கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains)

Thursday, April 09, 2026

 

ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains) என்கின்ற நூல் அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இது பாமுக் 2009இல் இருந்து 2022 வரை சிறுசிறு குறிப்புகளாக எழுதியவற்றின் தொகுப்பு. குறிப்புகளாக மட்டும் இல்லாது இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் பாமுக் ஓவியங்களை வரைந்து எழுதியிருப்பதுதான் இதன் சிறப்பு எனலாம்.


பாமுக் இப்படி ஒரு தொகுப்பை அவர் நோபல் பரிசை வென்ற அடுத்த ஆண்டு கொண்டு வந்திருந்தார். அது 'Other Colors'. அதில் பெரிய கட்டுரைகளிலிருந்து சிறு பதிவுகள் வரை சேர்க்கப்பட்டிருக்கும். இதுவரை காலமும் பாமுக் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரேயொரு சிறுகதையும் அதன் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும். 90களிலும், அதற்கு முன்னரும் இருந்த பாமுக்கை நாம் காண்கின்றோம்.
 

பாமுக் அவரது தகப்பன் வேலை செய்யும் ஜெனீவாவுக்கு செல்வது அவரது முதல் பயணம். அது அவரது 7 வயதில் நிகழ்கின்றது. பின்னர் ஆர்க்கிட்டெட் படிப்பை பாதியில் முறித்துவிட்டு ஓர் எழுத்தாளராகும் கனவுடன் வீட்டு அறையில் முடங்கிக்கிடந்து எழுதுகிறார். நள்ளிரவுகளில் விழித்திருந்து எழுதும் அவரை தாயார், 'நீ இவ்வளவு நிறைய சிகரெட்டுக்களைப் பிடிக்காது ஓர் எழுத்தாளராக ஆகப் பார்' என்று சொல்கின்றார். இப்படி எழுத்தாளாராகும் கனவில் இருக்கும் மகன்களை அணைத்துக்கொள்ளும் தாய்களை போர்ஹேஸிடம், நகுலனிடமும் நாம் பார்க்க முடியும்.
 
பாமுக், பிறகு அடுத்த வெளிநாட்டுப் பயணத்தை அவர் எழுத்தாளாராகிவிட்ட அவரது இருபதுகளின் இறுதியில் செய்கின்றார். அது நிறையத் துருக்கியர்கள் இருக்கும் ஜேர்மனிக்கு ஆகும். அங்கே அவர் நிறைய இடங்களில் புத்தக வாசிப்புக்களையும் கலந்துரையாடல்களையும் செய்கின்றார். இந்தக் கூட்டங்களில் துருக்கியர்கள், அரை ஜேர்மனியர் +  அரை துருக்கியர்கள், தன்னிடம் இலக்கியம் குறித்து கேள்விகளைக் கேட்பார்கள் என்று நினைத்தால் அவர்கள் துருக்கியைப் பற்றித்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிடிருந்தார்கள் என்று சொல்லி அவர் புலம்பெயர்ந்த நாட்டில் துருக்கியர்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து எழுதுவது மிகச் சுவாரசியமானது. பாமுக் ஜேர்மனியில் எதிர்கொண்டதற்கும் எம்மைப் போன்ற ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வதற்கும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லையென்பதை நாம் இதை வாசிக்கும்போது அறியமுடியும்.

அதுபோலவே தனது எழுத்தாளர் வாழ்க்கை முழுதும் யாருக்காக எழுதுகின்றேன் என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது என்று பாமுக் கூறுகின்றார்.  இப்போது உலகளவில் தெரியும் எழுத்தாளராகிவிட்டதால் இன்னும் புத்திசாலித்தனமாக, 'நீங்கள் ஒரு நாவலை எழுதும்போது துருக்கியரை நினைத்து எழுதுகிறீர்களா அல்லது உலகளாவிய வாசகர்களை நினைத்து எழுதுகின்றீர்களா என்று கேட்கின்றார்கள் என பாமுக் நகைச்சுவையுடன் கூறுகின்றார். இந்தக் கேள்வியை பலவிதங்களில் ஆராயும் பாமுக், இறுதியில் ஒரு நாவலாசிரியர் எப்போதும் தன்னை வாசிக்கும்  ஒரு ideal வாசகரை நினைவில் வைத்தே எழுதுகின்றார் என்று ஓர் அவதானத்தை முன்வைக்கின்றார்.
*
பாமுக்கின் இந்த ஓவியங்கள் இருக்கும் குறிப்பு நூல் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்'  மிகச் சிறிய குறிப்புகளாலானது. இதில் கோவா/மும்பையில் அவரின் அப்போதைய காதலியாக இருந்த கிராண் தேசாயுடன் கழித்த குறிப்புகள் சுவாரசியமானவை. எனினும் பாமுக் தனியே தன் அறையில் விடப்படுவதையே அவரது இருபதுகளில் இருந்தே விரும்புகின்றவராக இப்போதும் இருப்பதைக் காண்கின்றோம்.

தமிழில் இந்த நூல் அல்ல, இதற்கு முன்னர் வந்த 'Other Colour' தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். அது  நல்லதொரு முன்னுதாரண நூலாக எழுதுபவர்களுக்கு பயன்படும். மேலும் தமிழில் எப்போதும் புனைவுகளை எழுதுகின்றவர்களே கொண்டாடப்படுவதான பாவனை இருக்கின்றது. பாமுக்கின் இந்த நூல்களை வாசிக்கும்போது அவர் எந்தளவுக்கு வாசிக்கின்றவராக, பிற எழுத்தாளர்களைக் கொண்டாடுகின்றவராக, அவற்றைப் பதிவு செய்கின்றவராக மட்டுமின்றி, அவரது நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் எப்படி உழைத்திருக்கின்றார் என்பதையும் அறிய முடியும்.

இந்த இரண்டு நூல்களிலும் எனக்கு மிகப்பிடித்தது பாமுக் எந்தளவுக்கு vulnerable ஆக தன்னை பொதுவெளியில் முன்வைக்கின்றார் என்பதாகும். தனக்கு எழுத வருவது என்பது,  தனித்த அறையில் நீண்ட நேரம் இருக்கும்போது அப்போது ஏற்படும் சலிப்பான/அலுப்பான (இதை நல்லவிதமாகப் பார்க்கலாம்)  சூழ்நிலையிலே என்கின்றார். எப்போதும் சலிப்புற்று, எந்நேரமும் சந்தோசத்தோடும் இருந்து எழுதுகின்றோம் என்று சொல்கின்ற நம் தமிழ் எழுத்தாளர்களை  மட்டுமில்லை, உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் உறுதியான கருத்துக்களைச் சொல்லி, தாம் சொல்வதே சரியென்று வாதிடும்  அவர்களை இந்தக் கணத்தில் நினைத்துக் கொண்டேன். 


'பென்' அமைப்பில் இருந்தபோது மட்டுமில்லை, தனிப்பட்டு தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்கப்படும்போதுதான் தான் சொல்லும் பதில்கள் சரியா என்று எப்போதும் குழப்பம் வருவதாக பாமுக் சொல்கின்றார். அப்படி தன்னை பலவீனமாக அரசியல் கருத்துக்களில் முன்வைக்கின்ற பாமுக்தான் தான் இருக்கும் நாடு, அரசு எதுவும் குறித்தும் பயப்பிடாமல், 'துருக்கியர்கள் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தினார்கள் அந்த படுகொலையில் ஒரு மில்லியன் ஆர்மேனியர்களும், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட குர்திஷ்காரகளும் கொல்லப்பட்டவர்கள்' எனச் சொல்லியிருக்கின்றார்கள்.

இதன் நிமித்தம் அவர் மீது நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் நீதிமன்றப்படிகள் அதற்காய் ஏறியபோது துருக்கியர்களால் கற்களால் எறியவும் பட்டவர். சர்வதேச எழுத்தாளர்கள், அமென்ஸ்டி நிறுவனத்தின் எதிர்ப்பால் அவர் அந்த 'துருக்கியர்களை அவமானப்படுத்தினார்' என்கின்ற வழக்கிலிருந்து வெளிவந்தாலும், எப்போதும் கொலைப்பயமுறுத்தல் காரணமாக நீண்டகாலம் பாதுகாலவருடன் திரிந்திருக்கின்றார். அதன் சில பதிவுகளை இந்தப் புதிய புத்தகத்தில் பார்க்க முடியும். அதுபோலவே துருக்கியின் அரசியல் நிலவரம் குறித்துக் கேட்கும்போதெல்லாம், அநேக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருப்பது போல துருக்கியிலும் சிறுபான்மையினருக்கு அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன என்று கூறியிருக்கின்றார்.

இன்றைக்கு பாமுக் உலகறிந்த எழுத்தாளர். அது தனியே எழுதுவதால் மட்டும் வந்தல்ல. அரசியல் உண்மைகளையும் அவர் அச்சப்படாமல் சொல்வதால் கூட வந்திருக்கக் கூடும். ஆனால் தமிழில் பாருங்கள், தங்களுக்குத்தாமே முன்னணி நட்சத்திர எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எழுத்தாளர்கள் அரசு/அரசாங்கம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதுகூட பரவாயில்லை ஒருவர் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் துயரத்தின் துளி கூடத் தெரியாதென திருவாய் மலர்ந்தார். இன்னொருவர் 'லோலிடா' போல எழுதுவதாக நினைத்து சிறுமி மீதான பாலியல் விழைவை, வரலாற்றில் இந்திய இராணுவம் சிங்களப் பெண்கள் மீது செய்யாத பாலியல் வன்புணர்வைச் செய்ததாகக் கதைகள் புனைந்து 'சங்கீதம்' பாடி எங்களை மீண்டும் எழுத்தில் கொலை செய்தார். ஆனால் இவர்கள் அனைவருக்குமே தாங்கள் எழுதுவதும், பேசுவதும் உலகத்தரமானது, ஆனால் உலகம் நம்மைக் கவனிக்கவில்லை என்பதுதான் அவர்களுக்கு பெருங்கவலையாக இருப்பதுதான் அவல நகைச்சுவை.
 

பாமுக்கின் எழுத்துக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டது (முக்கியமாக ஆங்கிலத்தில்) அவரது நாற்பது வயதுகளில். அதற்கு முன்னரே அவரது பெரும்பாலான நாவல்களை துருக்கி மொழியில் எழுதிவிட்டார். பாமுக் எழுதிய 'என் பெயர் சிவப்பு, 'பனி' போன்றவை வெளிவந்தபின்தான் அவருக்கு இலக்கியத்துக்கான முக்கியமான டப்ளின், நோபல் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன.

பாமுக் இன்றைக்கும் பெரும்பாலும் கூட்டங்களைத் தவிர்த்து தனித்து இருக்கவே விரும்புகின்றார். ஒருவேளை பாமுக்கு இன்றிருக்கும் புகழ் வந்திருக்கா விட்டால், அன்று இருபதுகளில் எழுத்தாளர் ஆவதே கனவு என்று முடிவெடுத்த அவர் இப்போது எப்படி இருந்திருப்பார் என யோசித்துப் பார்க்கின்றேன். சிலவேளை தனது கடைசிக்காலம் வரை கவனிக்கப்படாத ரொபர்தோ பொலானோ போல, போதிய புகழ் வெளிச்சம் கிடைக்காவிட்டாலும்,   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவராக பாமுக் நிச்சயம் இருந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

சிலரின் இளவயதுக் கனவுகள் மிகத் துணிச்சலானவைதான். துருக்கியில் புத்தகங்கள் வாசிக்காமல் இருப்பது என்றால்தான் சாதாரணமானது. கொஞ்சம் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தாலே அவர்கள் பிறழ்ந்த மனதுடையவர்கள் எனச் சொல்லக்கூடிய சூழல் என்று பாமுக் கூறுகின்றார். அவ்வாறான ஓரு சூழலை அறிந்தும் முழுநேர எழுத்தாளராக இருக்க ஒருவர் இளமையிலே முடிவுசெய்தார் என்பது வியப்புக்குரியதுதான்.

நமக்கு பிற நாட்டு/கலாசார புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் நாட்டில் எழுத்தாளர்களை அப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற மாயை இருக்கின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் (தமிழை விட) எழுத்தாளாராக இருப்பது  அவலமானதாக இருக்கின்றது என்பதே யதார்த்தம். பாமுக் கூட அவரின் ஏதோ ஓர் உரையில், என்னை வாசிப்பவர்கள் எங்கள் நாட்டில் மிகக் குறைவானவர்கள் என்று குறிப்பிட்டுக் கவலைப்பட்டிருப்பார்.

எனவே தமிழில் எழுதுகின்றவர்கள் தம்மை நமது சூழல் கவனிக்கவில்லை என்று கவலைப்படுவதைவிட, நாம் தமிழுக்கு புதிதாக எழுத்தால் என்ன வளத்தைக் கொண்டுவந்தோம், சமகால உலக இலக்கியப்பரப்பில் இருந்து எவற்றை   புதிதாக இங்கே அறிமுகப்படுத்தினோம் என்று சிந்திப்பது தமிழுக்கு மட்டுமில்லை, அவர்களை வாசிக்கும் நமக்கும் நன்மை பயக்கும்.

***

 

0 comments: