கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனவுகளின் தீபங்களில் எரிந்தணைதல்

Tuesday, March 05, 2024

 

னது புதிய நூலைத் திருத்தம் செய்யும் நண்பரொருவர், 'உனக்குத் தனித்து வாழ்ந்தவர்களை அல்லது நிறையக் காதலிகளை வைத்திருந்த‌ படைப்பாளிகளைத்தான் அதிகம் பிடிக்கின்றது' என்று ஓர் அவதானத்தை முன்வைத்தார். இப்படியான குறிப்பிட்ட‌ காரணங்களுக்காய்  இந்த எழுத்தாளர்களைத் தேடி வாசிக்கவோ, எழுதவோ செய்யவில்லையெனினும், அவ்வாறான படைப்பாளிகள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் என்னை அதிகம் வசீகரித்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை. எந்த ஒருவரும் சமூகம் சொல்லும் விதிகளுக்குள் அடங்கி வாழ்ந்தால் அவர்களால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. தன்போக்கில் ஒரு சிறு அடியையாவது சுதந்திரமாக‌ முன்னே வைக்கும் படைப்பாளியோ/செயற்பாட்டாளரோதான் நமது வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

சிலவேளைகளில் சமுகத்தோடு ஒத்தியங்கும் ஒரு வாழ்வை எப்போதும் நான் வாழ்வதால், இவ்வாறு சமூகத்திலிருந்து விலகிப்போன கலைஞர்கள் என்னையறியாமல் அவர்களை நோக்கி ஈர்க்கச் செய்திருக்கலாம். தனிமை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த நகுலனும், சிங்காரமும், பிரமிளும், நாம் நினைத்தே பார்க்க முடியாத ஓர் பாதையில் சென்ற‌ ஜி.நாகராஜனும், அழகு சுப்பிரமணியமும் (வர்ஜினியா வூல்ப் தொடங்கிய Bloomsbury Groupஇன் முக்கிய உறுப்பினர்) என்னோடு வந்தபடி இருக்கின்றார்கள். ஒரு கட்டுப்பாட்டான வாழ்க்கைக்குள் நின்று அறம்/விழுமியம் என்ற போதித்த மற்றவர்களைப் போல, இவர்கள் எவரும் தமது வாழ்க்கையை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது தம் வாழ்வை மேனிலைப்படுத்தியோ தம் எழுத்துக்களிலோ/தனிப்பட்டோ சொல்லியவர்களுமில்லை. 


நாம் இந்த வாழ்வில் கடினமான பொழுதுகளுக்குச் சென்று கொண்டிருக்கும் காலங்களில் அவ்வளவாகப் பொதுவில் பகிர்ந்து கொள்வதில்லை. அப்படிச் சொன்னால் அவ்வாறு  நம்மை அடையாளப்படுத்தி முத்திரை குத்திவிடுவார்கள் என்று நினைப்பதிலும் நியாயங்களுண்டு. இவ்வாறு தம் துயரங்களைச் சொல்ல வந்தவர்களை கடித்துக் குதறி இன்னும் வேதனைக்குள்ளாக்கிய உதாரணங்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றது..

அதேவேளை நாம் எல்லோருமே கடினமான காலங்களையும், சோர்வான பொழுதுகளையும் கடந்து வந்திருப்போம்/கடந்து கொண்டிருப்போம். அதில் எந்த விதிவிலக்குகளும் கிடையாது. கடந்த வந்த கடினமான காலங்களைப் பற்றிப் பேசுவதோ/எழுதுவதோ ஒரளவு இலகுவானது. அதைப் பின்னோக்கிப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாலும் அதேயளவு துயரம் நம்மை இப்போது தீண்டாது என்ற நிம்மதி இருக்கும். ஆனால் இதைவிடச் சவாலானது ஒருவர் கடந்து கொண்டிருக்கும் கஷ்டகாலத்தை  அதே சமாந்தரப் பொழுதில் வேதனையும் கண்ணீருமாகப் பகிர்வதாகும்.  அதற்கு நிறைய துணிச்சல் வேண்டியிருக்கும். அந்தக் கடின காலம் எப்படி முடியும் என்றே தெரியாத ஒரு அந்தகார இருளில் நின்று, தெரியவே தெரியாத‌ ஒளியைப் பற்றி நம்பிக்கையுடன் பேசுவது என்பது அவ்வளவு ஒன்றும் எளிதானதுமல்ல.

நான் அப்படியான‌ கடின காலங்களைக் கடந்து வந்த சில நினைவுகளை மீளத் திரும்பிப் பார்க்கும்போது, 'பரவாயில்லை, எப்படியோ நம்மை நாமே புனிதமாக்கி குற்றமற்றவனாகப் பிறருக்கு நிரூபிக்கும் அபத்தங்களுக்குள் மூழ்காது தப்பிவந்துவிட்டேன்' எனப் புன்னகைத்து கொள்வதுண்டு. எங்கே நாம் நியாயத்துடன் இருந்தோம், எப்போது நாம் அறம் பிறழ்ந்தோம் என்பது எவரையும்விட எம் மனச்சாட்சிகளுக்குத் தெரியும். அது எப்போதும் விழித்திருக்கும். அதனிடமிருந்து நாம் ஒருபோதும் தப்பிப் போக முடியாது.



நேகமாக காதல்கள் சார்ந்தே மன உளைச்சல்களுக்கு ஆளாகும் ஒருவன் கடந்த வருடம் முதன் முதலாக செய்த வேலையின் நிமித்தம் நிறைய‌ உளைச்சலுக்கு ஆளானான். பிறரின் உழைப்பில் தங்கிவிடாது இருப்பதற்கு ஒரு அறையும், பசித்தால் சாப்பிடுவதற்கு உணவும், விரும்பும்போது பயணிக்கத் தேவையான செலவுக்கும் மட்டும் உழைத்தால் போதுமென்று வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஒருவனுக்குச் சின்னச் சபலம் கடந்த ஆண்டு வந்தது. அவன் மீது அக்கறை கொண்ட மேலதிகாரி இப்படியே எப்போதும் இருக்காதே, மேலே Career இன் படிகளில் ஏறு என்று பணி உயர்வு கொடுத்து இன்னோர் இடத்துக்கு அனுப்பிவிட்டார். அவர் செய்தது நற்காரியமே. ஆனால் அவன் போய்ச் சேர்ந்த இடம் அவனுக்கு உரியதல்ல. ஒரு அசலான பெருநிறுவனம் எப்படி இயங்குமோ, அப்படி ஊழியர்களை உறிஞ்சிக் கொண்டிருந்த இடம்.

வட அமெரிக்காவின் வேலைத்தள கலாசாரமே வேறுவகையானது. அநேக நிறுவனங்களில் வருடத்திற்கு 2 வாரம் மட்டுமே விடுமுறை தருவார்கள். சில நிறுவனங்கள் மட்டும் கொஞ்சம் மனது வைத்து மூன்று வாரங்கள் விடுமுறை வழங்குவார்கள். ஒரு நூற்றாண்டு முன்பு, பல உயிர்களைக் காவு கொடுத்து சிகாகோவில் ‘எட்டு மணித்தியால வேலை மட்டுமே செய்வோம்’ என்று முழங்கி உழைப்பாளர்களின் உரிமை பெற்ற ‘மேதினம்’, தொழிலாளர்க்கான‌ ஒரு விடுமுறையாகக் கூட இங்கே இல்லை என்பது முரண்நகையானது.

இவ்வாறாக‌ வேலை கடினம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடுமுறையில் குழறுபடி என்பதில் தொடங்கிய குழப்பங்களினால்,  வேலைத்தளத்தில் இருந்து அவன் அந்நியமானான். கார்ல் மார்க்ஸ், மனிதன் எப்படி தன் உழைப்பினால் அந்நியமாகின்றான் என்பதை எப்போதோ எழுதியதை, நேரடியாக அனுபவிக்கும் தருணங்கள் இப்போது என்று இவன் நினைத்துக் கொண்டான்.  ஒருவன் உழைப்பிலிருந்து அந்நியமாகின்றபோது அவன் சுதந்திரமற்றவனாக உணர்கின்றான். அத்தோடு அவனுக்கு மன உளைச்சல்களும், பதற்றங்களுக்கும் வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில் இருத்தலுக்காக வேலையில் இருத்தலை விட, Mental Health அனைத்தையும் விட முக்கியமென‌ வந்தபோது அவன் வேலையிலிருந்து விலகினான்.

மேற்குலகில் வேலையிலிருந்து நீங்குதல் அல்லது நீக்கப்படல் என்பது உங்கள் காதலியை இழப்பதை விட மோசமான விளைவுகளைத் தரக்கூடியது. இணை இல்லாதபோது காதல்தான் இல்லாமற் போகின்றது, ஆனால் வேலை இல்லாதபோது உங்கள் இருப்பிற்கான எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடுகின்றன. எனவேதான் இங்கே பெரும்பாலானோர் தம் காதல் துணைகளை கட்டியணைப்பதைவிட வேலையை நாளும் பொழுதும் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு வேலைக்கு 'அந்நியமாகி' வேலையை உதறித்தள்ளிவிட்டு சென்ற ஒருவன், சில மாதங்கள் எங்கெங்கோ எல்லாம் அலைந்துவிட்டு யதார்த்தத்திற்குத் திரும்பியபோது அவனுக்காய் எந்த வேலையும் காத்திருக்கவில்லை. ஏதோ ஒரு வேலையை எப்படியோ பின்னர் பெற்றுக் கொண்டான். 9 மணித்தியாலங்கள் வேலைத்தளத்தில் நிற்கவேண்டும். மேலும் வீட்டிலிருந்து அங்கு போகவும் திரும்பவும் 2 மணித்தியாலங்கள். மொத்தமாக 11 மணித்தியாலங்கள் வேலைக்காய்த் தினம் தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்,  ஒருநாளின் 8 மணித்தியாலங்கள் வேலைக்கு, எட்டு மணித்தியாலங்கள் உறங்குவதற்கு, மிச்சமுள்ள எட்டு மணித்தியாலங்கள் அவரவர் செய்ய‌ விரும்புவதற்கு என்ற கோசம் எல்லாம் வெறும் கானல் கனவாயிற்று போலும்.

பதினொரு மணித்தியாலங்களை வேலைக்குத் தாரை வார்த்து கொடுத்துவிட்டு, குளிர்காலத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனிடம் வந்து, 'பாலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?' என ஒருவர் கேட்டால் இவ்வாழ்விலிருந்து அந்நியமாகிவிட்டுப் போன ஒருவன் என்னதான் செய்யமுடியும்? கேள்வி தவறில்லை. இவனைப் போன்றவர்களுக்கு உயிருக்காவது இங்கே உத்தரவாதம் இருக்கிறது. அங்கே அநியாயமாக கொல்லப்படுபவர்க்கு அது கூட இல்லை. எவ்வளவு பரிதாபமான நிலவரம் அது.

இதற்கிடையில் அவன் இப்போது வேலை புரியும் நிறுவனத்தில் இருந்து 'நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் இருக்கின்றோம்' என்று பாலஸ்தீன அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பொது அறிக்கை வருகின்றது.

அந்த அறிக்கைக்கெதிராக ஒரு சின்னக் குரலைக் கூட எதிர்த்துப் பதிவு செய்யாத அளவில்தான் அவனின் அறம் இருக்கின்றது. வேலையிடங்களில் ஒரு சிறு அநீதியைக் கூடச் சகிக்காது, எதிர்ப்புக்களை பதிவு செய்து வேலையிலிருந்து நீங்கிப் போன‌ கோபி கிருஷ்ணன்களைப் போல ஆவது அவ்வளவு எளிதில்லை..

ஆகவேதான் கோபி கிருஷ்ணன்களை, அழகு சுப்பிரமணியன்களை நாங்கள்  இப்போதும் நினைவு கூர்கின்றோம்.

***********

 

 ஓவியம் : Chamila Gamage

(Dec 19, 2023)

0 comments: