சட்டநாதனைச் சந்திப்பதென்று நாங்கள் முடிவெடுத்தது, நல்லூரிலிருந்த லிங்கம் கூல்பாரில் ஸ்பெஷல் ஐஸ்கிறீமையும், ரோல்ஸையும் சுவைத்துக்கொண்டிருந்த பொழுதில் என்றுதான் நினைக்கின்றேன். கூடவே கனடாவில் இருந்து வந்திருந்த நண்பர்கள் ரவிக்கும், போலுக்கும் சட்டநாதன் கல்வி கற்பித்த ஒரு ஆசிரியருமாவார். அந்த நேரத்தில் சட்டநாதனின் தொலைபேசி இலக்கம் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. நேரே போய் அவரின் வீட்டைத் தட்டுவோம் என நினைத்து நடக்கத் தொடங்கினோம்.
லிங்கத்திலிருந்து, நல்லூர் வீதியில் இடதுபக்கம் திரும்பினால் இலகுவாகப் போயிருக்கக்கூடிய சட்டநாதனின் வீட்டை, மறுபுறத்தில் 30-40 நிமிடங்களுக்கு மேலாய் நடந்து சட்டநாதர் கோயில், முத்திரைச் சந்தி(?) என எல்லாம் கடந்து சென்றடைந்திருந்தோம். எல்லாம் எங்கள் ரவியை முற்றுமுழுதாக நம்பியதால் வந்த வினை. அவர் சார்ந்திருந்த இயக்கம் காரைநகர் கடற்படையிற்கு நடத்திய 'அட்டாக்' பற்றிய கதையை, போல் மீண்டும் நினைவூட்டியதால், இப்படி நெடுந்தூரம் நடந்தபோதும் கோபப்படாது ரவியை மன்னித்துவிட்டோம். சட்டநாதனின் வீட்டுக் கேற்றடியில் நின்று இவர்கள் இருவரும் 'சேர், சேர்' என்று கூப்பிட, பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் எட்டிப்பார்த்தனரே தவிர, சட்டநாதனைக் காணவில்லை. பாவம் அவர், அன்று இவர்களைப் படிப்பித்தே உருப்படியாக வரவில்லை, இப்போது இவர்களைச் சந்தித்து என்ன பிரயோசனம் என்று உறங்கிக்கொண்டிருந்திருக்கலாம். சட்டநாதன் வீட்டில் இல்லையோ என்ற சந்தேகத்தை அவரின் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிள், அவர் உள்ளே தான் நிற்கின்றார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஒருமாதிரி சட்டநாதன் வந்து கேற்றைத் திறந்தார். அறைக்குள்ளே இருந்ததால் நீங்கள் கூப்பிட்டது கேட்கவில்லையெனச் சொன்னார். சட்டநாதனை நான் நேரில் முதன்முறையாக இப்போதுதான் சந்திக்கின்றேன் என்கின்றபோதும், அவருடைய கதைகளையும், அவரைப் பற்றியும் நெடுங்காலத்துக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்த தோழியொருவர் சட்டநாதனின் வீட்டுக்கருகில்தான் வசித்திருந்தார். சட்டநாதன் பற்றியும், அவரது சைக்கிள் பற்றியும் நிறையக் கதைகள் சொல்லியபடி இருப்பார். யாழில் தானிருந்த காலங்களில், இப்படி சைக்கிளில் போகும் சிறியமனிதரா இவ்வாறு அருமையான கதைகள் எழுதியிருந்தாரா என அவர் வியப்பார்.
ஒருவர் தன் பெயரிலேயே இருக்கும், ஒரு தெருவில் வசிப்பது என்பது அதிசயமல்லவா? சட்டநாதர் கோயில் இருப்பதாலேயே அது சட்டநாதர் வீதியாக இருக்க, சட்டநாதனும் அந்தத் தெருவில் வசித்துக்கொண்டிருப்பது ஒருவகை வியப்புத்தான்.
கூட வந்திருந்த நண்பர்கள் அவரிடம் கற்ற நாட்களை நனவிடைதோய்ந்தபடி இருந்தனர். சட்டநாதனும், தான் எழுதிய சில கதைகளின் பின்னணியைச் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜெயமோகனின் கதைகள் அவருக்குப் பிடித்ததென நினைக்கின்றேன். ஆனால் ஏன் ஜெயமோகன் இப்படி தேவையில்லாத கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளில் சிக்குகின்றார் எனவும் அவர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். சட்டநாதனைச் சந்திக்கமுன்னரே, வெளிவந்த அவரது இறுதித்தொகுப்பான பொழிவை வாசித்திருந்தேன். அவரது 'உலா', 'சட்டநாதன் கதைகள்' மற்றும் 'புதியவர்கள்' போன்றவற்றோடு ஒப்பிடும்போது இப்புதிய தொகுப்பில் வந்த கதைகள் சற்று பின் தங்கிவிட்டனவோ போல என் வாசிப்பில் தோன்றியது.
க.சட்டநாதன், அ.யேசுராசா போன்றவர்களையெல்லாம் நேரில் சந்திக்காவரை, அவர்கள் சற்று இறுக்கமானவர்கள் என்றொரு விம்பத்தை - எப்படியெனத் தெரியவில்லை- வாசிப்பினூடாக எனக்குள் உருவாக்கி வைத்திருந்தேன். சட்டநாதன் மிக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார் என்பதோடு நன்றாகச் சிரித்தபடி கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
வெளியே விடைபெற வந்தபோது அவரது 'பிரபல்யமான' சைக்கிள் எங்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அதைப் பற்றியும் ஒரு கதை எழுதியதாகச் சொன்னார். நாற்பது வருடங்களுக்கும் மேலாய் அதொரு நல்லதொரு துணையாக தன்னோடு இருப்பதாகச் சிலாகித்தார்.
வீட்டு வாசலடியில், சைக்கிளடியில், கேற்றடியில் போகின்றோம் போகின்றோம் என விடைபெற்றபடி, அவரை விட்டு விலக விரும்பாது கதைத்தபடி இருந்தோம். வெளியே மாலை மங்கி இருளத்தொடங்கியிருந்தது.
(Oct 19, 2017)
0 comments:
Post a Comment