வின்சென்ட் வான்கோவின் தன்னுருவப் படமொன்று. அதில்
அவர் புல்லுத் தொப்பியோடு, தங்க நிறத் (blond) தாடியுமாய் ஒரு கடைக்கண்
பார்வையோடு இருப்பார். அந்த ஓவியத்தின் பார்வை திடீரென்று உயிர்பெற்று
கண்கள் மூடித்திறக்கின்றன. அவரின் பார்வை போகும் திசையில் முகத்தைத்
திருப்பி, எழுந்து நிற்பார்.
பிறகு அறுவடைக்குத்
தயாராக இருக்கும் தங்க நிறத்திலான கோதுமை வயல்களினூடே நடந்து செல்வார்.
அந்த நிறங்களின் ஒற்றுமையோடு அவரின் சாம்பல் நிறத்திலான மேலங்கியும்
அற்புதமாகப் பொருந்திக்கொள்ளும். காற்றில் கோதுமைப் பயிர்கள்
அங்குமிங்குமாக அலைபோல் அசைய, வான்கோ நடந்து செல்லும் காட்சியை அவர் இறந்து
130 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவன் கற்பனை செய்து, அதற்கு உயிர் கொடுத்து
நினைவு கொள்கிறான்.
அதை வான்கோவால் அறிய முடியும் என்றால், அவர் தனக்குத் தானே, 'இதுவே எனக்குப் போதுமானது' என்று சொல்லிக்கொள்வாரா...?
இந்தக்
கதை, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இங்கிலாந்தில் சட்டத்துறை பயின்ற
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சாமுவேலால் தன்னைப்பற்றிச்
சொல்லப்படுகிறது. சாமுவேலுக்குச் சட்டத்துறையில் பணியாற்றுவதைவிட, சிறுகதை
எழுதுவதும் பெண்களை ரசிப்பதும் இலக்கிய நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதுமே
மகிழ்ச்சியைத் தருகின்றன.
அதை இப்போது உயிரோடு
இல்லாத சாமுவேல் சொல்வதாக இளங்கோ எழுதுகிறார். இளங்கோ, எழுத்தாளர்களையும்
அவர்களின் கதைகளையும் தொடர்ச்சியாக வாசித்துக் கட்டுரைகளாக எழுதுபவர்
என்பது நாம் அறிந்ததே.
அண்மையில் 'படுபட்சி'
ஒரு புனைவா, அபுனைவா அல்லது தன் வரலாறா? இதில் எழுத்துக்கென்று இருக்கும்
'அறத்தை' எதை வைத்துக் கணிப்பது என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.
இளங்கோவின்
'புளியடி சாமுவேல்' ஒன்றும் ஒரு புதிய வகை உத்தியல்ல. ஆனால், இக்கதையில்
வரும் பாத்திரங்களையும் அவர்களின் உளவியலையும் நன்றாக அறிந்தவர்களால்
மட்டுமே அதை உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும். அது இளங்கோவிடம்
மட்டுமே இருக்கிறது. அவ்வளவுக்கு அவர் அவர்களை வாசிக்கிறார்.
இருந்தும்
ஒரு எழுத்தாளனின் புதினமோ அல்லது சிறுகதையோ அவனுக்குள் எந்தச்
சந்தர்ப்பத்தில் கருக்கொண்டிருக்கும் என்பது அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே
தெரிந்த விடயம். அதைக்கற்பனை செய்வதும், அந்தக் கதையையும் எழுத்தாளனையும்
சம்பந்தப்படுத்தி ஒரு புதிய கதையை உருவாக்குவதும் மிகவும் சுவாரசியமான
விடயம். இந்தச் சுவாரசியத்தை எழுதுபவன், தன்னை முழுமையாகத் தவிர்த்துவிட்டு
எழுதிவிட முடியாது. ஆக, புளியடி சாமுவேலுக்குள் இளங்கோவும் இருக்கிறார்.
கற்பனைகளை நம்ப வைப்பதற்காக
உண்மைச் சம்பவங்களைச் சேர்த்து எழுதுவதும், உண்மைச் சம்பவங்களை வலுவாக்கக்
கற்பனைகளைச் சேர்ப்பதும் எழுத்துலகில் புதியதல்ல. இதில் இரண்டாவது உத்தியை
இளங்கோ தனது வாசிப்பு அனுபவங்களால் சிறப்பாக்க முயற்சித்துள்ளார்.
கட்டுரைகள்
போலல்லாமல், இந்த கதையாக சொல்லும் உத்தியால் நாம் அறியாத
எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் மறக்க முடியாத அனுபவங்களாக மாற்ற
முடியுமென்று நான் நம்புகிறேன்.
'நான்
இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருவன் என்னை ஞாபகம்
வைத்து ஒரு கதையை நனவிடை உத்தி முறையில் எழுதிக் கொண்டிருப்பானா?' என்று
கேட்பார்.
'எழுத்துதானே என்னை இன்னும்
உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்து போகாமல் வைத்திருக்கின்றது. அதில் நான்
தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால்,
முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல், அவன்
பிறந்த நூற்றாண்டிற்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே!'
இதற்குள்
இருக்கும் சாமுவேல் இளங்கோவால் கட்டமைக்கப்பட்டவர். கதையில் பாத்திரமாக
வரும் இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது எது?' எனக்
கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர ரசிக்கும் அவரின் அந்த
அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூடத் தயங்காமல்
சொல்வான். அதற்கு, 'என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூடப் போதுமானதுதான்'
என்பார் சாமுவேல்.
உண்மையில் அந்தச் சாமுவேல்
இவ்வளவு இலகுவாகத் திருப்திப்படக்கூடியவரா? அல்லது 'நான் அவ்வளவு
மலிவானவனா…?' என்று அதிருப்தி அடையக்கூடியவரா என்பது யாருக்குமே தெரியாது.
ஒரு மனிதனின் மனநிலை பல காரணிகளால் நீரைப் போல் உருக்கொள்கிறது.
ஆனால்,
1515-ஆம் ஆண்டில் வரையப்பட்ட மோனாலிசாவின் அந்த மௌனப் பார்வையும், அவளது
உதடுகளுக்குள் மறைந்திருக்கும் ஒரு மெல்லிய புன்னகையும் இப்போது AI மூலம்
மெதுவாக உயிர்பெறச் செய்து, தன் கண்களைச் சிமிட்டியபடி தனது முகத்தை நம்
பக்கம் திருப்பிப் புன்னகைக்கிறாள்.
அந்தப் பொறுப்பு 'புளியடி சாமூவேலில் புலப்படுகிறது.
***



0 comments:
Post a Comment