கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

Thursday, September 14, 2023


பொரளையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை, சிங்கள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள சிங்கள நண்பனை அங்கு நான் செல்வதற்காகத் தொடர்பு கொண்டேன். அவர் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் பின் எஞ்சிய பொருட்களைக் கொண்டு திறந்தவெளிக் கண்காட்சிகளை பொரளை உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தியவர். அப்போதுதான் கோத்தபயா ராஜபக்‌ஷே ஜனாதிபதியாயிருந்தார். அந்த அச்சம்/நெருக்கடிக்குள்ளும் அவர் இந்தப் படுகொலையின் வீரியம் தெரிய தம்மின மக்களிடையே அன்று உரையாடலைச் செய்து கொண்டிருந்தார். இந்நினைவு கூர்தலில் நிகழ்வொன்றுடன் கலந்துகொள்ள இருந்த என் நண்பன் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏற்பட்ட முரண்களினால் இன்று கலந்துகொள்ளவில்லை என்றார். ஆகவே தனித்தே அங்கே சென்றேன். சாணக்கியன், ஸ்வாதிக்கா,ரஜீவ்காந்த் போன்ற தெரிந்த சில தமிழ் முகங்களைக் கண்டேன்.

சிங்கள இனவாதிகள், "இராணுவம் - போர் வெற்றி நாயகர்கள்" என்ற பதாதையுடன் வந்திறங்கி குழப்பினார்கள். ஒரு சிறு நினைவுகூர்தலுக்கு சாதாரண பொலிஸ், ஆர்ப்பாட்டங்களை அடக்கும் சிறப்பு பொலிஸ் (கறுப்பு உடை), அதிரடிப்படையினர் (STF) எனப் பெரும் படையே வந்திருந்தது. நிச்சயம் சாதாரண உடைகளில் உளவுத்துறையும் அங்கு மக்களுடன் கலந்து நின்றிருக்கும். கூடவே கண்ணீர்ப்புகை/தண்ணீர் பீச்சும் பாரிய வாகனம் உள்ளிட்ட இராணுவ வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

அமைதியான நினைவு கூர்தலுக்கு வழிகோலாது, வன்மமும், வன்முறையும் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்காது, நினைவுகூர வந்தவர்களையே ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பொலிஸும், அதிரடிப்படையினரும் "பொக்ஸ்" அடைத்து அடைத்து வீதியின் ஒரு கரைக்குக் கொண்டு வந்து அவ்விடத்தில் இருந்து அகற்றினர். கடந்த வருடம் அரகலியாப் போராட்டம் நடந்தபோது காலி முகப் போராட்டக்களத்தில்,


முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டபோது இனவாதம் வாலைச் சுருட்டிக் கொஞ்சம் இருந்தது. இம்முறை அவ்வாறில்லை என்று தன் அசல் முகத்தை பல்லிளித்துக் காட்டியது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை அமைதியாக நினைவுகூர முடியாதுவிட்டாலும், இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு நாம் செல்லவேண்டிய பாதை நெடியது என்பதை இனவாதிகள் தெளிவாக இராணுவ/பொலிஸ் துணையுடன் நமக்குச் சொல்லியிருக்கின்றார்கள்.

நான் ஓட்டோவில் நினைவுகூர்தலுக்காய் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இன்னொரு ஓட்டோவில் ஒருவர் வெள்ளைச் சட்டை, வெள்ளைக் காற்சட்டை அணிந்து, கையில் வெள்ளைப் பூக்களுடன் இருந்தார். வாகன நெருக்கடியால் நிகழ்விற்கு நேரமாகிவிட்டதென்று ஓட்டோவில் இருந்து அவர் இறங்கி ஓடிப் போகத் தொடங்கினார். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானிக்குரிய அடையாளம். அவரைப் பின்னர் நிகழ்வில் அடையாளங்கண்டு என்னை அறிமுகப்படுத்தி, நினைவுகூரலுக்கு வந்தமைக்கு நன்றி சொன்னேன்.

இனவாதிகள் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால் என் சிங்கள நண்பனைப் போல, இந்த வெள்ளைச் சட்டை இளைஞன் போலத்தான் நிறையப் பேர் நிகழ்ந்தவற்றுக்காக வருந்தவும், இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களிடையே எவ்வகையான அதிகாரமும் இல்லை. எனவே மலையிடுக்குகளில் அடங்கிப் போகும் குரல்களாக இவை இருக்கின்றது.

இன்றைப் போல அல்லாது, என்றோ ஒருநாள் அவர்களின் குரல்கள் பல இலட்சக்கணக்கான கூட்டுக்குரல்களாக வலிமையாக ஒலிக்கக் கூடும். அப்போது இந்த நாடு தனக்கான நிரந்தர அமைதியை அடையக் கூடும். அன்று ஒவ்வொரு சிறுபான்மையினமும் இது தனக்குரிய நாடென்றும் சொல்லி இறும்பூதெய்யவும் கூடும்.

ஆனால் அதுவரை...?


(May 18, 2023)

0 comments: