ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது
****
நான் எனது பதினாறாவது வயதில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எங்களுக்குக் கற்பித்த தமிழாசிரியரின் தந்தையார் காலமாகி இருந்தார். அவரே
எங்கள் வகுப்பாசிரியர் என்பதால் நாங்கள் முழுவகுப்பாக அவரின் வீட்டுக்குப்
போயிருந்தோம். ஆசிரியர், கதைகளை எழுதும் ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் தனது தந்தையைப் பற்றிய
ஒரு கதையை உருக்கமாக எழுதினார். அது அன்று கொழும்பில்
இருந்து வெளிவந்த 'சரிநிகர்' பத்திரிகையில் வெளியாகியது. எனக்கு இதன் பின்னணி தெரிந்திருந்தாலும்
இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தாலும், இதை அறியாத ஒருவருக்கு அது மிகச்சிறந்த ஒரு
புனைவாகத் தெரிந்திருக்கும்.
ஒரு தனிப்பட்ட அனுபவத்தை எப்படி தந்தையர்களை இழந்த எல்லோருக்கும்
பொதுவான அனுபவமாக மாற்றமுடியுமென்ற ஒரு திறப்பை அந்த எழுத்து என் பதினாறாவது
வயதில் தந்திருந்தது. அதுவரைக்கும் நான் வாசிக்கும் கதைகள் எல்லாம் தொலைவில்
நடப்பதாகவும், நடந்து முடிந்துபோனவையாகவும் இருந்ததாக் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு
இது புதிய அனுபவமாக இருந்தது.
எனது தமிழாசிரியராக இருந்தவர் இரவி. அவரின் தந்தையான அருணாச்சலம்
காலமானதை புனைவாக எழுதி அந்தத் துயரைக் கடந்திருந்தார். ஒரு தந்தைக்கும்
மகனுக்குமான உறவு இப்படி இருக்க முடியுமா என்பதை (அது யதார்த்ததில் எப்படி
இருந்தாலும்) எனக்கு ஒருவகை புல்லரிப்பை ஏற்படுத்தியிருந்தது. என் நினைவு சரியானால், அது அப்பா என்கின்ற பெயரில் வெளிவந்திருக்க
வேண்டும். இம்முறை இரவி
அருணாச்சலத்திற்குத்தான் புனைவிற்கான
கனடாவின் 'இயல் விருது' வழங்கப்படுகின்றது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்!
*
வ.அ.இராசரத்தினம், 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' என்கின்ற குறுநாவலை வீரகேசரியில் தொடராக எழுதுகின்றார். அதில் மனைவியின் மரணத்தோடு அவர்கள் இருவரினதும் வாழ்க்கையை நினைவுகூர்கிறார். லில்லி ஒரே ஊராக இருந்தாலும், இரு குடும்பங்களுள்ளும் இருந்த ஈழஅரசியல்(?) வித்தியாசங்களாலும் திருமணம் முடிக்கமுடியாதிருக்கின்றது. இறுதியில் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் இரகசியமாகப் பதிவு திருமணம் செய்யலாம் என்கின்ற முடிவை, தேவாலயப் பாதிரியார் நீங்கள் இருவரும் திருமணம் செய்யும் வயதுக்குரியவர் என்று திருமணம் செய்து வைக்கின்றார்.
லில்லியிடம் தனது சம்பளப் பணத்தைக் கொடுப்பதைத் தவிர குடும்பம்/பிள்ளைகளிடம் நடப்பது எதுவு தெரியாத ஓர் எழுத்தாளராக இராசரத்தினம் இருக்கின்றார். அவர்கள் தங்களுக்கென்று கட்டுகின்ற வீட்டைக் கூட லில்லியாலே கட்டப்படுகின்றது. அதேவேளை லில்லிக்கு தனது கணவர் எழுத்தாளர் என்கின்ற பெருமை இருக்கின்றது. அவர் எழுதுகின்றபோது, அவரின் பிள்ளைகளை அண்டவிடாது மட்டுமில்லை, அவருக்கு வேண்டிய தேநீரையும், சிகரெட்டுக்களையும் எடுத்துக்கொடுக்கின்ற கனிவான துணையாகவும் இருக்கின்றார்.
அந்தக்காலத்திலேயே லில்லி அதிபராக கற்பிக்கின்ற பாடசாலையிலே, இராசரத்தினம் படிப்பிகின்ற ஓர் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்(?). தனது மனைவியின் கீழ் வேலை செய்ய இந்தக்காலத்து ஆண்களே தயங்குகின்றபோது இராசரத்தினம் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கின்றார். அதுமட்டுமின்றி இவரது நூல்கள் வெளிவருவதற்கு எங்கேயோ எல்லாம் கடன்வாங்கி புத்தகங்களைப் பதிப்பிகின்ற வைக்கின்றவராகவும் லில்லி இருக்கின்றார். லில்லி மரணமடைகின்ற ஆண்டு 1975. ஆக இவையெல்லாம் 75 இற்கு முன்னராக நிகழ்ந்தவை.
லில்லிக்கு அழகிரிசாமி பிடித்த எழுத்தாளர். இவர்கள் வீடுகட்டி புதுமனைப் புகுதலின்போது உறவுக்காரர்கள் உங்களிடமிருக்கும் பெறுமதி வாய்ந்த பொருட்களை வீட்டுக்குள் கொண்டுவாருங்கள் என சொல்கின்றார்கள். இராசரத்தினமோ தனக்குப் பிடித்தமான சிலப்பதிகாரத்தையும், மு.தளையசிங்கத்தின் 'புதுயுகம் பிறக்கிறது' நூலையும் வீட்டுக்குள் முதன்முதலாகக் கொண்டுவருகின்றார். வந்திருந்த உறவுக்காரர் கோபிக்கின்றனர். லில்லியோ அவரின் பித்து அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகங்களோடு நீங்கள் எழுதும் பேனாவையும் சேர்த்து வைத்துக் கொண்டு வாருங்களென சிரித்தபடி சொல்கின்றார்கள். அந்தளவுக்கு லில்லி தனது கணவரைப் புரிந்துகொண்ட துணையெனலாம்.
மரணச் செய்தி அறிந்து அன்றைய பிரதியமைச்சராக இருந்த மஜித், எஸ்.பொ(ன்னுத்துரை)வைக் கூட்டிக்கொண்டு வருகின்றார். எப்போதும் கலகலப்பாகப் பேசும் எஸ்.பொ, இவரை அணைத்துக்கொண்டு 'மகாமாசன' அமைதி காக்கின்றார். எஸ்.பொவை கட்டியணத்தபடி 'நீ அறிந்த எழுத்தாளன் இறந்து போய்விட்டான்' என்று கதறுகிறார் வ.அ.இ! அந்தளவுக்கு லில்லி அவரின் எழுத்துலக வாழ்க்கையின் பின்னிப்பிணைந்தவராக இருந்திருக்கின்றார்.
இறுதியில் லில்லியை உறவுகளும், பாடசாலைச் சமூகமும் பெரியளவில் பிரியாவிடை கொடுக்கும்போது, 'வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளன் செத்துப்போனான் என்று சொன்னேன் அல்லவா? அவன் சாகவே மாட்டான், ஏனென்றால் ஒரு காவிய நாயகியாக இடம்பெற்ற லில்லியின் கதையை அவன் எழுதவேண்டும்' என்று அருகில் நின்ற எஸ்.பொவிடம் உணர்ச்சியோடு இராசரத்தினம் சொல்கிறார்.
ஒரு பகல் முழுக்க மகாமசான அமைதியைக் கடைபிடித்த எஸ்.பொ, அவரின் முதுகில் தட்டி, 'ஆ. அதுதான் சரி. நீ மட்டும் எழுத்தை மறந்தாயானால் அத் உன்னை எழுத்தாளனாக வளர்ந்துவிட்டவளுக்கு நீ செய்யும் துரோகமாகவே இருக்கும்' என்கிறார். அதுவே என் 'காவிய நாகிக்கு' என லில்லிக்கு காணிக்கை செய்த 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' குறுநாவலாக வெளிவருகின்றது.
இந்த குறுநாவல் மிகச்சிறியதுதான். ஒரு எழுத்தாளத் தம்பதியினரின் சிறுபகுதியைச் சொல்வதுதான். ஆனால் இப்போது 50 வருடங்களான பின்னும் இதை வாசித்து முடிக்கும்போது மெல்லிய துயரம் எனக்குள் படிந்துகொள்கின்றது. லில்லி இன்னும் கொஞ்சக் காலம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் என்றாலும், நாம் கடந்துபோகும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவராக இல்லாது, லில்லியை காலத்தில் மறந்துபோகாது ஒருவராக இராசரத்தினம் எழுத்தின் மூலம் ஆக்கியது முக்கியமானது . அநேகமாக எழுத்தாளர்களின் மனைவிமார்கள்தான் தமது கணவர்களின் மரணத்தை முன்வைத்து பிறகாலத்தில் எழுதியிருக்கின்றார்களே தவிர, ஓர் எழுத்தாளன் தன் மனைவி குறித்து இப்படியெழுதியது என்பது தமிழுலகில் அரிது. ஆகவே இந்த நூல் தனித்துவமானது என்று கூடச் சொல்லலாம்.
*
எஸ்.பொ(ன்னுத்துரை), சண்முகம் சிவலிங்கம் போல, பிற்காலத்தில் இராசரத்தினமும் அவரின் மகளையும் மருமகனையும் இந்த யுத்தத்தில் காவு கொடுத்திருக்கின்றார். தந்தையர்கள் உயிரோடு இருக்க, பிள்ளைகள் இளவயதில் மரணமாவது என்பது கொடுமையானது. இவர்கள் அனைவருமே அந்தத் துயரங்களோடே தொடர்ந்து தமது இறப்புக்கள் வரை விடாது எழுதியவர்கள் என்பதால் இவர்களின்பால் இன்னும் நெருக்கம் கூடுகின்றது.
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட வ.அ.இராசரத்தினம் 90இல் மூதூரை இலங்கை இராணுவப்படை கைப்பற்றியபோது உள்ளூரில் அகதியாகப் இடம்பெயர்ந்தவர். பிறகு அவரின் வீட்டுக்குத் திரும்பியபோது அவர் சேகரித்த நூல்கள், அவர் எழுதி பதிப்பிக்காத பல்லாண்டுகால பத்திரிகை ஆக்கங்கள் உள்ளிட்ட அவர் நடத்திய மூதூரில் நடத்திய பதிப்பகம் அனைத்துமே அரச படைகளால் தீக்கிரையாக்கபட்டிருந்ததன. ஆனால் எழுத்தின் மீதான ஓர்மம் குன்றாது அப்போது 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' என்ற நாவலை எழுதியவர்.
அதன் முன்னுரையில், 'நான் பிறந்த மண்ணில், தந்தையும் தாயும் மகிழ்ந்த குலாவிய அத்திருவிடத்தில், இனிப் போய் வாழவே முடியாதோ? என்ற கேள்விக்குறி கொக்கியாய் வளைந்து என் இதயத்தைக் கொழுவி வளைத்து வதைத்தது. அந்த வாதையில் ஒரு காலத்தில் மூதூர்ப்பட்டினத்திற் தமிழர்களும் வாழ்ந்தார்கள்; முஸ்லிம் மக்களோடு சகோதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான சரித்திரச் சான்றாக அமையவேண்டும் என்ற குறிக்கோளுடன் 1990ம் ஆண்டு மார்கழியில் திருகோணமலையில் வைத்து இந்நாவலை எழுதி முடித்தேன்' என்று சொல்கிறார். மேலும் 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதான சங்க இலக்கியங்கள் மூலமாகத்தானே நாம் அந்தக் காலத்து மக்கள் வாழ்க்கையை இன்று அறிகின்றோம். அதுபோலவே இந்த நாவலும், என் ஊரைப்பற்றி இனி வரும் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லும் ஒரு சரித்திர ஆவணமாக இருக்கும்' என்று எழுதிச் சொல்கிறார்.
நாம் லில்லி என்கின்ற அருமையான பெண்மணியைப் பற்றி 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' குறுநாவலிலும், 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' நாவல் மூலமாக மூதூர்ப் பட்டினத்தில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாழ்க்கையையும் விரிவாக அறிந்துகொள்கின்றோம். எழுத்து என்பது ஒருவகையில் மனிதர்களை அவர்களின் வாதைகளிலிருந்து ஆற்றும் வடிகாலாகவும், இன்னொருவகையில் அதிகாரத் தரப்புக்களால் வரலாற்றில் இருந்து எளிதில் அகற்றமுடியா ஆவணமாக மாறிவிடும் விந்தையையும் செய்து விடுகின்றது.
************
( Jun 27, 2025)
0 comments:
Post a Comment