மு.பொன்னம்பலம் காலமானபோது நண்பரொருவர் சஞ்சிகைக்கு அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரச் சொல்லியிருந்தார். நான்
முகநூலில் எழுதிய மு.பொவுக்கான அஞ்சலிக் குறிப்பை நண்பர் வாசித்திருந்தார்.
இனி வருங்காலத்தில் மு.பொ தனித்து நிற்பாரா அல்லது அவரின் சகோதரரான மு.தளையசிங்கத்தின்
ஆளுமைக்குள் அடங்கிப் போய்விடுகின்றவராக ஆகிவிடுவாரா என்று எனது அஞ்சலிக் குறிப்பை
முடித்திருந்தேன்.
நண்பருக்கும் அந்தப் புள்ளி பிடித்திருந்ததால், அதை
விரித்து விமர்சனபூர்வமாக ஓர் ஆக்கம் மு.பொ பற்றி எழுதித் தரச் சொன்னார்.
எனக்கும் அப்படியொரு திசையில் மு.பொவை இன்னும் ஆழமாக பார்க்க
விருப்பமிருப்பினும், மு.பொவை மட்டுப்படுத்திய அளவே வாசித்தவன் என்பதால் என்னால்
நேரகாலத்துக்குள் எழுத முடியாது போயிற்று.
ஈழத்தில் எமது முன்னோடிகளை ஒவ்வொருவராக இழக்கும்போதுதான் அவர்களை நாம்
முழுமையாக வாசிக்கவோ அல்லது மீள்வாசிப்புச் செய்யவோ இல்லை என்பது உறைக்கின்றது.
தமிழகத்தில் இன்று இலக்கியம் சார்ந்த ஆளுமைகள் பலர் மறக்கப்படாமல் இருப்பதற்கு
அந்த படைப்பாளிகள் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிது புதிதாகக் கண்டடையப்படுகின்றனர்.
அவர்களில் பலரது முழுத்தொகுப்புகளை வாசிக்கும்போது, அரைவாசிக்கு
மேலானவை விலத்தப்படவேண்டியவை என்கின்றபோதும், அந்த
ஆளுமைகள் மறக்கப்படாமல் இருப்பதற்கு அவர்கள் எழுதிய சிறந்த ஆக்கங்கள் தொடர்ந்து
பேசப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும்.
ஆனால் துரதிஷ்டவசமாக ஈழத்தில் தொடர்ச்சியான வாசிப்புக்கள் நம்
படைப்பாளிகள் மீது நிகழ்த்தப்படவில்லை. உதாரணத்துக்கு மு.தளையசிங்கம் முழுமையாகத்
தொகுக்கப்பட்டிருக்கின்றார். அவரின் அந்தத் தொகுப்பே ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.
38 வயதில் காலமான ஒருவர், அதுவும் 73ம்
ஆண்டில் இறந்த ஒருவர், இப்போது போல கணனி போன்றவை இல்லாது கையால் இவ்வளவற்றையும்
எழுதியிருக்கின்றார் என்பது வியப்பானது. அதுவும் சும்மா பக்கங்களை
நிரப்புகின்றவையாக எழுதாது நம்மை சிந்திக்க/எதிர்க்கேள்வி கேட்க/விமர்சிக்க
வைக்கின்ற பல ஆக்கங்களை எழுதியிருக்கின்றார் என்பதுதான் சுவாரசியமானது.
ஆனால் மு.தளையசிங்கம் மறைந்து 50 ஆண்டுகள்
கழிந்த பின்னும், நாம் இன்னும் மு.தவையே முழுமையாக மீள்வாசிப்புச் செய்யவில்லை. ஆகக்
குறைந்தது இன்றைய தலைமுறைக்கு மு.தவின் ஆளுமையின் விகசிப்பை அவரை வாசிப்பதினூடாக
முன்னே நகர்த்திக் கொண்டு நாம் வரவும் இல்லை.
அவருக்கு மட்டுமில்லை அண்மையில் காலமான - ஒரு நிறைவான வாழ்வு வாழ்ந்த-
என் ஆசிரியரான எஸ்.பொ(ன்னுத்துரை)யைக் கூட நாம் முழுமையாக மீள்வாசிப்புச்
செய்யவில்லை. அதை விடத் துயரமானது எஸ்.பொவின் பதிப்பிக்கப்பட்ட பல படைப்புக்களை
இப்போது தேடினால், அவை எளிதாகப் பெறமுடியாதும் இருக்கின்றது.
எனக்கு எஸ்.பொ ஓர் மானசீக ஆசிரியர் என்பதால் அந்த நன்றியைத் தெரிவிக்க
ஒரு நூலாவது அவரைப் பற்றி எழுதவேண்டும் என விரும்பி அவரின்
படைப்புக்கள் பற்றி 10 இற்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியபோதும், முக்கியமான
சில அவரின் படைப்புக்கள் மீள வாசிக்கக் கிடைக்காததால் அதை ஒரு நூலாக்காது
ஒத்தி வைத்திருக்கின்றேன்.
மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, கே.டானியல், கா.சிவத்தம்பி போன்ற பலரை மீள் வாசிப்புச் செய்வதன் மூலம் அவர்களை
இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். அது மட்டுமில்லாது அவர்களின் காலத்து
அன்றைய வாழ்க்கை முறையை நாம் அறிவதன் மூலம், நமது
இன்றைய காலத்து வாசிப்பைச் சுவாரசியமாக ஆக்கவும் முடியும்.
வாசிப்பு என்பது தனிப்பட ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடியது என்றாலும்,
பிறருடனான கூட்டு வாசிப்பு/உரையாடல் என்பது உற்சாகந் தரக்கூடியது. அவ்வாறான உரையாடல்கள் இன்று அரிதாகி நாம் பால்வீதியில் தொலைந்துவிட்ட
தன்னிலைகளாக எங்கெங்கோ நமக்கான தனியச்சுகளில் சுழன்று கொண்டிருக்கின்றோம்
என்பதுதான் துயரமானது.
*********
(Dec, 2024)
0 comments:
Post a Comment