கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள் - 03

Saturday, September 23, 2023

 

அன்பு இளங்கோவிற்கு,


நலமா? உங்கள் முகப் பக்கத்தில் ஐந்து கிலோ மீட்டர் ஓடி, ஆய்ந்து ஓய்ந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்தற்போது நன்றாக ஓய்வெடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது பயணத்தின் காரணமாக உங்களுக்கு எழுதுவது தாமதமாகிவிட்டது. கடிதங்களுக்கான குணாதிசயமும் அதுதானே. அதாவது, எதிர் நோக்கிக் காத்திருக்கச் செய்து, பிறகு கைகளில் தவழ்வது. அப்படியாகவே இந்தக் கடிதம் அமைந்துவிட்டது. உங்கள் கடிதத்தின் வாயிலாக என்னைப் போலவே நீங்களும் கடிதங்களை சேமித்து வைப்பவர் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நான் எதன் பொருட்டோ எல்லாக் கடிதங்களையும் சேமிக்கவில்லை.


நமது கடிதங்களை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்று தான் நானும் நினைக்கிறேன். எந்த திட்டமிடலும் இல்லாது தன்னியல்பாக தொடங்கிய இந்த கடிதப் பரிமாற்றங்கள், அழகியல் தருணங்கள், 'எது வரினும், நிகழில் நிற்போம்' என்ற சிந்தையில் இயங்கும் நமக்கு, வாழ்க்கை அளித்த அதிசய அன்பளிப்பு தானோ? நமக்கு இப்படி இருக்க, கடிதங்களே அரிதாகிப் போன இந்தக் காலகட்டத்தில், நமது கடிதங்கள், வாசிப்பவர்களுக்கும் ஒரு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் நம்புகிறேன். நாம் பொது வெளியில் எழுதும் இத்தகு கடிதங்கள் மூலம் கடித இலக்கியத்தை வளர்த்தெடுக்க முடிந்தால், அதுவும் சிறப்பன்றோ?


எனக்கு முன்பெல்லாம் ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எழுதும் கடிதங்கள் எப்படி இருக்கும் என்று அறியும் அவா இருக்கும். ஒருவேளை, அப்போது ஆணுலக அறிமுகமற்று இருந்த எனக்கு, அதை அறிந்து கொள்ள நான் தேடிய ஒரு வழியாக அது இருக்கலாம். அப்போது எனது வகுப்புத் தோழனிடம் எனது இந்த ஆசையை நான் வெளிப்படுத்த, அவன் தனது நண்பன் தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு வாசிக்கக் கொடுத்தான். அந்த எழுத்தில் பாலின வேறுபாடெல்லாம் தெரியவில்லை, நான் ஆணுலகை அறிந்து கொள்ளும் மார்க்கமாகவும் அது இல்லை, மேலும், எனது நண்பன் ஒருவன் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்த துள்ளலும் இருக்கவில்லை. மாறாக, அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த ஒரு சம்பிரதாய நிகழ்வு பரிமாற்றமாக இருந்தது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதற்கு பிறகு அந்தத் தேடலை விட்டுவிட்டேன். எவரோ இருவர் எழுதி நான் வாசித்த ஒற்றைக் கடிதத்தின் வழி ஒட்டு மொத்த ஆண்களின் உளவியலை அறிந்து கொள்ள முனைந்தது எனது முட்டாள்த்தனம் தானே? பின்னாளில், 'இதம் தந்த வரிகள்' என கு.அழகிரிசாமி - சுந்தர ராமசாமி கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன். அது எத்தகைய அனுபவத்தை கொடுத்தது என்பது தற்போது நினைவில் இல்லை. மீண்டும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்குமாயின் வாசிக்க வேண்டும்.


உங்கள் ஆசிரியர் தாய் (Thay) சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. அவரைப் பற்றிய மேலதிக குறிப்புகளைப் பகிரவும். பார்வையற்ற ஒருவர், தமது கைத்தடியைத் தரையில் தட்டி தட்டி, தன் வழி அறிந்து செல்வதைப் போல, எனக்கு ஜே.கே, உங்களுக்கு தாயின் கற்பித்தல்கள் அத்தகைய கைத்தடியாக அமைந்திருக்கிறது என்றும், அந்தக் கைத்தடியை பற்றிக் கொண்டு நாம் நமது வழியை கண்டுபிடித்துச் செல்கிறோம் என்றும் நான் நம்புகிறேன்.


எதையோ எழுத வந்து எங்கேயோ எழுத்து அலைபாய்ந்ததாக எழுதி இருந்தீர்கள். எழுத்தின் கைப்பற்றி தன் கதையை சொல்லிச் செல்லும் எண்ணத்தின் இயல்பு தானே அது, அதன் படியே வழிநடத்தப் பட்டிருந்தீர்கள். அது சிறப்பாகவே வந்திருந்தது. எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயாத்தின் பேரில் அன்றி, தன்னியல்பில் தோன்றிய இந்தக் கடிதப் பரிமாற்றமானது ஆத்மார்த்மாகவும் எந்த அழுத்தத்தையும் கொடுக்காததாகவும் இருக்கிறது. மாற்றம் குறித்து நீங்கள் எழுதி இருந்ததைப் போலவே, இதுவும் மாறலாம், எப்போது வேண்டுமானாலும் தன்னியல்பாக தோன்றியது போல இந்தப் பரிமாற்றங்கள் ஒரு நாள் ஓயலாம் என்ற புரிதலோடு, எதுவரை போகுமோ அதுவரை நாம் எடுத்துச் செல்வோமாக! நிகழில் லயிப்போமாக!


அன்புடன்,


இனியா


 ***********************


அன்பின் இனியா,


உங்கள் பயணம் இனிதாய் நடந்து முடிந்திருக்குமென்று நம்புகின்றேன்.


கடிதங்களுக்கு தமிழில் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் நிறைய கடிதங்களை திறந்த கடிதங்களாய்க் கூட எழுதியிருக்கின்றார்கள். என் நினைவில் நான் வாசித்த முதல் கடிதமாய் 10ம் வகுப்பில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, நேரு மகளுக்கு (இந்திராகாந்திக்கு) எழுதிய கடிதமாய் இருந்திருக்கின்றது. அதே காலத்தில்தான் அமெரிக்கப் பூர்வீக குடிகளின் தலைவர் Chief Seattle இன் கடிதத்தையும் வாசித்திருக்கின்றேன். அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன், பூர்வீக மக்களின் நிலத்தை வாங்கக் கேட்கப்பட்டபோது எழுதப்பட்ட கடிதம். அது இப்படித்தான் தொடங்கும் "The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? The land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?" கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் ஆனபின்னும், நாம் சியாட்டில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல்தான் திண்டாடுகின்றோம்.


இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் எல்லாவற்றையுமே பணமாக்க நாம் துடித்துக் கொண்டிருக்கின்றோம். பணமாக்க மட்டுமில்லை, இந்த வாழ்வை மிக நிதானமாக இரசிக்கக் கூட மறந்து எது எதற்காகவோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.


அவ்வாறான ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்க்கத்தான் எனது ஆசிரியரான தாய் (Thich Nhat Hanh) எனக்கு உதவியிருக்கின்றார். இயற்கையை மட்டுமில்லை, சக மனிதர்களால் வரக்கூடிய ஏமாற்றங்களையும் எளிதாக எடுத்துக் கொள்ள தாயும், புத்தரும் துணையாக இருக்கின்றார்கள். Thich Nhat Hanh என்பது அவரது முழுப்பெயர் என்றாலும், அவரை அணுக்கமாக புரிந்துகொள்பவர்கள் அவரை Thay என்று அழைக்கின்றார்கள். Thay என்பதற்கு வியட்நாமிய மொழியில் ஆசிரியர் என்று அர்த்தத்தைத் தரக்கூடியது. தாயும் என்னைப் போலவே போரின் நிமித்தம் அகதியானவர்.


வியட்னாமில் தென் வியட்னாமிய கம்யூனிஸ்டுக்களும், அமெரிக்க ஆதரவு வட வியட்னாமியர்களும் சண்டையிட்ட 1960களில் இரண்டு தரப்புக்கும் அப்பால் இருந்து சமாதானத்துக்காய் களத்தில் நின்று குரல் கொடுத்தவர். ஒருகட்டத்தில் தாயை வியட்னாமிய அரசு நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாதென்று தடை விதிக்கின்றது. அப்போதும் Boat People என அழைக்கப்பட்ட வியட்னாமில் இருந்து படகுகளில் தப்பிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயற்பாடுகளில் இறங்கியவர்.


தாய் நமக்கு Inter-being என்ற புதிய சொல்லைஅறிமுகப்படுத்தியவர். அதாவது நாம் இயற்கையோடும், சக மனிதர்களோடும் தங்கியுள்ளவர்கள் என்று கூறுகின்றார். ஒரு உதாரணத்துக்கு நாம் தேநீரை அருந்தும்போது, நாம் தேநீரை மட்டும் அருந்தவில்லை. தேயிலைச் செடி, மழை, மழைக்குக் காரணமான முகில்கள் என்று நம் புறக்கண்ணுக்கு தேநீர் அருந்தும்போது தோன்றாத விடயங்களையும் பார்க்கச் சொல்கின்றார். அவ்வாறுதான் எல்லாமுமே ஒவ்வொன்றோடு தொடர்புபட்டிருக்கும் எனச் சொல்கின்றார். ஒருவகையில் நாகார்ஜூனர் சூன்யவாதத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு கிளாஸில் அரைவாசி நீர் நிரம்பியிருந்தால், அதன் மிகுதியில் இருப்பது என்னவென்று யோசிக்கச் சொல்வதோடு இணைத்துப் பார்க்கலாம்.


தாய், ஸென் பரம்பரையில் வருகின்றவர் என்றாலும் Engaged Buddhism என்ற புதிய விடயத்தை முன்வைத்தவர். மரபான புத்தம் தேங்கிவிட்டதால், நாம் புதிதாக மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றே Engaged Buddhism ஐ தொடங்கியவர். அவர் புத்தர் முன்வைத்த Impermanence, No Self, Nirvana தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருந்தவர். எல்லாமே 'மாறும்' என்றால், அங்கே சுயம் என்று concrete ஆன ஒன்றும் இல்லை. இந்த 'மாறும்' நிலையும், உறுதியான 'சுயமும் இல்லை' என்கின்ற புரிதல், நம்மை 'நிர்வாணத்துக்கு' அழைத்துச் செல்லும் சுதந்திரத்தைத் தருகின்றது என்கின்றார். 'நிர்வாணம்' என்பது எல்லாவற்றிலிருந்தும் விடுதலை ஆவதாகும் என்று எளிய புரிதலாக தாய் சொல்வதாகப் புரிந்து கொள்ளலாம். உங்களின் ஜேகேயும் 'அறிந்ததிலிருந்து விடுதலை' (Freedom from Known) பற்றி நிறையப் பேசியிருக்கின்றார் அல்லவா? தாயைப் பற்றி அலுப்பில்லாது என்னால் நிறையப் பேசமுடியும். விரிவெண்ணி இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். தாய் அண்மையில் மறைந்தபோது நானெழுதிய இந்தப் பதிவு (https://djthamilan.blogspot.com/2022/04/thich-nhat-hanh.html) தாய் பற்றிய மேலதிகப் புரிதலைத் தரக்கூடும்.


ஒஷோ நான் கற்றவை என நம்பிக் கொண்டிருந்தவற்றை உடைத்து வெறுமையாக்கிவிட்டார் என்றால், தாய் அந்த வெற்றிடத்தை அவரது எளிதான கற்பித்தல்களால் நிரம்பிக் கொண்டவர் என்று சொல்வேன். அதனால்தான் ஓஷோவை தோளில் கைபோட்டு கூடவே நடக்கக் கூடிய ஒரு தோழனைப் போலவும், தாயை என் மரியாதைக்குரிய ஆசிரியராகவும் நினைத்துக் கொள்கின்றேன். ஆனால் இவர்கள் அல்ல, எந்த ஸென் ஆசிரியர்களும் தங்களை முன்னோடியாக வழிகாட்டியாகக் கொள்ளாதே எனத்தான் சொல்வார்கள். எல்லாமே perceptions தான், ஒருபோதும் இந்தமாதிரியான நம்பிக்கைகளில் தேங்கிவிடாது அவற்றைக் கடந்து கடந்து போகவேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை. இப்போது நாங்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் முதல் கடிதத்துக்கும், இந்தக் கடிதத்துக்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்கும். 'அதே தான், ஆனால் அது அல்ல' என்பதைத்தான் ஸென் அடிக்கடி வலியுறுத்திக் சொல்வது.


ஸென் koan/katha ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்: ஞானமடைந்த ஒரு குருவிடம் ஒருவர், நீங்கள் ஞானமடைய முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனக் கேட்பார். அதற்கு அவர் விறகு வெட்டிக் கொண்டிருந்தேன் என்பார். அப்படியா இப்போது ஞானமடைந்தபின் என்ன செய்கின்றீர்கள் என அதே நபர் குருவிடம் கேட்பார். குரு, 'இப்போதும் விறகுவெட்டிக் கொண்டிருக்கின்றேன்' என்கின்றார். இது எளிமையான கதை போலத்தோன்றினாலும் புரிந்து கொள்ள விரிவான பாடங்கள் இருக்கின்றன.


ஸென்னைப் பற்றி அறியும் ஆவல் தொடர்ந்து இருப்பதாலோ என்னவோ நேற்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு ஸென் ஆசிரியரும், என்னைப் போன்ற பலரும் அவரைச் சுற்றி இருக்கின்றோம். ஸென் ஆசிரியர் எதையோ சொன்னவுடன் ஒருவர் விளங்கவில்லையென விளக்கம் கேட்கின்றார். ஆனால் எனக்கு ஸென் ஆசிரியர் சொன்னது விளங்குகின்றது. ஒருவகையில் சில செக்கன்களில் வந்து போய்விட்ட ஆழமான புரிதல் அது. குருவிடம் விளக்கச் சொல்கின்றவர் அந்தப் புள்ளியைத் தவறவிட்டார் என்பது புரிகின்றது. ஆனால் அது புரிந்துவிட்டது என்று உணர்ந்த என்னால் கூட அதை விபரித்து கேள்வி கேட்பவருக்குச் சொல்லமுடியவில்லை.


அறிந்ததைச் சொல்ல முயலும் நான், அதை விளக்கமுடியாது தவிர்க்கின்றேன். இதைத்தான் ஸென்னில் கணநேரத்தில் விழிப்புணர்வு வந்துவிடக்கூடும் எனச் சொல்வது என நினைக்கின்றேன். அதே சமயம் அந்த அனுபவத்தை புறவயமாக முழுதாக விபரித்தும் விடமுடியாது. ஓஷோ சொல்வதுபோல ஒரு பாடகர் தான் வேறில்லை, தன் பாடல் வேறில்லை என்ற பாடிக் கொண்டிருக்கும்போது உணர்வது, ஓரு நடனக்காரர் தான் வேறில்லை, தன் ஆட்டம் வேறில்லை என்று ஆடிக்கொண்டிருக்கும்போது உணர்வது, ஒர் எழுத்தாளர் தான் வேறில்லை தன் எழுத்து வேறில்லை என அவர் அறியாமலே எழுதிக் கொண்டிருப்பது போலவும்.


இந்தக் கடிதம் ஸென்னோடு தொடங்கி அதனோடே முடிந்துவிட்டது.


அன்புடன்,


இளங்கோ


********************

0 comments: