கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வீடற்ற வெளியில் அலையும் தன்னிலைகள்!

Sunday, March 24, 2024

 

வ்வொரு மனிதர்களும் சுதந்திரமான வெளிகளில் சிறகடித்துப் பறக்க விரும்புகின்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படியான ஒரு 'வெளி'யில் கலையில் திளைத்துக் கிடப்பவனுக்கு 'வீடு' என்பது எவ்வாறாக அர்த்தம் பெறுகின்றது என்பதை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் சி.மோகனின் 'வீடு வெளி' புதினம் முன்வைக்கின்றது. கதை 90களில் நிகழ்கின்றது. கதைசொல்லியான கிருஷ்ணன் அவரின் 40களின் நடுப்பகுதியில் இருக்கின்றார். குடும்பம், பிள்ளைகள் என்பவற்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் விலகி, நண்பர்களில் வீடுகளில் தங்கியிருக்கும் ஒரு 'நாடோடி' வாழ்க்கையை கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கின்றார்.


அவ்வாறு 'வீடற்ற வெளி'யில் அலையும் கிருஷ்ணனை ஒரு விசித்திரமான நரம்பு நோய் தாக்குகின்றது. அவரின் கால்களை முதலில் தாக்கும் நோய் கைகளை நோக்கியும் பரவுகின்றது. அவரால் இயல்பாக நடக்க முடியாதது மட்டுமின்றி உணவைக் கூட கைகளால் எடுத்துச் சாப்பிடமுடியாத நிலைமை.  நரம்பியல் நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை கேட்கும்போது அது  poly neuropathy  எனக் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு வாரத்துக்கு மேலாகத் தாக்குப் பிடிப்பாராயின் தப்பிவிடுவார். அதற்குள் இது உடலின் உள்ளங்கங்களைப் பாதித்துவிட்டால் வெண்டிலேட்டர் உதவிக்குப் போக வேண்டும். உள் உறுப்புக்களைப்  பாதித்துவிட்டால் மிக ஆபத்தான நிலைக்குப் போய் உயிர் தப்பிவிடாது போகவும் கூடும்.

 

கிருஷ்ணன் அவரின் தோழி அனிதாவினதும், நண்பர்களினதும் உதவியுடன் ஓர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக வைத்தியசாலையில் இருக்கும் கிருஷ்ணன் வைத்தியசாலைக்குள் இருந்து அந்த அனுபவங்களையும், தன் குழந்தைக் காலத்தையும், குடும்பத்தையும், நண்பர்களையும், காதலையும் சொல்கின்ற ஒரு புதினம் என இதைச் சொல்லிக் கொள்ளலாம்.

 

வைத்தியசாலைக்குள் அதன் அத்தனை பதைபதைப்புடன் வைத்துச் சொன்ன நாவலாக இமையத்தின் 'செல்லாத பணத்தை'ச் சொல்லலாம். அத்தகைய பதற்றங்கள் இல்லாமல் பொலி நியூரோபதி எந்நேரத்திலும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடுமென்றாலும் ஒரு நிதானமான தன்மையுடன் 'வீடு வெளி' எழுதப்பட்டிருக்கின்றது.

 

தை ஒரு Novel எனச் சொல்வதை விட Auto Fiction எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். நமக்குப் பழக்கமான, அசலான மனிதர்களான நடேஷ், சஃபி, மாரிமுத்து (யூமா வாசுகி), பிரமிள், கோபிகிருஷ்ணன் எனப் பலர் இதில் வருகின்றார்கள். கதைசொல்லியான கிருஷ்ணன், சி.மோகன் என்று அடையாளப்படுத்துவதிலும் அவ்வளவு கடினம் இருக்கப்போவதில்லை. ஆக இந்த 'நாவல்' கதைசொல்லிக்கு, இமையத்தின் 'செல்லாத பணத்தில்' நெருப்பு மூட்டிய/மூட்டப்பட்ட உயிருக்கு தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு என்ன நடந்துவிடுமென்ற பதைபதைப்பு போல நமக்கு இதில் இருப்பதில்லை. எப்படியெனினும் கதைசொல்லி இறுதியில் எவ்வளவு வேதனை/துயரத்துக்கு அப்பாலும் தப்பிவிடுவார் என்று நமக்கு முதலிலேயே தெரிந்துவிடும். அத்துடன் அசலான மனிதர்கள் (பலர் இப்போதும் உயிரோடு இருப்பவர்கள்) பற்றியும் சொல்லப்படுவதால் ஒருவித எல்லைக் கோடுகள் இந்த தன்வரலாற்று நாவலுக்கு வந்துவிடும். ஆகவே இந்த மட்டுப்படுத்த வெளிக்குள் நின்று எப்படி மோகன் நாவலை எழுதிச் செல்கின்றார் என்று பார்ப்பதே எனக்கான சுவாரசியமாக இருந்தது.

 

90களின் நடுப்பகுதியில் கிருஷ்ணன் காலை இழுத்து இழுத்துக் கஷ்டப்பட்டு உயிருக்கு தத்தளித்தபோது நானென்ன அந்தக் காலத்தில் செய்து கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தேன். ஆக ஒவ்வொருகாலத்திலும் எண்ணற்ற கதைகளைச் சொல்ல நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை சந்தர்ப்பங்களை -அது நல்லதோ, நல்லதில்லையோ- உருவாக்கியிருக்கின்றது. இப்போது இந்தப் புதினத்தை வாசிக்கும்போதோ அல்லது இந்த வாசிப்பை நான் எழுதும்போதோ எத்தனை ஆயிரமாயிரம் கதைகள் எழுதுவதற்காக காத்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகின்றது.

 

தேவிபாரதி 'நீர்வழிப் படூஉம்' எழுதியிருக்காவிட்டால் காருமாமா என்கின்ற ஓர் அற்புத பாத்திரத்தை நாம் அறிந்திருக்க மாட்டோம். சி.மோகன் 'வீடு வெளிஎழுதாவிட்டால் கிருஷ்ணனுக்கு அவர் வாழ்வின்  நிகழ்ந்த கொடும் சம்பவத்தையோ அதனூடாக அவர் மீளச்சென்று பார்க்கும் வாழ்வின் அனுபவங்களையோ நாம் அறிந்திருக்க முடியாது. ஆகக் குறைந்தது கிருஷ்ணனுக்கு வாய்த்த அற்புத நண்பர்களையோ, அவருக்கு வாய்த்த அந்தக் காதலையோ நாம் தெரிந்திருக்கவே முடியாது.

 

இன்றையகாலத்தில் படைப்புக்களில் அதிகம் சிக்கலாகவும், மொழிப் புலமைகளோடும் எழுதப்படும் நாவல்கள்/சிறுகதைகள் என்னை அவ்வளவு பாதிப்பதில்லை. அப்படி எழுதுவது தவறில்லை எனச் சொல்ல வரவில்லை. இந்த அலங்காரம்/ தன்முனைப்புகளைத் தாண்டி அழகான வாழ்க்கை நம்முன்னே விரிந்து கிடக்கின்றது, அதை வீணாக்கத் தேவையில்லை என நினைப்பதுண்டு. மோகனின் இந்த புதினம் மனிதர்களை அவர்களின் அத்தனைப் பலவீனங்களையும் தாண்டி இன்னமும் நேசிக்கலாம் என்கின்ற வெளிச்சத்தை வலியுறுத்தாமல் நமக்குள் ஒரு நம்பிக்கையாக விதைக்கின்றது. கிருஷ்ணன் ஏதோ ஒரு காரணத்தால் அவரின் மனைவி பிள்ளைகளை விலத்தி வந்துவிட்டார். மனைவியோடு அவ்வளவு விலத்தல் இருக்கின்றது. ஆனால் பிள்ளைகள் மீது நேசமிருக்கின்றது. இதையெல்லாம் அதீத வெறுப்போ/அளவற்ற சென்டிமென்டல்களோ இன்றி எழுத்தில் முன்வைக்கப்படுகின்றது.

 

சமகாலத்து புனைகதைகளில் அதீத உணர்ச்சிகளை முன்வைத்தால்தான் அது ஒரு சிறந்த படைப்பு என்று விம்பங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்ற சூழலில் மோகன் குடும்பம்/பிள்ளைகளை மட்டுமின்றி நண்பர்கள்/காதல்களைக் கூட எளிமையாக முன்வைக்கின்றபோது நமக்கு 'ஆசுவாசமாக' இருக்கின்றது. அந்த நிம்மதி நம்மை இந்தப் புனைவுக்குள் மட்டுமின்றி நமது வாழ்வில் நடந்தவற்றையும் ஒரு வித புன்னகையுடன் மீளப் பார்க்க வைக்கின்றது.

 

குடும்பத்தை விட்டு விலகி கலையைத் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ்ச் சமூகத்தில் என்ன இடம் இருக்கின்றது என்பதை இப்புனைவினூடாகப் பார்க்கின்றோம். அதை அந்தக் கலைஞன் எந்த முறைப்பாடுகளும் இல்லாது இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்கின்ற நெஞ்சுரத்துடன் முன்வைக்கின்றான். கலைஞராக இருக்கும் இன்னொரு பாத்திரம் குடித்தபடி நம்மைக் கைவிட்ட சமூகம் இது என்று அரற்றும்போதும் கிருஷ்ணன் நிதானமாக உரையாடுகின்றார். இன்றைக்கும் பல படைப்பாளிகள் யாரேனும் பட்டியலிடும் படைப்புக்களின் அட்டவணயில் தாம் இல்லையெனப் பொங்கும்போதும், என் எழுத்துக்களை எவரும் கவனிக்கவில்லை என்று பிதற்றும்போதும் ஏன் இவர்கள் தங்களைத் தாமே சிறுமைப்படுத்துகின்றார்கள் என நான் எண்ணுவதுண்டு.

 

இந்நாவலிலும் ஓரிடத்தில் கலைக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று விவாதத்தில் பிகாஸோவும், வான்கோவும் முன்வைக்கப்படுகின்றனர். அதேபோல டால்ஸ்டாயும், தால்தவேஸ்கியும் உதாரணம் காட்டப்படுகின்றனர்.  ஏன் அண்மையில் மறைந்துபோன ப்யூகோவ்ஸ்கியும் அவ்வளவு வறுமையிலும், வீடற்றவராக இருந்தபோதும், படைப்புகளுக்கும் வறுமைக்கும் ஒரு தொடர்புமில்லையென சொல்லிச் சென்றிருக்கின்றார். கலைக்கும், படைப்பு மனதுக்கும் வறுமையும் வசதியும் ஒரு முன் நிபந்தனையாக ஒருபோதும் இருப்பதில்லை. இவ்வாறு சோழமண்டலத்தில் வாழும் கலைஞர்கள், இளைய ஓவியர்கள் என்று பலரின் படைப்புக்கள்/படைப்பை இரசிக்கும் அனுபவங்கள் மட்டுமின்றி மும்பாயில் கலைஞர்களின் இசைக்கச்சேரி கேட்ட சம்பவங்கள் எனப் பலவற்றை நம்மாலும் அதன் சிறுதுளிகளை உணரக்கூடியதாக மோகன் எழுதிச் செல்கின்றார். இந்த நிகழ்வுகள் நம் முன்னே நடந்துகொண்டிருக்கும், ஆனால் அதை நாம் அனுபவிக்காமல்/கவனிக்காமல் வாழ்வின் அவசரகதியால் ஓடிக்கொண்டிருப்போம். கொஞ்சம் நின்று நிதானித்து இதையும் அனுபவியுங்கள் என மென்மையாகச் சொல்லும் குரலை இந்நாவலில் நாம் கண்டைய முடியும்.

 

இவை ஒருபுறமென்றால், இந்த நாவல் மரணத்தையும் பல்வேறு சம்பவங்கள்/மனிதர்களினூடாக ஆழமாகச் சென்று பார்க்க வைக்கின்றது. கிருஷ்ணன் வாழ்வில் பற்றற்றவராகத் திரிந்தாலும், ஒரு கடும்நோய் அவருக்கு உயிர் வாழும் விருப்பை ஏற்படுத்துவதை நாம் உணர்கின்றோம். அதற்கு அவருக்கு 'இடைவெளி' எழுதிய சம்பத்திலிருந்து, ஜி. நாகராஜனோடு கடைசிக் கணத்தில் இருந்த தருணம் வரை பலதை அவருக்கு நினைவுபடுத்துகின்றது. ஜி.நாகராஜன் ஓரிடத்தில், 'சாவும் அதை மனிதன் எதிர்கொள்ள  தன்னைத் தயார்ப்படுத்தும்போதுதான் வரும்' என்று சொன்னதை நினைவுகூர்கின்றார். அதுபோல கிருஷ்ணன் தன் தந்தையும், ஜி.நாகராஜனும் எப்படிச் சாவை எதிர்கொண்டார்கள் என்பதையும் ஒப்பிட்டுக் கொள்கின்றார். நாகராஜன் தன் சாவை எதிர்கொள்ளத் தயாரானதுபோல இறுதியில் கிருஷ்ணனிடம் 'குளிருது, ரொம்பக் குளிருது, சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்த குளிர் அடங்கும்' என்று இறுதியாகச் சொல்லிவிட்டு மதுரையில் இறந்து போகின்றார்.

 

இந்த நாவல் நோய்மையும், காதலும் கொண்ட எளிய புதினம் போலத் தோற்றம் அளித்தாலும், அது விட்டுச் செல்லும் வெவ்வேறு புள்ளிகள் முக்கியமானவை. கிருஷ்ணன் இசைக்கச்சேரியைக் கேட்கும்போது இசைக் குறிப்புக்களில் இல்லை, அதன் இடைவெளிகளில் உள்ள நிசப்தத்தில்தான் சிறந்த இசை இருக்கின்றதெனச் சொல்வார். அவ்வாறுதான் இந்த நாவலும் சொல்லியதை விட அது இடைவெளியில் விட்டுச் செல்கின்ற அமைதியில்தான் இன்னும் சிறப்பாக இருக்கின்றது. உதாரணத்துக்கு நமக்கு கிருஷ்ணனுக்கும் அவரின் மனைவிக்கும் ஏதோ நடந்துவிட்டதெனத் தெரிகிறது. ஆனால் நாவலில் அதற்கான எந்த விளக்கங்களோ, விபரணைகளோ இல்லை. அந்த இடைவெளி நமக்கு நாம் விட்டுவந்த காதல்களின் நினைவுகளை அருட்டிப் பார்க்கச் செய்யலாம். கிருஷ்ணன் அதை விபரித்துவிட்டிருந்தால் நாம் நம்மை ஆழமாகச் சென்று பார்க்கும் புள்ளிகள் மறைந்துவிட்டிருக்கும். ஒரு புதிர் உடைபடாமல் இருக்கும்போதே இன்னும் பலப்பல புதிர்கள் மொட்டுக்கள் போல விரிந்து கொள்ளச் செய்கின்றன. அதுபோலவே கிருஷ்ணன் இறுதியில் கண்டுகொள்ளும் காதலும் அவ்வளவு அழகானது. ஆனால் அதீத உணர்ச்சிவசப்படல்கள் இல்லாது இயல்பாக வாய்க்கின்ற ஒன்று. அங்கேயும் ஆணினது தடுமாற்றங்கள்/பொறுப்பற்று நடத்தல்/குற்றவுணர்வு அடைதல் என்பன சொல்லப்பட்டிருக்கின்றது.

 

ஒரு நோய் நம்மை எளிதாக எங்கிருந்தும் வந்தடையக் கூடும். ஆனால் ஒரு காதலைக் கண்டடைதல் அவ்வளவு இலகுவில்லை. அவ்வாறான ஒரு சிலிர்ப்பான காதலை நாம் கண்டையும்போது வாழ்வின் அனைத்து அபத்தங்களுக்கும் அப்பால் நாம் வாழ்வதற்கான அர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. அப்படி வாய்த்த காதல் பின்னாளில் உடைந்துபோனாலும் அது ஒரு நல்ல படைப்பாக மாறலாம். சிலவேளை அதுவே நம்மை ஒரு கலைஞராக  நாம் உணராத் தருணத்தில் உருவாக்கி விடவும் கூடும்.

 

********************

 

(மாசி 18, 2024)

0 comments: