கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 02

Tuesday, March 12, 2024

 

2.

'To be silent the whole day long, see no newspaper, hear no radio, listen to no gossip, be thoroughly and completely lazy, thoroughly and completely indifferent to the fate of the world is the finest medicine a man can give himself.'
-Henry Miller

ஹென்றி மில்லர் தனக்கு மிகப் பிடித்த நாவல்களில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வைக் குறிப்பிடுகின்றார். ஸென்னை பற்றிக் குறிப்பிடாமல் அது ஸென்னைப் பற்றிப் பேசுகின்றது என்கிறார். அதேபோல ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பைப் பெற்றவராகவும் ஹென்றி இருந்திருக்கின்றார். ஸென்னைப் பற்றி குறிப்பிடுகையில் இந்தக் கணமே அடுத்த கணத்தை பாதிக்கும் என்றால், நீங்கள் ஐந்து படிகள் தாண்டி ஒன்றைக் கற்பனை செய்யமுடியாது. அப்படித்தான் பலர் இருக்கின்றார்கள், அதனால் வாழ்வு ஏமாற்றமுடையதாக மாறுகின்றது என்கின்றார்.

எழுத்தாளர் தொடக்க காலங்களில் அசலோடு வருவதில்லை. யார் யாரினதோ பாதிப்புக்களோடுதான் அவர்கள் படைப்பாளிகளாக மாறுகின்றார்கள். தன்னை மிகவும் பாதித்தவராக தாஸ்தவேஸ்கியை ஹென்றி குறிப்பிடுகின்றார். அதேவேளை தன் எழுத்து நடையில் ஆதிக்கம் செலுத்தியவராக நோர்வேஜிய எழுத்தாளரான Knut Hamsun ஐ நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.

அனாஸ் எழுதிய குறிப்புகளின்  ஹென்றியும் ஜூனும் சம்பந்தப்பட்டவை தொகுக்கப்பட்டு 'Henry and June' என்று தனித்த ஒரு நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. ஹென்றியின் Tropic of Cancer இல் வரும் பாலியல் சித்தரிப்புக்களுக்கு நிகராக, அனாஸின் அனுபவம் சார்ந்த சுயகுறிப்புகளும் இருக்கின்றன. இன்று பெண்ணியல்வாதிகளால் - முக்கியமாக அலிஸ் வாக்கர் உள்ளிட்ட பலரால்- அனாஸ், தனக்கும் ஜூனுக்கும் இடையிலிருந்த பாலியல் உறவுகளை மிகத் தத்ரூபமாகவும், வெளிப்படையாகவும் எழுதியிருக்கின்றார் என்று பாராட்டப்பட்டு, ஒரு சிறந்த சிற்றின்ப வகைப் படைப்பாளி எனவும் இன்று அனாஸ் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

ஹென்றியின் எழுத்து நடையில் அன்று பிரான்சில் பாதிப்புச் செலுத்திய மீமெய்ம்மையியல் (Surrealism) மிகப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் அனாஸ் ஆர்வத்துடன் கற்ற psychoanalysis உம் ஹென்றியில் ஆதிக்கம் செலுத்துவதை அவரது எழுத்துக்கள் தன்போக்கில் ‘திசைகெட்டு அலைந்து திரியும்’போது நாம் கவனிக்கலாம். ஹென்றி மில்லர் அவரது பெரும்பாலான நாவல்களில் அவரது மனைவிகள், காதலிகளைச் சித்தரித்தாலும், அவரது நாவல்களில் அனாஸ் பற்றி புனைவாகவோ, அதற்கு வெளியிலோ சித்தரிக்கப்படவில்லை என்பது வியப்புக்குரியது. ஹென்றி அதன் பிறகு பிரான்ஸை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினாலும், அனாஸின் நீண்டகால நண்பராக ஹென்றிக்கு அவரது மறைவுவரை இருந்திருக்கின்றார்.

பிரான்ஸை விட்டு 1930களின் பிற்பகுதியில் வெளியேறும் ஹென்றி கிட்டத்தட்ட ஒரு வருடம் கிறிஸில் தனது நண்பரொருவருடன் அலைந்து திரிந்திருக்கின்றார். ஹென்றி ஒருவகையில் இப்படியான பயணங்களில் அலைந்து திரிகின்றவர் என்றாலும், இன்னொரு வகையில் தனது காதலிகளைத் தேடியும் வெவேறு நாடு/நகரங்களுக்கு அலைந்து அவர் திரிந்து இருக்கின்றார். தன் வாழ்நாளில் ஐந்து முறை திருமணம் செய்தாலும் காதலிகளைத் தேடித் திரிவது ஒருபோதும் அவருக்கு முடிவடைந்த பயணங்களாய் இருந்ததில்லை.

கிரேக்கத்தில் அலைந்து திரிந்து பயண அனுபவங்களாய் எழுதிய ‘The Colossus of Maroussi’ ஐ ஹென்றி தனது எழுத்துக்களில் மிகச் சிறந்ததாய்ச் சொல்கின்றார். அதன் பின் அமெரிக்காவிற்கு வந்து (1940கள்) பழைய காரொன்றை வாங்கி சில வருடங்கள் அமெரிக்க முழுதும் தனது நண்பருடன் ஹென்றி அலைந்து திரிகின்றார். அப்போது அமெரிக்காவின் இன்னொரு முகத்தைப் பார்க்கின்றார்.

ஐரோப்பாவில் ஒரு புலம்பெயர் வாழ்வைப்  பத்து வருடங்கள் வாழ்ந்த ஹென்றிக்கு அமெரிக்காவை ஒரு வெளியாளாகப் பார்க்கும் பார்வையை இது கொடுக்கின்றது. அமெரிக்காவின் தொழில் புரட்சியையும், பெரும் நுகர்வையும், மறுபுறத்தில் வறுமையையும் கண்டு வெறுத்து அவர் எழுதிய நூலே ‘The Air-Conditioned Nightmare’.

பலரின் மூளைக்குள் கவனமாகப் பொதிக்கப்பட்ட அமெரிக்கக் கனவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும், அவற்றை நியாயப்படுத்த புதைத்த வைத்த தொன்மங்களையும் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடியால் ஹென்றி எதிர்க்கலாசாரத்தின் ஒரு அடையாளமாகவும் சுட்டப்படுகின்றார். அது மட்டுமின்றி பாலியலை அதிகம் எழுதியதால் தடை செய்யப்பட்ட அவரது நாவல்கள் பின்னர் 1960களில் தடை நீங்கியபோது, பாலியல் எழுத்துக்களை மட்டுமின்றி எதையும் 'எழுத்தின் சுதந்திரத்தால்'  எழுதமுடியும் என்று அமெரிக்காவுக்கு எடுத்துக்காட்டிய ஒரு படைப்பாளியாகவும் அவர் நினைவுகூரப்படுகின்றார். கிட்டத்தட்ட பல்வேறு நீதிமன்றங்களில் 60இற்கும் மேற்பட்ட வழக்குகளை ஹென்றியின் நாவல்கள் அதன் பேசுபொருளுக்காய்ச் சந்தித்திருக்கின்றன.


ஹென்றி நீண்டகாலமாக ஒழுங்கான வருமானம் இல்லாது இருந்தே எழுதியவர். அமெரிக்காவுக்குத் திரும்பிய தொடக்க காலத்தில் வீடற்றவராக கலிபோர்ணியாவில் இருந்தவர். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னரே அவரின் நூல்களுக்கான ரோயல்டி வரத்தொடங்கிய பின்னே ஒரளவு சமூகமான வாழ்க்கையைக் ஹென்றி வாழத் தொடங்குகின்றார். ஹென்றியின் பல நூல்கள் அமெரிக்காவில் 1960களுக்கு பின்னரே, அவரின் 70 வயதிலே சட்டபூர்வமாக பதிப்பிக்கப்படுகின்றது.

ஹென்றியின் எழுத்துக்களின் வகிபாகம் இன்று என்னவாக இருக்கின்றது என்பது முக்கிய வினாவாகும். அன்றைய காலத்தில் (1930களில்) ஹென்றியின் எழுத்துக்கள் காலத்தின் முன்னோக்கிப் பாய்ந்த குதிரையின் நான்கு கால் பாய்ச்சலைப் போன்றது. ஆகவே பல சர்ச்சைகளையும், தடைகளையும் அது சந்தித்தது. இது மூலம் பல திறப்புக்களை அன்றைய காலத்தில் எழுத்துக்குத் திறந்து விட்டிருந்தது.

ஹென்றியின் எழுத்துக்களுக்கு அண்மையாக வரும் எழுத்துக்களையுடைய ப்யூகோவ்ஸ்கி கூட, ஹென்றியை வாசித்திருந்தாலும் ஹென்றியை அல்ல, தனது முன்னோடிகளாக ஹெமிங்வே, நீட்ஷே, செலின் போன்றவர்களையே முன்வைக்கின்றார். ஹென்றி நேரடியாக சில விடயங்களைச் சொல்வது தனக்குப் பிடித்திருக்கின்றது என்று ப்யூகோவ்ஸ்கி சொன்னாலும், ஹென்றி சட்டென்று வேறொரு வகையான கற்பனையான உலகிற்கு தன் எழுத்துக்களை கூட்டிச் செல்வதை ஒரு பலவீனமாகச் சொல்கின்றார்.

அதேயே இன்றைய புதிய தலைமுறைகள் ஹென்றியின் நாவல்களை வாசித்து தமது விமர்சனமாக முன்வைக்கின்றனர். ஆனால் இன்றைக்கு ஹென்றி முதல் நாவலை எழுதி ஒரு நூற்றாண்டு ஆகின்ற வேளையிலும் பலர் ஹென்றி மில்லரைத் தேடித்தேடி வாசிப்பதால் அவர் இன்னமும் காலத்தில் உதிர்ந்து போகாத ஒரு எழுத்தாளராகவும் இருக்கின்றார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

‘ஒரு மனிதன் 9-5 மணி வேலையைச் செய்து, சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இந்த உலகிலிருந்து நீங்கிப் போகலாம். ஆனால் அவன்/ள் வேறொரு வாழ்வை விரும்பினால் அதற்காய் இறக்கும்வரை கூடப் போகலாம்'  என்கின்றார்  ஹென்றி. இது கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கி ‘ஒன்றைத் தொடங்குவது என்றால் அதன் முடிவுவரை போகவேண்டும், இல்லாவிட்டால் தொடங்கவே கூடாது; என்று கூறுவதைப் போன்றது (‘If you're going to try, go all the way. Otherwise, don't even start’).

ஹெமிங்வே பாரிஸிற்கு 1920களில் போகின்றார். ஒரு படைப்பாளியாக  உருவாக பாரிஸின் அன்றைய சூழ்நிலை ஹெமிங்வேயிற்கு வாய்க்கின்றது. அவ்வாறே 1930களில் ஹென்றி மில்லர் பாரிஸிற்குப் போய் ஒரு சிறந்த புனைகதையாளனாக மாறுகின்றார்.

ஹெமிங்வே அவரது இளமை குதூகலிக்கும் இருபதுகளில் பத்திரிகையாள வேலையோடு ஐரோப்பாவுக்குப் போனது போலவன்றி, ஹென்றி மில்லர் தனது நாற்பதுகளில், கையில் உரிய பணமின்றிப் போய் அவர் விரும்பியதைச் சாதித்திருக்கின்றார். அது மட்டுமின்றி பாலியல் கதைகளைச் சுதந்திரமாக எழுதுபவர்க்கும், எதிர்க் கலாசாரவாதிகளுக்கும், நாடோடிகளாய் அலைந்து திரிபவர்க்கும் பிரகடனங்கள் எதுவுமின்றி தன்னியல்பிலே ஒரு முன்னோடியாகவும் ஹென்றி பிற்காலத்தில் மாறியிருக்கின்றார்.
 

(இன்னும் வரும்)


('காலம்' - இதழ்/60)

 

0 comments: