இனி (ஒரு விதி செய்வோம்)
****
எஸ்.பொ(ன்னுத்துரை)வின் 'இனி' என்ற நூலை திருப்பவும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இது வெளியாகியபோதே சுடச்சுட வாசித்திருக்கின்றேன். எனக்கு மிகப் பிடித்த நூல், ஆனால் யாரோ என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் அது தொலைந்து போய்விட்டிருந்தது. நிறையக் காலம் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அதை வாசிக்கக் கிடைத்தது.
எஸ்.பொவைச் சந்திக்கமுன்னரே அவரின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பை வாசித்திருந்தேன். என் பதின்ம வயது வாசிப்பை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட இரண்டு நூல்களில் ஒன்று 'ஜே.ஜே.சில குறிப்புகள்; மற்றது 'ஆண்மை'. இரண்டையும் தற்செயலாக ஒரேநேரத்தில் வாங்கி வாசித்திருந்தேன்.
எஸ்.பொவைச் சந்தித்த காலத்தில்தான் 'காலச்சுவடு', தமிழினி-2000 என்கின்ற இலக்கியப் பெருநிகழ்வை நடத்தியிருந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு பெருநிகழ்வு தமிழக-ஈழத்து-புலம்பெயர் எழுத்தாளர்களைக் கொண்டு நடத்தபட்டதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. அது சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் அன்பின்பால கூட்டிணைந்த கூட்டம். ஒரு பெரு நிகழ்வு நடந்தால் அதற்கு எதிர்ப்பில்லாது, உலகில் எங்கேனும் இலக்கியம் உண்டா என்ன? 'நிறப்பிரிகை'யினர் அ.மார்க்ஸின் தலைமையில் 'தமிழினி என்கின்ற கும்பமேளா' என்று அறிக்கைவிட்டு இந்நிகழ்வைப் புறக்கணித்தனர். இதற்கிடையில் தனித்த ஒநாயாக (lone wolf), சு.ராவோடு ஒத்தோட முடியாமலும், நிறப்பிரிகையோடு இணையவும் முடியாமல் ஜெயமோகன் தனித்து ஓடிக்கொண்டிருந்தார்.
எஸ்.பொ அந்த வருடத்திலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்து இலக்கிய ஊழியத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.எஸ்.பொவால் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் சரியாக அடையாளங்கண்டு கொள்ள முடிந்திருக்கின்றது. எம்மிடையே பேசும்போது, இப்போது மலையாளப் பின்னணியில் வந்த ஜெயமோகன் நல்லாய் எழுதிக் கொண்டிருக்கின்றார் எனச் சொன்னார். அப்போது ஜெமோவின் 'விஷ்ணுபுரம்'வந்து நேர்/எதிர்மறையான எல்லா விமர்சனங்களையும் அது சந்தித்துக் கொண்டிருந்தது. அப்படி தன்னுடைய எழுத்துலக வாரிசாக தற்போது பிரான்ஸில் வசிக்கும் கலாமோகனைச் சொல்லியிருக்கின்றார். பின்னாட்களில் வேறு சிலரையும் எஸ்.பொ வாரிசுக்களாக அறிவித்திருந்தார். அது அவரின் மூப்பின் காரணமாக வந்த தனிமையில் அவரோடு நெருங்கியிருந்த சிலர் மீது வைத்த அன்பின் காரணம் என்பதால் அந்த 'வாரிசு'க்களை நாம் இப்போதைக்கு மறந்துவிடலாம்.
இந்த 'இனி: ஒரு விதி செய்வோம்' என்கின்ற நூலை ஒவ்வொரு தசாப்தங்களாக எஸ்.பொ பிரித்திருக்கின்றார். '70களில் எஸ்.பொ' என்கின்ற பகுதியில், அவரின் பிரசித்த பெற்ற அறிக்கை இருக்கின்றது. 70களில் இடதுசாரி சார்புள்ள சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு, வெளிநாட்டு உற்பத்திகள் பலவற்றுக்கு தடை விதித்தது. அதில் ஒன்று இந்தியாவிலிருந்து வெளிவந்த புத்தகங்கள்/சஞ்சிகைகளுக்கான தடை. இந்தத் தடையை எந்தந்த வகையினர் எவ்வாறு ஏற்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்று எஸ்.பொ ஓர் அறிக்கையை 100 பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கின்றார். இது அன்றைய காலத்தில் (1972), 'எஸ்.பொ அறிக்கை' என்ற பெயரில் 124 பக்கங்களில் தனி நூலாகவும் அச்சிடப்பட்டிருக்கின்றது.
இது மட்டுமில்லை, இந்த தொகுப்பில் இல்லாவிட்டலும், கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 'இஸ்லாமும் தமிழும்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். ஏதோ ஒரு சச்சரவின் நிமித்தம் மூன்றோ/நான்கோ நாளில் 100 பக்கங்களுக்கு மேலாக நீளும் எழுதி இஸ்லாமிய வாலிபர் இயக்கம் இதை வெளியிட்டிருக்கின்றது. என்ன சர்ச்சை என்பது ஒருபுறம் இருக்க, ஒருவகையில் அந்நூலை வாசிக்கும்போது எழுபதுகளில் இஸ்லாமிய (முஸ்லிம்) இலக்கியம் குறித்து நாம் அறியும் ஓர் ஆவணமாக இன்று அது திகழக் கூடும். இவ்வாறு எஸ்.பொ அவருக்குரிய சர்ச்சைகளுடன், ஓர் முழுமையான ஆளுமையாகத் திகழ்ந்திருக்கின்றார்.
அதனால்தான் இந்த நூலில், '80களில் எஸ்.பொ' என்ற பகுதியில் கலாமோகனோடு ஓர் நீண்ட நேர்காணலை நிகழ்த்துகின்றார். அது எஸ்.பொவுக்கு அன்றிருந்த இலக்கிய நிலைப்பாட்டை மட்டுமின்றி, அவருக்கு ஈழத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டம் குறித்து என்ன கருத்திருந்தது என்பதையும் பதிவு செய்கின்றது. ஆனால் 80களில் இருந்த எஸ்.பொ, 2000களில் இருக்கவில்லை. அவருக்குள் எப்போதும் தமிழ்த்துவக் கனல் எரிந்துகொண்டிருந்தபோதும், பிற்காலத்தில் 'விடுதலை வெறி'யர்களை நேசிக்கும் ஒருவராக அவர் மாறிவிட்டிருந்தார்.
அதை எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும், அருமையான குறுநாவலாக இருக்கும், போராளியாக இருந்து அகாலமான அவரின் மகனின் மித்தியைப் பற்றி நனவிடைதோய்ந்து எழுதிய கதை-15இல் நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோலவே இந்த நூலின் பின்னட்டையில் அவர் சேர்த்திருப்பது அவரது மகன் போராளியாக களத்தில் ஆயுதங்களோடு அவரின் தோழர்களோடு நிற்கின்ற புகைப்படத்திலும், எஸ்.பொ வந்து சேர்ந்த பாதையைக் காணலாம்.
அதன்பிறகு '90களில் எஸ்.பொ' பகுதியில் அவர் தமிழக/புலம்பெயர்ந்த சஞ்சிகைகளுக்குக் கொடுத்த நேர்காணல்கள். இந்த நூலில் நான் மீண்டும் வாசிக்கும்போது தவிர்த்த பகுதி அதுதான். என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்கு எவரின் நேர்காணல்களும் சுவாரசியம் தருவதில்லை. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய வேண்டுமெனில், ஒரு நேர்காணலே போதுமென நினைப்பவன். அதற்குப் பிறகு அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து 'சொன்னதையே திருப்பிக் கூறுகின்றனர்' என்று எளிதாக கண்டுகொண்டுவிடுவேன். மற்றும்படி ஒரு படைப்பாளி தன் (புனைவல்லாத) கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனில் எழுதி விட்டுப் போய்விடலாம் என்பதே என் கருத்து. ஆகவே எனக்கு எஸ்.பொவை அறிந்துகொள்ள கலாமோகன் அவரை 80களில் கண்ட ஒரு நேர்காணலே போதுமாக இருந்தது.
இந்நூலின் இறுதிப்பகுதியான 'புத்தாயிரம் நோக்கிய உரத்த சிந்தனைகள்' எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று. இதில் எஸ்.பொ, அன்று 'கணையாழி'யில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. 'தமிழ்த்துவம்: ஒரு புரிதல்', 'தேவை: உண்மையான உபாசகர்கள்', இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்' என்று பல சுவாரசியமான இன்றும் உரையாடல்கள் அமைக்கக்கூடிய கட்டுரைகள் இருக்கின்றன.
இந்த நூல் வெளிவந்து 25 வருடங்கள் ஆன பின்னும், இன்னும்
காலத்தில் உறைந்துபோய் விடாமலும், அதே வேளை ஒரு காலகட்டத்தை ஆவணப்படுத்துவதாக
இருக்கின்றதும் கவனிக்கத்தது.
எஸ்.பொ, பிரமிள், மு.தளையசிங்கம் போன்றவர்கள் புனைவில் புதிய பாய்ச்சல்களை
நிகழ்த்தினாலும், அதேயளவுக்கு நிகராக அல்புனைவிலும் தமது எழுத்தின் திசைகளை
விசாலித்தவர்கள். அதனால்தான் இவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள்/வசைபாடல்கள்/கீழிறக்குதல்கள்
இருந்தாலும், எந்த ஓர் இலக்கிய தரப்பாலும் எளிதில் நிராகரிக்க முடியாதவர்களாக
அவர்கள் விகாசித்து ஒளிர்ந்து
கொண்டிருக்கின்றார்கள்.
***********
( Jun 25, 2025)
0 comments:
Post a Comment