கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 84

Wednesday, April 02, 2025

 

ரு குடும்பத்தின் மூன்று மகன்கள் தாயின் இறுதிக்கணங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கூடுகின்றார்கள். அதில் ஒரு மகன் இங்கிலாந்தில், 20 வருடங்களுக்கு மேலாக ஊருக்குத் திரும்பாமல் இருக்கின்றார். அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை, குடும்பத்தின் விருப்புக்கு எதிராகத் திருமணம் செய்தவர். இப்போது அவர் தனது மனைவியோடும், பிள்ளைகளோடும் முதன்முதலில் திரும்பி வந்திருக்கின்றார்.

அம்மா நாராயிணி உயிரோடு இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று வைத்தியர்களால் கெடு கொடுக்கப்பட்டபின்னர் மகன்களுக்கு இடையிலும், மகன்களின் பிள்ளைகளுக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே 'நாராயிணியின் மூன்றுமக்கள்' (Narayaneente Moonnaanmakkal) என்னும் திரைப்படமாகும்.

பெரும்பாலான அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இடையில் உள்ள உறவைப் போலவே, சகோதரன்களுக்கும் இடையிலான உறவும் இருப்பதாக நான் நினைப்பதுண்டு. சகோதரர்களுக்கிடையில் இருக்கும் நேசம் என்பது எப்போதும் உள்ளார்ந்து இருப்பது. அதுபோலவே முரண்களும் பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசப்படாமலே கடக்கப்படுவதும் உண்டு. இதை இந்தத் திரைப்படம் அழகாகக் காட்டுகின்றது.

தாய் மீதான பாசம் இருப்பதினும், நாளாந்த வாழ்வின் நெருக்கடிகள் மகன்களை, தாய் விரைவில் இறந்துவிடவேண்டும் என்று நினைக்கச் செய்கின்றது. அதேவேளை 20 வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் ஒருவன், தனது குழந்தைகளுக்கு தான் உலாவித் திரிந்த இடங்களையும், இரசித்த பெண்களையும் சொல்லிப் போகும் காட்சிகள் நுட்பமாக இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன.


ந்த திரைப்படத்தில் ஒரு பிறழ் உறவும் முக்கிய சம்பவமாகின்றது. கலை என்பது அதன் எல்லைகளை சற்று விசாலித்து விசாரணை செய்வதாகவும் இருக்கவேண்டும். ஒரு பிறழ் உறவைக் கூட அதை ஆகவும் ஆபாசமாக்காமல் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்தால்
, அதை எவ்வாறு எதிர்கொள்வது என்று பார்வையாளர்களிடையே ஒரு கேள்வியாக இத்திரைப்படம் வைப்பது எனக்குப் பிடித்திருந்தது. அதுபோலவே நிலம் விற்கும் காட்சியில் நாராயணியின் மூத்தமகன், வேண்டுமென்றே நிலத்தின் விலையை அதிகளவில் விற்க முயல்வார். அதன் மூலம் இவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டதை, நிலம் என்பது எப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமானதென இதில் காட்டப்படுவதும், சாதி வெளிப்படையாக இங்கே பேசப்படுவதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

இவ்வளவு தீர்க்கமாக, வாழ்வை மிக நிதானமாக எதிர்கொள்ளும் ஆதிரா போன்ற பெண்கள் கூட vulnerable ஆக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான காட்சிகள், பெண்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள், கறுப்பு/வெள்ளையாக மட்டும் நோக்கவேண்டியதில்லை என்று சொல்பவை. அத்துடன் ஆதிரா தான் எது செய்கின்றேன் என்பதை நன்கு தெரிந்தவர் மட்டுமில்லை (முதுமாணி சமூகவியலில் படித்து விட்டும் வீட்டில் இருப்பது/மற்றவர்களைப் போல அரச உத்தியோகத்தில் போய் தன் சுயத்தைத் தொலைக்கவிரும்பாது பெற்றோரின் விருப்புக்கு எதிராகப் பேசுவது மட்டுமின்றி), காதல் தோல்வியில் இருக்கும் தன் கஸினான நிகிலுக்கு அவர் காதலைப் பற்றிக் கொடுக்கும் வியாக்கியானமும் அருமையானது. நாம் சந்திக்கும் பெரும்பாலான ஆளுமையுள்ள பெண்கள், ஏதோ ஒரு இடத்தில் உடைந்துபோனவர்களாக/ உடைந்துகொண்டிருப்பவர்களாக இருப்பதை அவதானித்திருந்தால், ஆதிராவின் பாத்திரத்தை எளிதாக விளங்கிக் கொள்வோம் அவரின் அந்த பிறழ் உறவைக்கூட ஒருவகையில் புரிந்து கொள்ள முடியும்.

கோழிக்கோட்டிலிருக்கும் நாராயிணியின் மூன்று மக்களில், திருமணமே செய்யாமல் தனித்து தாயைப் பார்க்கும் மகனான சேதுவே, பல விடயங்களில் முற்போக்கானவராக மற்ற மகன்களை விட இருக்கின்றார். அவர் தன் பெறாமக்களோடு நெருங்கிப் பேசுவராக, அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தேர்வுகளை மட்டுமின்றி, கஞ்சா அடிக்கும் அவர்களை அரவணைத்துப் பேசுபவராகவும் சேதுவே இருக்கின்றார்.

ஒருவகையில் உற்றுப்பார்த்தால் எல்லாக் குடும்பங்களும், உள்ளே பல்வேறு இடங்களில் உடைந்து போய்த்தான் இருக்கின்றன. ஆனால் குடும்பத்துக்குள் நெருக்கடி என்று வரும்போது அவர்களே ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்க ஓடிவருபவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களால்தான் குடும்பங்கள் அதன் இத்தனை நூற்றாண்டுகாலச் சுமைகளைத் தாண்டியும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்க முடிகின்றது.

கோமாவுக்குப் போய்விட்ட தாய் நாராயிணிக்கு தன் மூன்று மகன்களுக்குள் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று தெரியாது. ஆனால் அந்தத் தாயின் இறுதிக்காலத்தில் அவரின் மகன்கள் அனைவரும் நெடுங்காலத்தின் பின் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் வந்து, அவர்கள் தமது நிறை/குறைகளுடன் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் முயல்கின்றனர். இது ஒரு தாயாக நாராயணிக்கு சந்தோசத்தையும், மனநிறைவையும் தராதா என்ன?

***********

 

(Mar 25, 2025)

0 comments: