1.
மு.பொ எனப்படும் மு.பொன்னம்பலம் காலமாகிவிட்டார். மு.பொவின் மிகக் குறைவான நூல்களை நான் வாசித்ததிருக்கின்றேன். 'பொறியில் அகப்பட்ட தேசம்', சூத்திரர் வருகை' போன்ற கவிதைத் தொகுப்புக்களையும், 'கடலும் கரையும்', 'முடிந்து போன தசையாடல் பற்றிய கதைகள்' போன்ற கதைத் தொகுப்புக்களை வாசித்தபோதும், அவரின் புனைவுகளோ/கவிதைகளோ என்னைப் பெரிதும் ஈர்த்ததில்லை. அவரை ஒரு சிறந்த விமர்சகர் என்பதாகவே என் வாசிப்பில் அடையாளப்படுத்த விரும்புகின்றேன். அது போலவே மு.பொ இறுதிவரை தொடர்ந்து திறனாய்வுகள் மூலம் வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் அவரின் விமர்சன முறைகள் சுருங்கியும் தேங்கியும் போனாலும், அவரது 'யதார்த்தமும் ஆத்மார்த்தமும்', 'திறனாய்வு சார்ந்த பார்வைகள்' போன்றவை நல்ல நூல்கள் என்பேன்.
மு.பொ, மு.தளையசிங்கத்தின் சகோதரர். ஒருவகையில் இளமையில் (37) இறந்துபோன மு.தளையசிங்கத்தை, மு.பொ தனது இறுதிக்காலம் வரை கொண்டு வந்து சேர்ந்தவர் எனக் கூடச் சொல்லலாம். மு.தவுக்கு மு.பொ போன்ற ஒருவர் இருந்தததால்தான் மு.பொவின் ஆக்கங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'மு.தளையசிங்கம் படைப்புக்கள்' என்று வெளிவந்தது. ஒருவகையில் மு.பொ,பேசிய பலது மு.தளையசிங்கம் அவரது காலத்தில் முன்வைத்தவைகள்தான். அந்த முழுத்தொகுப்பில் விடுபட்டு, மு.பொவினால் கண்டுபிடிக்கப்பட்ட மு.தவின் நாவலொன்று, பின்னர் 'கலிபுராணம்' என்ற பெயரில் வெளிவந்தது. அந்தளவுக்கு மு.தவின் ஆக்கங்களை மு.பொ தேடிச் சேகரித்தபடி இருந்திருக்கின்றார்.
அந்தவகையில் மு.தளையசிங்கம், மு.பொவினால் ஆசிர்வதிக்கப்படவர். ஏனென்றால் ஈழத்தில் பலரது எழுதப்பட்ட ஆக்கங்கள் முழுமையாகத் தொகுக்கப்படாது அந்தந்த எழுத்தாளர்களின் மரணத்தோடு அழிந்து போயிருக்கின்றன. ஈழத்தில் மட்டுமில்லாது தமிழ்ச் சூழலில் மிகவும் கவனம் பெற்ற க.சிவத்தம்பி கூட அவரது காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்கள் உள்ளிட்ட பலது வெளிவராதது பற்றி கவலைப்பட்டார் என்று என் நண்பரினூடாக அறிந்திருக்கின்றேன்.
இன்றைக்கு சிவத்தம்பிக்கு எண்ணற்ற அபிமானிகளும், மாணவர்களும் இருந்தும் சிவத்தம்பியின் ஆக்கங்கள் முழுமையாக தேர்ந்த முறையில் பதிக்கப்படாமல் இருப்பது அவலமானது. இத்தனைக்கும் சிவத்தம்பியின் மார்க்ஸிய ஆய்வுகளை விட எனக்கு அவர் சங்கப்பாடல்களிலும், திரை/நாடகம் சார்ந்து எழுதியவையே மிகவும் பிடித்தமாக இருந்திருக்கின்றன. அந்த ஆக்கங்கள் கூட சிறப்பான முறையில் இந்தக்காலத்துக்கேற்ப வெளியிடாமல் இருப்பது கவலையான விடயம்.
பிற்காலத்தைய சிவத்தம்பி மார்க்ஸிய ஆய்வுகளை கறாராக கைக்கொள்வதை கைவிட்டு புதிய தத்துவங்களை அரவணைத்தவர். அவை பற்றிய தனது பார்வைகளையும் எழுதியவர். மேலும் அவர் இலக்கிய வாசிப்புக்களில் கூட மரபான மார்க்ஸிய ஆய்வுமுறைமைகளை விட்டு வெளிவந்தமையால்தான் அன்றைய காலத்தில் புதிய எழுத்துக்களோடு வந்த ரஞ்சகுமார், உமா வரதராஜன், அ.இரவி போன்றவர்களையும் அரவணைத்தவர். இனியாவது சிவத்தம்பியின் எழுத்துக்கள் மு.தளையசிங்கத்தின் படைப்புக்கள் போல முழுமையாகவே/ஒவ்வொரு துறைசார்ந்தோ வெளியிடப்படவேண்டும். அவ்வாறு வெளிவரும் காலத்தில் சிவத்தம்பியைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்டிருக்கும் மரபான மார்க்ஸியர் என்பதிலிருந்து கிராம்ஸி கூறுகின்ற organic intellectuals வகைக்குள் அவர் சிலவேளைகளில் வந்தடையவும் கூடும்.
2.
2000களின் தொடக்கத்தில் ஜெயமோகன் மு.தளையசிங்கத்துக்கு ஒரு கருத்தரங்கை ஊட்டியில் நடத்தி, அது சர்ச்சைக்குள்ளாகி முடிந்தபோது, மு.தளையசிங்கத்தின் வாழ்வில் நடந்த விடயங்களை சரியான முறையில் மு.பொன்னம்பலமே விரிவாகப் பதிவு செய்தவர். அதுபோலவே 'காலம்' இதழில் ஜெமோ, சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து எழுதிய ('அகமெரியும் சந்தம்'), கட்டுரைக்கு நல்லதொரு எதிர்வினையையும் அடுத்த 'காலம்' இதழில் மு.பொ எழுதியிருந்தார். சுந்தர ராமசாமி மீது பிரியம் வைத்திருந்த மு.பொ சுந்தர ராமசாமியைப் பல இடங்களில் தனது திறனாய்வுப் பார்வைகளில் குறிப்பிட்டபடியே இருந்திருக்கின்றார். பிரமிளுடன் அநேகம் விமர்சங்களால் முரண்பட்டுக் கொண்டிருந்த மு.பொ, பிரமிள் காலமானபோது எழுதிய அஞ்சலிக்கட்டுரை ('மீண்டும் ஒரு சத்திமுத்துப் புலவர்) மிகுந்த கவனத்துக்குரியது.
மு.பொ இவற்றோடு மட்டும் நிற்காது மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியவர். இனிவரும் காலங்களிலாவது மு.பொவின் ஆக்கங்களின் முழுத் தொகுப்பும் வெளிவரவேண்டும்.
மு.தளையசிங்கம் காலமானபோது அவரைக் காலத்தில் முன்னகர்த்திச் செல்ல சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்ற மு.தவோடு நேரடிப் பரிட்சயமுடைய அவருடைய அபிமானிகள் இருந்தார்கள். இப்போது மு.பொன்னம்பலத்தின் மரணத்தோடு, அந்த உடுக்கூட்டத்தின் கடைசித் தாரகையும் உதிர்ந்துவிட்டது. இனி அவரவர் அளவில் தனித்து ஒளிரும் நட்சத்திரங்களாக அவர்கள் மாறுவார்களா இல்லையா என்பதைக் காலம் சொல்லும்.
மு.பொவிற்கு எனது அஞ்சலி!
******
( Nov 09, 2024)
0 comments:
Post a Comment