கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 60

Monday, December 23, 2024

இன்று நாம் அனுபவிக்கும் 'சுதந்திரம்' எளிதில் கிடைத்ததல்ல. அதற்கான தியாகங்களும், போராட்டங்களும், தோல்விகளும் இல்லாது பல விடயங்கள் நமக்குக் கிடைத்திருக்காது. பெண்கள் அவர்கள் பிறந்த பாலினத்துக்காகவே காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்தத் தடைகளைத் தகர்த்து வந்துகொண்டிருக்கும் பெண்களின் வரலாறு என்பது மிக நெடியது.

பாலின வேறுபாட்டை (Gender discrimination) அடிப்படையாகக் கொண்டு பெண்கள் கடந்த நூற்றாண்டில் பல விடயங்களை அடைவதற்கு பல்வேறு இடைஞ்சல்கள் இருந்தன. அதை ஒரு பெண், ஆண் ஒருவர் தன் தாயைப் பராமரிப்பதால் வரும் பாலின வேறுபாட்டை முன் வைத்து, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, எப்படி பெண்களுக்கான வேறு பல உரிமைகளை நீதியின் மூலம் பெற்றுக் கொள்கின்றார் என்பதை On the basis of sex திரைப்படம் அருமையாகக் காட்டுகின்றது.

இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டங்களை மாற்றியமைத்தல் என்பதெல்லாம் அன்று எளிதல்ல. பெண்கள் தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்று நேரடியாக வழக்குப்போட்டால் அவை எல்லாம் தோல்வியில் முடிவதாக அமைகின்றதான காலம் அது. அப்படி இவற்றுக்குப் போராடும்போது, எப்போதும் ஒரு support system தோழமை உணர்வுடன் அவசியமானது என்பதையும் இதில் மறைமுகமாகக் காட்டுகின்றனர்.

ஒடுக்குப்படுபவர்களுக்கு மட்டுமில்லை, ஒடுக்குகின்றவர்களும் தம்மை ஒடுக்குமுறையாளர்களாக அடையாளங்கண்டு தன்னிலைகளை உணர்வதன் மூலம் ஒரு சுதந்திரமான நிலையை அடைய முடியும். எனவேதான் ஒடுக்குமுறைக்கான போராட்டம் என்பது தனித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான சுதந்திரத்தை மட்டுமில்லை, ஒடுக்குமுறையாளர்க்கான விடுதலையையும் கொடுக்கின்றது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். ஏனெனில் எங்கு ஒடுக்குமுறை இருக்கின்றதோ, அங்கே எவரினதும் வாழ்வு நிம்மதியாக இருக்கப்போவதில்லை. அதிகாரம்/கண்காணிப்பு போன்றவற்றால் ஒடுக்குமுறையாளர்கள் கூட எரிமலைக்குள் அமர்ந்திருப்பதைப் போலவே அந்த ஒடுக்கும் அதிகாரத்தை உணரச்செய்வார்.

அளவுக்கதிகமான அதிகாரம் என்பது போதை தரக்கூடியதுதான்; ஆனால் அந்தப் போதை தெளிகின்ற அல்லது தெளியவைக்கின்ற நிலை வரும்போது ஒடுக்குமுறையாளர்கள் பரிதாபமானவர்களாக மாறியிருக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு முழுக்கச் சாட்சியங்கள் இருக்கின்றன. ஆகவேதான் நம் தமிழ்ச்சூழலில் கூட சாதியை முன்வைத்து பிறரை ஒடுக்குபவர்களோ, ஆணென்ற அதிகாரத்தை முன்வைத்து பெண்களை அடக்குபவர்களோ, ஒருகட்டத்தில் எதிர்த்தரப்பு அவர்களை அசட்டை செய்து ஒடுக்குதலில் இருந்து எழுச்சி கொள்ளும்போது, இந்த ஒடுக்குமுறையாளர்கள் பாவப்பட்ட பூச்சிகளைப் போல அவர்கள் முன் ஆகிவிடுகின்றனர்.

இவ்வாறு பாலின வேறுபாட்டைக் கொண்டு சட்டத்தினால் ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகப் போராடிய, அமெரிக்க வரலாற்றில் இருந்த Ruth Bader Ginsburg வின் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு on the basis of sex எடுக்கப்பட்டிருக்கின்றது. இவர் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கப்போகும்போது, 500 ஆண்களுக்கு, 9 பெண்கள் என்கின்ற விகிதத்தில் அங்கு இருக்கின்றது. ஒருமுறை ஹாவர்ட் டீன் இந்தப் பெண்களை இரவு விருந்துக்கு அழைத்துவிட்டு, 'ஏன் வீட்டில் கணவர்களுக்கு உதவாமல், சட்டம் படிக்க வந்தீர்கள்?' என்று அவர்களிடம் அவ்வளவு அதிகாரத்தோடு கேட்கின்றார். சட்டத்துறையில் மட்டுமில்லை பல துறைகளில் அன்று பெண்கள் நுழைவதற்கு இடமே இருக்கவில்லை. மேலும் ஒரு பெண் தன் தேவையின் நிமித்தம் இரண்டு வேலைகள் செய்தால் கூட அது குற்றமாக சட்டத்தில் இருந்த காலத்தில், ரூத்தின் எதிர்ப்பும்/போராட்டமும் அமெரிக்க பெண்கள் வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. இவ்வாறான பெண் உரிமை/சட்டப் போராட்டங்களின் காரணமாகத்தான் அமெரிக்க வரலாற்றிலே சூப்ரீம் கோர்ட்டில் இரண்டாவது பெண் நீதிபதியாக ரூத் பின்னர் நியமிக்கப்பட்டுமிருக்கின்றார்.

ஒரு போராட்டத்தை, எப்படி வன்முறையில்லாமலும், ஒடுக்கும் (ஆண்களின்) ஒருபகுதியினரை தமது உணர்வுத் தோழமையும் ஆக்கி, வெற்றிகரமாக நடத்திக் காட்டமுடியுமென்பதற்கு ரூத் மிகச் சிறந்த உதாரணம். இவ்வாறாக களத்தில் நிற்பவர்க்கு விடாமுயற்சியும், தளராத தன்மையும் மட்டுமில்லை, தோல்விகளில் துவளும்போது அரவணைத்துக்கொள்ளவும் ஒரு சிறிய குழாமாயினும் அது அவசியம் தேவை என்பதை இத்திரைப்படம் நமக்கு நினைவுபடுத்துகின்றது.

*******

(Dec, 2024)

 

0 comments: