கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்

Thursday, November 15, 2007

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-

1.
மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.



நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாஜ்ஜி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், பல்வேறு affairs (தகாத உறவு எனச்சொல்வது அவ்வளவு சரியாக இருக்காதென நினைக்கின்றேன்) குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. அந்த affairsஐ எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாஜ்ஜி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பேர்கர் இனத்தவர்களாக (டச், தமிழ், சிங்களம் என்ற பல்லினக்கலப்பு) இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் தாயினது திருமணம் நடைபெறுகின்றது.

மெர்வின் ஒண்டாஜ்ஜியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென..., குடியோடும்/குடியின்றியும் என்று மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். 'மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்...' இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாஜ்ஜி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

oooooooooooo


கொழும்பின் கோடைக்காலங்களில் வெயிலிருந்து தப்புவதற்காய், மலையகப்பகுதியில் வேறு வீடுகள் வைத்து அங்கே தங்கும் வசதியுடையவர்களாய், நுவரெலியாவில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் சூதாடுபவர்களாய், தமது குடும்பங்களிடையே அதிக செல்வாக்குள்ளவராய் இருப்பவர்கள் யாரென்று காட்டுவதற்காய் சொந்தமாய்க் குதிரைகள் வளர்ப்பவர்களாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பத்தினர்/உறவினர்கள் மிகுந்த வசதியுடன் இருக்கின்றார்கள். எனினும் அளவிற்கதிமான குடிப்பழக்கத்தால், ஒண்டாஜ்ஜியின் தகப்பனும் தாயும் விவாகரத்துப் பெறுகின்றார்கள். ஒண்டாஜ்ஜியின் தாயார் எந்த உதவியும் தகப்பனிடம் பெறாமல் இங்கிலாந்து சென்று உழைத்து கஷ்டங்களுடன் பிள்ளைகளை வளர்க்கின்றார் (செல்வாக்கான குடும்பம் குடிப்பழக்கம்/விவாகரத்தோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது). இலங்கையை விட்டு தாய், சகோதரகள் புறப்பட்ட பின்னரும் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது பதினொரு வயது வரை இலங்கையில் இருக்கின்றார். அவரது தகப்பன் மெர்வின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கோழிப்பண்ணையொன்றைச் சொந்தமாய் நடத்துகின்றார். விடுமுறைக்காலங்களில் தகப்பனோடும், உடன்பிறவாச் சகோதரிகளோடும் மைக்கல் ஒண்டாஜ்ஜி பொழுதுகளைக் கழிக்கின்றார்.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் இந்தப்புதினத்தில் ஒண்டாஜ்ஜியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவிபுரிகின்றது (மைக்கல் ஒண்டாஜ்ஜியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை 'நாசூக்காய்ப்' பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது. அம்மம்மாவிற்கு மத்தியவயதிலேயே இடது மார்பகம் நோயின் காரணத்தால் நீககப்பட, cushion ஆன ஒருவகை செயற்கை மார்பகத்தையே பாவிக்கின்றார். அது பலமுறை தொலைந்துபோவதும், தொலைந்து போகின்ற கதைகளும் சுவாரசியமானவை. ஒருமுறை அதைக் கழற்றி வைத்திருக்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் வளர்க்கும் நாய் அதை எடுத்துச் சென்று நாசமாக்கி விடுகின்றது. மாமியாருக்கும் மருமகனுக்குமான உறவில் அவ்வளவு சுமுகமில்லையாததால், மெர்வின் ஒண்டாஜ்ஜி திட்டமிட்டே நாயைப் பழகி நுட்பமாய் பழிதீர்த்துக்கொண்டார் என்ற ஒரு கதை அக்குடும்பத்தினருக்கிடையில் இருக்கின்றது. இன்னொருமுறை, பெற்றா (Pettah) பஸ்சிலிருந்து வரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் இடது முலையைத் தடவிக்கொண்டு வருவதையும் அதுகுறித்து பிரக்ஞையின்றி இந்தப்பெண்மணி (லைலா) தன்பாட்டில் இருப்பதையும் கண்டு பஸ்சிலிருப்பவர்கள் திகைக்கின்றார்கள்.

oooooooooooo

மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையைவிட்டு வெளியேறியபின் தனது தகப்பன் -மெர்வின்- குறித்து பிறர் கூறுவதையே இப்புதினத்தின் பிற்பகுதியில் குறிப்பிடுகின்றார். உடன்பிறவாச் சகோதரி சூஸன், மெர்வின் குறித்து மிக நெகிழ்வான பல சம்பவங்களைக் குறிப்பிடுக்கின்றார். தனனில் மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவராய்... தன்னோடு மிகுந்த நெருக்கமாய் தந்தையிருந்தவர் என்கின்றார் சூஸன். தனக்கு சிறுவயதில் தெரிந்த தகப்பன் வேறு, பிறகிருந்த தகப்பன் வேறு என்ற புரிதல் ஒண்டாஜ்ஜியிற்கு வருகின்றது. தன்னையும், தனது சகோதர்களைப் போலவன்றி நிதானமாய், கோபப்படாது மென்மையாப் பேசும் உடன்பிறவாச்சகோதரி சூஸனைப் பார்க்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியிற்கு தனக்குத் தனது தாயின் குணங்கள் கடத்தபட்டிருக்கவேண்டும், சூஸனிற்கு தகப்பனின் பாதிப்பிருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றார். எனினும் குடியை இறுதிவரை விடாதிருந்த மெர்வின் தனது இறப்பிற்கான ஒருவருடத்தின்முன் அனைத்திலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தி மிகுந்த வெறுமையுடன் பொழுதைக் கழித்திருக்கின்றாரென்ற குறிப்பும் இருக்கின்றது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பலகலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.


இச்சுயசரிதைப் புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் ஆனால் வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாய் மைக்கல் ஒண்டாஜ்ஜி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாஜ்ஜி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தை (curioristy?) கூட்டுகின்றனபோலும். மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாஜ்ஜியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாஜ்ஜியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

இப்புதினத்தின் பலவீனம் என்று பார்க்கும்போது, வேர்களைத் தேடிய பயணத்தில் தகப்பன் மட்டுமே நிறைய இடங்களை ஆக்கிரமித்துவிடுவது வாசிப்பவருக்கு சிலவேளைகளில் அலுப்பைத் தரக்கூடும். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தாய் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே வருகின்றது. சிலவேளைகளில் மெர்வின் ஒண்டாஜ்ஜி போல சுவாரசியம் தரக்கூடிய ஒரு ஆகிருதியாக தாய் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதைவிட முக்கிய பலவீனம் என்னவென்றால், இந்நூல் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கப் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பம் வேர்களை ஆழப்பதித்திருந்தாலும், ஒருவித அந்நியர்களாகவே இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். கறுவாத்தோட்டம் முதல், நுவரெலியா, கண்டி என்று மலையகப்பகுதிகள் வரை சித்தரிப்புக்கள் இருந்தாலும், அந்த மலையகத் தோட்ட மக்களின் இருண்ட வாழ்வு பதிவுசெய்யப்படவேயில்லை. ஜேவிபியின் கிளர்ச்சி பற்றிக்கூட அக்கறை கொள்கின்ற ஒண்டாஜ்ஜி, பல நூற்றாண்டுகளாய் நுகத்தடி மனிதர்களாய் எல்லோராலும் கைவிடப்பட்ட அம்மக்கள் பற்றி தனது பார்வையை அக்கறையுடன் சற்றுக்கூடத் திருப்பினாரில்லை (குதிரைப் பந்தயத்தில் சூதாடுகின்ற பகுதிகளில் மட்டும் இவ் அடித்தள மக்கள் குறித்த சிறு குறிப்புகள் வருகின்றன).


2.
Coming Through Slaughter அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை. நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் Boldenனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.


ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. (Barber shop போன்ற அண்மைய கோலிவுட் படங்களும், பல ராப் பாடல்களும் இதை இன்னும் நுணுக்காய்க் காட்டுகின்றன). ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் (The Cricket) என்று நகரிலுள்ள விலைமாதர்களின் விபரங்க்ளுடன் தகவல் சஞ்சிகை கூட வெளியிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், 'மாமா' வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார். தனது கோபத்தை/காமம் இல்லாத பொழுதை, ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே 'வித்தியாசமாய்ப்' பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies....Bullets of music delivered onto the bed we were on...(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

ஏற்கனவே இருந்த போல்டனின் இசைக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருதிசையில் போய்விட்டதறிந்து போல்டனைத் தனிமையும் நண்பர்கள் எவருமற்ற வெறுமையும் இடைவிடாது துரத்துகின்றது. மேலும், போல்டனின் முன்னாள் காதலியான நோரா இப்போது வேறொருவரோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றார். அந்த நபர் போல்டனின் இசைக்குழுவில் இருந்தவரும், நண்பருமென அறிந்து போல்டனின் வேதனை இன்னும் கூடுகின்றது. ஒரு ஊர்வலத்திற்காய் (parade) ஜாஸை வாசிக்க நோராவில் வீட்டில் சில நாட்கள் போல்டன் தங்கியிருக்கின்றார். அப்போது அவரது முன்னாள் காதலியுடனும் பிள்ளைகளிடமும் அன்பும் நெகிழ்வுமாய் பொழுதைக் கழித்து. அந்த ஊர்வலத்தில் அற்புதமான ஜாஸ் இசையை ஒரு குழுவுடன் இணைந்து கொடுக்கின்றார். தொண்டையால் இரத்தம் பீறிட்டெழுகின்றவரை தன்னை மறந்து போல்டன் வழங்கிய அற்புதமான அந்த இசை நிகழ்வை மக்கள் நீண்டநாட்களிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஜாஸோடு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு வாசகரைக்கூட இதை விவரிக்கையில் மைக்கல் ஒண்டாஜ்ஜி அருகில் இருந்து பார்ப்பதுபோல இழுத்துச்சென்றுவிடுகின்றார்.. அதுவும் அந்த ஊர்வலத்தில் காணும் ஒரு பெண்ணை கற்பனையில் நினைத்து உருகி அவளோடு உடலுறவு கொள்கின்ற போல்டனின் ஆசையைப்போல இசையும் அதனோடு நகர்ந்து போகின்ற வர்ணிப்பு மிக அற்புதமானது. போல்டனின் அந்த இசையின் இனிமையும், erotic தன்மையையும் பிரதியிற்குள்ளிலிருந்து அப்படியே நமக்குள்ளும் வந்திறங்கிக்கொள்கின்றது. Fluff and groan in my throat , roll of a bad throat as we begin to slow. Tired. She still covers her my eyes with hers and sees it slow and allows the slowness for me her breasts black under the wet light shirt., sound and pain in my heart as death. All my body moves to my throat and I speed again and she speeds tired again, a river of sweat to her waist her head and hair back bending back to me, all the desire in me is cramp and hard, cocaine on my cock, eternal, for my heart is at my throat hitting slow pure notes inth the shimmy dance of victory... (p 130 & 131).

தனது முப்ப்த்தொரு வயதிற்குப் பிறகு மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ..., திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படவில்லை (ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது). ஜாஸ் இசையின் நுட்பங்களைக்கற்று வளர்ந்துவருகையில் போல்டன் தனது இசை தெரிந்த நண்பர்களை விட்டு விலகி, ஜாஸ் இசையில் விருப்பற்று பாலியல் தொழிலாளர்களை மட்டும் படங்கள் எடுத்துக்கொண்டு திரியும் Bellocq என்பவரோடு அதிக காலங்களைக் கழிப்பதும், பிற நண்பர்கள்போல அல்லாது இசை குறித்து எதுவும் திருப்பிக் கதைக்காத அவரோடு இரவு பகலாய் பொழுதைக் குடித்துக் கரைத்ததாலும் போல்டனுக்கு ஜாஸ் பற்றிய விருப்பு சிதறிப்போயிருகலாம் என்ற ஒரு வாசிப்பு நமக்கு கிடைக்கின்றது. இதையேதான் போல்டன் ஊரையும்விட்டு ஓடிவிட்டு திரும்பிவரும்போது நோராவும் கூறுகின்றார் Look at you. Look at what he(Bellocq) did to you..Look at you. Look at you. Godamit. Look at you (p 127). ஆனால் எல்லோரையும் விட, Bellocqயே, போல்டன் ஊரைவிட்டு ஓடியபோது அதிகம் அதிர்ச்சியடைகின்றார். மேலும், போல்டன் ஊரிற்குத் திரும்பி வரும் இரண்டு வருட இடைவெளிக்குள், Bellocq நெருப்பு மூட்டி தற்கொலையும் செய்துகொள்கின்றார்.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும்விடுகின்றது,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது. எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாஜ்ஜி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden's Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.


(அ.யேசுராசாவிற்கு...)

புலம்பெயர் திரைப்படங்கள்

Thursday, October 25, 2007

-சில குறிப்புகள்-


புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களிலிருந்து முழுநீளத்திரைப்படங்கள் வரை பலவேறு வகைப்பட்ட திரைப்படங்களை எடுத்துவருகின்றனர். வேற்று மண்ணில் வேர்களைப் பரப்புவதிலிருந்து, புதுச்சூழலிற்கு இயைபாக்கம் அடைதல்வரையென்ற கதையாக்கப்படுவதற்கான மிகப்பெரும் வெளியிருப்பினும், நம்பிக்கை அளிக்கக்கூடிய, பிறநாட்டுச் சினிமாக்களுக்கு நிகராக வைத்து பேசப்படகூடிய பிரதிகளை இன்னமும் புலம்பெயர்ந்தவர்கள் தரவில்லையென்பது ஏன் என்பது உரையாடப்படவேண்டிய விடயமே. எனினும் தமக்கான களங்களுடனும், தமக்கான புரிதல்களுடனும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளிலிருந்து படங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்க்கலைஞர்களை மதிப்பதில்லையென்றும், நமக்கான சந்தை வாய்ப்புக்குறைவு என்றும் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையிருப்பினும், ஒரு படைப்பாளி இவற்றை எப்படி எதிர்கொள்வது/தாண்டிச்செல்வது என்பதைப்பற்றியே சிந்திக்கவேண்டுமே தவிர, ஒரே குற்றச்சாட்டுக்களை கிளிப்பிள்ளைமாதிரி தொடர்ந்து சொல்லித் தப்பித்துக்கொள்ளமுடியாது (அவ்வாறு மீறி -இன்றும் பல வருடங்களாய் நிரம்பிய அரங்குகளாய்- நிகழ்ந்துகொண்டிருக்கும் 'இசைக்கு ஏது எல்லை' என்ற இசைநிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு உரையாடல்களை ஆரம்பிக்கமுடியும்). இனி அண்மையில் பார்த்த/வெளிவந்த சில குறும்/நெடுந்திரைப்படங்களைப் பார்ப்போம்.

'கனேடியன்' என்று கனடாவில் தயாரிக்கப்பட்ட படம், இங்கிருக்கும் இளைஞர்களின் குழு வன்முறையைப் (Gang Violence) பேசமுயல்கின்ற ஒரு படமாகும். ஒரு வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்கள், குழு வன்முறையில் ஈடுபடுவதை அறிந்து அவ்விளைஞர்களின் உறவுமுறையான ஒருவர் இவர்களைத் திருத்த ஈழத்திலிருந்து வருகின்றார். முழுநீளத்திரைப்படமாகையால் முதல் அரைவாசிப்பகுதி நகைச்சுவைப் பகுதிகளால் நிரப்பபட்டிருக்கின்றது (ஒரளவு, பார்ப்பவர்களை சிரிக்கவைப்பதிலும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்). எதிர்க்குழுவில் உள்ள ஒருவனால் -ஊரிலிருந்த வந்தவரின் மருமகன் முறையான- இளைஞன் கொல்லப்பட, அவ்விளைஞனின் மாமா முறையானவர் கொன்ற இளைஞனுக்கு அவனது தவறை உணரச்செய்கின்றார் என்பதே இத்திரைப்படத்தின் ஊடுபொருள். இறுதியில் எல்லோரும் நண்பர்களாக தமக்கான வன்மங்களை மறந்து மாறுகின்ற பொழுதில், கொலையாளி(?) இளைஞன் தன் விருப்பின்பேரில் பொலிசிடம் சரணடைகின்றான்.

தங்கள் நண்பனை/உறவை கொன்றவனை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளும்ம் சந்தர்ப்பத்தில், 'ஏற்கனவே ஒருவனை இழந்துவிட்டோம் இனியும் இன்னொருவனை இழக்கவேண்டுமா? ஒருவன் எப்போது தன் தவறை உணர்ந்து வருந்துகின்றானோ அப்போதே ம்ன்னிக்கப்பட்டுவிடுகின்றான்' என்று இத்திரைப்படம் முன்வைக்கும் கருத்தாடலில், இவ்வாறான இளைஞர்களின் மீதான் அக்கறையையும், பரிவையும் ஏற்றுக்கொண்டு படத்தை முடியும்வரை பார்க்கமுடியுமெனினும் இத்திரைப்படம் சில பலவீனங்களையும் கொண்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இவ்விளைஞர் குழுக்கள் ஏன் வன்முறையாளர்களாய் உருவெடுத்தார்கள் என்பதற்கான காரணம் படத்தில் காட்ட்ப்படாததை அதொரு படைப்பாளிக்கான சுதந்திரமாய் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குழுக்களின் சண்டைக்காட்சிகள் ஒருவித நகைச்சுவைக்காட்சியிற்கு அண்மையாகப் போய்விடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. இங்கே எடுக்கபபடும் பல முழுநீளத்திரைப்படங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்ததே இத்திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறானவர்கள் இன்னுமே 'தமிழ்நாட்டுச்சினிமா சட்டகம்' என்ற பெருங்கதையாடலை விட்டு வெளிவருவதற்கான நம்பிக்கைகளைத் தருவதாய்க்காணவில்லை. தென்னிந்தியத்திரைப்படங்கள் போல சினிமாப்பாடல்கள் வேண்டும் (ஆனால் தொட்டும் தொடாமலும் ஆடி நமது புலம்பெயர் தமிழ்க் கலாசாரத்தை (?) காப்பாற்றவும் வேண்டும். சண்டைக்காட்சிகளும் வேண்டும். ஆனால்.... ). இப்படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும்போது இவர்கள் இங்கிருக்கும் குழு வன்முறை குறித்து எவ்வாறான ஆய்வுகளை -இப்படத்தை எடுக்கமுன்னர் செய்தார்கள்- என்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன. குழுக்களில் இருப்பவர்கள் தமக்கான பாதுகாப்பான பிரதேசங்கள் தவிர்த்து- பிற இடங்களில் தனித்துத்திரியமாட்டார்கள். ஆனால் இங்கே 'கெட்டவராக' சித்தரிக்கப்படுபவர் ஆரம்பக்கட்டம் தவிர்த்து படம் முழுதும் தனியாகவே திரிகின்றார். மற்றது குழுச்சண்டைகள் சும்மா சினிமாச் சண்டைகள் போல நடைபெறுவதில்லை ('சித்திரம் பேசுதடி' படத்தில் வெகு யதார்த்தமாய் இதைச் சித்தரிக்கும் காட்சியொன்று வரும்) . ஒருவன் ஒரு குழுவிடம் தனியே சிக்கினால் எப்படி அவர்கள் கூட்டமாய்ச் சேர்ந்து 'கிழிப்பார்கள்' என்பது வன்முறைக்குழுவில் இருப்பவர்களிடம் கேட்டால் விளங்கும். மேலும் வெறும் கையால் சுழற்றி சுழற்றி (பல சினிமாக்களில் சின்னவிரலால் மட்டும்கூட சுழற்றி சுழற்றி அடிப்பார்கள்) அடிக்கும் காலம் இங்கிருக்கும் வன்முறைக்குழுக்களில் எப்போதோ மலையேறிப் போய்விட்டது. இவை முக்கிய குறைபாடுகளாய் இல்லாதுவிட்டாலும், தமிழகச்சினிமாவின் பாதிப்பு அப்படியே 'அப்பட்டமாய்' தெரிகின்றன எனச்சுட்டவே இவற்றைக் குறிப்பிட விழைகின்றேன். இளைஞன் கொல்லப்பட்டவுடனேயே கொன்ற இளைஞனுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே ஒரு காதல் 'டூயட்' வந்துவிடுகின்றது. ஒரு அவலமான சூழ்நிலையில் உடனேயே ரொமான்ரிக் சூழல் வருவது யதார்த்ததில் சாத்தியமேயில்லை. பாடலைத் திணிக்கவேண்டும் என்றிருந்தால் - ஆகக்குறைந்தது சில காட்சிகள் பிந்தியாவது- இணைத்திருக்கலாம்.

அதேபோன்று ஊரிலிருந்து மாமா வருகின்றபோது அவர் தனது பழைய காதலியொருவரைக் கனடாவில் சந்திப்பார். இருவரும் தமக்கான குடும்பம் பிள்ளைகள் என்றிருப்பவர்கள். எனினும் அவர்களுக்குள் இன்னும் இருக்கும் மெல்லிய உணர்வுகள் நகைச்சுவையுடன் நகர்த்தப்பட்டிருக்கும் (குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் பழையதெல்லாம் மறந்து/மறைந்து போகவேண்டும் என்ற கட்டாயமா என்ன?) . ஆனால் அதைக்கூட இறுதியில் ரஜினியின் ஏதோ சில பாடல்களுக்கு அவர்களிருவரையும் அபிநயம் பிடிக்கச்செய்யவைத்து ஆபாசப்படுத்தியிருப்பார்கள். இம் மென்னுணர்வுகள் இப்படியாய் குரூர நகைச்சுவைக்குள் போவதற்காய் உரியன அல்லவென உரத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது. மேலும் அந்தப் பெண்மணியை மணிரத்தினத்தின் 'ப்மபாய்' பட ஸ்ரையிலில் 'எல்லாம் குலுஙக' ஓடிவரச்செய்வதெல்லாம்... மீண்டும் தமிழகச்சினிமா என்ற பெருங்கனவை இவர்களால் கலைக்கமுடியவில்லையென்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல? எனினும் இவ்வாறான பலவீனங்களைத் தாண்டி, இங்கிருக்கும் இளைஞர்களின் ஒருபகுதியினரின் வாழ்வைப்பற்றி வெளிப்படையாக உரையாடமுயன்றிருக்கின்றது என்பதற்காய் இப்படத்தை - சில நெளிதல்களுடன் சகித்துக்கொண்டு - பார்க்கலாம்.

இதே கருத்தை, 'வினை' என்ற ஜந்து நிமிடக்குறும்படம் அழகாகக்காட்டுகின்றது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதே இதன் கருப்பொருள். இளைஞர் வன்முறைக்குழுவில் இருக்கும் ஒருவனுக்குத் தான் சுட்டுக்கொல்லப்படுவதாய் கனவொன்று வருகின்றது (ஏற்கனவே யாரையோ இந்த இளைஞன் இருக்கும் குழு சுட்டிருக்கின்றது). அது கனவுதான், தான் கொல்லப்படவில்லை என்று பதட்டத்தோடு எழும்புகின்றவனுக்கு, அவனது நண்பரொருவன் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்ற தொலைபேசிச் செய்தி வருவதோடு படம் முடிந்துவிடுகின்றது. ஒரு வீட்டிற்குள்ளேயே படம் முழுதும் எடுக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் இருக்கும் கதாபாத்திரம் ஒன்றேயொன்றுதான். ஆனால் படம் சொல்ல்வருவது என்னவென்பது அப்படியே மனதில் பதிந்துவிடுகின்றது.



'தொடரும் நாடகம்' என்ற டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட இருபது நிமிடக்குறும்படம், புலம்பெயர்ந்தவர் வாழ்வில் சின்னத்திரைகளின் ஆதிக்கம் பற்றிப்பேசுகின்றது. சின்னத்திரை நாடகங்களுக்கு அடிமையாகும் தாயாரால் வீணாய்ப்பலிகொள்ளப்படுகின்ற சிறுவனை இதுகதைப்பொருளாக்கின்றது. சற்று உயர்வுநவிற்சியாய் எடுக்கப்பட்டிருந்தாலும், சின்னத்திரை நாடகங்களின் ஆதிக்கமும் அவ்வளவு எளிதாய் புறககணிக்க முடியாது எனபதே யதார்த்தம் ஆகும்.


'கதவுகள்' என்ற ஐந்து நிமிடக்குறும்படம். வாழ்வில் ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறுகின்றது. தனது மனைவி வீட்டை விட்டு ஒடிப்போன அவமானத்தில்(?)/துயரத்தில், தற்கொலை செய்ய முயல்கின்றார் கணவர். அதிக மாத்திரைகளை எடுப்பது, கயிற்றைக் கட்டித்தொங்குவது, மாடியிலிருந்து குதிக்க ஆயத்தமாவது என்று பல முயற்சிகளுக்கு முயன்றாலும் அவரால் தனது தற்கொலையைக் கச்சிதமாய் நிறைவேற்றமுடியாது போகின்றது. அப்படிக்குலைந்துபோகின்ற நிலையில் அறையிலிருந்த அவரின் குழந்தையின் அழுகுரல் இவரை இன்னொருவிதமாய் சிந்திக்கவைக்கின்றது. ' உன்னை விட்டுவிட்டு எப்படி நான் சாக முடிவு செய்தேன்? 'என்று தனது குழந்தையை அரவணைப்பதுடன் படம் முடிந்துவிடுகின்றது. இப்படம் சிலவிதமான அதிர்வுகளை எமக்குத் தருகின்றது. தாய் என்பவர் புனிதமான பிம்பமாக்கப்படுவதை மறுக்குகின்றது. அதாவது 'புனிதமான தாய்' குழந்தையை விட்டு ஒருபோதும் ஓடமாட்டார் என்ற கதையாடலை நிராகரிக்கின்றது (இந்தபுனிதத்தன்மை புகுத்தப்படாது விட்டிருந்தால், பல தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் சேர்த்து தாங்களும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள்; மற்றது 'பிள்ளைகளுக்காய்..' என்ற பல தமது விருப்புக்களை வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கவேண்டி வந்திருக்காது) . இப்படத்தில் இருந்து எழும்பும் இன்னொரு அதிர்வு, தற்கொலை செய்தல் மிக எளிதானதென்ற பொதுப்புத்தி சார்ந்து சிந்திக்க முயலாதது.


'மெளனச்சுமைகள்', புலம்பெயர்ந்த தேசத்தில் பெற்றோரின் (வயது முதிர்ந்தவர்களின்) இருப்புக் குறித்துப் பேசுகின்றது. ஊரில் தனித்திருக்கும் பெற்றோரை வெளிநாட்டுக்குக் கூப்பிடும் பிள்ளைகள் எப்படி அவர்களைத் தமது சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்த முனைகின்றார்கள் என்பதை இக் குறும்படம் காட்சிப்படுத்துகின்றது. வயது முதிர்ந்த காலத்தில் ஒன்றாய் சேர்ந்திருககவேண்டிய பெற்றோர்.... தாய் ஒரு மகளோடும், தகப்பன் ஒரு மகனோடும் பிரிந்துவாழ்வதன் அவலம் குறித்துக் கேள்விகளை எழும்புகின்றது.


'அஃகம்' என்ற கனடாவில் எடுக்கப்பட்ட பதினைந்து நிமிடக் குறும்படம், பதின்மவய்துப்பெண்களின் பிரச்சினையொன்றைப்பற்றிப் பேசுகின்றது. பாடசாலைக்கும் போகும்/வரும் வழியில் பதின்மவயதுக்காரியொருத்தியை, (சற்று வயதுகூடிய?) ஒரு ஆண் இடைமறித்து தொடர்ந்து உரையாட விரும்புகின்றார். அவரின் நடத்தையிற்கும், வடிவிற்கும் என்னோடான காதல்தான் பெரிய முக்கியமென அப்பெண் அந்த ஆணின் காதலை நிராகரிக்கின்றார். காதலை ஏற்பதாய் இருந்தால் மரத்தில் வைக்கும் வண்ணத்துப்பூச்சி வ்டிவான் கிளிப்பை எடுத்துப்போடவேண்டும் இல்லாவிட்டால் காதலை நீ ஏற்றுக்கொள்ளவில்லையென தான் நினைத்து அமெரிக்கா போய்விடுகின்றேன் என சற்று சினிமாத்தனமான் டயலொக்கை அந்த ஆண் கதைக்கின்றார். ஆரம்ப நாட்களில் காதலை நிராகரிக்கும்/ கிளிப்பை எடுக்காத அந்தப்பெண்ணும் அவரின் நண்பிகளுக்கும் பின்னாளில் அந்த ஆணை (அவர் அமெரிக்கா போய்விட்டாரென நினைக்கின்றேன்) தாங்கள் மிஸ் பண்ணுவதாய் கதைக்கின்றார்கள். இறுதியில் அந்தப் பெண் தனது தலைக்கு அந்தக் கிளிப்பைப் போடுவதோடு படம் முடிகின்றது. கொஞ்சம் சினிமாத்தனமான உரையாடலகளைத் தவிர்த்துப்பார்த்தால், இப்படம் பிரதிகளுக்கு அப்பால சில கேள்விகளை எழுப்ப பார்ப்பவருக்கு வெளியைத் தருவது புரியும். இதைப்போன்ற பல சந்தர்ப்பங்களில் சிக்குப்பட்ட சில நண்பர்களை எனது பதின்மங்களில் கண்டிருந்ததால் இக்குறும்படம் இன்னும் நெருக்கமாயிற்றோ தெரியாது.


இந்தப்படங்களையெல்லாம் விட நம்பிக்கை அதிகம் தந்த படம் என்றால் 'நதி' என்ற பிரான்சில் எடுக்கப்பட்ட 15 நிமிடப்படத்தைத்தான் சொல்லவேண்டும். ஒரு அகதியின் துயரை மிகத்தத்ரூபமாய் எளிமையான காட்சிகளால் சித்தரிக்கின்றது. தனது உறவினரின் பணத்தில்(கடனில்) கள்ளமாய் பிரான்சிற்கு வந்து, எந்த வேலையும் செய்யமுடியாது -வேலைசெய்யும் அனுமதிப்பத்திரம் (work permit) இல்லாதிருக்கும்- இளைஞனே இங்கே முக்கிய பாத்திரமாகின்றான். இந்த நெருக்கடியோடு ஊரிலிருந்து அம்மாவின் நோயிற்கு இன்னபிறவிற்கென பணம் அனுப்பச் சொல்லும் உறவுகள்... தங்கியிருக்க்கும் வீட்டுக்காரரும் தனக்கான அல்லல்களோடு இவனை உளவியல்ரீதியில் திட்டிக்கொண்டிருக்கின்றார். ஒருமாதிரி இன்னொருவரின் வேலை அனுமதிப்பத்திரம் பெற்று கள்ளமாய் இவ்விளைஞன் வேலை செய்ய வெளிக்கிடும்போது, அந்த தொடர்மாடிக்கட்டடத்தில் இரு இளைஞர் குழுக்கள் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இதையறிந்து பொலிஸ் அங்கே வர, அவ்விரு குழுக்களும் தப்பிவிட இந்த இளைஞன் இடைநடுவில் மாட்டிவிடுகின்றான். பொலிஸார், இவனைக் கைதுசெய்து அடையாள அட்டைகளைக் கேட்கும்போது, இவன் கள்ளமாய் வந்து பிரான்சில் நிற்பது தெரிகின்றது. மேலும் அவனிடமிருக்கும் வேலை செய்யும் பத்திரமும் இன்னொருவனுடையதாக இருப்பதும் ஆபத்தாக முடிந்துவிடுகின்றது. அவ்விளைஞன் தான் உடனேயே நாடுகடத்தப்படுவதன் அவலத்தை நினைத்து அரற்றத்தொடங்குவதோடு படம் முடிகின்றது. எத்தனையோ நாடுகளின் ஆபத்தான எல்லைகளைக் கடந்து, ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்தவர்களுக்கே இத்துயரத்தின் ஆழம் புரியும். 'உன்னிடம் இருப்பதும் சிறிலங்கா பாஸ்போர்ட்'தானே என்று கேட்பவர்கள், இவ்விளைஞர்களைப் போல சொகுசாய் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பறப்பவர்களாகவோ.... முக்கிய அரசியல் பிரமுகர்களோடு சொகுசாய் விமானத்தில் உட்கார்ந்துகொண்டு 'தாம் பேசும் அரசியலோடு' உலகம் சுற்றத்த்தொடங்கி தாம் பேசி முடிக்கும் அரசியலோடு உலகமும் சுற்றுவதை நிறுத்திச் சுருண்டு படுத்துவிடுகின்றது என்று நினைப்பவர்களாய் மட்டுமே இருக்கமுடியும். இக்குறும்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் மிக இயல்பாய் நடித்திருந்தார்கள். உரையாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் கதையின் களத்தோடு நேர்த்தியாய் பொருந்திக்கொள்கின்றது.


இவ்வாறு புலம்பெயர் திரைப்பட முயற்சிகள் பலவேறு புலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தாலும், இன்னும் கடக்கவேண்டிய பாதை நீண்டதாய் இருக்கின்றதென்பதே உண்மை. மேலே குறிப்பிட்ட பல படங்களில், ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு/உரையாடல்கள் என எல்லாம் ஒத்திசைந்து வந்த படங்கள் மிகக்குறைவே. திரையிசைப்பாடல்களும், சண்டைக்காட்சிகளும்... நமக்கு இந்திய வணிகச்சினிமா போல் அவசியமா என்ற கேள்வியை ஒவ்வொரு படைபாளியும் தமக்குள் எழுப்பிவிட்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கவேண்டும். பாடல்கள் இல்லாது மனதை வருடிச்செல்லும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களும், வன்முறையை அப்படியே வெளிப்படையாக பார்வைக்கு வைக்காது, ஆனால் அதன் பாதிப்புக்களை உருவாக்கிய Mr & Mrs அய்யர் போன்ற படங்களும் அங்கீகரிக்கப்பட்டு பரவலாய் பாராட்டுப்பெறுவதையும் நாம் நினைவில்கொள்ளலாம். ஒரு முழுநீளத்திரைப்படம் எடுப்பதற்கான அவசியம் ஏன் நமக்கு இப்போதிருக்கின்றது என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆங்கிலப்படங்கள் போல அவற்றின் கதை/களத்தைப் பொருத்து திரைப்படங்களை தயாரித்தலுக்கு, எடிங்கிறகான முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். அதைவிட நாம் யாருக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே முக்கியமானது. வர்த்தக தமிழ்ச்சினிமாவிற்கான காரணஙகளை மறுக்கவேண்டிய அவசிய்மில்லை. ஆனால் அவ்வாறான படங்களைப் பார்ப்பதற்கும், அது போல போலி செய்து தயாரிக்கப்படும் படங்களைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


புலம்பெயர்வாழ்வில் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் புதையுண்டு கிடக்கின்றன. போலச் செய்யும்போதல்ல, நமக்கான கதையை நாமே காட்சிப்படுத்தும்போதுதான் நமது அசலான முகங்கள் வெளிப்படும். அந்த தனித்துவமான கதைகளே 'நமக்கான திரைப்படமொழியை' உருவாக்கப்போகின்றவை. அத்தோடு 'தமிழ்' என்ற சிறு எல்லைகளுக்குள் அடங்கிப்போகின்ற முயற்சிகளை -ஈரானிய/சிங்களப்படங்கள் போல- மொழிகளைத்தாண்டி பிறமொழி பேசுபவர்களிடையேயும் அதிர்வுகளை உண்டாக்கி நமக்கு பெருமை தரக்கூடியதாகவும் அவை அமையவும்கூடும்.


('கனேடியன்' என்ற திரைப்படத்தைத் தவிர மிகுதி அனைத்துக் குறும்படங்களையும் அண்மையில் நடந்த 'ஆறாவது சர்வதேச தமிழ்க் குறும்திரைப்பட விழா'விலேயேதான் பார்த்திருந்தேன். அதற்கும் நன்றி.)

சிங்களக்கவிதைகள் சில...

Friday, October 12, 2007

பாடசாலை நாட்கள்

இரட்டைச் சடைகள் பறக்க
நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்
பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை
எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது

ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை
அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது
திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது
அதைவிட வேறொன்றுமில்லை

நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை
அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள்
எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள்

லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ணாடிகளை அணிந்திருந்தாள்
அவளது வீடு, அடிப்படை வசதிகளற்றது
போத்தல் விளக்கிலிருந்து வரும் தெளிவற்ற கதிரே
அவளது ஒளியாகவிருந்தது

அவள் ஒரு வைத்தியராகவோ வழக்கறிஞராகவோ
என்றேனும் ஒருநாள் ஆவாளென
அவளது தந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்
அல்லது ஆகக்குறைந்தது
பல்கலைக்கழகத்திற்குச் செல்வாளென

நான் ஒரு கணமும் இன்னொரு இனத்திற்குரியவளென
(இவர்களோடு) இருந்தபொழுதில் உணர்ந்ததில்லை
நாங்கள் இளமையாக இருந்தபோது வாழ்வு இனிமையாக இருந்தது
துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததும் இல்லை

இப்போது உரத்துக்கதைத்தபடி
எனது மகள் பாடசாலையிலிருந்து நடந்துவருகின்றாள்
ஐந்துபேராய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி
இன்றைய நாளின் விசயத்தை அலசுகின்றார்கள்

'ஒரு தமிழ் கடை இன்று எரிக்கப்பட்டது' ஒருத்தி சொன்னாள்.
'கொளுத்தியது சரிதான்' என்றாள் இன்னொருத்தி.
அவர்களுக்கு ஷாரினா, நெலியா லட்சுமியின் அருகாமை
ஒருபோதும் கிடைத்ததேயில்லை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)
--------------------

கிராமத்தவரின் கதை

'நாங்கள் இப்போது மீன்கள சாப்பிடுவதில்லை' என்றாள் அவள்
'அவற்றின் வெறுமையான வயிறுகள் நாற்றமுடைய மனித உடல்களால் தினமும் நிரப்பப்படுகின்றன,
முள்ளந்தண்டுகள் நொறுக்கப்பட்ட தலைகளில்லாத இளைஞர்களின் உடலங்கள் நதியில் மிதந்து வருவதைப் பார்க்கின்றோம்'

*'புத்தா இப்போது எங்களுடன் தங்குவதில்லை' என்றாள் அவள்
'இரவில் வரும் அந்நியர்களுக்காய் அவன் பயப்பிடுகின்றான்
நேற்றும், அவனின் நண்பரொருவன் வெளியே இழுத்துச்செல்லப்பட்டான்
நாங்கள் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்களைக் கேட்டோம், பிறகு நிசப்தம்'.

'ஒரு நல்ல விடயம், இந்த நாட்களில் சாப்பாடு வாங்குவதற்காய் கொஞ்சம் பணமிருக்கிறது
இந்தப் பிள்ளைகளின் அப்பா
இப்போது பார்ப்பதற்கு பரவாயில்லையாய் இருக்கின்றார்
எனது மகளுக்காய் இனி சீதனம் சேகரிப்பது தேவையற்றது
அவள் விரைவில் மறந்துவிடுவாள் எப்படி ஒரு இளைஞன் இருப்பான் என்பதை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)

* மகன்
---------------

கடவுளின் தனிமைப் பெண்

நானொரு வேசிப்பெண்
சமூகத்தில் எனக்கொரு மதிப்புமுமில்லை
வாழ்க்கையினூடு வழுக்கியபடி, மறக்கப்பட்டவள்;
ஒரு சுதந்திரமான வாத்து

நூறு ரூபாயிற்கு மேல்
எனது பேர்ஸில் எதுவும் இல்லை.

நேற்றிரவு ஒரு மிருகத்தோடு படுத்திருந்தேன்
அவனது பேர்ஸில் நூறு ரூபாய்த்தாளிலிருந்தது
இப்போது எனது.

நான் இன்னும் கவிதை வாசிக்கின்றேனெனது கழிவறையில்.

அந்தத் தாசிகளைப் பார்!
ஒளிரும் கனவான்களோடும் பளபளக்கும் கார்களுடனும்
அவர்கள் என்னைவிடச் சிறந்தவர்களென நினைக்கின்றார்கள்;
சேக்ஸ்பியர் காலத்தவர்களென்ற எண்ணம் வேறு -
ஜின்ஸ்பேர்க்கை வாசிப்பதால் நானொரு தாழ்த்தப்பட்டவள்

அந்த விபச்சாரன்களைப் பார்!
தந்தையின் பணத்தைக்கொண்டு வந்த ஒரு முட்டாள் பிட்சோடு போவதற்கு
இம்முதிர்ச்சியற்ற ஆண்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
அவள தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டிருப்பதை இவர்கள் விரும்புகின்றார்கள்
எனக்கு உண்மையிலேயே இதைப்பார்க்க வெறுப்பாயிருக்கிறது

இந்தக்காலையில் காலிமுகத்திடலில்
கடல் நிசப்தமாயிருந்தது
எனது கால்கள் நோகும்வரை நீளநடந்தேன்
தன்னைத் தொடும்படி அப்பொழுது முழுதும்
கடல் என்னை மென்மையாக அழைத்துக்கொண்டிருந்தது.
நான் ஒருபோதும் அழைப்பை ஏற்றதில்லை.

நானின்னும் கவிதை வாசித்துக்கொண்டிருக்கின்றேன் எனது கழிவறையில்.

-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
--------------------------------

வன்மையான பிரார்த்தனை

சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.

கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்

போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.

இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது

இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.

எனக்கு ஞாபத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை

கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.

நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு கோயில்
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.

-ருக்சன் பெரேரா (From the collection,
Elysium & Other Poems)
*Dagoda
-----------------

வரலாற்றின் தடங்களில் நடத்தல்

Friday, August 24, 2007

-Woolf in Ceylon by Christopher Ondaatje-

காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் 'சுதேச' மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் 'அறிஞர் குழாத்தில்' கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம். நமது கல்வித்திட்டம் கூட இன்னும் முறைமையாக மாற்றியமைக்கப்படாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (காலனித்துவ) பாடத்திட்டத்தின்படி அண்மைக்காலம் வரை நீட்டிக்கபட்டுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

'இலங்கையில் வூல்ப்வ்' (Woolf in Ceylon) என்ற இந்நூல், வூல்ப்வ் அரச அலுவலராக 1904-1911 காலப்பகுதிகளில் ஈழத்தில் பணியாற்றியபோது எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து விரிவான சம்பவங்களுடன் மீண்டும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜினால் எழுதப்பட்டிருக்கின்றது. வரலாற்றின் ஆவணங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் இன்றைய நமது போர்ச்சூழலில் இப்படியான காலனித்துவவாதிகளின் குறிப்புகளினூடாகத்தான் நாம் நமது நாட்டையும் ஊர்களையும் அறிந்துகொள்ள, சார்ந்து நிற்கவேண்டியிருக்கின்றது என்பது அவலமான ஒரு விடயமே. வூல்ப்வ் இலங்கையில் இருந்த காலங்களில் எழுதிய குறிப்புகளையும், இன்னபிற அவரின் படைப்புக்களையும் வாசித்த கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி (எழுத்தாளர் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் சகோதரர்) போர் நடைபெறாத 'சமாதான காலம்' எனச்சொல்லப்பட்ட 2003களில் இலங்கைக்குச் சென்று, வூல்ப்வ் பயணித்த இடங்களை வூல்ப்பின் குறிப்புகளை வைத்துக்கொண்டு மீண்டும் பார்ப்பதை/பயணிப்பதை ((revisiting?) இந்நூலில் எழுதியிருக்கின்றார். வூல்பின் 1900 காலகட்டத்தோடு, இன்றைய ஈழத்தை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி விரித்து எழுதிச்செல்வது வெகு சுவாரசியமான வாசிப்பை நமக்குத் தருகின்றது. மேலும், கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவரது அனுபவம் சார்ந்த சொந்தக்குறிப்புகளும் இந்நூலிற்கு இன்னும் வளத்தைச் சேர்க்கின்றது.

வூல்ப்வ் பணியாற்றிய யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, ஹம்பாந்தோட்ட (தமிழில் அம்பாந்த்தோட்டை?) போன்ற அனைத்து இடங்களுக்கும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிக்கின்றார். இலங்கைக்கு வரும்போது ஒரு ஏகாதிபத்தியவாதியாக இருக்கின்ற வூல்ப்வ் பின்னாட்களில் எப்படி தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளாராக மாறுகின்றார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது. கொழும்பில் இரண்டுவாரம் கச்சேரியில் வேலை செய்து விட்டு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு வூல்ப்வ் 1904 ஆண்டளவில் போகின்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வூல்ப் -அப்போதிருந்த தொடர்ச்சியில்லாத புகைவண்டிப்பாதையால்- அனுராதபுரத்திலிருந்து ஆனையிறவு வரை மாட்டுவண்டியில் பயணிக்கின்றார் (ஏறத்தாள முப்பத்தாறு மணித்தியாலங்கள் எடுத்த பயணம் அது). யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் வூல்பவ் மிகத்துல்லியமாய் இறுக்கமான யாழ்ப்பாணச்சமூகத்தை கணித்துமிருக்கின்றார். யாழ்ப்பாணத்தவர்களின் சாதித்திமிர், வேலிச்சண்டை உட்பட கல்வித்திமிர்வரை அனைத்தையும் தனது குறிப்புகளில் வூல்ப்வ் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று யாழ்ப்பாணம், இலங்கையில் ஏனைய பகுதிகள் விரைவில் சுவீகரித்துக்கொண்ட அய்ரோப்பிய கலாசாரத்தை போன்று இருக்காது, தனித்து நின்ற ஒரு பிரதேசமெனவும் குறிப்பிடுகின்றார். முக்கியமாய் அய்ரோப்பியப் பெருநகரங்களுக்கு இருக்கும், ஒரு பெருநகரும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர்ப்பகுதிகள் போன்ற அமைப்பை அமையவிடாது, யாழ்ப்பாணத்தின் எண்ணற்ற பின்னலான தெருக்களும், ஒழுங்கைகளும் தடுத்துவிடுகின்றன என்று தனது அவதானங்களை வூல்ப்வ் முன்வைக்கின்றார். அதேபோன்று கிடுகுவேலிகளுக்குள் அடங்கிவிடுகின்ற ஒரு கொண்டாட்டமற்ற சமூகம் யாழ்ச்சமூகமெனவும் எழுதிச் செல்கின்றார். மேலும் பக்கத்து வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு, தங்களது கிடுகு வேலியை மற்றவனுக்குச் சொந்தமான நிலத்தில் சில அங்குலங்களாவது நகர்த்திப்பார்க்கின்ற சமூகம் என்றும் உண்மையை உள்ளபடியும் எழுதவும் செய்கின்றார் (...these cadjan fences are famous. It is said that the people of Jaffna spend much time of their time waiting for their neighbour to go out, so that they may shift the dividing fence a few inches on to his land). யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் வூல்ப்வ் 'அரியதான' தனது கண்ணன் தன்மையை (கன்னித்தன்மைக்கு ஆண்பால்..? நான் கண்டுபிடித்ததுதான்) முதன்முதலாக அங்கிருந்த ஒரு பேர்கர் (Burghar) பெண்ணிடம் இழக்கின்றார்.

வூல்ப்பிற்கு யாழ்ப்பாணம் ஒரு உவப்பான சூழ்நிலையைத் தரவில்லை. இறுக்கமான சூழலால் மட்டுமின்றி, யாழ்ப்பாணத்து உயர்தர மக்களுடன் வரும் எதிர்ப்புணவும், வூல்ப்பால் யாழை, இலங்கையில் தனக்குப் பிடித்தமான ஒரு இடமாக ஏற்றுக்கொள்ள முடியாது செய்கின்றது. இதை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி இன்னும் தெளிவாக தனது வார்த்தைகளில் முன்வைக்கின்றார்...My (Christopher Ondaatjee) own expression, judging from the long chapter on Jaffna in Wolf's autiobiography, is that the friction was mainly with the best-educated people, not with the majority, the village cultivators and fisher people from the coast. Imperisalism granted on the feelings of the professional men, educated in English, much more than on those of the poor and unlettered-- just as it did in imperial India.... This laid down the future aim of the colonial system of education in the sub continent: to create 'a class of persons Indian in blood and colour, but English in opinions, in morals and in intellect"). யாழ்ச்சூழலில் இருந்த சாதியை மையமாக வைத்து வூல்ப்வ், 'இரண்டு பிராமணர்கள்' (The Two Brahmans) என்றொரு கதையை எழுதியிருக்கின்றார் (பிராமணர்கள் என்பதில் அவர் வெள்ளாளர்களையும அடக்குகின்றார் எனத்தான் நினைக்கின்றேன்). சாதியில் உயர்நிலையில் இருக்கும் இரண்டு பிராமணர்களான செல்லையாவும், சிற்றம்பலமும் எப்படி தமது சாதிகளிலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என்பதை இக்கதை சொல்கின்றது. செல்லையாவுக்க்கு மீன்பிடித் தொழிலில் ஆசை வந்து அதை இரகசியமாக ஒரு மீனவரிடம் இருந்து பழகுவது அவர் சார்ந்த சாதிக்குத் தெரியவர அவர் அச்சாதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும், சிற்றம்பலம் தனது வீட்டுக்கிணற்றை வெட்டித்தந்த ஒரு தாழ்த்தபட்டவருக்கு கருணையுடன் கூடக்காசு கொடுத்து அன்பு பாராட்டியதற்காக ஒதுக்கப்படுவதாகவும் இக்கதை விரித்துச்சொல்லுகின்றது. ஆனால் இப்படி தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கப்பட்ட இரு குடும்பத்தினரின் அடுத்த சந்ததியினர் (செல்லையாவின்) மகன் ஒருத்தரும், (சிற்றம்பலத்தின்) மகள் ஒருத்தியும் காதலிக்கும்போது கூட எப்படி அவர்களுக்கிடையில் சாதித்திமிர் மீண்டும் முளைத்தெழுகின்றது என்பதை வெளிப்படையாக வூல்ப்வ் அக்கதையில் குறிப்பிடுகின்றார் (Each family finally accuses the other of polluting the caste. "Fisher! Low-caste dog!" shouted Cittampalam. "Pariah! scaramed Chellaiya). இறுதியில் இச்சாதிய இறுக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற செல்லையாவின் மகன் ஊரைவிட்டே ஒடிப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகின்றது.

யாழில் பணிபுரிகின்ற காலங்களில் தற்காலிகமாய் சில மாதங்கள் மன்னாருக்கும் சென்று வூல்ப்வ் வேலைபார்க்கின்றார். சனநெருக்கடியற்ற மன்னார் வூல்ப்பிற்கு யாழ்ப்பாணத்தைவிட அதிகம் பிடிக்கின்றது. அங்கே முத்துக்குளிக்கின்ற மீனவர் சமூகங்களும், அரேபியர்களும் அவ்வளவு இறுக்கமான சாதிய அடுக்குநிலையில் இயங்கிக்கொண்டிருக்காததையும் வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். பிறகு வேலை இடமாற்றங்காரணமாய் கண்டியிலும், இறுதியாய் ஹம்பாந்தோட்டவிலும் வூல்ப்வ் பணிபுரிகின்றார். ஹம்பாந்தோட்டாவில் உதவி அரசாங்க அதிபராக (Assistant Government Agent) பணிபுரிவதால் அவர் விரும்பிய சில விடயங்களை -முக்கியமாய் புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பது- அவ்வூர் மக்களுக்காய்ச் செய்யமுடிகின்றது. ஒரு தமிழ்ப்பாடசாலையும் ஹம்பாந்தோட்டாவில் வூல்ப்வ் ஆரம்பித்துவைத்தார் என்ற குறிப்பும் வருகின்றது. கண்டியில் பணிபுரிகின்ற காலத்தில் - தூக்குத்தண்டைக்கு எதிரான கருத்துடையவராக வூல்ப்வ் பின்னாட்களில் இருந்தாலும்- வூல்ப்பின் அனுமதியுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஏழெட்டுப்பேர் தூக்கிலிடப்படுகின்றார்கள். அதேபோன்று பிரிட்டிஷகாரர்கள் ஒபியம் (போதை) பயிர்களை ஹம்பந்தோட்டாவில் பயிரிடும்போது எவ்வித எதிர்ப்பும் காட்டாது அதன் மூலம் வரும் வரியைச் சேகரித்து அரசாங்க வேலைகளுக்காய் வூல்பவ் செலவிடுகின்றார். இறுதியில் ஒரு சிங்கள விவசாயின் வீட்டை -ஒரு பிரச்சினையின் நிமித்தம்- தீ மூட்டச்சொல்லும் மேலிடத்தின் பணிப்புக்கு அடிபணியாததால் அவர் -ஒருவருட கட்டாய விடுமுறையில்- திருப்பி இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றார். அதற்கடுத்த வருடத்தில் (1912) வேர்ஜினியாவை வூல்ப்வ் இங்கிலாந்தில் திருமணம் செய்கின்றார். முதலிரண்டு முறைகள் வூல்ப்வ் propose செய்தும் மறுக்கின்ற வேர்ஜினியா, மூன்றாவது முறையாக இந்தச் 'சதமில்லாத யூதரை' (penniless Jew) திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றார். ஒரு வித மனப்பிறழ்வு நோயிற்கு அடிக்கடி ஆளாகும் வேர்ஜினியாவுக்கு -அவர் ஆற்றில் தற்கொலை செய்யும்வரை- தான் உண்மையாக இருந்தேன் என வூல்ப்வ் கூறிக்கொண்டாலும், வேர்ஜினியா உயிரோடு இருந்த காலங்களிலேயே வூல்ப்விற்கு, ரெக்கி (Trekkie) என்ற திருமணமான பெண்ணோடு உறவு இருந்திருக்கின்றது. அதேசமயம், சிறுபிராயத்தில் தனது உடன்பிறவாச்சகோதரர்களால் (half brothers) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேர்ஜினியாவுக்கும் ஆணுடான உறவு அவ்வளவு உவப்பானதாய் இருக்காததால், இடைப்பட்ட சில காலங்களில் அவரொரு லெஸ்பியனாகவும் இருந்திருக்கின்றார்.

1960களில், வூல்ப்வ் மீண்டும் இலங்கைக்கு, தனது 'தோழி' ரெக்கியோடு பயணிக்கின்றார். முன்பு தான் பணிபுரிந்த யாழ்ப்பாணம் உட்பட அனைத்து இடங்களையும் மீண்டும் பார்க்கின்றார். 1900களில் தான் பார்த்த யாழ்ப்பாணம் இப்போதும் அப்படியே மாறாதுதான் இருக்கின்றது என்று வூல்ப்வ் குறிப்பிடுகின்றார் (In Jaffna he felt the place had not changed much since his time and was told that the people there were very conservative. Even in 1960, Jaffna had a character distrinct from other towns). அதேபோன்று 1900 களிலேயே சிங்கள/தமிழ்/முஸ்லிம்/பேர்கர் மக்களுக்கு சுவிஸிலிருக்கும் ஒரு அரசாங்க அதிகார அமைப்பே சரிவரும் என்று ஒர் தெளிவான பார்வையோடு வூல்ப்வ் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் (அந்தக்காலகட்டத்தில் -1900-களில் எவ்வித தமிழ்- சிங்கள இனக்கலவரமும் தோன்றாததையும் நினைவில் கொள்ளவேண்டும்; ஆனால் கண்டியில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரங்கள நடந்ததை வூல்பவ் குறிப்பிடுகின்றார்). அதேயேதான் 1960 பயணித்தபோது, சிங்கள அரசியல்வாதியொருவரின் மேடைப்பேச்சை கேட்டபோது தனக்கு இப்படித்தோன்றியதாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார்:
Woolf mentioned listening to one Sinhalese politician "screaming in a monotonous freenzy which carried me straight back to the days before the war when turned on the wireless and heard Hitler screaming through the microphone at the frenzied Nazis".

வூல்ப்வ் எழுதிய இன்னொரு சிறுகதையான, 'நிலவால் சொல்லப்பட்ட கதை' (A Tale Told by Moonlight) ஐந்து உயர்தர வர்க்க ஆங்கிலேய ஆண்கள் ஒரு மாலைபொழுதில் இங்கிலாந்தில் ஒரு சொகுசான இடத்தில் இருந்துகொண்டு தாம் கீழைத்தேய நாடுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்து உரையாடுவதாய் அந்தக்கதை இருக்கின்றது. அதில் ஒரே ஒருவர் மட்டுமே இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பவர். அவர் அடிக்கடி தமது பேச்சில் தமிழ்-சிங்களச் சொற்றொடர்களைச் சாதாரணமாய் உபயோகித்துவிடுவார். பிறகு மற்ற நண்பர்கள் நீ என்ன சொல்கின்றாய் என்று விளக்கந்தெரியாது வினாவுகின்றபோது அந்தநபர் விரித்துச் சொல்லத்தொடங்கிவிடுவார். அதில் 'இராமேஸ்வரத்திலிந்து காசி வரை' என்ற தமிழ்ச்சொற்றொடர் கூட வரும் (இந்தியாவை முழுதும் அறிந்தவர் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்ற பொழிப்புரையும் அந்தக்கதையில் கொடுக்கப்படும்). அதில் 'வேசி', 'ஐயோ' போன்ற சொற்கள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதையின் ஒரு பகுதியாய், கொழும்பில் சிவப்பு விளக்கு ஏரியாவிலிருக்கும் ஒரு பெண்ணில் மையல் கொள்ளும் ஒரு வெள்ளையர், அந்தப்பெண்ணை அந்தப் பகுதியிலிருந்து விடுவித்து ஆங்கிலமும், மேலைக்கலாச்சாரமும் சொல்லிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்வார். என்ன தான் சொல்லிக்கொடுத்தாலும், தன்னைப்போல ஒரு அறிவுஜீவியாக இருந்து உரையாடும் 'வரம்' அந்தப்பெண்ணுக்கு கைவரவில்லை என்ற அலுப்பில் பின்னர் அந்தப்பெண்ணைக் கைவிட்டு இங்கிலாந்திற்கு அந்த வெள்ளையர் போய்விடுகின்றார். அவர் இங்கிலாந்து போன இரண்டாவது நாளில் Celestiinahami ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கின்றார். ஆனால் இறக்கும்போதுகூட அந்தப் பரிதாபமான பெண், 'பிங்க் கலர் ஸ்கேர்ட்டும், வெள்ளை நிற ஸ்ரொக்கிங்ஸும், சப்பாத்தும்' அணிந்தபடிதான் (மேற்கத்தைய கலாசார அடையாளங்களுடன்) தற்கொலை செய்திருப்பார். இங்கே, இப்படி வெள்ளையர்கள் தங்கள் (உடல்?)விருப்புக்கு துணைகளாக்கும் பெண்களை, பின்னாட்களில் வெள்ளையர்கள் வாழும் மேற்குச்சமூகம் இப்பெண்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், அதேசமயம் இப்படி வெள்ளையர்களை மணப்பதால் அல்லது அவர்களோடு திரிவதால், மீண்டும் இந்தப்பெண்களை இவர்கள் சார்ந்திருந்த சமூகம் இவர்களை உள்வாங்க மறுக்குகின்ற அவலத்தையும் நாம் நினைவில் இருத்திக்கொள்ளலாம். லியனார்ட் வூல்ப்வ், பாப்லோ நெருடா போன்றவர்களாவது ஒருவித பாவமன்னிப்புப்போல தாங்கள் கீழைத்தேயங்களில் --தமது அதிகாரத்தைப்பாவித்து-- சிதைத்த பெண்களைப்பற்றியாவது வெளிப்படையாகக் குறிப்பிடும்போது 'அட அறுவாங்கள் இதையாவது சொன்னார்களே' என்று கேட்டுக்கொள்ளமுடிகின்ற அதேசமயம், சத்தமில்லாது எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு ஆனந்தசயனம் கொள்ளும் மற்றக்கனவான்களின் கல்லறைகளைத் தட்டி எழுப்பியா நாம் அவர்களை மறுவிசாரணை செய்யமுடியும்?

இந்நூலில், வூல்ப்வ் இருந்த இடங்கள் பயணித்த பாதைகள் ஊடாக கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிப்பதுடன், இன்றைய ஈழச்சூழ்நிலை குறித்து தனது குறிப்புக்களை எழுதிச்செல்வது ஒரு நூற்றாண்டுக்கு முன்பான பழைய இலங்கையை இன்றைய ஈழத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பை வாசகருக்கு ஒண்டாஜ்ஜி வழங்குகின்றார். யாழ்ப்பாணத்தில் வூல்ப்வ் பணி புரிந்த, தங்கியிருந்த அனேக இடங்கள் போரின் நிமித்தம் இன்று சிதைவுற்ற இட்ங்களாய், அடையாளங்காணமுடியாத பகுதிகளாய், கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான பிரதேசங்களாய் இருப்பதை கிறிஸ்ரோபர் படங்களாலும் குறிப்புகளாலும் இந்நூலில் நமக்கு ஆவணப்படுத்துகின்றார். யாழ், மன்னர் உட்பட நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கும் தான் போனது பற்றி ஒண்டாஜ்ஜி விரிவாக எழுதியதோடு ஏ9 (A9) பாதையினூடாக பயணித்தபோது கண்ட போரின் வடுக்களையும் பதிவு செய்திருக்கின்றார் (ஆனையிறவில் சிதைவுற்றிருக்கும் ராங் பற்றிய (tank) குறிப்புக்கூட வருகின்றது). ஒரளவு அரசாங்கச்சார்புச் செய்திகளைத்தான் அதிக இடங்களில் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் என்றபோதும், தான் பார்த்த சிங்கள, தமிழ் மக்களிடையே அவ்வளவு வித்தியாசமோ, வெறுப்போ தெரியவில்லையெனவும். ஆனால் இலங்கை அரசாங்கமும், சிறிலங்காப் படைகளும், விடுதலைப்புலிகளுந்தான் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்று தான் விளங்கிக்கொண்டதை நூலின் இறுதியில் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார்.

யாழ் கச்சேரியின் சிதைவடைந்த நிலையைப் பற்றிக்கூறும்போது, எனக்கும் சிறுவயதில் அப்பா யாழ் கச்சேரியில் பணிபுரிந்த காலங்களில் அவரோடு சில தடவைகள் கச்சேரிக்குப் போன ஞாபகங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. 95 000 மேற்பட்ட புத்தகங்களும், மீண்டும் பெறவே முடியாத அரிய வரலாற்று ஆவணங்களும் யாழ் நூலகத்தோடு அழிக்கப்பட்ட வரலாற்றையே -இன்றைய உக்கிரமான போர்க்காலம்- மிகச்சின்ன விடயமாக்கிக்கொண்டிருக்கும்போது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகள் கூட ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்ப்பது போன்ற பார்வையை தருவது வியப்பில்லைத்தானே.

ஆரம்பத்தில் தான் ஒரு ஏகாதிபத்தியவாதியாக -தன்னையறிமால் இருந்திருந்தாலும்- பின்னாட்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்ததாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். இங்கிலாந்தில் தான் அமைத்த Bloomsbury group ஊடாக பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்கத்துக்கு எதிராக வூல்ப்வைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். வூல்ப்வ் எழுதிய குறிப்புகளை அவரெழுதிய காலத்தில் வைத்தே பார்க்கவேண்டும் என்றாலும், பல இடங்களில் வூல்பவ் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருப்பதை நாம் மறைத்துக்கொண்டு உரையாடியவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அழிக்கப்பட்ட சிங்களக்கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய வூல்ப்பின் நாவலான, The Village in the Jungle காலனியாதிக்கெதிரான ஒரு புதினமாய் இன்று பல விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது. அநேக காலனியாதிக்கவாதிகள் போல சாதி, தாழ்த்தப்பட்டவர்களின் அவலம் போன்ற விடயங்களை, தங்களுக்கு அவசியமான விடயங்களல்ல எனப்புறந்தள்ளாது இவ்வாறான விடயங்களை கவனத்துடன் எடுத்துக்கொண்ட வூல்ப்வ் ஒதுக்கப்படவேண்டிய ஒரு காலனியாதிக்கவாதியும் அல்ல. முக்கியமாய், ஹம்பாந்தோட்டாவில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணொருவர் ஒரு வழக்கை வூல்ப்வ் முன்னிலையில் கொண்டுவருகின்றார். தாழ்த்தப்பட்ட பெண்கள், மார்பைத் தொடும் ஒரு சின்னத்துணி மட்டுமே அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், இரவிக்கை (blouse) போட தனக்கு அனுமதி தருமாறு அப்பெண் கேட்கின்றார். எனென்றால் அரிசி போன்றவை இடிக்கும்போது இரவிக்கை போடாதிருப்பதன் அசெளகரியங்களை அப்பெண் முன்வைக்கின்றார். வூல்ப்வ் அவ்வ்வூர்களின் 'கலாசாரம்/மரபுகள்' மீது தான் இடையீடு செய்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றபோதும், இப்பெண் விரும்பினால் அவர் அவ்வாறு இரவிக்கை போட அனுமதிக்கவேண்டும் என அவ்வூரின் தலைவரொருவருக்கு கட்டளையிடுகின்றார்.

இப்போது மீண்டும் நாம் காலனியாதிக்கம் என்ற புள்ளிக்கு வருவோம். காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச்சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்.

Photos: From the book 'Woolf in Ceylon'.
(Thami: 4 ur dream fulfilled...)

வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன்

Friday, August 03, 2007

*யசோதராவிற்காய்
வீடு திரும்பிய புத்தர்
நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்
பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீ
தொடர்ந்து பின்தொடர்வதற்கு
தன்னிடம் சிலிக்கனால் உருப்பெருப்பிக்கப்பட்ட
முலைகள் எதுவும் இல்லையென்றார் சினத்துடன்.
**வைன்கோப்பை-நீலோற்பலமொட்டு-விளாங்காய்
கவிதைகள் நிரம்ப வாசிக்க
புத்தர் எப்போது தமிழ்படித்தாரென
அகழ்வாராய ***கந்தரோடைக்குப் பயணித்திருந்தேன் இருளில்.

ஒருநாள்;
கிழக்கில் தமிழரின் அடையாளமழித்து
சாந்தத்தை வெற்றியின் சின்னமாக்கும் வாளேந்திய சிங்கங்களுக்கெதிராய்
புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து
எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்
பின்
த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க
வண்ணத்துப்பூச்சியொன்றை
வெறியுடன் புணரத்தொடங்கினேன்
எவர்க்கும் சொந்தமில்லாது எவனாகவோ ஆகுமென்னை
யசோதரா
புத்தரையும் வண்ணத்துப்பூச்சியையும் சிதைத்தற்காய்
ஒரு குற்றவாளியென தூக்குக்கயிரை மாட்டிவிடுகின்றாள்.

இப்படித்தான்
எங்கள் நாட்டில் சமாதானம் வருவதற்காய்
ஒரு சுன்னத்துச்செய்யப்பட்ட தமிழ்ப்பவுத்தன்...
பைத்தியமாகி அலைந்தானெனும் குறிப்பு
அம்பனையின் பதுங்குகுழியிலிருந்த மண்டையோடென்றில் பதியப்பட்டிருந்தது.

* தொடர்புடைய முன்பு
எழுதப்பட்ட கவிதை
** சேரன், திருமாவளவன், செழியன் கவிதைகளில் இச்சொற்கள் முலைகளுக்கு உவமிக்கப்படுகின்றன
*** தொல்பொருள் அகழ்வராய்வுகள் நடைபெற்ற இடம். தமிழர்கள் பவுத்தர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


(அய்யனாருக்கு...)

'வடு' - வீழ்ச்சி': பகிர்வுக்குறிப்புகள்

Monday, July 30, 2007

-இரண்டு புதினங்களை முன்வைத்து-

நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருக்கின்றோம். சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு நம்பிக்கை தந்த புரட்சிகள் கூட இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கங்களால் பொடிப்பொடியாக தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலங்காலமாய் இருந்துவரும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரமோ இன்னும் தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியிருக்கின்றது. நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று எதுவும் அண்மையில் தென்படாதபோதும் தமது வாழ்க்கையை ஒடுக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பதிவுகளில் ஒளித்து வைக்கப்படும் தீக்குச்சியளவு வெடிமருந்திலிருந்து தமது அடுத்த சந்ததி பெரும் ஒளிப்பந்தங்களை ஏந்திக்கொண்டு தமது சந்ததிகளை எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடச்செய்வார்கள் என்ற நம்பிக்கையை தமது எழுத்துக்களில் புதைத்துவைக்கின்றார்கள். அவ்வாறு மேலாதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்படும் ஒரு தலித்தின் சுயசரிதையை கே. ஏ.குணசேகரனின் வடுவும், காலனித்துவத்தால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உட்கட்ட வாழ்வியலை சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சியும் (No Longer at Ease) வாசகர்களுக்கு விரித்து வைக்கின்றது.

2.
கே.ஏ.குணசேகரனின் வடு ஒரு சுயசரிதை நாவல். மராட்டி, கன்னடம் போன்றவற்றில் மிக வீரியமாய் பதிவுசெய்யப்பட்ட தலித் சுயசரிதை நாவல்கள் போன்றல்லாது மிகக்குறைவாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் புதினத்தில் கே.ஏ.குணசேகரனின் பதினம்வயதுவரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவர் இதில், 'இடதுசாரி இயக்கங்களோடு என்னை ஈடுபடுத்திக்கொண்டு, கலைப்பயணம் மேற்கொண்ட காலம் தொட்டு இன்றுவரை என் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை இதில் இடம்பெறவில்லை' என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அதையும் பதிவு செய்யும்போது இன்னும் வீரியமான தலித் ஒருவரின் வாழ்வு தொகுக்கப்படும் சாத்தியம் உண்டு. ஒரு சிறுவனாய் -அவர் பகுத்தறிந்து ஆராய முடியாத வயதிலேயே- எப்படி சாதிப்பேய் தனக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெகு நுட்பமாய் குணசேகரன் வடுவில் பதிவு செய்கின்றார். இதிலே குணசேகரனும் அவரது உறவினர்களும் ஆதிக்கசாதியால் அடிவாங்கிய சம்பவங்களையும், நிலத்தில் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்ட நிகழ்வுகளும் எண்ணிக்கையில் நீண்டவை. ஒவ்வொரு சம்பவங்களையும் குணசேகரன் விபரிக்கும்போது, இங்கேயும் அவர் அடிவாங்கிவிடுவாரோ அல்லது இவரது எதிர்ப்புக்காய் ஆதிக்கச்சாதியினரிடம் அவரது தாத்தா காலில் வீழ்ந்து கும்பிடப்போகின்றாரோ என்ற பதட்டம் ஒவ்வொருமுறையும் வாசிப்பவருக்கு வந்துகொண்டேயிருக்கும். தமது கிராமம் முஸ்லிம் சமூகத்தால் அதிகம் சூழப்பட்டதால் அவ்வளவு சாதியின் வீரியம் தெரியாமல் வளர்ந்திருந்தாலும் ஊரைவிட்டுபோகும்போது எப்படி சாதிப்பேய் தங்களை ஆட்டுவித்தது என்பதை குணசேகரன் வேதனையோடு பதிவுசெய்கின்றார். இன்னும் அவரது அண்ணா முறையான ஒருவரை அவரது தகப்பனும் சித்தப்பாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து வைத்தியராக ஆக்கும்போது, அவர் வேலைசெய்யும் நகரில் சிகிச்சை பெறும்போது மட்டும் ஒரளவு மதிப்புக்கொடுத்துவிட்டு ஊருக்கு வரும்போது அவ்வைத்தியரை ஒருமையில் அழைத்து நக்கலடித்து மதிப்புக்கொடுக்காத ஊரின் ஆதிக்கச்சாதியினர் பற்றிக்கூறும்போது, பொருளாதார ஏற்றத்தால்கூட இந்தச் சாதிப்பேய் அழிந்துவிடாது என்பது நமக்கு உறைக்கத்தான் செய்கின்றது. மேலும் தலித்துக்களின் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதைகளைக்கூட் ஆதிக்கச் சாதிகள் எப்படி வழிமறித்து பயணிக்கவிடாது அழிச்சாட்சியம் செய்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒடுக்குபவர்கள் மீது வெறுப்பு வராதிருந்தால் மனிதர்களாய் இருக்கமுடியாது. ஆசிரியப்பணியில் இருக்கும் இருவர் திருமணம் செய்து மாட்டுவண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்துதான் தமது தெருக்களால் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும் ஆதிக்கசாதியின்ரைப் பார்க்கும்போது நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக்கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்கவேண்டியிருக்கின்றது. ஆதிக்கச் சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து நக்கலடிப்பதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

ஒரு சம்பவத்தில், கதைசொல்லியை ஒரு ஆதிக்கச்சாதிப் பையன் வேண்டுமென்று அடித்துவிட்டு 'பறப்பயலே' என்று திட்டிவிட்டு ஓடிவிடுகின்றான். வந்த கோபத்தில் திருப்ப அவனைத் துரத்திச்சென்று ஆதிக்கச்சாதி பையனின் வீட்டடியில் வைத்து கதைசொல்லி திருப்பி அடித்துவிடுகின்றான். இப்படியொரு சம்பவம் நடந்தால் ஆதிககச்சாதிப்ப்பேய்கள் சும்மாயிருக்குமா?

'சாதி தெரியாம வந்து வூட்டுக்குள்ள நொழைச்சிருக்கான்னா அந்தப் பயலுக்கு என்ன திமிரு இருக்கும். எங்க? அவனைக் கையையும் காலையும் கட்டித் தூக்கிட்டுப் போகணும்'ன்னு சத்தம் போட்டாங்க. எனக்கு திக் திக்குன்னு இருந்திச்சு. காலனி ஆளுகளும் வாசல் முன்னாடிக் கூட்டமாக் கூடிட்டாங்க. அப்பாடா ஒருவழியா அமைதியாக திருப்பிப் போனாங்க. அவன் அடிச்சதப் பத்தியாரும் பெரிசாப் பேசல. சாதி தெரியாம தெருவுக்குள்ள பறையன் போனதும் வூடு நொழைஞ்சதையும்தான் எல்லோரும் பெருசாகப் பேசினாக' (ப 52) என்கின்றார்.

இதேமாதிரி இன்னொரு இடத்தில், கதைசொல்லியின் வீட்டில் இருந்த மரஞ்செடிகளிலிருந்து 'பூவையும் பிஞ்சையும் இலையோட ஏன் அத்துபோடுற?' என்று ஆதிக்கச்சாதிப்பையனிடம் திரும்பிக் கேட்கும்போது அவன் கதைசொல்லியை அறைந்துவிட்டு ஓடிப்போய் நாலைஞ்சு பெரிய ஆட்களோடு திரும்பி வருகின்றான். நிலைமை விபரீதமாய்ப் போவதைக் கண்ட கதைசொல்லியின் தாத்தா, 'அவங்களைக் கும்பிட்டு, 'அய்யா! அய்யா! டவுன்ல இருந்து வந்த புள்ள, அதுக்கு நம்ம ஊரு வெவரம்லாம் புரியாது, தெரியாதுங்க.மன்னிச்சு விட்டுங்க அய்யா. அய்யா'ன்னு நெடுஞ்சாண்கெடையா விழுந்து கும்பிட்டாரு'(ப 80).

இப்படித்தான் பல சம்பவங்கள் இறுதியில் எதுவுமே செய்யமுடியாது அடிபணிவதோடு போய்விடுகின்றது. சிறுவர்களின் வயதிலே இப்படியான சாதிக்கொடுமைகள் அடையாளப்படுத்தப்படும்போது இப்படி வளர்கின்ற சிறுவர்கள் பின்னாட்களில் என்னவாறு இருப்பார்கள் நாம் கட்டங்கட்டி விபரிக்கத்தேவையில்லை. நகரங்களுக்கு நகர்வதுதான் ஒரளவு சாதியின் கொடுமையைக் குறைக்கும் என்றும் தனது அனுபவத்தினூடு குணசேகரன் குறிப்பிடவும் தவறவில்லை (பெரியாரும் இதை வலியுறுத்துகின்றார்). ஆனால் இவ்வாறான முடிவு தற்காலிக முடிவாய் இருக்குமே தவிர ஒரு நிரந்தரமான தீர்வாய் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். அதேசமயம் நாட்டார் தெய்வங்களை இந்துத்துவத்திற்கு எதிராய் முன்வைக்கும் அவசியம் இருப்பினும், நாட்டார் தெய்வ வழிபாடுகள் கூட இன்னொருவிதத்தில் சாதியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் அபாயம் உள்ளதென்ற நுண்ணரசியலையும் நான் விளங்கிக் கொள்ளவேண்டும். சாதியின் நுண்ணரசியலை வெவ்வேறு தத்துவங்கள்/அரசியல் படிப்புகள் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நம்மிலிருந்து நாம் சாதியின் கூறுகளை விடுபடச்செய்வதென்பது நம் ஒவ்வொருத்தரின் அகத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறுசெயல்களிலிருந்தும் சாதிய நீக்கம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆனால் யதார்த்தமோ (புலம்பெயர்சூழலில்கூட) ஜீன்களிலிருந்து கடத்தப்படுவதைப்போல, பெற்றோர் உறவுகளிடமிருந்து இங்கே பிறக்கும் பிள்ளைகளிடம் கூட சாதி அட்சரம் தவறாது பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலமானது; அபாயகரமானது.

3.
சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சி (No Longer at Ease) நாவல் காலனியத்துவத்தை கேள்விக்குட்ப்படுத்துவதில் ஆரம்பித்து, பின் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தின் உள்கட்டுமானத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதுடன் முடிகின்றது. ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னை ஒடுக்கும் சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்ற அதேவேளை தன்னையும் சுயவிமர்சனம் செய்கின்ற இடத்தையும் எவரும் மறுத்துவிடமுடியாது. நைஜீரியாவின் ஒக்கொங்கோ சமூகத்தைச் சேர்ந்த ஓபியின் பார்வையிலேயே இந்த நாவல் கூறப்படுகின்றது. காலனித்துவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து இங்கிலாந்து சென்று படிப்பதற்காய் ஒபியை அந்தச்சமூக மக்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் சேர்ந்து அனுப்புகின்றார்கள். அங்கே படிப்பை முடித்துவரும் ஒபிக்கு மீண்டும் தனது சொந்தமக்களோடு ஒட்டமுடியாத அவதி மிக நுட்பமாய் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றது (அமெரிக்கப்பூர்வீககுடிகளுக்கு தாங்கள் கல்வியறிவு புகட்டுகின்றோம் என்று வெள்ளையினத்தவர் அழைத்து படிப்பித்து விவிலியத்தையும் கொடுத்து -தமது பூர்வீகதொழிலோடும் மக்களோடும் ஒட்டமுடியாத- பூர்வீககுடிகளின் ஒரு புதிய தலைமுறையினர் தோன்றியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). இங்கிலாந்திலிருந்து திரும்பி வருகின்ற ஒபிக்கு பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. ஊழலும் இலஞ்சமும் நிரம்பியிருக்கும் நைஜீரியா அரச அமைப்போடு ஒத்துப்போகமுடியாத அவதி ஒபிக்கு வருகின்றது. மேலும் ஒபி தனது சமூகத்தை (சாதியை) சேராத ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பதால் ஒபியின் சமூகம் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மேலும் தன்னை புரிந்துகொள்வார்கள் என்று நினைகின்ற அவரது பெற்றோர் கூட ஒபியின் காதலை நிராகரிக்கின்றார்கள்.

இப்படி ஒபியை தாங்கள் கஷ்டப்பட்டு பணஞ்சேகரித்து படிக்கவைத்ததால் தமது சமூகத்திற்கு பலவேறு வழிகளில் ஒபி உதவுவார் என்று அவரது சமூகம் அவரில் வைக்கும் நம்பிக்கையையும், ஒபி தானொரு நேர்மையாளராய் இருக்கும் விருப்புக்கேற்ப (இலஞ்சம் வாங்காத, சிபார்சு செய்யாத குணங்களால்) அதையும் செய்யமுடியாது போகின்றது. இறுதியில் ஒபியின் காதல் நிறைவேறாது, தனது காதலியின் வயிற்றில் வளரும் குழந்தையை -காதலின் முறிவால்- கருச்சிதைவு செய்யவேண்டிய நிலை ஒபிக்கு வருகின்றது. அதன் நீட்சியில், தாம் மிகவும் நேசிக்கும் தாய் இறந்தும்கூட -இன்னொரு நகரில் வேலை செய்யும் ஒபியால்- தாயின் இறுதிச்சடங்கைப் பார்க்க விரும்பதாதவளவுக்கு தனது கிராமத்தின் மீது அதிக வெறுப்பு வளர்கின்றது. தாய், காதலி எல்லோரும் போய்விட்டதால் தன்னைச் சுற்றிய இறுக்கமான் இழைகள் அகற்றபட்டு, தானொரு செட்டை கழட்டி மீண்டும் புத்துயிரான பாம்பு என ஒபி நினைக்கின்றார். ஆனால் இதுவரை இலஞ்சம் வாங்காத, புலமைப்பரிசில் சிபார்சுகடிதத்திற்கு வரும் பெண்களை கட்டிலுக்கு அழைக்காத ஒபி என்ற நேர்மையாளன், காலப்போக்கில் இல்லாமற் சிதைந்து போகின்றார். புலமைப்பரிசிலுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு சிபார்சுக்கடிதம் கொடுப்பதற்காய் அவர்களின் உடல்கள் ஒபிக்க காணிக்கை செய்யப்படுகின்றது. அவ்வாறு காணிக்கை செய்யமுடியாத ஆண்களிடம்/பெண்களிடமும் நிறைய இலஞ்சம் வாங்குகின்றார். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல ஒருநாள் இலஞ்சம் வாங்கும்போது ஒபி கைதாகின்றார். எப்படியிருந்த ஒபி இப்படியாகப் போய்விட்டாரே என்று எல்லோரும் வியக்கும்படியாக் ஒபி ஜெயிலுக்குப் போவதுடன் புதினம் முடிகின்றது.

இந்நாவலை வாசித்து முடியும்போது, இந்தப் படிப்பு, வசதி போன்றவற்றால் என்ன பயன் என்ற வாழ்வின் அபத்தமான் கேள்வி நம்முன் வந்து விழுவதை நாம் தவிர்க்கமுடியாது. இன்றும் காலனித்துவம் முடிந்தபின்னும், காலனித்துவம் எப்படி மூன்றாம் உலக நாடுகளின் தனது கண்காணிப்பை வைத்திருக்கின்றது என்பதை உய்த்துணர அவ்வளவு கஷ்டப்படத்தேவையில்லை. ஒருகாலத்தில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் இப்போது எப்படி உலகமயமாக்கங்கள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வைச் சீரழிக்கின்றார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. (வேண்டும் என்றால் John Perkins எழுதிய Confessions of an Economic Hit Man என்று 2004ல் வந்த நூலைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்). இதனால்தான் நாமின்று NGO என்றும் இன்னபிற பெயர்களிலும் நம் நாடுகளிலும் வந்திறங்கும் 'கருணைபொங்கும்' அமைப்புக்கள் மீது சந்தேகப்படவேண்டியிருக்கின்றது. மிக நுட்பமாய் அவர்கள் நமது சமூகத்தில், கலாசாரத்தில் ஊடுருவும் புள்ளிகள் குறித்து அதிக கேள்விகள் எழுப்பவேண்டியுமிருக்கின்றது.

4.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப்போன்ற பலர் அனுபவித்துணரமுடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றது. பதின்மவயதோடு இச்சுயசரிதை முடிவது ஒருவிதத்தில் பலவீனம் என்றும் சொல்லவேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் தலித்துக்கள்/ ஒடுக்கப்பட்ட பெண்கள் போன்றோரை தன்னுடைய சிறகுகளால் அடைக்கலம் கொடுக்கும் இடதுசாரிகளை நாம் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும். ஆனால் அதேசமயம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட குஞ்சுகள் சிறகுகள் வளர்ந்து தமக்கான் சொந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்து பறக்கத் தொடங்கும்போது கையசைத்து விடைகொடுக்கவேண்டுமே தவிர துரோகிகள்/எதிரிகள் என்ற அடையாளப்படுத்துவதை இடதுசாரிகள் தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். இதே சமயத்தில், குணசேகரன் போன்ற ஒரு தலித் ஏன் காலச்சுவடை தனது பதிப்பாளாராகத் தேர்ந்தெடுத்தார் என்று நாம் கேள்வி எழுப்புவதையும் தவிர்க்கமுடியாது. இதுவரை குணசேகரனின் புத்தகங்கள் எதுவுமே காலச்சுவடால் வராதபோது இந்த சுயசரிதையை எழுதிவிட்டு தான் காலச்சுவடுக்கே பிரசுரிக்க முதலில் அனுப்பினேன் என்று ஒருவித 'பெருமிதத்துடன்' குணசேகரன் குறிப்பிடுவதன் அரசியல் குறித்தும் நாம் கேள்விகேட்கவேண்டியிருக்கின்றது (தலித்துக்கள்/விளிம்புநிலைமனிதர்கள் மீது அக்கறையெடுத்து புத்தகம் போடும் பிற பதிப்பகங்கள் குணசேகரனின் கண்களில் தென்படாதது பெரும் வியப்புத்தான்).

சினுவா ஆச்சுபேயின் நாவலை தமிழில் கே.மகாலிங்கம் நல்லதொருவிதமாய் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால் தலைப்பை இப்படிச் சுருக்கவேண்டுமா என்ற கேள்வியும் உண்டு. அது மொழிபெயர்ப்பு என்பதாய் அன்றி மொழித்தழுவலாய் போய்விடும் அபாயமுண்டு. ஏற்கனவே மொழிபெயர்த்த 'சிதைவு'களுக்கும் (Things Fall Apart) இவ்வாறான சர்ச்சை வந்ததை மகாலிங்கம் அறியாதவரல்ல அல்லது அந்த விமர்சனத்துக்காய் ஒரு எதிரொலியாகத்தான் இதையும் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவெனினும் நல்லதொரு மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பதற்காய் இவ்வாறான சின்னச்சின்ன விடயங்கள் குறித்து மறந்துவிடலாம். ஆனால் வழமைபோல இங்கேயும் ஜெயமோகன் முன்னுரையில் அரசியல் செய்வதை நாம் அவ்வளவு இல்குவாய் கடந்துபோக முடியாது....'சினுவா ஆச்செபியின் நாவல் கிட்டத்தட்ட ஒரு இந்திய-தமிழ் நாவல் மாதிரியே உள்ளது' (ஏன் ஈழ-தமிழ் நாவலாய் இருக்கமுடியாது?)என்பதில் ஜெயமோகன் எதனைக் கூறவருகின்றார்? ஏன் அவரால் இதையொரு தமிழ் நாவல் என்றோ மூன்றாமுலக நாடுகளின் நாவல் என்றோ பொதுவாய்ச் சொல்லமுடியவில்லை? இந்தியா என்ற அடையாளம் ஏன் இங்கு தேவைப்படுகின்றது? இந்நாவல் இந்தியா, இலங்கை மட்டுமில்லை; காலனியத்துவத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளுக்கும் பொருத்தமானதே. அதைவிட அடுத்த வரியில் ஜெயமோகன் சொல்லவருவதுதான் அவர் எந்தப்புள்ளியில் நிற்கின்றார் என்பது புரியவரும். 'இங்குள்ள ஊழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சிவப்பு நாடா அனைத்துமே அங்கும் உள்ளன'. இதை இன்னொரு வாசிப்பாய், இந்தியாவில் மட்டுமில்லை நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் கூட சாதி இருக்கின்றது என்று எங்களை நியாயப்படுத்துவது போன்ற வாசிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. எங்கோ ஒரு விவாதத்தில் இந்தியா (ஈழம்) போன்றவற்றில் இருக்கும் சாதியக்கொடுமைகளை விபரித்தபோது படித்த சில அறிவுஜீவிகள் ஆபிரிக்கா நாடுகளிலும் சாதி இருக்கின்றன என்று புலம்பியபடி ஓடிவந்தது நினைவுக்கு வருகின்றது. ஒன்றைப் பற்றிப்பேசும்போது அதைப்பற்றி மட்டும் முதலில் பேசுங்கள், எங்களுக்குள் சாதி இருந்தால் அதை எப்படி அரசியல் நீக்கம் செய்வது என்று பேசுவதைவிட்டுவிட்டு, அங்கேயுமிருக்கின்றது அதனால் நாங்கள் -மட்டும்- அவ்வளவு கெட்டவர்களல்ல என்ற தொனியில் வரும் உரையாடல்கள் அலுப்பையல்ல, கோபத்தை வரச்செய்பவை.

நாம் நவீன உலகில் எல்லா வசதிகளோடும் எல்லோரையும் மதித்தபடி இருக்கின்றோம் என்று நமக்குள் கூறியபடி இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான புதினங்கள் நாம் நினைத்துக்கொள்கின்ற அனைத்தையும் அதிர்வுக்குட்படுத்துகின்றது. மேலும் சாதியைப் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியோ நாம் உரையாடும்போது யார் அதிகம் பதட்டம் அடைகின்றார்களோ அவர்களே இன்னும் இந்த அடையாளங்களில் தங்களை தேக்கிவைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடவும் முடியும். நாம் நம்மிலிருந்து சாதியை இல்லாமற்செய்ய மிகுந்த சகிப்புத்தன்மையும் விசாலமான மனமுமே வேண்டும், மேலும் வர்க்க அழிப்பாலும், படிப்பாலும், பொருளாதார ஏற்றங்களாலும், சாதி முற்றாக அழிந்துவிடும் என்று கூறுபவர்களை நோக்கி நாம் புன்னகையை வீசியபடி எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே நியாயமாகவிருக்கும்; அதுவே நாமின்னும் மனிதத்தன்மையுடன் வாழ்கின்றோம் என்பதைச் சாட்சிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

(ஆபிரிக்காக் கலாசாரத்தின் மீது பெருவிருப்புக்கொண்டவளுக்கு)

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

Wednesday, July 25, 2007

(யூலை நினைவுகளுக்கு - மீள்பதிவு)

அப்போது எனக்கு ஜந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல் ஒரு கையையும், மறுகையில் பை நிறைய இனிப்புக்களுடன் நேர்சரி வகுப்புக்கு போகின்றேன். வகுப்பு, மாணவர்கள் எதுவுமற்று வெறுமையாக இருக்கின்றது. ஆசிரியர் தொலைவில் வருவது தெரிகின்றது. 'இன்றைக்கு ஹர்த்தால் எல்லோ. வகுப்பு இல்லை என்று உங்களுக்கு முதலே தெரியுந்தானே' என்று அண்ணாவிடம் கூறுகின்றார். 'ஓம் தெரியும், இவன் தான் சிலநேரம் நேர்சரி வகுப்பு நடக்குமென்டு கூட்டிக்கொண்டு வந்தவன்' என்கிறார் அண்ணா. எனது முகத்தில் கவலையும் மனதில் வெறுமையும் நிரம்ப திரும்புகின்றேன். அன்று எனது பிறந்ததினம்.



எங்கள் வீட்டு வரவேற்பறையில் வள்ளுவரும், அண்ணாவும், கலைஞரும்தான் எப்போதும் காட்சி தந்தபடி இருப்பார்கள். ஈழத்தில் இருந்தவரைக்கும் அப்பா ஒரு தீவிர நாத்திகராக இருந்திருக்கின்றார். திராவிடக் கட்சிகளின் மீது மிகுந்த அபிமானமும் நம்பிக்கை உடையவராக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். ஊரில் இருந்த வரைக்கும் (இப்போதும் கூட) தைப்பொங்கலையோ, வருடப்பிறப்பையோ அயலவர்கள் கொண்டாடியமாதிரி நாங்கள் கொண்டாடியதில்லை. அதற்குக் காரணம் அப்பா நாத்திகராக இருந்தது அல்ல. வேலையின் நிமிர்த்தம் எமது தந்தையார் மட்டக்களப்பு, வன்னி, தீவுப்பகுதிகள் என்று மாறி மாறி அலைந்தபடி இருந்தவர். எல்லைக் கிராமங்களில் சிங்கள இனவாதிகளால் அந்த மக்கள்படும் துயரைக் கண்டதால், 'அவர்கள் அங்கே துன்பப்படுகையில் இங்கே எங்களுக்கு என்ன கொண்டாட்டம் குதூகலம் வேண்டிக்கிடக்கிறது' என்று கூறி விழாக்களைக் கொண்டாடும் எமது ஆசைகளை இல்லாமற்செய்துவிடுவார். அந்தக்காலத்தில், போரின் எந்தத் துளியும் தீண்டாது எங்கள் கிராமம் மிக இயல்பாயிருந்தது. பொங்கலுக்கு, வருடப்பிறப்புக்கு என்று பக்கத்து வீட்டுக்காரர்கள், கோலம் போட்டு வாழைகள் நாட்டி, வெளி முற்றத்தில் பொங்கிப் படைக்கும்போது அப்பாவை மனதுக்குள் திட்டியிருக்கின்றேன். கொண்டாட்டங்களின்போது அயல் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குதூகலத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றேன். எனக்கும் எனது பெற்றோர் கைவிசேடம், புது ஆடைகள் விழாக்களின்போது தரமாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கின்றேன்.



போர் தீண்டாத எந்த ஊரையும் இன்றைய பொழுதில் ஈழத்தில் பார்க்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரைவிட்டு முற்றாகவே வெளியேற வேண்டி நிலை வந்தது. அதுவரை, சிங்கள் இராணுவம் தனது முகாமைவிட்டு கொஞ்சம் முன்னேறும்போது, அவ்வவ்போது வேறு கிராமங்களுக்கு சென்று விட்டுத் தங்கித் திரும்பிவருவதுதான் வழமையாக இருந்தது. பிறகு சண்டைகொஞ்சம் கடுமையானபோது இரவுகளில் பக்கத்து ஊரில் போய் படுத்துவிட்டு பகல்பொழுதில் ஊரிற்குத் திரும்பி வருவதுமாயும் இருந்தோம். தமிழர் பிரதேசங்களை கைப்பற்றிக்கொள்ள இராணுவம் இரவுநேரங்களையே அந்தக்காலத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழமையாக இருந்ததால், அப்படி பகல்/இரவு என் இரண்டுவிதமான விக்கிரமாதித்திய வாழ்க்கை முறைக்கும் நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம். அதுவும் கார்த்திகை, மார்கழி போன்ற குளிரும் மழையும் கூடிய காலங்களில் விடிகாலையில் எழும்பி ஊருக்குத் திரும்பிப் போவது போல ஒரு அவதி கிடையாது.

என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன். ஊரை விட்டு முற்றுமுழுதாக நீங்கிய நாள் நினைவுக்கு வருகின்றது. அகோரமான செல்லடிகளும், குண்டுத்த்தாக்குதலுடந்தான் ஆரம்பித்தது அன்றையபொழுது. இப்படி ஒரு பொழுது ஆரம்பிக்கிறது என்றால் நிச்சயம் எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரன் முன்னேறப்போகின்றான் என்று. இது ஒரு தாக்குதலுக்கான முன் ஆயத்தம் என்றும் சொல்லலாம். தடைகளை நீக்குவதற்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெறும். அத்தோடு எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவற்கும் ஆகவும் இருக்கலாம். 'ஆரம்பமே இப்படி என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என்று உனக்குக் காட்டத் தேவையில்லை, பின்வாங்கிப் போய்விடு' என்று போராளிகளைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிப்பதன் மறுவடிவம்தான் விமானத்தாக்குதல்களும், ஆட்லறித் தாக்குதல்களும்.

துப்பாக்கிச் சூட்டுக்கள் எல்லாம் நெருங்கி வருகின்றமாதிரி இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் உரசிக்கொண்டு போகும் ஓசையெல்லாம் தெளிவாய்க் கேட்கின்றது. 'வீட்டை விட்டு போவோம் போவோம்' என்று பயத்தோடு அழுகை வரும் நிலையில் பெற்றோரிடம் நான் கெஞ்சுகிறேன். அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும், இதுதான் நாங்கள் எங்கள் ஊரில், வாழ்ந்த வீட்டில் கடைசியாக வாழப்ப்போகும் கணங்கள் என்று. அதனால் வீட்டைவிட்டு அவ்வளவு இலகுவில் நீங்கி வர பிரியப்படாதிருக்கின்றனர். 'சரி நீயும் அக்காவும் முதலில் போங்கோ, நாங்கள் பின்னாலை வாறோம்' என்று எங்களை அனுப்புகின்றனர் எமது பெற்றோர். ஒரு சைக்கிளின் பின் பாரில் கட்டப்பட்ட ஆடைப்பெட்டியுடன் நானும் அக்காவும் வீட்டினின்று நீங்குகின்றோம். வெளியே ஒழுங்காய் நடந்தே செல்லமுடியாத நிலை. நிமிர்ந்து நடந்தால் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைப் பதம் பார்த்துவிடும் போன்று அகோரமான யுத்தக்களம். சைக்கிளை உருட்டியபடி குனிந்து குனிந்து நடக்கின்றோம். ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்போம். பாரிய ஒலியுடன் ஒரு செல் விழுந்து வெடிக்கின்றது. எங்கள் வேலிக்கருகில் இருந்த பக்கத்து வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ எழும்புகின்றது. 'அய்யோ வீட்டில் நின்ற அம்மா அப்பா ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எனக்கு அழுகை வருகின்றது. திரும்பிப் போய்ப் பார்க்கவும் முடியாத நிலை. அக்கா சொல்கிறாள் 'கொஞ்சம் தூரம் போய் சைக்கிளை நிறுத்தி ரவுண்ட்ஸ் அடி குறையும்போது திரும்பி வந்து பார்ப்போம் இப்போது வேண்டாம்' என்று.

நாங்கள் சைக்கிளை உருட்டுகிறோம். வைரவர் கோயில் தாண்டி, அதன் பக்கத்தில் இருந்த கள்ளுக்கொட்டில் தாண்டுகையில் தேவதூதர்களாய் போராளிகள் வருகின்றார்கள். நாங்கள் போரை விட்டு விலத்தி ஓட ஓட அவர்கள் போரைத் தேடி வருகின்றனர். பலரின் கால்களைப் பார்க்கின்றேன். ஒழுங்காய் செருப்புக்கூட அணியாமல் வெறுங்காலுடன் பலர் இருக்கின்றார்கள். பயத்தின் எந்த ரேகையும் அவர்களின் முகத்தில் இல்லை. யாரையோ சந்திக்கப் போகும் நிதானத்துடன் நடந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். எதிரியைக் காணும்வரை எந்தத் தோட்டாவும் உபயோகிப்பதில்லை என்பதுபோல துப்பாக்கிகள் முதுகில் தூங்கியபடி இருக்கின்றன. அடுத்த கிராமத்தை அடைந்தபோது கொஞ்ச நேரத்தில் எமது பெற்றோரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத்திலும் பயம் பொங்கி வழிகின்றது. எல்லோரையும் மீண்டும் உயிருடன் பார்த்தவுடன், எல்லோர் மனதிலும் ஒருவித நிம்மதி வந்துவிடுகின்றது. ஆனால் எனது சொந்தக்கிராமம் கைப்பற்றப்படுகையிலும் உயிரைக்காக்க வேண்டும் என்று ஓடுகின்ற எனது சுயநலத்துக்கும், எங்கையோ ஒரிடத்தில் பிறந்து உறவுகளைத் துறந்து எந்தத் தமிழ்ப்பிரதேசமும் கைப்பற்றப்படவோ, தமிழ் மக்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்று 'மரணத்திலும் வாழ்வைத் தேடி' போகின்றவர்களுக்கும் இடையிலான உள்மனயுத்தம் ஆரம்பிக்கின்றது. அது இன்று வரைக்கும் தொடர்கிறது. சாகும்வரை இது குறித்த ஒரு குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டியிருக்கவும் போகின்றது.

2.

ஈழத்தில் இருந்தவரைக்கும் எதிர்காலத்தில் மருத்துவம் படிப்பதே ஒரு கனவாக இருந்தது அல்லது அது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஒரு முறை யாழ் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம், அனுமதிக்கப்பட்ட அண்ணாவைப் பார்ப்பதற்காய் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயம் செல்லடிபட்டு சிதைவுற்ற ஒருவரை இரத்தம் கொட்ட கொட்டக் கைகளில் ஏந்திவருகின்றார்கள். முகம் எது வயிறு எது என்று பிரித்துணரமுடியாது இரத்த நிறம் உடலை ஆடை போல மூடியிருக்கின்றது. ஒரு மரணத்தை முதன் முதலாய் அருகிலிருந்த பார்த்த சந்தர்ப்பம் அது. இப்படியும் ஒரு மரணம் நிகழுமா எனச் சிந்திக்கமுடியாத ஏழெட்டு வயதில் அது நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தபின் ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றேன். சத்தி வருகின்றமாதிரியான உணர்நிலையில் அந்த நாள் முழுதும் அலைந்திருக்கின்றேன். அந்தச் சம்பவத்தை பார்த்தபோது வாயில் வைத்திருந்த சூப்புத்தடி (Lollipop) அதற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று அல்லது லொலிபாப்பை எப்போது பார்த்தாலும் அந்த சம்பவமே உடனே நினைவுக்கு வருவதாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு இரத்தம் என்பது மிகவும் பீதியடையும் ஒரு விடயமாகப் போய்விட்டது. ஒரு சில நொடிகளுக்கு மேல், இரத்தத்துடன் வரும் எந்தக் காட்சியையோ கதையையோ பார்க்கவோ கேட்கவோ என்னால் முடிவதில்லை. சிலவருடங்களுக்கு முன், கார் விபத்தில் சிக்கிக்கொண்ட நண்பன் அந்த விபத்துச்சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தபோது (காலில் பலமாய் அடிபட்டிருந்தான்) கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அருகில் நான் போயிருந்தேன். இன்னமும் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவமும், இரத்தமும் எப்படி என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றது என்பது வியப்பாக இருந்தது. அப்படியெனில் இதைவிட இன்னும் ஆழமான பாதிப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கும் ஆளானவர்கள் எப்படியெல்லாம் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடிந்ததில்லை.

'In the name of Buddha' திரைப்படம் வந்தபோது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் கண்களை மூடித்தான் பார்த்தேன் (தேங்காய் உரிக்கும் அலவாங்கால் இராணுவம் ஒரு ஆணைக் கொல்வது, சிறுவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டு அரைகுறையுமாக புதைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் ஆரம்பமானது மட்டும் தெரியும், பிறகு எனது உலகம் இருட்டாகிவிட்டது). கண்மூடி இருந்தவேளையில் எனது பின்சீட்டில் இருந்த ஒரு பதின்மவயதுப்பெண் தன் தாயிடம் கூறியது காதில் விழுந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற குரலில், 'அம்மா I can't watch this movie, I wanna go outside' என்கிறாள். தாயோ, 'பிள்ளை இப்படித்தான் எங்கட நாட்டில் நடக்கிறது. நீர் இதையெல்லாம் பார்க்கவேண்டும், அப்பத்தான் அங்கை நடக்கிறதெல்லாம் தெரியும்' என்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியாத எனக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளியே போகவேண்டும் போல இருக்கிறது அல்லது இப்படியான காட்சிகளைப் பார்க்கவிரும்பாத பிள்ளையை வற்புறுத்தி அவரது மனநிலையைச் சிதைக்காதீர்கள் என்று அந்தத் தாயிடம் கூறவாவது வேண்டும் போலக்கிடக்கிறது. இறுதியில் அந்தப் பிள்ளை கண்ணை மூடிக்கொண்டு தாயின் தோளில் சாய்ந்துவிடுகின்றார்.

3.
ஈழத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்ற வருடம் ஈழத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வித அவசரமான திட்டமிடலில் நண்பர்களாய் செல்லவேண்டியிருந்ததால்தான் அது கூட சாத்தியமாயிருந்தது. இன்றும் ஊரைப் பார்க்கமுடியாது இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஈழத்துக்குப் போவதற்கு என்ன காரணம் வேண்டிக்கிடக்கிறது? அதனால் யாழில் மூன்றே நாள்கள் மட்டுந்தான் தங்கியிருந்தேன். இதுவரை காலமும் காலடி வைக்காத வன்னியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தது புதிய அனுபவமாயிருந்தது. அங்கே இருந்து கேட்ட விவாதித்த கதைகள் நாட்டைவிட்டு வெளியேறிய என் குற்றவுணர்வை இன்னும் பலமடங்காய் அதிகரிக்கச் செய்தன. அதுவும் பெண் போராளிகள் கூறிய கதைகளும் இடை நடுவில் மேலே சொல்ல முடியாது தவித்து அழுத கணங்களும் இன்னமும் கண்முன்னாலே நிற்கின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால் வைத்தபோது மூன்று வருடங்களுக்கு முன் உலகை வியக்க வைத்து போராளிகள் நடத்திய தாக்குதல் கண்முன் விரிந்தது. சனங்கள் ஆயிரக்கணக்கில் புழங்கும் (முக்கியமாய் வெளிநாட்டு மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று அனைவருக்கும் தெரிந்ததே) எந்த ஒரு பொதுசனத்துக்கும் பாதிப்பு இல்லாது மிகத்துல்லியமாய் இராணுவ, வர்த்தக விமானங்களைத் தகர்ந்திருந்தார்கள். குண்டு குண்டாய் போட்டு மக்களை கொல்வது முற்பகலில் செய்யின், உனது ஆணிவேருக்கே தீ கொளுத்துவோம் என பிற்பகலில் எதிரியை வினையறுக்கச் செய்தவர்கள் போராளிகள். 83ல் தமிழரைத் தலைநகரில் நூற்றுக்கணக்கில் குடல் உருவியும் கண்கள் பிடுங்கியும் கொன்றும், உயிரோடு ரயர்கள் போட்டு எரித்துக்காட்டியும் கெக்கலித்தது பேரினவாதம். ஒரு அரச இராணுவ அமைப்புக்கு நிகரான பலத்துடன் தமிழர்கள் ஒரு காலத்தில் நிமிர்ந்தபின், தமிழர்களை விட சிங்களப்பேரினவாதமே ஒவ்வொரு கறுப்பு ஜூலையும் நடுநடுங்கியபடி எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கத் தொடங்கியது. அவ்வாறான ஒரு கறுப்பு ஜீலையில் நடந்த பதிலடியே கட்டுநாயக்காவில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதல். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கியபோது இந்த இடந்தானே சென்றுபோன வருடத்தில் ஒரு நாள் உலகையே திரும்பிப்ப்பார்க்க வைத்ததென்ற பெருமை எனக்குள் பொங்கியது. ஆனால் அது தங்கி நின்றது கொஞ்ச நொடிகள்தான். சிதைந்த விமானத்தின் முன் மல்லாக்க விழுந்துகிடந்த போராளிகளின் முகங்கள்தான் பிறகு நினைவு முழுவதற்கும் பரவியது. அந்த இளைஞர்களில், சிறுவயதில் ஊரைவிட்டு அகன்ற நேரம் எதிர்ப்பட்ட போராளிகளின் முகங்களைக் கண்டேன். போரிற்குள் இருந்த எந்த ஒரு ஒருத்தனும்/ஒருத்தியும் போரை கொண்டாடிக் குதூகலிக்கமுடியாது. பிரியமான மனிதர்கள் இறக்க இறக்க இன்னும் கொல் கொல் என்று நரம்புக்கள் புடைக்க புடைக்க பேசிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள்.



எண்பத்து மூன்றில் கறுப்பு ஜீலையில் (ஆடி இருபத்தைந்து) தொடங்கிய மரணங்கள் இன்றும் அதே நாளில் நீண்டுகொண்டிருப்பதுதான் எவ்வளவு துயரமானது. 2001ல் தங்களையே விலையாகக் கொடுத்த அந்தத் தோழர்கள் மரணித்த நாளில் பிறந்தநாள் வரும் ஒருவன் மகிழ்வு கொள்ள என்ன வேண்டிக்கிடக்கிறது? மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.

நன்றி:புகைப்படங்கள்
கறுப்பு வெள்ளைப் படங்கள்:
ஆடிக்கலவரம் 1983
சைக்கிள் படம்:
ஈழவிஷன்
பெண்ணும் இராணுவமும்:
In the name of buddha

Wednesday, July 18, 2007

அவர்கள் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்கள்
கொட்டாவிவந்து அலுப்பு நெளிந்தது.
அவர்கள் அறிவைச் சுடச்சுட அடுப்பிலிருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்
மூளை கரியாகிக்கரியாகி சாம்பலாய் உதிர்ந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் இடைக்கிடை தண்ணீரையருந்தியபடி கைகளை ஆட்டி
தாம் சொல்வதே உண்மையென நம்பவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்
மூத்திரப்பை நிரம்பி ஆசுவாசப்படமுடியாது குறுகிய அறைச்சுவர்கள் அடைத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னலுக்கப்பால் விரியும் பெஞ்சில்

காதலியொருத்தியை முத்தமிட்டு முதுகைவருடியபடியிருக்கும் கரங்கள் நடுவிரலைக்காட்டிக் கேலிசெய்கிறது
நீயில்லாத உனதின் இருப்பை.

(ஒரு மாநாட்டு அரங்கில் இருந்தபொழுதில்)



பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.

(murder-sucide இரட்டைக்கொலைகளின்பின்)

ம்..ஆமென்!

Friday, July 13, 2007

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு பாஸிடிவ்தானே' என காலந்தோறும் சொக்கப்பனை எரிக்கும் தேசியர்களுக்கும்...

புலம்பெயர்ந்து வாழ்தல் பற்றியும் தோல்விகள் பற்றியும்

இல்லை.
சேனாவில் நான் கழித்த
மோசமான காலமோ
அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட
இராணுவ விசாரணைக் குழுக்கள் தொடுத்த
திடீர்க் குற்றச்சாட்டுகளோ
என் முதுகில் அழுத்திய துப்பாக்கிக் கட்டையோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை
புலன் விசாரணையின் திகிலூட்டும் கறுப்பு முகமூடியோ
பயங்கரத்தின் ஓலங்கள் ஒலித்த
விளையாட்டரங்கங்கள் என்னும் துன்ப நகரமோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
வாழ்க்கையிலிருந்து நம்மைத் துண்டித்த
ஜன்னலின் இரும்புக் கம்பிகளோ
எங்கள் வீட்டின்மீது குவிக்கப்பட்டிருந்த கண்காணிப்போ
பதுங்கி பதுங்கி வந்த காலடியோசைகளோ
பசியில் பிளந்த வாய்க்குள் நான் சரிந்து விழுந்ததோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
என்னை வீழ்த்தியது
நான் உரிமை கொண்டாட முடியாத தெரு
அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடு
நான் கற்றுக்கொண்ட இரவல் மொழி.
எங்களுக்குத் சொந்தமில்லாத தீர்க்கரேகைகளில்
தனித்து நிற்கும் நிச்சயமற்ற உருவம்தான்
என்னை வீழ்த்தியது.
அது கிறீன்விச் தீர்க்கரேகை பூஜ்யம் டிகிரி
எதற்கும் அருகிலில்லை.

என்னை வீழ்த்தியது இந்த அந்நிய மழை
சொற்களை மறந்து
துழாவிச் செல்லும் நினைவு
வெகுதூரத்திலுள்ள நண்பர்கள்
எங்களுக்கிடையே உள்ள இந்த அடாத பெருங்கடல் -
எனக்கு வந்த சேராத
நான் எதிர்பார்த்திருந்த கடிதங்களை ஈரமாக்குகின்ற
இந்த அடாத பெருங்கடல்.

-Maria Eugenia Calderarara (Chile)

கண்டனம்

ஒரு புல்லின் இதழுக்கு
ஊறு விளைவிக்கும் உரிமையை
என் நாட்டின் போராளிகளுக்கு
மறுக்கிறேன்
ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை
குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும்
மறுக்கிறேன்
ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை
என் சகோதரிக்கு
மறுக்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் மறுக்க முடியும் - ஆனால்
அவர்களின் கண்கள்
கொலைகாரர்களின் குதிரைகள்
பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது
இத்தனை இலட்சியங்களை
யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்?

பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை
எதிர்க்கிறேன்
மரங்களின் உடல்கள்
வெடிமருந்துக்குப் புகலிடமாவதை
எதிர்க்கிறேன்
எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள்
தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
எனது தோட்டத்தின் ரோஜாப் பாத்திகள்
மரணதண்டனை நிறைவேற்றும்
துப்பாக்கிப் படையினரால் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் எதிர்க்கமுடியும் -ஆனால்
எனது நாடு
எனது நண்பர்களோடும்
எனது இளமையோடும்
சேர்ந்து எரியும்போது
எனது கவிதைகள் ஆயுதங்களாக மாறாமல்
இருக்கமுடியுமா?

- Rachid Hussein (Palestine)

எனது நாடு எவ்வளவு சிறியது

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச்சணடைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது

-எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ் (Nicargua)

தென்னாபிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்


நாடே:
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவரில் உள்ளவொரு அறையில்
நான் காத்திருக்கிறேன்
கடலிடையே தெருக்களிடையே வானத்திடையே
செல்கிறேன்;
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.

நாடே:
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான் தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்துகொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன்
நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது;
நான் ஒளிமயமானவள்
ஒளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும்
ஒரு மந்திரச்சொல்

நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.


-Karen Press (South Africa)

நன்றி: மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்)
தமிழாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை

துயரத்தை மீளவும் இசைத்தல்

Sunday, July 08, 2007

-பெலினியின் *Amarcordஐ முன்வைத்து-


பதின்மம் நம் எல்லோரிடமும் சிறகுகளுள்ள ஒரு பறவையைப் போல வந்தடைகிறது. பலர் அதன் சிறகுகளைக்கொண்டு இன்னும் உயர உயரப்பறந்துகொண்டும் வேறு பலர் அந்தச் சிறகுகள் முறிய இப்பருவத்தை எப்படிக் கடப்பதென்னும் கவலையுடனும் வாழ்வின் சாட்சிகளாகின்றனர். எப்படியெனினும் கடந்தபோனால் மீண்டும் வராத பதின்மம் நிறைய நனவிடை தோய்தலைகளைக் கொண்டுவருகின்றது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெலினியின் (Fedrico Fellini) Amarcord, ஒருவன் பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறும் பருவத்தைக் காட்சிப்படுத்துகின்றது. பதின்மங்களுக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதில்லை. கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத ஒரு குழப்பகரமான வாழ்விற்குள் நம்மைப் பதின்மம் தள்ளிவிடுவதை பெலினியும் ஒரு நேர்கோட்டுக் கதைசொல்லலில்லாது துண்டு துண்டுகளாய்க் காட்சிகளை நகரத்தபடியிருக்கின்றார்.




நகரத்தை விட்டு சற்று ஒதுக்கியுள்ள ஒரு கடற்கரை கிராமமே இப்படத்தின் பின்புலமாகின்றது. ரிற்றா என்ற பதின்ம வயதுடையவனே முக்கிய பாத்திரமாகின்றான். ஒரு கிராமத்து வாழ்வுக்குரிய அழகோடும் கசப்புகளோடும் வெகுளித்தனங்களோடும் இப்படம் விரிகின்றது. இறுக்கமுள்ள கத்தோலிக்கத் தேவாலயம் இக்கிராம மக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றதெனினும், கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் ரிற்றா முதலான பையன்கள் இந்த இறுக்கங்களைத் தமது குழப்படிகளால் கடந்து போய்விடுகின்றார்கள். பாடசாலையில் ஒழுக்கத்தையையும், பொறுமையையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு அதை வைத்தே ஒழுங்கைக் குலைக்கச் செய்து அந்தமாதிரி நக்கலடிக்கின்றார்கள் ரிற்றாவும் அவரது நண்பர்களும்.

அநேக கிராமங்களில் வயது வித்தியாசமின்றி எல்லோர் மனதையுன் சுண்டியிழுக்கும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள். 'கன்னியிவள் கடைக்கண் காட்டிவிட்டால் வெண்ணிலவையும் தரைக்குக்கொண்டுவரும்' மிதப்போடு பல இளைஞர்கள் அந்தப்பெண்களின் பின்னால் அலைந்தபடியிருப்பார்கள். இப்படியாக இளைஞர்களைத் தாங்கள் தேவதைகளாகக் கவர்ந்திழுக்கின்றோம் என்று நன்று தெரிந்தும், தெரியாதபடி -எதற்கும் இடங்கொடுக்காமல்- தங்களைப்பற்றிய புனைவு வழிப்பட்ட இரகசியங்களைப் பெருக்கச் செய்தபடி குறும்புகளுடன் அந்தப்பெண்கள் நகர்ந்தபடி இருப்பர்கள். அவ்வாறான பெண ஒருத்தி (Gradisca) இப்படத்திலும் வருகின்றார். அவரில் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ரிற்றாவிற்கும் மையலுண்டு. அவரோடு காதலுற்று களிப்பது போன்ற கனவுகள் எல்லாம் ரிற்றாவிற்கும் வந்துபோகின்றது.

பெலினி காட்டுகின்ற ரிற்றாவின் வீடென்பதுகூட நம்மைப்போன்ற பலருக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு குடும்ப அமைப்புத்தான். தங்கள் பிள்ளைகள் மீது அளவிறந்து அன்பைக்காட்டும் பெற்றோர், எல்லோரையும் ஒருகாலத்தில் அதிகாரத்தில் மேய்த்து அந்தக் காலங்கள் வழக்கொழிந்து போய் தன் வார்த்தைகள் அம்பலத்தில் ஏறாததை நகைச்சுவையாக்கிபடி இருக்கும் ரிற்றாவின் தாத்தா, எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்தபடி/கேட்டபடி தனக்கான உலகில் இயங்கும் மாமா, வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் சேஷ்டைகள் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் தாத்தா, அப்பாவின் மீதிருக்கும் கோபத்தில் திரைப்படம் பாரத்துக்கொண்டிருக்கும்போது அவரின் தொப்பிக்குள் சிறுநீர் கழிக்கும் ரிற்றா என்று இந்தப்படத்தின் குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் நமக்கு நெருக்கமாகக்கூடியவர்கள். இப்படி இந்தப்பாத்திரங்களினூடாகவும், நிலப்பின்னணியினூடாகவும் ஒரு இத்தாலிய (கிராமத்தின்) வாழ்க்கை முறையை பெலினி மிக நேர்த்தியாக சித்தரிக்கின்றார்.


அதிலும் உணவருந்தும் ஒரு காட்சியில், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரிற்றாவின் பெற்றோருக்குள் சண்டை மூள்கிறது. பிள்ளைகள் மற்றும் குடுமப உறவுகள் -இவற்றையெல்லாம் கேட்டு மரத்துப்போன சூழ்நிலையில்- சண்டையினால் எந்தச் சலனமுமில்லாது தங்கள்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'இந்த மனுசனோடு என்னோடு வாழமுடியாது நான் சாகப்போகின்றேன்' என்று வேதனையோடு ரிற்றாவின் தாயார் குளிக்கும் அறைக்குள் சென்றுவிடுகின்றார். 'நீ செத்தால் நான் தனியே இருப்பேனா?' என்று ரிற்றாவின் தகப்பன் தன் வாயைக் கரங்களால் கிழித்து தற்கொலை செய்யப்போவதாய் அடம்பிடிப்பார் (மிகுந்த நகைச்சுவையுடன் பெலினி இதைக் காட்சிப்படுத்தியிருப்பார்). பிறகு தற்கொலை செய்து 'சாகமுடியாத' கொடுமையை தன் தலையில் கையால் அடி அடியென்று அடித்துக்கொண்டிருப்பார். திடீரென்று இதையெல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வு வர, கோபத்துடன் மேசையிலிருக்கும் சாப்பாட்டை ரிற்றாவின் தகப்பன் தூக்கியெறிவார்.

எப்படி திருச்சபைகளின் மீதான தன் விமர்சனத்தை மெல்லிய நகைசுவையுடன் பெலினி காட்டினாரோ அதைப் போன்று குடும்பம் என்ற அமைப்பால் ஏற்படும் வன்முறையையும் இத்திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டுகின்றார். ரிற்றாவின் தகப்பனின் சகோதரர் ஒருவர் மனம்பிறழ்ந்தவராக இருப்பதும், அவரோடு சுற்றுலா போகின்ற வேளையில் மரம் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு ஒரு பெண் தனக்கு வேண்டும் என்று கேட்டு அவர் அடம்பிடித்து மரத்தை விட்டு இறங்காத இன்னொரு காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்த ஒற்றை மரம், பின்னால் நீளும் வெறுமையான வானம், நீண்ட சமதரை என்று பல்வேறு குறியீடுகள் வரக்கூடியதாய் பெலினி அக்காட்சியை எடுத்திருப்பார்)

முஸோலினியின் பாஸிசக் காலத்திலேயே ரிற்றாவின் பதின்மம் இருக்கின்றது. குறிம்பிடும்படியான அரசியல்/இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடாமலே சும்மா சில வார்த்தைகள் முசோலினியைப் பற்றிப் பேசியதற்காகவே ரிற்றாவின் தந்தையார் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நெடுநேரமாய் வீடு திரும்பாத கணவனை ரிற்றாவின் தாயார் தேடுவதும், சித்திரவதைக்குள்ளான அவரது உடலின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்து குளிக்கவைப்பதும் போன்ற காட்சிகள் -எத்தனை பிணக்குகள் இருந்தாலும்- அதற்கப்பாலிருக்கும் அற்புதமான மானுட நேசிப்பை ரிற்றாவின் பெற்றோரின் மூலம் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது.


இப்படத்தில் பதின்ம வயதினருடைய வாழ்வியல்முறை இயல்புகெடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெடியங்கள் பாத்ரூமில் புகைபிடிப்பது, செக்ஸை பற்றி கிளுகிளுப்பாய் கதைப்பது, காரொன்றுக்குள் அமர்ந்துகொண்டு தமக்குப் பிடித்த பெண்களை நினைத்தபடி சுயமைத்துனம் செய்வது (அப்படி சுயமைத்துனம் செய்வதை அவர்கள் திருச்சபைக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்பது, அந்நிகழ்வை ஒருவித இன்பத்துடன் கேட்டு பாவமன்னிப்பு வழங்கும் மதகுரு போன்ற நுண்ணிய விமர்சனங்களும் அடங்கும்), தங்களை விட வயது கூடிய பெண்களின் உடல் அங்கங்களை விபரித்து தங்களுக்குள் மகிழ்ந்துகொள்வதென பதின்மர்களுடைய பருவம் இயல்பாய் விரித்து வைக்கப்படுகின்றது.

அவ்வூரில் எல்லோருடைய கனவுக்கன்னியாக இருக்கும் பெண் (Gradisca) முஸோலினியின் அதிகாரத்திலிருக்கும் அதிகாரியொருவருக்கு விடுதியொன்றில் தன்னைக் கொடுக்கின்றார். இறுதியில் அந்தப்பெண் அப்படியான ஒரு அதிகாரியைத் திருமணஞ்செய்து அவ்வூரைவிட்டே போகின்றார். அப்படிப் போகும்போது திரும்பி தன் ஊரைப் பார்த்து பூக்கொத்தை எறிவதும் அதையெடுக்கக்கூட ஒருவரும் இல்லாத தனிமையும், அந்தப்பெண் ஊரைவிட்டுப் போகும் காரை சின்னப்பையன்கள் மட்டுமே கொஞ்சத் தூரம் தூரத்திக்கொண்டிருக்கும் துயரமும் மனதை அசைத்துப் பார்க்கக்கூடியவை.

பெலினி, திருச்சபைகளையும், குடும்ப அமைப்பையும், முசோலினியின் பாஸிசத்தையும் ஒருவித எள்ளல்தொனியுடனே விமர்சிக்கின்றார். கடுமையான மொழியில்/காட்சிகளில் இவற்றை ஏன் முவைக்கவில்லை என்று பெலினியை நோக்கிக் கேட்கலாம் என்றாலும் இப்படம் ஒரு பதின்மனுடைய வயதில் விரிவதால் அவனுக்குள் எற்படும் பார்வைகளைத்தான் பெலினி காட்டுகின்றார் என்றும் வேறொருவர் பெலினியின் சார்பில் நின்று உரையாடவும்கூடும். படத்தில் பனி -பூக்களாய்- விழ ஆரம்பிக்கின்ற காட்சியும், அதுபோல வசந்தம் தொடங்குவதான காட்சியும் மிக அற்புதமானவை. 70 களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இப்படி நுட்பமாக கமரா தன் கலைவண்ணத்தைக் காட்டுகின்றது என்று நினைக்கும்போது வியப்புத் தோன்றாமல் இருக்கமுடியாது.

படத்தின் ஆரம்பம், ஊரே சேர்ந்து ஒரு விழாவை உற்சாகமாய்க் கொண்டாடுவதில் ஆரம்பித்து, இறுதிக் காட்சி Gradiscaவின் திருமணம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மிகச்சொற்பானவர்கள் பங்குபற்றுவதுடன் முடிகின்றது. இங்கே Gradiscaவின் திருமணம் என்பதே வாழ்வின் வீழ்ச்சிக்கான குறியீடுதான். மெல்லியதாய் மழைவருவதும், ஒரு இசைஞன் இசைக்கும் வாத்திய இசை -அது- எவரும் அசட்டை செய்யாத நிசப்தத்தில் அமிழ்ந்துபோவதான இறுதிக்காட்சிகள் மனதைச் சலனமடையச்செய்பவை.

முக்கியமாய், எல்லோரும் தலையின் மேல் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருந்த பெண்ணை(Gradisca) முசோலினியின் ஆட்சியிலுள்ள அதிகாரி ஒருவர் திருமணம் செய்துகொண்டு அந்தப்பெண்ணை ஊரைவிட்டு அழைத்துச்செல்லும்போது, அந்த ஊரின் உயிர்ப்பும் மெல்ல மெல்லமாய் கரைந்துபோவதான உணர்வு எமக்கு வந்துவிடுகின்றது. மேலும், இதை இன்னொருவிதமாய் ரிற்றா தனது பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறுவதான காலத்துடன் இணைத்தும் பார்க்கக்கூடியது. பதின்மத்தைப் போல கொண்டாடக்கூடியதான ஒரு காலம் இனி இளைஞனாகையில் சாத்திமில்லை என்ற குறியீடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

2.

என்னுடைய பதின்மம் ஓரிடத்தில் நிரந்தரமாய் கழியவில்லை. அப்படி ஓரிடத்தில் கழியாததால் பலதைத் தவறவிட்டிருக்கின்றேன் என்ற கவலையுமிருக்கிறது. பதின்மம் - யாழ், கொழும்பு, ரொரண்டோ என்று சிதறிப்போனதில், புதிய இடங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடவே காலம் கழிந்ததால் பதின்மத்தைக் கொண்டாட முடியாமற்போய்விட்டது. அதைவிட பதின்மத்துக்குள் வருவதிற்குள்ளேயே போர் என்னைப்போன்றவர்களை பெரியவர்களாக அடித்து அடித்து பழுக்கச்செய்திருந்தது. போரே வாழ்வான காலத்தில் சுவாரசியமான விடயங்களுக்கும் ஊரில் (யாழில்) குறைவில்லைத்தான்.

எங்கள் ஊரிலும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தார். அவரின் பெற்றோர்கள் அப்போதே ஜரோப்பா நாடொன்றுக்கு குடிபெயர்ந்ததால் இவர் அவரின் தாத்தாவோடு வசித்துக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகில்தான் பாடசாலை. அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப் படித்துக்கொண்டிருந்த ஒருவரோடு இவருக்கு காதல் முகிழ்ந்தது. எங்கள் வீடிருக்கும் ஒழுங்கையில் நின்று ஹொஸ்டலின் பின்பக்க மதிலால் இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தப்பெண்ணுக்கு வெளிநாட்டுப் பயணம் சாத்தியமானபோது, காதலித்த பையனுடன் ஓடுவதற்குத் தீர்மானித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்தப்பெண் செமையாக அடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஒருநாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது இவர் கிணற்றில் குதித்திருந்தார். நாங்களும் 'ஐயோ ...... அக்கா கிணற்றுக்குள் குதித்துவிட்டா, எல்லோரும் ஓடிவாங்கோ' என்று கத்தியபடி கிணற்றை நோக்கி ஓடியிருந்தோம். ஆனால் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த மற்றதொரு ஆழ்ப்பம் (ஆழம்) கூடவாயிருந்த கிணற்றுக்குள் விழாது ... அக்கா ஏன் இந்த ஆழம் குறைந்த கிணற்றில் குதிக்க முடிவுசெய்தார் என்பது விரிவாக விவாதிக்கக்கூடிய புள்ளிதான். பிறகு அந்த அக்கா கிணற்றிலிருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்ததும், கதிரையை எல்லாம் இறக்கி கயிறு கட்டி மேலே எடுத்தது என்று மிகவிரிவாகச் சிலாகிக்கக்கூடியவை (உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வருகின்ற இதே கிணற்றில், வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அண்மையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்டதையும் இங்கே சேர்த்து வாசிக்கவேண்டும்).

அதேபோன்று பதின்மம் ஆரம்பிக்க முன்னர் நடந்த நினைவில் என்றும் அகலமுடியாத சம்பவமும் ஒன்றுண்டு. இந்திய இராணுவ காலத்தில், இந்திய இராணுவமும், அதைச் சார்ந்து நின்று துணை (தமிழ்) இராணுவமும் எங்கள் அண்ணாவைக் கொண்டுபோய் சித்திரவதை செய்தது. அடியென்றால் செம அடி. அண்ணாவை எப்படி விடுவிப்பதென்று எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்ற சமயம். ஒருமாதிரி ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்த எங்கள் உறவுக்காரர் மற்றும் சிலரின் முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அண்ணா அடிகளுடன் திரும்பிவந்தபோதுதான், முதன்முதலாய் எனது பெற்றோர்கள் எங்களுக்கு முன்னால் அழுததைப் பார்த்திருந்தேன். உடலில் பட்ட சித்திரவதைகளுக்கு ஒழுங்காய் மருந்துகொடுக்க முடியாத காலம் அது. சாப்பிடுவற்காய் இருந்த சோற்றைச் சூடாக்கி துணித்துண்டுக்குள் கட்டி ஒத்தடம் கொடுத்ததாயும் நினைவு. அண்ணா எங்களுடன் தொடர்ந்திருந்தால், உயிருடன் பார்ப்பதே சாத்திமில்லை என்ற நிலையில், அவரை கஷ்டப்பட்டு பலாலியில் விமானம் ஏற்றி மாமியொருவர் வசித்துவந்த சிலாபத்திற்கு அனுப்பியிருந்தோம். அப்போதிருந்த பணநெருக்கடிக்காலத்தில் ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ நாங்கள் சேகரிக்கப்பட்ட கஷ்டமும், அண்ணாவை பலாலி விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து எப்படி கவனமாய்க் காரொன்றில் கொண்டுபோய்ச் சேர்த்தோம் என்பதும் ஒரு சிறுகதையாக எழுதக்கூடிய சேதிகள்.

பெலினி சித்தரிக்கின்ற திரைப்படத்தைப்போலத்தான் எங்கள் பலரது பதின்மங்களும் துண்டு துண்டாக பல்வேறு திசைகளுக்குச் சிதறியிருந்தன. ஆனால் கொண்டாட்டத்தை விட, வேதனைகளும் வலிகளும் நிறைந்திருந்தவை அவை. இப்போதும் கூட பின் தொடரும் அத்துயரங்களிலிருந்து தப்பும் வழிதெரியாது அதை சாமர்த்தியமாய் வேறு விடயங்களில் புதைத்துவிட்டு புன்னகையைப் பலவந்தமாய் அணிந்திருப்பவர்கள் நாங்கள். ஆனால், எங்களைப்போன்ற பதினமங்களை கழிக்ககாதவர்கள், சொகுசான மேலைத்தேச இடங்களிலிருந்து (சிலவேளை இந்திய இராணுவத்தை அனுப்பிய தேசத்திலிருந்தும்) கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் அறிவுரை கூறுவதுபோல மேலிடத்திலிருந்து 'மனிதர்களாகுங்கள்' என்று கீதாவுபதேசங்கள் தரும்போது, அடுத்த பிறப்பிலாவது(?) எங்களைப்போன்ற போர் நடக்கும் நாடுகளில் நீங்களும் பிறந்து உங்கள் வாழ்வைக் கழித்துப்பாருங்கள் என்று மனதிற்குள் சபித்துவிட்டு மெளனமாய் நகர்ந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் எங்களுக்கு இருப்பதேயில்லை.


*Amarcord - I remember என்று ஆங்கிலத்தில் அர்த்தம் வரக்கூடியது.