கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 86

Saturday, April 19, 2025

 

டந்த சில நாட்களாக என் பால்யகால பள்ளி நண்பர்களோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நண்பனால் இது சாத்தியமாயிருந்தது. இனியதான பாடசாலை நாட்கள் இல்லாது நம் வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போமா என்ன? மகிழ்வும், துயரமுமான நினைவுகள் நமக்கிடையில் நுரைத்துத் ததும்பிக் கொண்டிருந்தன.

அதுவும் நாம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடசாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது படித்தவர்கள். ஆகவே அந்தக் காலத்தில் நிகழ்ந்த இரகசியங்கள் பலவற்றை மாறி மாறி நாம் பகிர்ந்து கொண்டிருந்தோம். யாழில் என்னுடைய 15 வயது வரைதான் கழிந்திருந்தன. பாடசாலையில் படித்த வருடங்கள் 10 வருடங்கள் என்றால், எங்கள் பாடசாலை இந்தக் காலத்தில் நான்கைந்து இடங்களில் இடம்பெயர்ந்திருக்கின்றது. பண்டத்தரிப்பு, அளவெட்டி, இணுவில், மருதனார்மடம் என்று எமது பாடசாலை மாலை நேரமாக இயங்கியபோது, ஓர் உண்மையான தேவ விசுவாசியைப் போல அது சென்ற ஊர்களெல்லாம் நாங்களும் சென்று படித்துக் கொண்டிருந்தோம்.

நன்றாக படிப்பில் பிரகாசித்த நண்பர்கள் இந்தக் காலத்தில் யாழ் நகரின் முக்கிய பாடசாலைகளில் சென்று படிக்கச் சென்றிருந்தார்கள். இறுதியில் இப்படி வாடகைப் பாடசாலையில் மாலை நேரமாக இயங்கமுடியாதென்று, நாங்களாகவே சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்று பாடசாலையை மருதனார்மடத்தில் கட்ட ஆரம்பித்தோம். பாடசாலையை கட்ட ஆரம்பிக்கின்றோம் என்றவுடன் கற்பனையை அதிகம் விரிக்காதீர்கள். அப்போது சீமெந்தைக் (cement) காண்பதென்பதே தங்கத்தைக் காண்பதைப் போன்றது. எங்கள் பாடசாலை ஓலைக் கொட்டகையாகக் கட்டப்பட்டது. மேலே தென்னோலைகளாலும், அடியில் உறுதியான மரங்களாலும், எப்படி அசல் பாடசாலை இருந்ததோ அதே அமைப்பில் கட்டினோம்.

எங்கள் பாடசாலையில் ஒரு தனித்துவம் நடுவில் மைதானம் இருக்க அதைச் சுற்றித்தான் பாடசாலை வகுப்புகள் இருந்தன. அதேபோன்ற அமைப்பில் மருதனார்மடத்தில் வகுப்புகள் அமைக்கப்பட்டன. சிறிய மைதானம் போன்ற அமைப்புக்கூட எங்களுக்கு இங்கிருந்தது. பாடசாலை இல்லாத நேரங்களில் என்னைப் போன்றவர்கள் மட்டையையும், பந்தையும் கொண்டு விளையாடியபோது, எங்கள் அதிபர் இந்த ஓலைக்கொட்டகையே எப்போது காற்றில் விழுமென்றிருக்கும்போது கிரிக்கெட் தான் உங்களுக்கு வேண்டியிருக்கின்றது என்று அடித்துத் துரத்தியுமிருந்தார்.

அசல் பாடசாலையில் 1500 மேற்பட்டவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலையும் எங்களைப் போல அகதியாக அலைந்து மருதனார்மடத்தில் சொந்தக் குடிலில் தங்கியபோது எப்படியாவது 1000 பேராவது படித்திருப்போம். எங்கள் தரத்தில் கூட நான்கு டிவிஷன்கள் இருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படித்திருப்போமென நினைக்கின்றேன். 1000 பேர் படிக்கும் பாடசாலையில், அதுவும் ஆண்களும்/பெண்களும் படிக்கும் ஓரிடத்தில் கழிவறைப் பிரச்சினைகளை, தண்ணீர்ப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் யோசித்து பாருங்கள். ஆனால் இப்படி 1008 பிரச்சினை இருந்தபோதும் நாம் அப்போது சந்தோசமாகவே படித்தோம்,

கணிதவகுப்பில் கணக்குப் பிழையாகச் செய்த கோபத்தில் எமது கொப்பிகளைத் தூக்கியெறிந்தார்கள்,  தமிழில் நளவெண்பாப் பாடல்களையும் மனனமாக்கி வராததால், புறங்கையை நீட்டவைத்து பிரம்பால் அடித்தார்கள். சமூகக்கல்வியில் வரைபடங்களில் பிழையாக இடங்களைக் குறித்ததால், காதுகளை முறுக்கினார்கள்.  இப்படி இவையெல்லாம் நிகழ்ந்தபோதும், 'இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என பிரபஞ்சன் சொன்னதுபோல, நாங்கள் பெண்களின் பின் சுழன்றோம், அவர்களின் கடைக்கண் பார்வைக்காய்க் காத்திருந்தோம், நண்பர்களுக்காக நமது 'கனவு' காதலிகளைக் கைவிட்டோம் என பலது நிகழ்ந்து கொண்டிருந்தன.

இந்தக் காலத்தில்தான் இணுவிலில் பிள்ளையார் கோயிலுக்கருகில் இந்திய இராணுவம் பாவித்து விட்டுப்போன ஒரு தரிசு நிலத்தை துப்பரவாக்கி ஒரு மைதானத்தைத் தயார் செய்தோம். ஒரு பக்கம் குப்பைகள் புதைந்து கிடக்க, மறுகரையில் பக்கத்தில் இருந்த அரிசி ஆலையின் கழிவு உமி கொட்டப்பட்டிருக்க, நாளும் பொழுதுமாக அவற்றைச் சுத்தம் செய்து கிரிக்கெட்டும், உதைபந்தாட்டமும் ஆடும் மைதானமாக ஆக்கியிருந்தோம். அங்கேதான் நான் 15 வயது கிரிக்கெட் கப்டனாக இருந்து எங்கள் அணியை வழி நடத்தியிருந்தேன். அப்போது அங்கே நடந்த சோகக் கதைகளை இப்போது மறந்துவிடுவோம்.

என்றாலும், "மப்பன்றிக் கால மழை காணாத மண்ணிலே/ சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது/ ஏர் ஏறாது; காளை இழுக்காது/
அந் நிலத்தின்/பாறை பிளந்து பயன் விளைப்பான் என்னூரான்./ ஆழத்து நீருக்கு அகழ்வான் அவன். நாற்று/ வாழத்தன் ஆவி வழங்குவான். ஆதலால்/ பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன் நெல்லு"
என்று எங்கள் பாடசாலையில் பயின்ற மஹாகவி பாடியதைப் போல, நாங்கள் எத்தனை தடங்கல்/தோல்வி/துயர் சூழ்ந்தபோதும் எங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. அதனால்தான் சொந்தமாய் ஓரிடத்தில் பாடசாலையையும், எமக்கென்று பாடசாலைக்கு 3-4 கிலோமீற்றர்கள் தொலைவில் மைதானத்தையும் அமைத்திருந்தோம். அதில் உயிர்ப்பையும், சொந்தக்காலில் நிற்கின்றோம் என்கின்ற நிமிர்வையும் கண்டிருந்தோம்.

அசலான பாடசாலை இருந்தபோது, 15 வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்ட அணியில் முதலாவது போட்டியில் முதலாவது கோலையும் நானே அடித்திருந்தேன். அதன் பிறகு நான் எந்தக் கோலையும் அடிக்கவில்லை என்பது வேறு விடயம். பழைய கதைகளைக் கிளறினாலும், எங்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்களை மட்டும் நினைப்பதே ஆடவர்க்கு அழகு என்க.

இவ்வாறு நாங்களும் சென்.ஹென்றிஸூம் மாவட்ட அளவுக்குச் சென்றிருந்தபோது, யாழ் நகர் பாடசாலையிடம் 7-0 என்ற அளவில் படுதோல்வியடைந்திருந்தோம். அதில் எதிரணியின் ஒரு வீரன் மட்டும் 5 கோல்களை எமக்கெதிராக அடித்திருந்தான். இப்போதுதான் நண்பரொருவன் ஓர் உண்மையைச் சொன்னான். அந்தப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரியில்தான் நடந்திருந்தது. எதிரணியின் உள்வீட்டு இரகசியத்தை அறிவதற்காக இந்த நண்பனைத்தான் உளவாளியாக மற்றப்பக்கமாக அனுப்பியிருந்தோம்.

அவன் இப்படி அதிக கோலடித்த எதிரணி வீரன் எங்கள் வயதைவிடக் கூடிய வயதுடையவன்; ஆனால் எங்கள் வகுப்பில் படித்ததால் அதையவர்கள் கவனிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, எங்கள் கோச்சிடம் இதை ஒரு பெட்டிஷனாக சொல்லச் சொல்லியிருக்கின்றான். ஆனால் எவரும் இதை 'சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் எங்களை வென்ற எதிரணி அடுத்த ஆட்டத்தை இன்னொரு பாடசாலையோடு ஆடியபோது அவர்கள் கண்டுபிடித்து புகார் செய்ததால் நம்மை படுதோல்வியடைச் செய்த அணி disqualified செய்யப்பட்டுவிட்டது என்றான்.

நானும் இதையெல்லாம் கேட்டுவிட்டு, எங்கள் வகுப்பில் இருந்த பெண்களும் எங்களுக்கு வயது மூத்த அண்ணாக்களை இப்படி disqualify செய்திருந்தால், நாங்களும் எங்களுக்குப் பிடித்த பெண்களை காதலித்து இல்லறம் என்னும் நல்லறத்தை, வள்ளுவன் - வாசுகி போல வாழ்ந்திருப்போமே எனக் கவலையோடு சொன்னேன். எப்போதும் எங்களுக்கு அதிஷ்டம் வாசல் கதவைத் தட்டுகிறதே தவிர, வீட்டுக்குள் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறதென எனது மற்றொரு நண்பன் ஏதோ தனது பழைய ஞாபகத்தை வைத்துச் சொன்னான். அந்தந்த நேரத்து அநியாயங்கள்!

ப்படி எங்கள் பாடசாலை ஒவ்வொரு இடமாக அகதியாக இடம்பெயர்ந்தபோதும், மருதனார்மடத்தில் சொந்தமாக குடிலை அமைத்தபோதும் எங்களுக்கு ஒரேயொரு அதிபரே இருந்தார். பிள்ளைகளே இல்லாத அந்த அதிபரை - அப்போது அவரோடு முரண்பட எத்தனை காரணங்கள் இருந்தாலும்- இப்போது நினைத்தால் ஒரு தேவதூதன் போலத்தான் தோன்றுகின்றார். சென்ரல் காலேஜீல் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தபோது, ஒரு பழைய பந்து காணாமற் போனதற்கே கப்டனான என்னிடம் கணக்குக் கேட்ட விசர் மனுசன் அந்தாள். அவ்வப்போது கே.கே.எஸ் வீதியில் சைக்கிளில் போகும்போது அவர் வீட்டில் நின்று அப்பா பேசும்போது, அடக்கமான மாணவனாக இருந்து உள்ளுக்குள் 'இந்த மண் எங்களின் சொறி மண்' என்றும் எரிச்சலில் பாடியிருக்கின்றேன். அப்படிப் பாடியபோதும் நான் பாடசாலையை விட்டு நீங்கியபின், இவனொரு நன்மாணவன் என்று character certificate என்று எழுதித் தந்த நல்ல மனுசன்.

அவர் பின்னர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று ஏதோ ஒரு அமைப்பில் இயங்கியபோது அவரையும் இயக்கம் சுட்டுப் பலிவாங்கியது மிகுந்த துயரமானது. அப்போது இந்தக் கொலைக்கெதிரான குரல்கள் மெளனமாக்கப்பட்டபோதும், அந்த அதிபரின் பெயரில் ஒரு மண்டபம் எங்கள் பாடசாலையில் இப்போது மிளிர்ந்துகொண்டிருப்பது ஆறுதளிப்பது.

இதே காலகட்டத்தில் எங்கள் உதைபந்தாட்ட குழுவில் சகோதரர்கள் இருவர் விளையாடியிருந்தனர். எங்களை விட ஒருவர் ஒரு வயது கூடியவர்; மற்றவர் ஒரு வயது குறைந்தவர். அவர்கள் கொஞ்சம் படம் காட்டுவார்கள்; ஆனால் நல்ல விளையாட்டுத் திறமை அவர்களிடம் இருந்தது. அந்த சகோதர்களுக்கு பாடசாலையில் ஒரு பெயர் இருந்தது. அந்த குடும்பத்தில் 5 பேரும் எங்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் எனச் சொல்வார்கள். அப்போது அவர்களில் இளைய சகோதரனும் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொழுக்/மொழுக்கென்று குட்டிச்சிறுவனாக அவன் இருப்பான்.

அந்த பஞ்சபாண்ட சகோதர்களோடு உதைபந்து விளையாடிய நினைவுகளை மீட்டபோது நண்பரொருவன், 'உனக்கு அந்த குட்டிப் பையன் இப்போது என்ன செய்துகொண்டிருகின்றான் என்று தெரியுமா' என்று கேட்டான். நான் இல்லையேயென முழித்தேன். 'டேய் அவன்தான்டா இப்போது யாழ்ப்பாணத்து எம்.பியாக இருக்கின்ற அருச்சுனா!'

**********


ஓவியம்: ஜி.கோபிகிருஷ்ணன்

(Apr 06, 2025)

0 comments: