ஓவியம்: சின்மயா
எனக்கு அச்சில் வருவது எதுவாகினும் அவ்வளவு பிடிக்கும். அது
பத்திரிகையோ, சஞ்சிகையையோ அல்லது புத்தகமாக இருந்தால் கூட, அச்சில்
பார்க்கக் கிடைத்தால் அப்படியொரு சந்தோசம் வந்துவிடும். சிறுவயதுகளில் அச்சில் வரும்
பத்திரிகைகளைப் பல்வேறு வடிவங்களில் படித்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில்
பொருளாதாரத் தடை இருந்து பொருட்கள் வராத தொண்ணூறுகளில் அங்கு வெளிவந்த பத்திரிகை
மாட்டுத்தாள் எனப்படும் பேப்பரில் கூட வந்திருக்கின்றது. புரியாதவர்க்கு
விளங்கவேண்டும் என்றால் மடிக்கவே முடியாத பைல்களைப் போல அந்தப் பக்கங்கள்
இருக்கும். வழமையான பத்திரிகைப் பேப்பரில் அதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவே
முடியாது. அவ்வளவு கடினமான தாளாக அது இருக்கும்.
பின்னர் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அயல் கிராமமான அளவெட்டிக்குப் போய்ச் சேர்ந்ததபோது இன்னொரு அதிஷ்டம் வாய்த்தது. அந்த ஊரின் ஒரு பகுதியில் விற்கப்படும் பத்திரிகைகள் நாங்கள் நின்ற வீட்டிற்குத்தான் முதன்முதலில் வரும். பக்கத்தில் வசித்த ஒரு வயதான தாத்தா 'உதயன்', 'ஈழநாதம்' போன்ற பத்திரிகைகளை விற்பவராக இருந்தார்.
நாங்கள் இருந்த வீடு (வீட்டுச் சொந்தக்காரர்களுடன் வீட்டின் ஒரு பகுதியை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்) முக்கிய தெருவில் இருந்ததால், அங்கே பேப்பர் கட்டுக்களைப் போடுவார்கள். பிறகு அந்த ஐயா எடுத்து நாங்கள் இருந்த வீட்டு வாசலில் வைத்து விற்கத் தொடங்குவார். பத்திரிகைகள் விடிகாலையில் வந்துவிடும். நாங்கள் மெதுவாக அந்தக் கட்டிலிருந்து பேப்பர்களை உருவி பல்லு விளக்கிக் கொண்டே வாசிக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் நான் பாடசாலைக்குப் போகும்போது அன்றைய நாளின் செய்தியை முதலில் அறிந்த ஒருவனாக நண்பர்களிடையே இருப்பேன்.
மேலும் யுத்தகாலம் என்பதால் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமின்றி, உலகத்தை அறியும் ஒரேயொரு ஊடகமாக பத்திரிகைகளே அன்று எமக்கு இருந்தன. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் சைக்கிள் டைனமோக்களைச் சுற்றி இலங்கை அரசின் செய்திகள்/பிபிஸி/வெரித்தாஸ் போன்ற வானொலிச் செய்திகளைக் கேட்பார்கள்.
சாதாரண மின்கலங்கள் (Batteries) கூட யாழுக்கு வராத அளவுக்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதுமட்டுமின்றி அத்தியாவசியமான அரிசி/சீனி/சர்க்கரை/பருப்பு போன்றவை கூட ஏதேனும் கப்பல் வந்தால் மட்டுந்தான் கூட்டுறவுச்சங்கங்களில் மூலம் பகிர்ந்தளிக்கப்படும். போரின் காரணமாக யாழிலிருந்து இலங்கையின் மற்றப்பகுதிகளுக்குப் போகும் தரைவழிப்பாதை தடைசெய்யப்ப்பட்ட காலமது. இரகசியமாக சில பாதைகள் கடலினூடாக திறக்கப்பட்டாலும், அது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. பொதுமக்கள் பாவிக்கமுடியாது; ஆபத்தானதுங்கூட.
இப்போது இருந்து யோசிக்கும்போது இப்படியெல்லாம் நாம்
வாழ்ந்திருக்கின்றோமா என்று திகைப்பாக இருந்தாலும், அப்போது
கைகளுக்குக் கிடைத்த வளங்கள் அனைத்தையும் வைத்து உயிர் பிழைத்திருக்கின்றோம்
போலும். இதுவே இப்படியென்றால் பின்னர் ஈழப்போர் -02,
ஈழப்போர்-03 என்று நீண்டு இறுதியுத்தமான முள்ளிவாய்க்கால் வரை மூடுண்ட பகுதிகளில்
வாழ்ந்தவர்களின் துயர
அனுபவங்கள் என்னைப் போன்றவர்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாதது.
யாழில் நான் வாழ்ந்த இந்தக் காலத்தில்தான் நாம்
நினைத்துப் பார்க்காத பல்வேறு கண்டுபிடிப்புக்கள் அங்கே நிகழ்ந்திருக்கின்றன.
பெற்றோல் என்பவை தடைசெய்யப்பட்டவை என்றாலும், விவசாயத்துக்கும்/விளக்குகளுக்கும்
அனுப்பப்படும் மண்ணெண்ணெய்யை வைத்து யாழில் அனைத்து
வாகனங்கள் இயங்கத் தொடங்கின. மோட்டார்சைக்கிளையும்,
கார்களையும் உற்பத்தி செய்த நிறுவனங்களே கற்பனை செய்து
பார்த்திருக்காதவை இது. அதுபோலவே வீட்டில் இந்த மண்ணெய்யை சிக்கனப்படுத்த
வேண்டுமென்று 'ஜாம் போத்தல் விளக்குகள்' கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது ஜாம் வரும்
குட்டிப் போத்தலில் கம்பியைக் கொழுவி அதில் திரியைச் செருகி எரிப்பது. அங்கே
எண்ணெய் துளித்துளியாகத்தான் போகும். அந்த
சிக்கன விளக்குகளில் எங்களில் பெரும்பாலானோர் இரவுகளில் படித்தோம்.
இதைவிட இன்னொரு கண்டுபிடிப்பாக சவர்க்காரத் (soap) தட்டுப்பாட்டால்,
பனம்பழத்தில் எமது ஆடைகளைத் தோய்ப்பது. பனம்பழத்தை எடுத்து ஒரளவு சாறு
எடுத்து முடித்தபின் கொஞ்சம் அதன் முடிகளெல்லாம் வெள்ளையாக வரும்போது பனம்பனத்தை
எடுத்து எங்கள் வெள்ளையாடைகளில் வைத்து தேய்ப்போம். பனம்பழ வாசத்தோடு பாடசாலை
போகும் நாட்களில் நல்லவேளையாக எந்த மாடும் மோப்பம் பிடித்து எங்களோடு முட்டி
மோதவில்லை.
அளவெட்டியில் இப்படி விடிகாலையில் பத்திரிகைகளைச் சுடச்சுட
வாசிக்கும்போது, சிலவேளை மாலையில் விஷேட பதிப்புக்களும் வந்து சேரும். இயக்கம்
எங்கேனும் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தினால் மாலையில் நான்கு பக்கங்களிலாவது
ஒரு விசேட பதிப்பு வரும். எதாவது முகாங்களை அழித்து வென்றதையோ/ மினி முகாங்களைத்
தகர்த்ததையோ/இலங்கை இராணுவத்தின் முன்னேற்றதை தடுத்து நிறுத்தியதையோ/ கடலில்
கப்பல்களைத் தகர்த்ததைப் பற்றியோ அந்த செய்திகள் இருக்கும்.
யாழிலிருந்து வெளியேறி கொழும்பில் இருந்த காலங்களில் ஞாயிறுகளில்
கட்டாயம் வீரகேசரியும், Sunday Times உம் எடுத்து
வாசிப்போம். பதின்மத்தின் ஆரம்பத்தில் பெரிதாக என்னத்தை, சினிமாவைத்
தவிர வாசிக்கப் போகின்றோம். அப்போது 'காதல் இளவரசனாக' பிரசாந்த்
இருந்தார். அவர் வீரகேசரியின் சினிமாப் பக்கங்களில் எப்போதும் தான்
இருக்கவேண்டுமென பணம் கொடுத்தாரோ என்னவோ தெரியாது, அவரைப்
பற்றிய செய்திகளும், அவர் யாரேனும் இரசிகருக்கு எழுதும் கடிதங்களும் நிறைய வந்தபடி
இருக்கும். இதனாலேயே பிரசாந்தைப் பிடிக்காது போனது வேறு விடயம்.
ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி வாசிக்கும் அறிவே அன்று எனக்கு
இருந்தாலும் Sunday Times இல் 'தராக்கி' சிவராமும், இக்பால் அத்தாஸும் எழுதும் போர் பற்றிய கட்டுரைகளை எழுத்துக் கூட்டி வாசித்து விளங்கிக் கொள்வேன். போரை ஏதோ நேரில்
நின்று எழுதுவது மாதிரி அவ்வளவு சுவாரசியமாக இருவரும் எழுதுவார்கள். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் போர் குறித்த அனுபவங்களும், வாசிப்பும்
இருந்ததால், இவர்கள் எழுதுவதை - சிலவேளைகளில் கடின ஆங்கிலம் புரியாவிட்டாலும் -
இடைவெளி நிரப்பி என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
இந்தக் காலத்தில் இவற்றைவிட வேறு
இரண்டு அச்சுப் பத்திரிகைகள் என் வாசிப்பை மாற்றியமைத்தவை எனச் சொல்லலாம். அது
அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'தினமுரசு'ம், 'சரிநிகரும்'. தினமுரசு ஒரு சிறந்த வெகுசனப் பத்திரிகைக்கு மிகச் சிறந்த உதாரணம். 'சரிநிகர்'
அன்று வாசிக்கக் கடினமாக இருப்பினும் நமது சிறுபத்திரிகைகளை
நினைவுபடுத்துவது.
தினமுரசு நடிகைகளாலும், இன்னபிற வெகுசன நபர்களாலும் முன்பக்கத்தை
நிரப்பி உள்ளே அழைத்துச் செல்ல, சரிநிகர் 'பாவப்பட்டவர்கள்' போல மிக அலுப்பான முன்பக்க தலையங்களோடு கறுப்பு/வெள்ளையிலும், ஈழமோகத்தின்
சிலேடைக் கவிதைகளோடும் வெளிவந்தபடி இருந்தன. இவை இரண்டையும் வாசித்து எனது
பதின்மங்களை - புத்தர் கூறிய மத்தியபாதையாக - என் வாசிப்பை அமைத்துக் கொண்டேன்.
இந்த 'மத்தியபாதை' வாசிப்பு பின்னர் நான் எழுதவந்தபோது என்னை மறைமுகமாகவேனும்
பாதித்திருக்குமென நினைக்கின்றேன்.
சரிநிகரில் வந்த அரசியல் கட்டுரைகள் என்னைப் பெரிதும் ஈர்க்காதுவிட்டாலும் (இப்போதும் அரசியல் கட்டுரைகள் பக்கம் அவ்வளவாகப் போவதில்லை என்பதும் வியப்புத்தான்), அங்கிருந்துதான் அதுவரை வாசித்திராத சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை வாசித்து எழுத்தின் புதிய திசைகளை கண்டடைந்தேன். இல்லாவிட்டால் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்களோடு மட்டுமே தேங்கி நின்றிருப்பேன். ஆனால் அப்போது கூட இலக்கியம் வேறு 'கிரஷ்' வேறு என்று கற்றுத் தேர்ந்திருந்தேன். எனக்கு அப்போது மேத்தாவைப் பிடிக்குமென்றாலும், தோழியொருவரின் பிறந்தநாளுக்கு அவருக்குப் பிடிக்குமென்பதற்காக வைரமுத்துவின் தொகுப்பொன்றைக் தேடி வாங்கிப் பரிசளித்திருந்தேன்.
இப்படி அச்சுப் பத்திரிகைகள் பிடிக்குமென்பதால்தான் என்னவோ கடவுள் நான் கனடா வந்தபோது என்னைப் பேப்பர் போடும் வேலைக்கு அனுப்பிவிட்டிருக்கின்றார் போலும். கனடா வந்த தொடக்க காலத்தில் வீடுகளுக்குப் பேப்பர் போடும் வேலையைச் செய்திருக்கின்றேன். பத்திரிகைகளின் புது அச்சுமையின் வாசத்துக்கு மயங்காதவர் யாருமுண்டா என்ன? இந்தப் பத்திரிகைகளை சேகரிப்பதற்காய் ஒரு திறந்தவெளியில் காத்திருப்போம். அன்றைய நாளின் செய்திகளை வாசிக்கும் முதல்நபர் அந்தப் பத்திரிகையை விநியோகிப்பவர் அல்லவா? என்ன பனிக்காலத்தில், கைகள் விறைக்க மூச்சுத் திணற ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று போடுவதைப் போல நரகம் வேறொன்றும் இல்லை.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இங்கே 15Cm இற்கு மேலே பனிகொட்டி நிலம் முழுவதும் பனியாகக் கிடக்கின்றது. யாரோ ஒருவர் இன்னும் சில மணித்தியாலங்களில் மறுநாளுக்கான பத்திரிகையைப் போடுவதற்காக விடிகாலையில் பனி நிலத்தை உழுது போய்க்கொண்டிருப்பார் என்பதைப் பெருமூச்சுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வாறு அச்சுப்பத்திரிகைகளை பற்றி நினைத்துப் பார்க்க, இலங்கையில் அண்மையில் வெளிவரும் 'ஒருவன்' பத்திரிகையில் நான் எழுதியதை எடுத்துப் பதிப்பித்திருக்கின்றோம் என்று சொன்னதும் ஒரு காரணம். வாரமொன்றுக்கு 24 பக்கங்களில் வருகின்ற பத்திரிகை அதுவென நினைக்கின்றேன். ஒருவகையில் அன்றைய 'தினமுரசின்' சுருங்கிய வடிவம் எனச் சொல்லலாம். இயன்றவரை எல்லா வகை செய்திகளையும்/வகைமைகளையும் உள்ளடக்க முயல்கின்றனர்.
இதற்கு முன்னர் ஓரிரு பக்கங்களை இலக்கியத்துக்கென ஒதுக்கி உமா வரதராஜன் பொறுப்பாக இருந்த 'பிரதிபிம்பத்தில்' அவ்வப்போது நானெழுதிய காலங்கள் நினைவுக்கு வருகின்றது. எந்த வகை அச்சுப் பத்திரிகையாயினும் கிடைக்கக்கூடிய பக்கங்களில் இலக்கிய அறிமுகத்தைக் கொண்டுவருவது மகிழ்ச்சி தரக்கூடியது. எனக்கு மென்பிரதியாக அனுப்பப்பட்ட இரண்டு பிரதிகளில் ஏ.ஜே.கனகரட்ன, கே.கணேஷ் போன்ற எம் முன்னோடிகளை அறிமுகப்படுத்தி அதில் எழுதப்படுவதைப் பார்க்க இதமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறான வெகுசன பத்திரிகைளின் ஊடாக(வும்) இலக்கியத்திற்கு வந்தவன் நான். இந்த அச்சுப்பத்திரிகைளின் இலக்கியம் குறித்த சுருக்கமான அறிமுகங்களிலிருந்து, இந்தத் தலைமுறையிலிருந்தும் பலர் இலக்கியம் நோக்கி வருவார்களென்று மிகுந்த நம்பிக்கை கொள்கின்றேன்.
*****************
(Dec, 2024)