கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பாரிஸில் பார்த்த ஓவியங்கள் பற்றிய சில குறிப்புகள்

Wednesday, February 14, 2018

தேனும் ஒரு மியூசியத்திற்குப் போகும்போது, அங்கே நமக்கு அறிமுகமான ஓவியர்களின் படைப்புக்கள் இருக்கின்றதென அறியும்போது மனதில் உற்சாகம் இயல்பாய் ஊற்றெடுக்கும். அவ்வாறே, இதுவரை அறிந்திராத ஓவியர்களின் ஓவியங்களையும் தற்செயலாய்ப் பார்க்கும்போது, உங்களைச் சிலவேளைகளில் அவை அதிகம் கவர்ந்துவிடவும் செய்யலாம். இதை அறியாக் கணங்களின் வனப்பு என்றுகூட சற்று அழகியலாக நாம் அழைத்துக்கொள்ளலாம்.
பாரிஸிலிருந்த Musée d'Orsay்குப் போனபோது, எனக்கு வான்கோவினது படைப்புக்களைப் பார்க்கவேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே ஹாலண்டிலிருந்த வான்கோ மியூசியத்திற்குப் போயிருந்தபோது, வான்கோவின் மிகுதி முக்கியமான ஓவியங்கள் பாரிஸிலிருப்பதை அறிந்திருந்தேன். வான்கோவைப் பார்க்க Musée d'Orsay போனபோது, சிறப்புக் காட்சியாக இம்பிரஷனிசக் கால பிரபல்யமான ஓவியங்களை வைத்திருந்தது கூடுதலாகக் கிடைத்த இன்னொரு விருந்து.

ஆலெஸில் படுக்கையறை/Bedroom in Arles (Van Gogh)

இந்த ஓவியத்தை பிரான்ஸில் இருந்தபோது வான்கோ வரைந்திருந்திருக்கின்றார். 1886-1888 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 200ற்கு மேலான ஓவியங்களை பித்துப்பிடித்தது போல அவர் வரைந்திருக்கின்றார். 37 வயதில் தற்கொலை செய்த வான்கோ அவரது ஓவியங்களை 27 வயதிற்குப் பிறகுதான் வரையத்தொடங்கியிருக்கின்றார்; இந்தக் குறுகிய காலத்தில் அவர் வரைந்தவையோ 900ற்கு மேற்பட்ட ஓவியங்களாகும்.
இந்த ஓவியம் 'மஞ்சள் படுக்கையறை' எனவும் அழைக்கப்படுகின்றது. வான்கோவையைப் போல மஞ்சள் ஓவியத்தை அவ்வளவு அழகாகவும், அதிகமாகவும் பாவித்த ஓவியர்கள் வேறு யாரேனும் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை. அந்தளவிற்கு அவரது சூரியகாந்தி பூக்களிலிருந்து கோதுமை வயல்கள் வரை மஞ்சள் வர்ணம் எங்கும் பரவிப் படர்ந்தபடியே இருக்கின்றது. இந்தச் சரிவக வடிவுள்ள அறை வான்கோ வசித்த இடமுமாகும். சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் வான்கோ தன்னைப் பாதித்த இரண்டு ஓவியர்களை வரைந்து கொளுவியிருக்கின்றார்கள். The Poet(Boch) என்றும், The Lover (Millet) எனவும் பெயரிடப்பட்ட இந்தத் தனி ஓவியங்களும், வான்கோவின் சேகரிப்பில் இருப்பதை நாம் காணமுடியும்.
இந்த ஓவியத்திற்கு ஒரு சிறப்பு இருக்கின்றது; வான்கோ இந்தப் படுக்கையறை ஓவியத்தை மூன்று முறை வரைந்திருக்கின்றார். முதல் ஓவியம் வரைந்தபின் அது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதை வான்கோ, அவரது சகோதரரான தியோவிற்கு அனுப்பியபோது, தியோ இன்னொருமுறை வான்கோவை வரைந்து அனுப்பும்படி கேட்க அதே அளவீடுகளில் வான்கோ திருப்பி இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்கின்றார். பின்னர், இன்னும் வர்ணத்தைத் திருத்தி, முன்னரே விட குறைந்த அளவீட்டில் மூன்றாவது ஓவியத்தை தனது தாயிற்கும், சகோதரிக்கும் அனுப்புவதற்காய் வரைந்திருக்கின்றார். ஆனால் இந்த மூன்றாவது ஓவியம், முதலிரு ஓவியங்களை விட பொருட்கள் இருக்கும் இடங்களில் மாறியிருக்கின்றது. இதில் கொளுவியிருக்கும் ஓவியங்கள் முன்னர் இருந்ததைப் போல அல்ல. இதில் புதிதாய் இருக்கும் ஒரு ஓவியம் வான்கோவினது சுய பிரதிமை போலத் தென்படுவதை நாம் அவதானிக்கலாம்.
இதன் முதல் ஓவியத்தை நான் ஆம்ஸ்டடாமில் இருந்த 'வான்கோ மியூசியத்தில்' பார்த்திருக்கின்றேன். இதன் மூன்றாவது ஓவியத்தை பாரிஸில் இருந்த Musée d'Orsayல் பார்க்கமுடிந்தது ஓர் அரிய வாய்ப்புத்தான் எனத்தான் சொல்லவேண்டும்.

 பாம்பாட்டி /The snake charmer (Henri Rousseau) 

Henri Rousseau இந்த ஓவியத்தை, அவரது தாயார் இந்தியா பற்றிக் கூறிய தொன்மக் கதைகளைக் கேட்ட பாதிப்பில் வரைந்திருக்கின்றார். பாம்பைத் தோளில் போட்டு, புல்லாங்குழல் ஊதும் ஒரு கரிய உருவம். அந்த 'இசையில் மயங்கி' மரத்திலிருந்து தலையை நீட்டும் ஒரு நீண்ட பாம்பும், மேலும் புற்றரையில் ஆடுவதைப் போன்ற பாவனையில் சில பாம்புகளும், ஒரு நாரையும், புல்லாங்குழல் இசைக்கும் உருவத்திற்கு அப்பால் துலங்கும் நிலவும், நிலவின் ஒளிபட்டு முன்னே ஒளிரும் செடிகளுமென ஒருவித மாயநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் ஓவியமாக இது இருக்கின்றது.
பிரெஞ்சு ஓவியரான Henri Rousseau நினைக்கும்போது, அவரது The Sleeping Gypsy மற்றும் The Dream ஆகியவற்றைத் தவிர்த்து அவரை நினைவுகூரவே முடியாது. 40 வயதிற்குப் பிறகு ஓவியங்களை வரையத்தொடங்கி, அவரது ஓவியங்கள் சிறுபிள்ளைத்தனமாய் இருக்கின்றன என அவரது காலத்திலேயே விமர்சித்து ஒருவகையில் ஒதுக்கப்பட்டவரும் கூட. அப்படியிருந்தும் பிக்காஸோ , Rousseau தெருவில் ஓவியம் வரைந்து விற்றுக்கொண்டிருக்கும்போது அவரது மேதமையைக் கண்டுகொண்டு அவரை வீடுதேடிப் போய்ப் பார்த்திருக்கின்றார். அநேக கலைஞரைப் போல வறுமையுடன், சிறு ஓய்வூதியப் பணத்தோடு, தெருக்களில் வயலின் வாசித்துக்கொண்டும் வாழ்ந்து இறந்த Rousseau வின் படைப்புக்கள் அவரது மரணத்தின் பின்னேயே கவனிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புல்வெளியில் மதியவுணவு /Luncheon on the Grass (Edouard Manet)

மானேயின் 'புல்வெளியில் மதியவுணவு' என்ற ஓவியம் மிகப் பிரபல்யம் வாய்ந்தது. யதார்த்த ஓவியப்பாணியிலிருந்து இம்பிரனிலிசத்திற்கு நகர்ந்த ஓவியர்களில் முக்கியமான ஒருவராக மானே குறிப்பிடுகின்றார். இந்த ஓவியத்தில் பெண்களோ நிர்வாணமாய் இருக்க, அதில் வரையப்பட்டிருக்கும் ஆண்களோ நேர்த்தியாக அன்றைய காலத்துப் பிரெஞ்சு மக்கள் அணியும் ஆடைகள் அணிந்திருப்பதும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதிலிருக்கும் நிர்வாணப் பெண் ஓவியத்திற்காய், பிரான்சில் அன்றிருந்த கலைகளுக்கான காட்சிக்கூடத்தில் இந்த ஓவியம் காட்சியிற்கு வைப்பதற்கு, அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
உண்மையில் இந்த ஓவியம் அதன் வரைதல் முறையிலும் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியிருந்தது. யதார்த்தபாணி ஓவியம் போல இது உடனே தெரிந்தாலும், வரையப்பட்ட நிர்வாணப் பெண்ணின் உருவம் வெளி சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப வரையப்பட்டிருக்கவில்லை. ஏதோ ஒரு உள்ளக அறையில் நிறைய வெளிச்சத்துடன் இருப்பதுபோல வரையப்பட்டிருக்கின்றது.அதேபோன்று பின்னணியில் தண்ணீரில் கையளைந்தபடி இருக்கும் பெண்ணும், தூரத்தில் இருப்பவர் சிறிதாகத் தெரியவேண்டுமென்கின்ற ஓவிய அளவீடுகளின்படி வரையப்படவில்லை.
மிகத் தத்ரூபமாக யதார்த்தப் பாணி ஓவியங்களை இதற்கு முன் வரைந்த Manet, இதை ஓவியம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என இறுக்கமான சட்டகங்களை வைத்திருந்த அன்றையகால ஓவிய மதிப்பீட்டாளர்கள் மீது வைத்த விமர்சனமாக ஒருவகையில் எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்கின்றார்கள். நான் வரையும் ஓவியத்தை நான் விரும்பியபடி வரைவேன், உங்களின் அளவிற்கோ, விருப்பிற்கோ ஏற்ப வரையப்படுவதல்ல ஓவியம் என்று அன்றே Manet அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

 'வைக்கோல் குவியலும்' (The haystack) 'பாதை'யும் (The Path) / Edouard Vuillard

Edouard Vuillard இம்பிரஷனிசத்திற்குப் பிறகான ஓவியங்களை வரைந்தவர் எனச் சொல்லப்படுகின்றார். இவர் அன்றைய பிரான்சில் பிரபல்யமாக இருந்த Nabis என்ற ஓவிய இயக்கத்தில் இருந்திருக்கின்றார். தமிழ்ச்சூழலில் ஒருகாலத்தில் ஒருகுழு கலை கலைக்காகவே என்ற மந்திராடனத்தை உச்சரித்துக்கொண்டிருந்ததைப் போல, கலைஞர்கள் உயர்வானவர்கள்/கலை எல்லோராலும் எளிதில் விளங்கமுடியாத ஒரு சிறுவட்டத்திற்குமட்டுமே உரியதெனவும் ஒருகாலத்தில் இந்தக்குழு நம்பியிருக்கின்றது. அவ்வாறு, தாம் வரைகின்ற எல்லாவற்றிற்கும் அப்பாலும் 'குறியீடுகள்' இருக்கின்றன என பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தவர்களில் Edouard Vuillardம் ஒருவர்.
Nabis என்ற அமைப்பைத் தொடங்கி ஒரு புது ஓவியப்பாணியைத் தொடங்க விரும்பினாலும் இறுதியில் அவரவர் அவர்களின் பாணியில் ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். அதற்குச் சான்றாக Edouard Vuillardவின் 'பாதை'யும் (The Path) 'வைக்கோல் குவியலும்' (The haystack) எனத்தலைப்பிடப்பட்ட இவ்விரு ஓவியங்களும் இருக்கின்றன.

ஆயிரத்தொரு இரவுகள் / One thousand and one nights (Vittorio Zecchin)

இதை வரைந்த Vittorio Zecchin இத்தாலியைச் சேர்ந்தவர். இன்னும் திருத்தமாகச் சொல்வதனால் வெனிசிலுள்ள Murano என்ற தீவைச் சேர்ந்தவர். இந்த ஓவியத்தின் பெயர் 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இளவரசர்களும் இளவரசிகளும் பரிசில்களைச் சுமந்துகொண்டு சுல்தானிடம் செல்கின்றனர். சுல்தானின் மகளை, அலாவுதீனுக்குப் பெண் கேட்பதற்காய் இவர்கள் பரிசுப் பொருட்களுடன் செல்வதையே Zecchin இதில் காட்சிப்படுத்துகின்றார்.
மிக ஆறுதலாகப் பார்க்கும்போது Zecchin செய்திருக்கும், வரைதலின் நுட்பம் நமக்குப் புலப்படும். ஒருவகையில் பார்த்தால் இது கிளிம்டின் (Klimt) ஓவியப்பாணியை நினைவூட்டுகின்றது. முக்கியமாய் கிளிம்டின் 'முத்தம்' என்கின்ற ஓவியத்தை. வியன்னாவில் அதை நேரடியாகப் பார்த்தபோது, 'மோனாலிசா'வைக் கூட கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய் என விலத்திவைத்து இரசிக்ககூடிய அவ்வளவு அற்புதமான ஓவியம் அது.
ஆக, ஏற்கனவே அறிமுகமான படைப்பாளிகளுக்காய் மியூசியத்திற்குப் போகும்போது, புதிதாய் நம் மனதை வருட/திகைக்கவைக்கும் இவ்வாறான ஓவியங்களையும் தற்செயலாய் கண்டடையும்போது அது இன்னும் சுவாரசியமான அனுபவமாய் மாறிவிடுகின்றது.
----------------------------
(நன்றி: 'அம்ருதா', மாசி, 2018)

எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்

Sunday, February 11, 2018

ழமான, தொடர்ச்சியான வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு முக்கியமானதா என்பதில் எப்போதும் சந்தேகமுண்டு. பரவலாய் வாசிக்குமொருவர் எழுதவரும்போது நல்ல படைப்பைத் தருவார் என்றும் எதிர்பார்க்கமுடியாது. சிலவேளை குறைவாக வாசிக்கும் ஒருவர் சிறந்த படைப்பை எளிதாகத் தந்துவிடமுடியும். எனெனில் வாசிப்பு என்பதைவிட அவரவர் அளவில் உற்றுப்பார்க்கும் அனுபவங்கள் என்பது முக்கியமானது; படைப்பிற்கு வளஞ்சேர்ப்பவை.
அப்படியெனில் தீவிர வாசிப்பு எங்கே படைப்புநிலையில் முக்கியம் பெறுகின்றது? தொடர்ச்சியாக ஒருவர் எழுத விரும்புகின்றாரெனில் இவ்வகையான வாசிப்பு அவசியமாகின்றது. ஆகக்குறைந்து ஒரே பின்னணியில், பல்வேறுபேருக்குத் தெரிந்த கதையைச் சொல்ல வரும்போதோ அல்லது ஏற்கனவே வேறு சிலரால் சொல்லப்பட்ட கதையை எழுதும்போதோ மொழியினுள் செய்யக்கூடிய வித்தையைப் புரிந்துகொள்ள வாசிப்பு அவசியமாகின்றது. இல்லாவிட்டால் வாசகர்கள் இந்தப் படைப்பில் என்னவிருக்கிறதென்றோ, இந்தக் கதை ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதெனவோ நினைத்து எளிதாகக் கடந்துபோய்விடுவார்கள்.
தொடர்ச்சியான வாசிப்பு என்பது சிலவேளைகளில் எதையாவது புதிதாய் எழுத விரும்புகின்றவர்க்கு தடை செய்யும் மனோநிலையைக் கொடுக்கக்கூடும். ஏற்கனவே வாசித்த ஒரு படைப்பை ஒருவருக்கு நினைவூட்டி இதைப்பற்றி இனியென்ன எழுதுவதற்கு இருக்கிறதெனச் சோர்வைத் தரக்கூடும்.
னால் வாசிப்பிற்கு இன்னொரு அழகான பக்கமும் இருக்கிறது. ஆகக்குறைந்தது ஒரேமொழியில் எழுதுவதை தன்னியல்பிலேயே தடைசெய்யும். வெவ்வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் கொடுக்கும். அவ்வாறு இயலாதபட்சத்தில் கூட, 'எதையும் எழுதாது சும்மா இரு, அதுவே நல்லது' என்று மெல்லிய குரலில் அதட்டி இருக்க வைக்கவும் செய்யும்.
ஒவ்வொரு படைப்பாளியும் அவ்வப்போது உறங்குநிலைக்குப் போவது அவசியம். எழுத்தின் புதிய வடிவங்களுக்கோ அல்லது வேறு தளங்களுக்கோ அடிக்கடி நகர்ந்தாக வேண்டும். இவ்வாறு அவர்கள் போகும்போது அவர்களின் படைப்புக்கான இடத்தை யாரோ ஒருவர் அபகரித்துவிடுவார் என்பதும் ஒருபோதும் நிகழப்போவதில்லை. அசலான படைப்புக்களை உன்மத்தத்தோடு எழுதியவர்கள் மீளவரும்போது, காலமும் வாசகர்களும் திரும்பி இருகரங்கொண்டு அரவணைக்கவே செய்வர்/யும். அவ்வாறு உறங்குநிலைக்குப் போன படைப்பாளிகள் மீண்டும் வரும்போது அவர்களுக்கான சூழல் தமிழ்ச்சூழலில் அப்படியே இருந்ததற்கான எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரின் மீள்வருகை நிகழாதபோதுகூட அந்த இடம் வெற்றிடமாகவே இருந்திருக்கின்றது/இருக்கின்றன.
எழுதுவது மட்டும் அல்ல கலை; அவ்வப்போது எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்.

(February 11, 2016

இலங்கைக் குறிப்புகள் - 04

Saturday, February 10, 2018

கொழும்பில் றஷ்மியினதும், எனதும் நூல்களை அறிமுகப்படுத்த ஷர்மிளா ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஷெரினை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். அவரோடு ஆஸ்திரேலியாவில்(?) இருந்து வந்து ஒரு படப்பிடிப்புக்குழு நின்றதால், அந்தக்குழுவை வழியனுப்பவேண்டியதால் அவர் நிகழ்வு முடியமுன்னரே போயிருந்தார்.

பின்னர் ஒருநாள் அவர் தொலைபேசியில் சந்திப்போமா என அழைத்தார். அதுவரை ஷெரினை அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பது நான் சற்று வெட்கப்படவேண்டிய விடயந்தான். கனடாவில் நீண்டகாலம் வசித்த ஒருவர்; ஜக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்புக்களைச் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது செய்வோமென 90களின் பிற்பகுதியில் சென்றிருக்கின்றார். பிறகு அங்கேயே ஒருகட்டத்தில் அப்படியே தங்கிவிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்/முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில்(?) சில வருடங்கள் தங்கியிருந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவ்வாறான ஒருவரிடமிருந்து இன்னும் ஆழமான விடயங்களை தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளில் நான் அறிந்துகொள்ள முடிந்தது.

மனித உரிமைகள் சார்ந்து நிறைய வேலைகளை ஷெரின் இப்போது செய்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்கின்றபோதும், யாழில் தங்கிநின்று ஏதாவது செய்வோம் என்று விரும்பியபோது அங்கிருந்த அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட முரண்களையும் விபரித்துக்கொண்டிருந்தார். முக்கியமாய் யாரோ ஒருவரை நேர்காணல் சென்றபோது தான் கால்மேல் போட்டுக்கொண்டிருந்து கேள்விகள் கேட்டது அந்த நபருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதன்பிறகு இவர்களோடு இருந்து அங்கே இயங்கமுடியாது என தெற்கிற்கு நகர்ந்துவிட்டேன் எனவும் சொன்னார்.

நான் சந்தித்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் ஏதோ ஓர் அமர்வு நடந்து ஷெரீனும் பங்குபற்றியிருந்தார். சிங்கள குழுக்களுக்கு முன்னர் நமது தமிழ்க் குழுக்கள் எவ்வித தயாரிப்போ, காத்திரமான விவாதங்களையோ உருவாக்காது ஏதோ வந்தோம்/பேசினோம்/சென்றோம் என இருந்தார்கள் என்ற கவலையையும் பகிர்ந்துகொண்டார்.

நான் ஷெரினைச் சந்தித்தபோது, அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்/முஸ்லிம்/சிங்களப் பாடசாலை மாணவர்கள் போர் பற்றி தமது அனுபவங்களை எழுதிய, ‘மெளன வலிகளின் வாக்குமூலம்’ என்ற ஒரு நூலைத் தொகுத்திருந்தனர். தமிழிலும் சிங்களத்திலும் தயாரிப்புக்கள் முடிந்து நூல் வெளியிடுவதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. இதற்கான செலவை ஏற்றவர்கள் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடக்கேட்டபோது, தமிழிலும்/சிங்களத்திலுமே முதலில்வெளிவருவதே முக்கியமென அதை மறுத்தோம் எனவும் ஷெரின் சொல்லியிருந்தார். ஷெரினது வீட்டிலே இன்னொரு நண்பரான ராதிகாவையும் சந்தித்திருந்தேன். சிங்கள ஊடகவியலாரும், சட்டம் படித்தவருமான ராதிகா தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றுக்குப் பிரயாணித்துக்கொண்டிருப்பவராகவும், சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் இருக்கும் இனவெறியையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.

ஷெரின் மனித உரிமை விடயங்களையும் மட்டுமில்லாது, தனது உறவினர்கள் செய்யும் மனதிற்கு உவப்பாக இல்லாத சில விடயங்களையும் வெளிப்படையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் தனது குடும்பம்/பிள்ளைகளை விட்டுவிட்டு தனியே இலங்கையில் இருந்து அவர் தனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்த அவர், ‘நான் இங்கு இறந்தால் இந்த வீட்டிலிருக்கும் சமையல்கார அம்மாவும், பாதுகாப்பிற்கு நிற்கும் ஒரு ஐயாவும் மட்டுமே தனக்கான ‘சொந்தங்கள்’ என்றார்.

ஷெரினோடும், ராதிகாவோடும் இருந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது, அநேக புலம்பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் ‘கானல் கனவான’ எப்போதேனும் ஒருநாள் இலங்கைக்குத் திரும்பிவருவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘நீ வருவதென்றால் பயப்பிடாது வா, எங்கள் நிறுவனத்தில் ஒருவேலை (ஆகக்குறைந்தது மொழிபெயர்ப்புச் சார்ந்து) தருகின்றேன்’ என்றார் ஷெரின். இலங்கை போன்ற இன்னமும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கப்படாத சூழலில் ஒரு சிறு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என்பதே கஷ்டமானது. ஷெரின் கூட சில நாள்களின் முன், நல்ல பணியாளர்கள் என்றாலும், இனத்துவேஷம் வெளிப்பட்ட இரண்டு பணியாளர்களை வேலை நிறுத்தவேண்டி வந்தது என்றார்.

மது இருவருக்கும் பழக்கமான ஒருவரைப் பற்றிய பேச்சொன்று இடையில் வந்தது. அவரின் மீது மதிப்பிருந்தாலும், அவர் போர்க்காலத்தின் இறுதிக்கட்டம்வரை நின்றவர் என்கின்றபோதும் தன்மீது சுயவிமர்சனம் இல்லாது பல்வேறு அரசியல் கிளைகளில் மாறிமாறிப்போய்க்கொண்டிருக்கின்றார் எனச் சொன்னேன். அவரோடும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தில் இயங்கிய ஷெரீன், தானும் இதுகுறித்து கேள்விகேட்டபோது, அந்த நண்பர் மனம் உடைந்து அழத்தொடங்கியபோது தன்னால் அதற்குப் பிறகு எதுவுமே அது குறித்துப் பேசமுடியவில்லை என்றார். உண்மைதான், இவ்வாறான விடயங்கள் உணர்ச்சிகரமானது மட்டுமில்லை, மிகுந்த சிக்கலானதும் கூட.

இதுவரை அறிமுகம் இல்லாத ஒருவரோடு ஏற்படும் நட்பென்பது சிலவேளைகளில் அழகானது. சில மணித்தியாலங்கள் நிறைய விடயங்களை ஆறுதலாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது, நமது உரிமைகள் பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் உண்மையான அக்கறையோடு இருக்கும் ஷெரீன் போன்றவர்களைப் பற்றி ஏன் நமது சமூகத்தில் பரவலான அறிமுகம் இல்லை என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அவரைப் போன்றவர்களுக்குத் தம்மை ‘விளம்பரப்படுத்த’ விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியுமெனினும், அவரை அறிந்தவர்கள் அவர்களின் பணியை பரவலாகக் கொண்டு செல்லலாம். முக்கியமாய் எல்லா இனங்களோடும் சேர்ந்து இயங்கியபடி,, தமிழர்களின் உரிமை குறித்தும் விட்டுக்கொடுக்காது பேசும் ஷெரீன் போன்றவர்கள் நமது சமூகத்திற்கு முக்கியமானவர்கள்.

ஷெரின் தனது பணிகளுக்கிடையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிணக்குகள், மனஅழுத்தங்கள், பின்னடைவுகள் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, இவ்வளவு எல்லாம் நிகழ்ந்தபின்னும், நீங்கள் நம்பும் விடயங்களுக்காய் அதை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றீர்களே, இப்படி எங்களைப் போன்றவர்களால் தொடர்ந்து இதற்குள் இருந்திருக்கவே முடியாது என்று சொன்னேன். ஆகவேதான் ஷெரீன் போன்றவர்களை எனக்கு நெருக்கமானவர்களாகக் கொள்ளமுடிகிறது போலும்.


(Jan 19, 2018)

சூரியகாந்திப்பூ குறிப்புகள்

Monday, January 29, 2018


கட்சிக்காரன்
இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது ஏதேனும் நேர்த்திக்கடன் வைத்துவிட்டு படைப்புக்களை அனுப்புகின்றார்களோ என நினைக்குமளவிற்கு எனக்குப் பிடித்த சிலர் விகடனில் எழுதிய கதைகளை வாசிக்கும்போதும் யோசிப்பதுண்டு.

இந்தமுறை விகடனில் இமையம் எழுதிய 'கட்சிக்காரன்' கதை எனக்குப் பிடித்திருந்தது; முக்கியமாய் தி.மு.கட்சிக்காரரான இமையம் தனது கட்சியின் இன்றைய உண்மை நிலையை விமர்சித்து எழுதியிருப்பது. மேலும் தங்கம் தென்னரசு, அவரின் தந்தையான தங்கபாண்டியன் போன்றவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, ஒரளவு நேர்மையான அவர்களாலேயே எதையும் இன்றைய தி.மு.கவில் சாதிக்கமுடியாத அவலத்தை சமரசமின்றி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சிறுகதையிற்குள் விடப்படவேண்டிய மெளனத்தை மட்டுமில்லாது, எல்லாவற்றையும் உரையாடல்களால் சொல்லிவிடுவதையும் இமையத்தின் பலவீனமாய் ஏற்கனவே குறிப்பிட்டு எழுதியிருப்பேன். அதை அவர் இந்தக்கதையில் மீறியிருப்பதால்தானோ என்னவோ இன்னும் இந்தக் கதை பிடித்திருந்ததோ தெரியாது. கிட்டத்தட்ட 19 பக்கங்கள் அளவிற்கு நீளும் 'கட்சிக்காரனை' விகடன் பிரிசுரித்ததைப் பார்க்கும்போது இந்த உலகில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழும் வாய்ப்பிருக்கின்றதை நாங்கள் நம்பத்தான் வேண்டும் போலிருக்கிறது.
(June 2017)


மழையும் புத்தகங்களும்
தொடர்ந்து விடாத மழைபொழிந்து கொண்டிருக்கும் இன்று அன்னா அகமத்தோவாவும், போர்ஹேஸும், காஃப்காவும் சில மணித்தியாலங்களுக்குத் துணையிருந்தார்கள். காஃப்காவின் The Zürau Aphorisms சிறுசிறு குறிப்புகளாய் (109) எழுதப்பட்டதை வாசிப்பது வித்தியாசமான அனுபவமாயிருந்தது. அது போல போர்ஹேஸின் அனைத்துக் கவிதைத் தொகுப்பிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட 200 கவிதைகளுள்ள நூலில், அவரின் ஒவ்வொரு தொகுப்பிற்கான முன்னுரைகளும் சுவாரசியமானவை. அன்னா அகமத்தோவா சிலுவையில் அறையப்பட்டு முழந்தாழிட்ட நிலையில் தலையைக் குனிந்தபடியிருந்தார். எத்தனை துயரை அவர் வாழ்ந்த காலத்தில் அனுபவித்திருந்திருப்பார். அதையும் மீறி மூடிய நாடொன்றில் நடந்தவற்றை உலகிற்கு எடுத்தியம்பிய துணிச்சல்காரி என்றவகையில் அவரின் மீதான நெருக்கம் கூடிக்கொண்டே போனது.

முன்பு நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகேயும் புத்தகங்கள் விற்கும் கடையொன்றும் இருந்தது. குளிர்காலங்களில் வெளியே போக முடியாத சூழ்நிலையில் மதியவுணவு வேளைகளில் அங்கேயே அதிக நேரத்தைச் செலவழிப்பதுண்டு. அவ்வாறே சில புதிய புத்தகங்களை(மேரி ஆன் மோகன்ராஜ் -The Bodies in Motion, ஜூம்பா லகிரி -Unaccustomed Earth , .வி.எஸ்.நைபால்-Magic Seeds , மார்க்வெஸ்--Memories of My Melancholy Whores என்பவை இப்போது நினைவில் வருபவை) காசு கொடுத்து வாங்காமலேயே பகுதி பகுதியாய் அங்கேயிருந்து வாசித்து முடித்துமிருக்கின்றேன். இப்போதெல்லாம் அங்கே ஆறுதலாய் இருந்து வாசிப்பதற்கான வெளியையெல்லாம் குறைத்துவிட்டார்கள்.

அண்மையில் என்னோடு வந்த நண்பரிடம், இந்த மூலையிலிருந்துதான் அவ்வப்போது கண்ணாடிக்குள்ளால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வாசிக்கின்றனான் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். நம்முன்னாலேயே நடந்த பல பிடித்த விடயங்கள் எல்லாமே எப்போதோ நடந்ததுபோல 'கடந்தகாலமாய்'ப் போய்க்கொண்டிருப்பது ஒருவகையில் துயரமானது அல்லவா?

போர்ஹேஸின் -மேலேயுள்ள- 'காதலின் எதிர்பார்ப்பு' ஐ வாசித்தபோது, முன்னர் இப்படி அந்த புத்தகசாலையில் சென்று வாசித்துக்கொண்டிருந்தகாலத்தில் பறக்கும் நூலகம் என்று எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்தது.
(Sep, 2013)


பயனுள்ள ஓரு மாலை
யாரேனும் புதிய ஒருவரை - முக்கியமாய் இலக்கியம்/சினிமா சார்ந்து- சந்திக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அதாவது அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்களுடன் அவர்களைச் சந்திப்பதில்லை என்பதில் அவதானமாய் இருக்கவும் தேவையில்லாத ஏமாற்றங்களை அடையாதிருக்கவும் காலம் கற்றுத் தந்திருக்கின்றது. எனெனில் கடந்தகாலம் அவ்வாறான ஏமாற்றங்களைத் தந்திருந்தது. அவ்வாறான ஒரு நிலையுடன் இன்று ரொறொண்டோவில் நடந்த பயிற்சிப்பட்டறையில் சொர்ணவேலைச் சந்திருந்தேன். பயிற்சிப்பட்டறை காலையில் இருந்து தொடங்கியிருந்தாலும், அது முடியும் போதே சென்றிருந்தேன். அதன்பிறகு சமகால (தமிழ்) சினிமா என்கின்ற கலந்துரையாடலிலும் இருந்தேன். சொர்ணவேல் நிறைய விடயங்களைத் தெரிந்த சுவாரசியமானவராய் ஒருவராய்த் தெரிந்ததால் பிறகு சில நண்பர்களுடன் ஒரு கோப்பிக்கடையில் இருந்தும் நீண்ட நேரம் உரையாடிருந்தோம்.

ஜான் ஆபிரகாம், ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர்களோடான தனிப்பட்ட நட்பு சார்ந்தும், அவர்கள் மீது தனக்குள்ள விமர்சனங்களையும் முன்வைத்த சொர்ணவேலின் பார்வை எனக்கு உவப்பானது. அதைவிட அவர் விரிவாக சிலாகித்து உரையாடிய பிறமொழிப் படங்களும், ஆவணப்படங்களும், குறும்படங்களும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சொர்ணவேலில் நூலான, 'சினிமா:சட்டகமும், சாளரமும்' பற்றிப் பேசிய தேவகாந்தன் ஓரிடத்தில் இப்படிச் சொல்லியிருப்பார். 'நான் ஒரு தீவிர சினிமா பார்வையாளன் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் சொர்ணவேலில் நூலை வாசிக்கும்போது அவர் குறிப்பிட்ட படங்களில் 50% மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது புரிய, நான் இதுவரை நினைத்த பார்வைக்கே பங்கம் வந்திருக்கின்றது' என வெளிப்படையாகத் தேவகாந்தன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கும், சொர்ணவேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிடும் படங்களில் பெரும்பான்மையான பிறமொழிப் படங்களைப் பார்க்கவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சொர்ணவேல் எனது வலைத்தளத்தை அவ்வப்போது வாசித்திருக்கின்றார். எனது கதைகளில் ஒன்றான 'கள்ளி' அவருக்குப் பிடித்துமிருந்தது. வாசனையைப் பின் தொடரும் ஒருவனைப் பற்றிய கதையை காட்சிப்படுத்துவது கடினம் என்றாலும் என்றேனும் ஒருநாள் குறும்படமாக்கிப் பார்க்கலாம், சுவாரசியமானது என கதைத்துக்கொண்டிருந்தார்.

இது எல்லாவற்றையும் விட அவருக்கும் எனக்குப் பிடித்த தெரிதா பிடித்திருக்கின்றது. அவரது 'சினிமா: சட்டகமும் சாளரமும்' முன்னுரையிலே தெரிதாவே முக்கியமாய் இடம்பெற்றிருக்கின்றார். தெரிதாவின் மீதான் ஈர்ப்பாலோ என்னவோ முன்னுரையில் இருக்கும் இரண்டு படங்களும் தெரிதாவே இருக்கின்றார். ஆவணப்படங்களில் ஆர்வமும், ஆவணப்படங்களை எடுத்தவருமான சொர்ணவேல் தெரிதா பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த ஆவணப்படங்களில் அதுவுமொன்று.

அயோவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சொர்ணவேல் தற்போது மிஷிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
(Aug 31, 2013)