நண்பரொருவரின் இன்னமும் வெளியிடப்படாத புனைவொன்றை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருந்தேன். இதை வாசித்த நாட்களில் எனக்குள் பிரான்ஸிஸ் கிருபாவே நிரம்பியிருந்தார். பிரான்ஸிஸ்ஸின் 'கன்னி'யில் உளவியல் பிறழ்வுக்குள்ளான பாண்டியை வீட்டு மரத்தடியில் கட்டி நீண்டகாலம் வைத்திருப்பார்கள். ஒருவகையில் அது அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வென்றால், பிரான்ஸிஸ்ற்கு பின்னர் நிகழ்ந்தது ஒரு மீட்சிதான்.
எனது குழந்தை/வளரிளம் பருவம் போருக்குள் கழிந்திருக்கின்றது. ஆனாலும் அவ்வாறில்லாது இயல்பாக சூழ்நிலைக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைத்த பலரின் குழந்தைப் பருவங்கள் பல்வேறு மனவடுக்களுக்குள் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றேன். கிரிஷ் எழுதிய 'விடுபட்டவை'யில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் பதின்மத்தில் மனவடுக்குள் போவதைப் போல, நான் வாசித்த -இன்னமும் பிரசுரமாகாத நாவலிலும்- வரும் முக்கிய பாத்திரமான ஆண் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றான். அது எப்படி அவனது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இந்தப் புனைவின் பெரும்பகுதி.
பெண் குழந்தைகளைத்தான், குழந்தைகளாக வளர்ப்பது நம் சூழலில் கடினமென்று நினைத்தால், ஆண் குழந்தைகளும் இப்படி பாலியல் பலாத்காரங்களுக்குள்ளால்தான் வளர்கின்றார்கள் என்று நினைக்கும்போது மூச்சுமுட்டுகின்றது. அவ்வாறான உளவியல் சிக்கல்களுக்குள் இருப்பவர்களோ அல்லது அதைத்தாண்டி வருகின்றவர்களோ பொதுவெளியில் இவைகுறித்துப் பேசும்போது, நாம் அவர்களுக்கு ஏதேனும் 'அடையாளத்தை'யோ/காரணங்களையோ சுமத்திவிட்டு எளிதில் தப்பிவிடுகின்றோம்.
மேலும் பொதுச்சமூகத்தைக் கொஞ்சம் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, இவ்வாறு பெண்/ஆண் என்று வேறுபாடில்லாது பலரின் வெகுளித்தனமான உலகைச் சிதைக்கின்றவர்களாகவும் எழுத்தாளர்கள்/கலைஞர்கள் இருக்கும்போது இன்னும் அச்சமடைய வேண்டியிருக்கின்றது. கலை என்பதே சகவுயிர்கள் மீதெழும் அக்கறையின் பாற்பட்டதெனில், கலைஞர்கள் எவ்வாறு இருக்க முடிகின்றதென்பது அடிநாதமாக ஒலிக்கக்கூடிய அறம் சார்ந்த ஒரு கேள்வி.
இவ்வாறான படைப்பாளிகள் மீது தீங்கிரைக்கானவர்கள் (Victims) குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது நாம் அவர்களின் குரல்களை தொடக்கத்திலேயே கலையின் 'பரிசுத்த ஆவியின்' பெயரால் அடக்கிவிடவும் எத்தனிக்கின்றோம். அப்படியாயின் இந்த தீங்கிரைக்கானவர்கள் எப்போதுதான் அவர்களுக்கான மீட்சியைப் பெறுவது? அவர்கள் தாம் இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று மனந்திறந்து பேசும்போதல்லவா, குறைந்தபட்சம் அவர்களின் நெஞ்சை அழுத்தும் மனவடுக்களின் பாரங்களிலிருந்து விடுதலையடைய முடியும்?
ஆனால் அந்த சுதந்திரமான வெளிகளைக் கூட அவர்களுக்குக் கொடுக்காது, நமக்கான சார்புகளில் நின்று நாம் தீர்ப்புக்களை வழங்கத் தயங்காத 'மகாத்மா'க்களாக விடுகின்றோம். இவ்வாறு இருப்பதால் எவருக்கும் எந்தப் பயனும் கிடைப்பதில்லை என்கின்றபோதும், நமக்கு இப்படியான ஓர் அடையாளம் வேண்டியிருக்கின்றது. ஆனால் அது தீங்கிரைக்கானவர்களை எந்தளவு இன்னும் மோசமாகப் பாதிக்கும் என்பதை அறியாமலே நாமும் மேலும் தீங்கிழைப்பவர்கள் ஆகிவிடுகின்றோம்.
நண்பரின் இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில், அவ்வப்போது இடைவெளி எடுத்தே வாசிக்க வேண்டியிருந்தது. அந்தளவுக்கு கனமான, நான் கற்பனை செய்யாத உலகம் அது. இப்படி உளவடுக்களால் நிரம்பிய ஒரு புனைவை வாசிக்கின்றேன் என்றபோது இன்னொரு நண்பர், 'மற்றவர்களின் அனுபவங்களுக்குள் நுழையாமல் இருப்பதென்பது எம்மைப் போன்றவர்களுக்கு மிகுந்த சவால் மிக்கது. நீங்கள் இவ்வாறான கதைகளை வாசிக்கும்போது அதிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளும் வெளிகளை உருவாக்கி வைத்திருத்தல் அவசியம்' என்றார். உண்மையில் அது கடினமானது என்றாலும், அது அத்தியாவசியமானது என்றே நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இந்தக் கதைகள் மிகுந்த மனப்பாரத்தைத் தந்து எங்களை வேறொரு சுழலுக்குள் அழைத்துச் சென்றுவிடவும் கூடும்.
நீங்கள் அருகில் இருக்கின்றவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அதை மீறி கண்களுக்குத் தெரியாத இன்னொரு ஒரு உருவம் உங்களோடு விடாது பேசிக் கொண்டிருக்கின்றது. அந்த மாயக்குரல் இப்படிச் செய் அப்படிச் செய் என்று விபரீதமான விடயங்களைச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடும்போது உங்களால் என்ன செய்ய முடியும்? மேலும் எதிரே இருப்பவர் பேசுவதைத் தாண்டி, இந்தக் குரல் தீர்க்கமாக ஒலித்தால் எந்தக் குரலில் உங்கள் கவனம் குவியும்?
இப்படித்தான் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, அவ்வப்போது அது தற்சாவின் விளிம்புகளும் அழைத்துச் செல்கின்றதுமாக, சிலருக்கு வாழ்க்கை அமைந்துவிடுகின்றது என்பதுதான் எவ்வளவு துயரமானது. மேலும் எல்லோருக்கும் மீட்சியோ/மீளுயிர்ப்போ அவ்வளவு எளிதில் வாய்த்து விடுவதுமில்லை.
***********
ஓவியம்: வின்சென்ட் வான்கோ
(July 03, 2025)
0 comments:
Post a Comment