கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 22

Friday, September 08, 2023


வீரப்பன்

********


வீரப்பனைப் பற்றிய 'The Hunt For Veerappan' ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அவரது கடைசிநேர மர்மங்கள் துலங்குகின்றன. வீரப்பனை இன்றைய காலகட்டத்தில் இருந்து பார்த்தால் இன்னும் குழப்பமான சித்திரமே அவரைப் பற்றித் தோன்றும். ஒரு தனிமனிதர் எதனாலோ அவ்வாறு ஆகி பின்னர் இறுதியில் கிட்டத்தட்ட ஒரு உதிரி மனிதராகவே உதிர்ந்தும் விட்டார். ஆனால் அதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்கு அதிரடிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், என்கவுண்டர்கள் மட்டுமில்லை, அவர்களில் பலர் எவ்வித குற்றமும் செய்யாமல் 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய குரல்களாக எவருமே அன்று பெரிதாக நின்று ஒலிக்கவில்லை. இன்றுவரை அவர்களுக்கான நீதி கிடைக்கவுமில்லை.

இந்த ஆவணப்படத்தில் தெளிவாகவே 'work shop' என்ற பெயரில் சித்திரவதைக் கூடங்களும், வீரப்பன் எதாவது தாக்குதல் நடத்தும்போது அங்கிருக்கும் கைதிகளைக் கொண்டுபோய் என்கவுண்டர் செய்ததும் காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் பின்னால் மனிதவுரிமை கமிஷனில் கூட அப்படியான பல அதிகாரிகள் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் தப்பியிருக்கின்றனர் என்பதுதான் வினோதமானது. அவர்களின் மனச்சாட்சியே அவர்களுக்கான நீதியை வழங்கட்டும் எனச் சொல்வதைத் தவிர இந்திய ஜனநாயகத்தில் நம்புவதற்கு எதுவுமில்லை.

ஓரிடத்தில் கெளத்தூர் மணியிடம், 'வீரப்பன் இறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் ' என்று கேட்கப்படும்போது, வீரப்பன் மீது கோபமோ வெறுப்போ இல்லை, ஆனால் ஒரு relief ஐ உணர்ந்தேன் என்று சொல்கின்றார். அந்த 'நிம்மதி' என்பது இந்த மலைவாழ் மக்கள் அதிரடிப்படையினரின் சித்திரவதைகளை இனி அனுபவிக்கத் தேவையில்லை என்பதால் என்று அவர் சொல்வதை என்னாலும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ரு காட்டு ராஜாவாக சில தசாப்தங்களாக இருந்த வீரப்பனைப் பிடிப்பதென்றால், அவரை ஊருக்குள் கொண்டு வந்தால் மட்டுமே முடியும் என்று தமிழ்நாட்டு அதிரடிப்படைக்கு விளங்க நீண்டகாலம் எடுத்திருக்கின்றது. வீரப்பனைப் பிடிக்க இரண்டு மாநிலங்களின் 5,000 அதிரடிப்படை/பொலிஸ், 50 மில்லியன் அமெரிக்கன் டொலர் என்று நிறையச் செலவு செய்திருக்கின்றார்கள். இதில் பேசும் அன்புராஜ்ஜின் குரலை நாம் உன்னிப்பாகக் கவனித்தாகவேண்டும். இப்போதும் இந்தக் காட்டில் நான் அடையாளமின்றி கொல்லப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட, வன்புணர்வுக்கு ஆக்கப்பட்டவர்களில் ஓலங்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் என்று அவர் சொல்வது நாம் அந்த அப்பாவி ஆன்மாக்களை எவ்வளவு எளிதாக மறந்துவிட்டு ஒரு அழகான காட்டை மட்டும் பார்க்கின்றோம் என்பதன் அபத்தத்தைச் சுட்டி நிற்கின்றது.

இறுதியில் வீரப்பனைச் சூழ்ச்சியால் பிடிக்கின்றார்கள். அதற்கு காரணமாக அமைவது விடுதலைப் புலிகள். தமிழ்நாடு அதிரடிப்படை வீரப்பனின் புலிகள் மீதான பாசத்தை வைத்து
, அவருக்கு ஆயுதம் விநியோகிப்பவரை மறித்து, தங்களின் ஒருவரை 'விடுதலைப்புலிகளின்' ஒருவராக உளவுபார்க்க அனுப்புகின்றது. அவரும் இந்த ஆவணப்படத்தில் பேசுகின்றார். பல மாதங்களாக வீரப்பனுக்கு அருகில் நெருங்கி, ஆயுதங்களை விடுதலைப்புலிகள் பாவித்த ஆயுதங்களெனச் சொல்லிக் கொடுத்து, ஒருகட்டத்தில் துப்பாக்கிகளை கழற்றி மாற்றியெல்லாம் உதவி செய்து, வீரப்பனை, அவருக்குப் புலிகள்தான் உதவி செய்கின்றார்கள் என நம்ப வைக்கின்றனர்.

வீரப்பனுக்கு இப்போது 52 வயதாகிவிட்டது. அவருக்கு கிட்டத்தட்ட கட்ராக்கால் 70% கண் பார்வையும் போய்விட்டது. காட்டுக்குள் தொடர்ந்து அலைந்து திரிந்த அவருக்கு மனைவி/பிள்ளைகளோடு நிம்மதியாக வாழும் ஆசையும் வந்துவிட்டது. அதிரப்படை உளவாளி அவரிடம் நெருக்கமாகப் பழகி,, உங்களை ஈழத்துக்குக் படகில் அழைத்துக் கொண்டு செல்கின்றோம் என்று நம்பவைத்தே தர்மபுரியில் அவர்கள் தயாரித்த அம்புலஸிற்குள் கூட்டிக் கொண்டு போய் சினைப்பரால் சுட்டுக் கொல்கின்றனர்.

இதே வீரப்பன், இதற்கு முன் கெளத்தூர் மணியை இரகசியமாகச் சந்திக்கும்போது ஈழம் போகும் விருப்பைத் தெரிவிக்கின்றார். ஆனால் கெளத்தூர் மணி அது இப்போதைய சூழலில் (2004) இல் அங்கு செல்வது சாத்தியமில்லை என்றே சொல்கின்றார். அவ்வாறு கெளத்தூர் மணி சொன்னதன் பிறகும் வீரப்பன் எப்படி ஒரு உளவுக்கார அதிரடிப்படையை விடுதலைப்புலிகளின் ஒருவராக நம்பினார் என்பது ஆச்சரியம். ஆனால் அவ்வாறு நம்ப வைக்கப்பட்டுத்தான் வீரப்பன் நகருக்குள் அழைக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதைப் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள முடிகின்றது. அவ்வாறு வீரப்பன் நம்ப வைக்கப்பட்டதற்கு இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படாத வேறு பல காரணங்களும் இருக்கவும் கூடும்.

******************


(Aug 04, 2023)

0 comments: