒருவரை புலிகளின் ஒட்டுசுட்டான் தாக்குதலில் இழந்திருக்கின்றார். எனினும் அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்து கேர்ணல் கொழும்பிலிருந்து 3 மணித்தியாலங்கள் பயணித்து காலிக்கு வந்து ரோயை சிறையிலிருந்தும் சித்திரவதைகளிலிருந்தும் மீட்கின்றார்.

 

யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இந்திய அரசின் தலையீட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவதை நாம் அறிவோம். ரோய் ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது இலங்கை-இந்தியா உடன்படிக்கை கைச்சாத்தப்பட்டு விட்டது.

 

ரோயை இந்தக் கேர்ணல்  சிறைச்சாலைக்குள் இருந்து காப்பாற்றியதுபோல, ரோயின் தகப்பனை 1983 இனப்படுகொலைகளின்போது சிங்களக்காடையர்களிடம் இருந்து அந்தக் கேர்ணலே காப்பாற்றி பத்திரமாக யாழ்ப்பாணத்துக்கும் அனுப்பி வைத்தவர். அத்தோடு ரோயின் தமையன் வீட்டைவிட்டு ஓடி (இங்கே வெளிப்படையாகச் சொல்லப்படாதபோதும், அவர் இயக்கம் ஒன்றில் சேர்ந்திருக்கக்கூடும்), 84களில் பூஸா முகாமில் சிறை வைக்கப்படுகின்றார்.  தன் சொற்கேளாது வீட்டை விட்டு ஓடிய மகன் என்பதால் ரோயின் தகப்பன் மூத்த மகனை சிறைக்கு வெளியே எடுக்க விரும்பவில்லை. அப்போதும் இந்த கேர்ணலே ரோயின் தமையனை சிறைச்சாலையில் இருந்து வெளியே எடுக்கின்றார். அந்தத் தமையன் இந்தியாவுக்குப் படகில் போய், ஒரு மாதிரியாக டென்மார்க்கிற்கு 1986இல் சென்றுவிடுகின்றார்.

 

ரோய் தொடக்கத்திலிருந்தே புலிகளின் ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், ரோயின் தகப்பன் புலிகளை எதிர்ப்பவராகவே இருக்கின்றார். ஒருவகையில் அவர்கள் அஹிம்சை வழியில் எல்லாவற்றையும் தீர்க்க விரும்பிய முந்தைய ஒரு தலைமுறை எனச் சொல்லலாம். அத்துடன் புலிகள் ஏனைய இயக்கங்களைச் சகோதரப் படுகொலை செய்ததால் ரோயின் தகப்பனுக்குப் புலிகளைப் பிடிப்பதில்லை.

 

பூசா சிறைச்சாலையில் இருந்து வந்த ரோயை, பெற்றோர் தொடர்ந்து இலங்கைக்குள் வைத்திருக்க விரும்பவில்லை. அவரை ஏதேனும் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பிவிட விரும்புகின்றனர். ரோய் கனடா போவதற்கு தகப்பன் கனடா தூதரலாயத்துக்கு விண்ணப்பிக்கின்றார். ரோயிக்கு சித்திரவதை நடந்த சித்திரவதைகள் அவருக்கு எளிதாக விஸா கிடைத்துவிடச் செய்துவிடுகின்றன. ரோயை கனடா விஸாவுக்காய் நேர்காணல் செய்யும் கனடிய அதிகாரி, ரோயின் சித்திரவதை அடையாளங்களைக் காட்டச் சொல்கின்றார். அவர் தனது ஷேர்ட்டைக் கழற்றிக் காட்டுகின்றார்.

 

1988 ஏப்ரல் மாதத்தில் ரோய் கனடாவிற்கு புதிய வாழ்வைத் தொடங்க வருகின்றார். வந்த மூன்று நாட்களிலேயே இலங்கையில் இருந்து ஒரு பேரிடிச் செய்தியை அறிகின்றார். பருத்தித்துறையில் அவர்களின் வீட்டில் வைத்து ரோயின் தகப்பனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்று விடுகின்றது. அடுத்த அறையை முன்னரே பூட்டிவிட்டதால் அதற்குள் இருந்த தாயார் எப்படியோ தப்பிவிடுகின்றார்.

 

சிறைச்சாலைக்குள் இலங்கை இராணுவத்தால் பெற்ற சித்திரவதைகளோடு, தகப்பனையும் இந்திய இராணுவத்துக்குப் பலிகொடுத்து ஒரு புதிய வாழ்வை தனது மனவடுக்களுக்கோ, சித்திரவதைகளுக்கோ உரிய சிகிச்சையோ, ஆலோசனைகளோ பெறாமல் கனடாவின்  குதிரை போல நில்லாமல் ஓடும் கடின வாழ்வுக்குள் தன்னை உடனேயே நுழைத்துக் கொள்கின்றார் ரோய்.


(மேலும் வரும்)


-நன்றி: 'அம்ருதா' & 'கனலி'

0 comments: