கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

வலிகளை ஆவணப்படுத்துதல்

Friday, May 04, 2007

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.


Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood

ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், 'இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன' என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் 'சாதாரணமாய்' நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. 'கொலையும் செய்வாள் பத்தினி' என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று 'அதிர்ச்சியானது'தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, 'எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்' என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் 'சாதாரண'மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, 'இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்' பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.


வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Wednesday, April 25, 2007

- சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யை முன்வைத்து-

மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree

உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 'கடல்கன்னி' என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) 'மரமும்', ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) 'மழையும்' இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்த்துரே பியேட்ரியின் 'மழை' கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.

அகஸ்ரோவின் (Augsutro Bastos) 'கைதி', ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது 'வீரர்களுடன்' புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு 'தொழில்முறை' கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் 'கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்' என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் 'மட்டுந்தான்' கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் 'தொலை'வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ 'நவீனமாதிரிகள்' மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது 'கிரணம்' இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த 'கன்னித்தீவுக்கதைகளை' பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்

Tuesday, April 17, 2007

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-

விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்த பீதி எல்லாவற்றையும் தின்றுவிடுகின்றது.
..........
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
.......
வாழ்வு குறித்தான் இந்தப் படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முடியாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
......
இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப்பெரிய மாற்றம் வேண்டி விடிவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக் காலத்தில் அநாதைகளாகவோ அல்லது இது தமது மரணகாலம் என்று அறியாமலே சாகடிக்கப்பட்டோரையோ நாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அடக்குமுறையாளர்களின் கொடூரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்க்கப்படும் ஒரு எழுத்தாளனது குரலை நாங்கள் இந்தத் தேசம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைக்கான குரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
....
(நிலம் இதழ் 03, நவம்பர்/2001- தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...)

Nilam

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது;
கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களில் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது.
கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை;
என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது
எனவே தோழர்களே,
நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை
நான் அவளுக்குப் பரிசளிப்பது
இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள்
மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

எஸ்போஸ்
-10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் எழுதியது-

......
எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் தனது முப்பத்திரண்டாவது வயதில் துப்பாக்கிகளுக்கு வாழ்வை இரைகொடுத்தவர். துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் துப்பாக்கிகளால் வேறெதைச் செய்ய ஏலும்? அல்லது நம்மால்தான் ஏது செய்ய இயலும்?

எஸ்போஸ், கவிதைகளுக்காய் 'நிலம்' என்ற காலாண்டிதழை நடத்தியவர். தெரிந்த கவிஞர்களின் கவிதைகளை மட்டுமில்லாது, கவிதைகளுக்கான விமர்சனங்களையும், புதிய கவிஞர்களை இனங்காட்டவும் 'நிலம்' காலாண்டிதழின் ஊடாக எஸ்போஸ் முயன்றிருக்கின்றார். யாழ் இடப்பெயர்வுகளை (?) காலச்சுவட்டில் எழுதியபோது -காலச்சுவட்டின் அசிரத்தையால்- எஸ்போஸின் சொந்தவிபரங்கள் வெளியிடப்பட்டு 2001 ஆண்டில் அரச இயந்திரத்தினால் கைதுசெய்யப்பட்டவர் (மேலே தரப்பட்ட கவிதை அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது). 'நிலத்தில்' மட்டுமின்றி பலவேறு இதழ்கள்/சஞ்சிகைகளில் பரவலாக எழுதியவர்.


அவரது ஏழு வயது மகன் சாட்சியாய் இருக்க நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது மிக அவலமானது. முன்னர் -2001ல்- கைதுசெய்து சித்திரவதைக்கு பின் எஸ்போஸை விடுதலை செய்த 'மனிதாபிமானம்' கூட இந்தமுறை துப்பாக்கிகளோடு வந்தவர்களுக்கு இருக்கவில்லை.

மக்கள் இல்லாமற்போய்க்கொண்டிருப்பதை இலக்கங்களில் மட்டுமே கணக்கில்கொள்ளும் ஒரு நிலப்பரப்பில் தனித் தனியாக ஒவ்வொருத்தருக்கும் அஞ்சலியோ சொட்டுக்கண்ணீரோ விடுவதுகூட அருகதையற்றதாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.....

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்

Friday, March 16, 2007

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-

அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது என்பதை -பிறரைவிட- அவர்களே அதிகம் அறிவர். தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுதல் சிலருக்கு சில மாதங்களில், சிலருக்கு சில வருடங்களில், சிலருக்கு வாழ்நாட்களில் அப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்விடுவதுமுண்டு. Baran என்கின்ற இப்படம் அகதி வாழ்வில் முளைக்கும் மென்மையான காதலை இயல்பாய்க் காட்சிப்படுத்தியபடி விரிகின்றது.

ஈரானில் ஒரு அடுக்குமாடியைக் கட்டும் பின்புலத்தோடு படம் ஆரம்பிக்கின்றது. அங்கே ஈரானியர்களும் -அரசால் வேலை செய்ய உரிமை மறுக்கப்பட்ட- ஆப்கான் அகதிகளும் வேலை செய்கின்றார்கள். கட்டட வேலை செய்வதற்காய் பதின்மவயது லரீஃவ் (Lateef) அந்த இடத்திற்கு வருகின்றார். அங்கே லரீஃப் பிறரைப்போல சீமெந்துப்பைகளைக் காவுவதையோ, சுவர்களைக் கட்டியெழுப்புவதிலோ ஈடுபடுவதில்லை. அவருக்கான வேலை, அந்த வேலைத்தளத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீரும், உணவும் தயாரித்து வழங்குவது. அதன் காரணமாக பிறரால் கேலி செய்யப்பட்டும், அவ்வப்போது சிலரோடு சண்டையும் பிடித்தபடியும் இருக்கின்றார், லரீஃவ்.

ஒருநாள் தவறுதலாய் ஒரு ஆப்கானிய அகதித்தொழிலாளர் மாடியிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகின்றார். அவரது கால் பலமாய்க் காயப்பட்டு வேலை செய்ய முடியாதுபோக அவரது மகனொருவன் (Rahmat) வேலைக்காய் வருகின்றார். கட்டட மேற்பார்வையாளர், அந்தப் பையன் மிகவும் சிறுவனாயிருக்கின்றான்; இவனால் கடுமையான் வேலைகளைச் செய்ய முடியாது என்று முதலில் நிராகரிக்கின்றார். இறுதியில் இந்தப்பையனுக்கும் வேலை இல்லாது போனால் அந்தக்குடும்பத்தால் சாப்பிடக்கூட முடியாது என்றபடியால் வேலைக்குச் சேர்த்துக்கொள்கின்றார். எனினும் அந்தப்பையன் வாய்திறந்து பேச முடியாத ஊமையாக இருக்கின்றான். ரமட் கடுமையான வேலைகளைச் செய்யக் கஷ்டப்படுவதால், லரீஃவின் வேலை ரமட்க்கு வழங்கப்படுகின்றது. மேலும், ரமட் தயாரிக்கும் தேநீரும், மதியவுணவும் சுவையாக இருக்கின்றது என்று பிறர் கூறுவது லரீஃவிற்கு பொறாமையைத் தருவதோடு, தனது இலகுவான வேலையை புதிதாய் வந்த ரமட் எடுத்துவிட்டார் என்று ரமட் மீது கோபமும் வருகின்றது. எனவே லரீஃவ் தொடர்ந்து ரமட்டை நக்கலடித்தபடியும் காயப்படுத்தியபடியும் வேலைத்தளத்தில் இருக்கின்றார்.

b4

தற்செயலாய் ஒருநாள் ரம்ட் ஆணல்ல -ஆண்வேசம் போட்ட பெண் என்பதை- லரீப்ஃ கண்டுபிடிக்கின்றார். அதன்பிறகு, அதுவரை ரமட் மீது இருந்த வெறுப்பும் பொறாமையும் போய்விட லரீஃப்ற்கு அந்தப்பெண் -rahmat- மீது ஈர்ப்பும் பரிவும் வந்துவிடுகின்றது. சில வாரங்களின் பின், ஆப்கான் அகதிகள் சட்டதிற்கு புறம்பாய் வேலை செய்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அரச அதிகாரிகள் வேலைத்தளத்திற்கு வர லரீஃவ், ரமட்டை அவர்களிடமிருந்து காப்பாற்றுகின்றார். எனினும் தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆப்கான் அகதிகள் வேலை செய்யமுடியாத நெருக்கடிநிலை வருகின்றது.

ரமட் வேலைக்கு வருவதை முற்றாக நிறுத்தியதால், லரீஃவ்வை பிரிவும் வெறுமையும் சுழற்றியடிக்கின்றது. ரமட்டை தேடி லரீஃவ் ஆப்கான் அகதிகள் வாழ்கின்ற ஈரானிய நிலப்பரப்பை நோக்கிச் செல்கின்றார். வேலை எதுவுமின்றி ரமட்டும், காயப்பட்ட அவரது தகப்பனாரும் மிகவும் கஷடப்படுகின்றார்கள் என்பது புரிகின்றது. லரீஃவ் திரும்பவும் தனது வேலைத்தளத்திற்கு மீண்டு, தனது மேற்பார்வையாளரிடம்- ஊரில் தனது சகோதரி கடும்பிணியில் இருக்கின்றார்- ஒருவருடதிற்கான தனது சம்பளத்தை இப்பவே தாருங்கள் என இறைஞ்சுகிறார். மேற்பார்வையாளரும் பரிதாபப்பட்டு பணத்தைக் கொடுக்க, அதை ரம்ட் குடும்பத்தினரிடம் கொடுத்துவும்படி அவர்களின் நண்பரொருவரிடம் லரீஃவ் கொடுத்தனுப்புகின்றார். அந்த நபரோ --ரமட்டின் தகப்பனிடம் பணத்தைக் கொடுக்காது- அந்தப் பணத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு ஓடிவிடுகின்றார்.

இப்படியாக லரீஃவ், ரமட்டுக்கு உதவி செய்யப்போகின்ற ஒவ்வொருமுறையும் ஏதோவொரு தடங்கல் வந்துகொண்டேயிருக்கின்றது. இறுதியில் வேலை செய்வதற்கு அவசியமான த்னது அடையாள அட்டையை விற்று லரீஃவ் பணத்தைத் திரட்டுகின்றார் (அந்தப்பகுதியில் அகதிகள் நிறைய இருப்பதால் அடையாள அட்டை மிகவும் பெறுமதி வாய்ந்தது; புகைப்படத்தை கிழித்துவிட்டு வேறொருவரின் படத்தை அதில் இலகுவாய் ஒட்டி விற்கலாம்) . அந்தப்பணத்தை லரீப்ஃ நேரடியாக ரமட் குடும்பத்திடம் கொடுக்கும்போது அவர்கள் கூறும் ஒரு செய்தி இடியாக லரீஃவ் வின் நெஞ்சினில் இறங்குகின்றது. தன்னைவிட்டு ரமட் விரைவில் விலகப்போகின்றார் என்ற துயரம் லரீஃவ்வின் விழிகளில் கசிகிறது. கடைசிக்காட்ச்யில், ரமட் சிறுகுட்டையில் தனது பாதச் சுவட்டை பதித்துவிட்டுப் போவதை லரீஃவ் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார். ரமட், லரீஃவ்வை விட்டு விலகிச்செல்ல செல்ல, பெய்கின்ற மழை ரமட்டின் பாத அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மறைப்பதுடன் படம் முடிகின்றது.

இப்படம் எளிய காட்சிகளாலும் சொல்லாடல்களாலும் நகர்த்தப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வருகின்ற கதாமாந்தர்கள் வளவளவென்று நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருப்பதில்லை. பருவங்களோடு காட்சிகள் சடுதி சடுதியாய் மாறுவதைக் கமரா கலைநயத்தோடு படம்பிடிக்கின்ற அதேசமயம், கதை நிகழும் நிலப்பரப்பிலிருந்து கமராக் கோணம் நகர்ந்தும் விடுவதில்லை. இப்படம் ஒரு அகதிப்பெண் மீது, இன்னொரு நாட்டு ஆண் காதல் கொளவதை மென்மையாகச் சொன்னாலும், வருகின்ற ஆண்-பெண் பாத்திரங்கள் வாய் திறந்து எந்த உரையாடலையும் நேரடியாக நிகழ்த்தவில்லை. அவர்களுக்கிடையில் முகிழும் இவ்வழகிய உறவு சிறுசிறு காட்சிகளால் மட்டுமே நுட்பமாய் கவனப்படுத்தப்பட்டிருக்கும்.

(2)

இப்படத்தைப் பார்க்கும்போது காலம் எனக்குள் பின்னோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொள்ளத் தொடங்கியது. என்னுடைய பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் மட்டக்களப்பிலிருந்து ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் இருந்த சூழ்நிலை அவரையும் அவரது குடும்பத்தையும், வடக்கு நோக்கி துரத்தி அடித்திருந்தது. அதுவரை நாங்கள் -மூன்று பெடியங்கள்- வகுப்பில் முதல் மூன்று இடங்களில் மாறி மாறி வந்துகொண்டிருப்போம். ஆனால் புதிதாய் வந்திருந்த பெண்ணின் அறிவுக்கூர்மை எங்கள் எவரேனும் ஒருவரின் இடத்தை இல்லாமற்செய்துவிடும் என்ற பதட்டத்தை உருவாக்கியிருந்தது. என்னென்ன நேரங்களில் எப்படி எல்லாம் அவர் படிகின்றார் என்பதை எல்லாம் கவனமாய் நாங்கள் உளவு பார்க்கத் தொடங்கியிருந்தோம். எனினும் அவர் ஒவ்வொருமுறையும் பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுக்கும்போது ஒருவித பொறாமை கலந்த மகிழ்வுடன் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

b3

பிறகு போர்ச்சூழ்நிலைகளால் பல மாதங்களாய் பாடசாலை நடைபெறாமல் இருந்தவேளை அவரது வீட்டிற்கு சென்று ஆங்கிலமும் கணிதமும் படிப்பது நாளாந்த கடமையாயிற்று. அவரது தந்தையார் ஒரு கணித ஆசிரியர். நான் விடிகாலை எழும்பி முகங்கழுவி -நல்ல மூட் இருந்தால் குளித்துவிட்டு- அவர்களின் வீட்டை போனேனென்றால் மதியவுணவு வரை எங்களுக்கு கணித வகுப்பு நடக்கும் (வெவ்வேறு வயதுகளிலிருந்த பத்துப்பேர்கள் வரை அங்கே படித்துக்கொண்டிருந்தோம்). மதியவுணவின் பின் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறும். இன்னொரு ஊரில் அவர்களின் வீடு இருந்தபடியால், மதியவுணவுக்காய் வீட்டை வந்தபின் பிறகு பின்னேர வகுப்புக்காய் சைக்கிளை உழக்குவேன். சிலவேளைகளில் அந்தப்பெண்ணின் வீட்டிலையே சாப்பிட்டுவிட்டு நண்பர்களோடு விளையாடுவதும் உண்டு. ஆங்கிலச் சொற்களின் ஸ்பெல்லிங்கை கிளிப்பிள்ளை போல மனப்பாடம் செய்துவந்த பருவத்தில் -அப்படியல்ல- சொற்களை ஒலியாய் உச்சரிப்பதன் மூலம் இலகுவாய் ஸ்பெல்லிங்கூட்டி எழுதலாம் என்ற விளங்கப்படுத்திவிட்டவரும் அவர்தான். எனினும் நாங்கள் ஓம்/இல்லை என்பதற்கப்பால் பெரிதாக எதையும் உரையாடியதில்லை. வகுப்பில் எனது இடத்தை அவர் அபகரித்துவிடுவார் என்ற அச்சமும் பொறாமையும் என்னை அவரிடம் அதிகம் நெருங்க அனுமதிக்கவில்லை போலத்தான் தோன்றுகின்றது. ஆயினும் -இருவரும்- நமக்கிடையிலுள்ள ஈர்ப்பையும் பரிவையும் வேறு விதங்களில் வெளிப்படுத்தியபடி இருந்திருக்கின்றோம். பிறகு எங்கள் ஊர்ப்பக்கம் நிலைமை மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒருநாள் ஒழுங்கையொன்றில் சந்தித்த அந்தப்பெண்ணின் தம்பி, தாங்கள் இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்குப் படகில் போகப்போகின்றோம் என்று கூறினார். அப்போதுதான் முதன்முறையாக அந்தப்பெண்ணோடு -ஓமோம்/இல்லை என்பதற்கப்பால்- சற்று விரிவாக மனந்திறந்து ஒருமுறையேனும் பேசவேண்டும் என்ற ஆசை எனக்குள் அரும்பத்தொடங்கியது.

எனது பொறாமைகள், பதட்டங்களுக்கு அப்பால் அவரை நோக்கி காதல்(?) மெல்லியதாய் வளர்ந்துகொண்டிருந்தது என்பது அந்தச்செய்தியினூடு எனது உள்மனதிற்குள் விளங்கத்தொடங்கியது. அவருடன் பேசுகின்றபோது ஏதேனும் ஒரு வார்த்தையிலேனும் எனது நேசத்தைத் தெரிவித்துவிடவேண்டும் என்ற விருப்பு நுரையாய் ததும்பிக் கொண்டிருந்தது. எனினும் போர் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் எங்களிருவரையும் வெவ்வேறு திசைகளில் மிக வேகமாய்.... மிக மோசமாய்... அடித்துத் துரத்தியது. தவறவிடப்பட்ட தருணங்களும், விழுங்கப்பட்ட வார்த்தைகளும் காலம்பூரா தொண்டைக்குழிக்குள் சிக்கிய மீன்முள்ளாய் மெல்லிய வலியைத் தந்துகொண்டிருக்கின்றது.

(3)
மஜீத் மஜீதியின், இப்படம் (Baran) அவரின் Children of heaven, Colour of Paradise போன்ற படங்களுக்குப் பிறகு 2001ல் வெளிவந்திருந்த படம். தணிக்கையும், ஒடுக்குமுறைகளும்(?) இருக்கும் ஈரானிலிருந்து இப்படியான படங்கள் வருகின்றன் என்பதோடு ஈரானில் குறிப்பிடத்தக்க பெண் நெறியாள்கையாளரும் இருகின்றார்கள் என்பதை மேற்கத்தேய சிந்தனைகள் ஈரான் பற்றி கட்டியெழுப்பும் விம்பங்கள குறித்து நிறைய யோசிக்கவேண்டி இருக்கின்றது. ஈரானின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைவாதத்தை மீறிய இஸ்லாம் இருப்பதைப்போன்று கூட, அமெரிக்கா பின்புலத்தில் இருக்கும் சவுதி அரேபியாவின் பலபகுதிகளில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

மஜீதியின் பிறபடங்களைப் பார்த்தவர்கள் இந்தப்படத்திலும் அவற்றின் தொடர்ச்சியைக் காணமுடியும். தேநீர் பரிமாறுகின்ற நேர்த்தி, நகர- புறநகர் பாகுபாடுகள் தொடர்ச்சியாக மஜீத்தின் படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. Children of Heaven படத்தின் இறுதியில் வரும் சிறு மீன் குட்டையும், சிவப்பு மீன்களும் இந்தப்படத்திலும் வருகின்றது. மீன் குட்டையையும், மீன்களையும் ஒரு படிமமாய் நாங்கள் பார்க்கமுடியும். நாமெல்லோரும் பல நேரங்களில் தொட்டிக்குள் அகப்பட்ட மீன்கள்தான். நாம் விரும்பினாலும் நம்மால் அதன் கரைகளை உடைத்து நினைத்த விடயங்களைச் சாதிக்கமுடியாமல் பல சந்தர்ப்பங்களில் யதார்த்ததில் இருக்கின்றோம் அல்லவா? இப்படத்தில் வரும் லரீப்ஃ, ரமட்டும் கூட, நமக்கு தொட்டிக்குள் அகப்பட்ட மீன் குஞ்சுகளாய்த்தான் தெரிகின்றார்கள்.

b2

Baran படம், காதல் அரும்புவதை மென்மையாகச் சொல்வதைப் போன்றிருந்தாலும் அடிநாதமாய் இருப்பது அக்திகளில் துயரவாழ்வுதான். அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களும் சக மனிதர்களாய் மதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கபபட ஒவ்வொரு நாடும் உதவ வேண்டும் என்ற அவாவே இப்படத்தில் முக்கிய இழையாக இருக்கின்றது. 9/11 தாக்குதல் அமெரிக்காவில் நடப்பதற்கு முன்னரே, ஈரானில் 1.5 மில்லியன் ஆப்கான் அகதிகள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. தலிபான காலத்து ஆப்கானிஸ்தானை சித்தரிக்கும் ஒசாமா (Osama) படத்தைப் பார்க்கும் ஒருவர், அப்படத்தில் Baran படத்தின் பாதிப்புக்கள் சில இடத்தில் இருப்பதை தெளிவாகக் காணமுடியும்.

பலவேறு மொழிகளைப் பேசுபவர்களாய், வெவ்வேறுபட்ட நிலப்பரப்புகளிலிருந்து வருகின்றவர்களாய் இருப்பினும் அகதிகளின் சோகங்களும் வெறுமைகளும் ஆளுக்காள் அவ்வளவு வேறுபடுவதில்லை. எல்லா அகதிகளும் தம் சொந்த நாட்டிற்கு/ ஊரிற்கு திரும்புவதைப் பற்றியே நிறையக் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அவை வெறும் கானல் கனவுகளாய்ப் போய்க்கொண்டுமிருக்கின்றன. பலர் தங்கள் நாட்டில்/ஊரில் அழகான ஆறுகளும், உயர்ந்த மலைகளும், அற்புதமான வாழ்வும் ஒருகாலத்தில் இருந்ததென -தேவதைக்கதைகள் போல- தமது சந்ததிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போர்ச்சூழலில், எல்லாமே எங்களைக் கைவிட்டபொழுதிலும் உயிர்வாழ்வதற்கு நல்ல தண்ணீரைத் தருவதை மட்டும் எங்கள் ஊர்க்கிணறுகள் ஒருபோதும் நிறுத்தியதேயில்லை என்று அகதியாக்கப்பட்ட நானும் பிள்ளைகளுக்குச் சொல்லவென சில கதைகளை மனதினுள் தேக்கிவைத்திருந்தேன். ஆனால் இப்போது தண்ணீருக்குப் பதிலாய் மனித உடல்கள் எங்களூர்க்கிணறுகளிலிருந்து மிதந்துகொண்டிருக்கின்றன என்பதை அறிந்தபின்னும் எப்படி கிணறுகள் பற்றிக் கதைகள் சொல்லமுடியும்?

(அண்மையில் கொலைசெய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்ட யாழ் வளாக மாணவி, மயூராவிற்கு....)

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

Monday, March 12, 2007

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if not) நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று நேர்ந்துகொள்கின்றேன்).
-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-
(மீள்பதிவு)

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?

யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்தது என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலேயே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்ததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததாலும் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு 'வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்' சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயந்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம். உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம். ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம்.

அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான். இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு -அந்தமாதிரித்தான் batஜ- விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது- அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது. சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன். ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்காவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல்கள் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.

ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில்(?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.


(2006)
-மீள்பதிவு-

--------------
(இன்று -Mar 08- பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு...)

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Wednesday, February 21, 2007

(அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள 'முழக்கம்' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி 'கட்டவிழ்ப்பு' என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், 'சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்....' என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் 'கொடுங்கோலன்' சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

''அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்' என்று 'கறுப்பு' தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை 'மறுவாசிப்பு செய்தல்' என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். 'எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்' என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). 'பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே' என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த 'உண்மையை' கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு 'உண்மையை'த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் 'ஒரு பேப்பரில்' எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு 'உண்மை' துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் 'இந்திய தத்துவங்களின் அரசியல்' நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

'...மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.'

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் 'ஆசிரியர் இற்ந்துவிட்டார்' என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் 'வைகறை'யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் 'அவன் அதுவானது'(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்... இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது 'எதையும் சந்தேகித்தல்' என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். 'என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது' என்று சொந்தங்கொண்டாடி 'பாசிசம்' நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். 'பாசிசம்' இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை 'விருத்தி' செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது... 'மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை' நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு 'தேசிய'ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, 'நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்' என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, 'அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்' என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது 'காற்றுவெளிக்கிராமம்' பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி... வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், 'சமாதான காலம்' வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய..... மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ... தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் 'ஞானக்கண்'ணாலாவது பார்க்குக.

.....ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு 'தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் 'பெரும்பயத்தை' முன்வைத்தபோது, 'எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய' - என்னுடடைய பல 'பெருங்கதையாடலகளை' தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

சமாதானம் மிக அழகானது

Sunday, February 18, 2007

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-

சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்..., ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி..., உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்... இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவர்களின் ஒடுக்குவதற்கான ஆதிக்கமும் சிந்தனைகளும் நாடுகளுக்கிடையில் அவ்வளவாய் வித்தியாசப்படுவதுமல்ல. இவ்வழியால் வாருங்கள் என்று ஏ9 நெடுஞ்சாலையை ஊடுருவிச் செல்லும் இப்படத்தில் எல்லா இன மக்களும் வருகின்றார்கள். போரை அவரவர்களின் பார்வைகளால் பார்க்கின்றார்கள். இறுதியில் தாம் நினைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல சரியான பார்வை; நாம் அறியாத இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன என்ற புரிதல்களையும் பெற்றுகொள்ளுகின்றார்கள்.

சமாதானம் வந்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. சமாதானம் வந்து ஏ9 திறக்கப்பட்டாலும் தமது உரிமைகள் முற்றுமுழுதாக தரப்படாதபோது இந்நெடுஞ்சாலை திறக்கப்படக்கூடாது என்று -தன் சக போராளிகளின் இழப்புக்களை நினைத்தபடி- கதறும் ஒரு போராளியின் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கின்றது. புத்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற நாகதீபத்தை(நயினாதீவை) பார்க்க ஒரு சிங்களக்குடும்பமும், 90களில் யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு புத்தளத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பமும் ஏ9 பாதையினூடாக பயணிக்கின்றது. சிங்களக் குடும்பம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் செய்திகளைக் கேட்டு தமக்கான அரசியலை வைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் மகள் பlகலைக்கழக இறுதியாண்டு மாணவி, ஜே.வி.பி சார்பு நிலைகொண்டவர். அவரது தம்பியோ சராசரி இளைஞன். அக்காவின் புரட்சிக்கனவுகளை தொடர்ந்து பகிடி செய்துகொண்டேயிருப்பவன். அவனுக்கு கல்பனா என்று பாடுகின்ற ஒரு சிங்களப்பெண்ணின் மீது ஈர்ப்புண்டு. இவர்கள் ஏ9 பாதையின் இடைநடுவில் முஸ்லிம் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். முஸ்லிம் குடும்பம் தாம் தமது பூர்விக நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட துயர்களை பகிர்கின்றார்கள். நதி (வளாக மாணவி) தான் தமிழர்களைப் பற்றி நினைத்தது சரியென்ற இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வருகின்றார்.

இரவில் தங்க இடமில்லாது சிங்களக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் தவிக்கையில், நதியோடு கொழும்பு வளாகத்தில் படித்து சில வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு யாழ் போன தனது (தமிழ்)தோழன் ஒருவரை வீதியில் நதி காண்கின்றார். அந்த இளைஞன் நதியுடன் பேசுகின்றபோதும், அவர் தமிழரென்றபடியால் நதிக்கு -அவரில் நம்பிக்கையில்லாது- அவரின் வீட்டில் போய் தங்கவிரும்பமில்லாது இருக்கின்றார். அந்த இளைஞர் NGO ஒன்றில் வேலை செய்துகொண்டு ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்கியிருக்கின்றார். ஆசிரியரின் மகன் இயக்கத்துப்போய் சமாதானம் வந்ததால் -இயக்கத்திலிருந்து விலகி- வீட்டுக்கு வருகின்றார். போராளியாக இருந்தவருக்கு இப்படி சிங்களக் குடும்பம் தங்கள் வீட்டில் வந்து நிற்பது அவ்வளவு உவப்பானதில்லை. எனவே அவர் தொடர்ந்து வீறாப்பாய் திரிந்துகொண்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் மகளுக்கு NGO வில் வேலை செய்யும் இளைஞர் மீது ஈர்ப்புண்டு. ஆசிரியரின் மகள் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கின்றார். நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கான கனவில் இருக்கும் சிறுமிக்கு, மிதிவெடியில் கால் போகின்றது. அந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கின்ற சிங்களக் குடும்பத்தினருக்கு -முக்கியமாய் ஜேவிபி ஆதரவாய் இருக்கும் நதிக்கு- தனது போர் குறித்த பார்வைகளை மீளாய்வு செய்யவேண்டிய அவதி வருகின்றது. தமிழ் ஆசிரியரும், அந்த சிங்கள குடும்பத்தலைரும் தொடர்ந்து அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த தமிழ் ஆசிரியர் ஒரு முன்னாள் சமசமாஜக் கட்சி உறுப்பினர். எப்படி பண்டாரநாய்க்கா குடும்பம் தமிழர்களின் உரிமைகளைச் சூறையாடுகின்றது என்று விரிவாக உரையாடுகின்றார். எனினும் சிங்களக் குடும்பத்தலைவருக்கோ, எப்படி தமிழர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தினரை தாழ்த்தலாம் என்ற கெளரவப்பிரச்சினை அல்லது இனப்பிரச்சினை(?).

நோயுடன் இருக்கின்ற சிங்களக் குடும்பத்தலைவருக்கு, மிதிவெடியில் அந்தச்சிறுமி கால்களை இழந்ததைப் பார்த்தவுடன் இதய அழுத்தம் கூடி சில நாட்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கவேண்டியதாய்ப் போகின்றது. இதற்கிடையில் நதிக்கு, அந்த NGO இளைஞர் மீது ஈர்ப்பு வருகின்றது, இளைஞருக்கும்தான். எனினும் இறுதியில் இளைஞருடனான ஆசிரியரின் மகளின் காதல் வென்றுபோகின்றது.

மீளவும் குடியேறுகின்ற முஸ்லிம் குடும்பத்தினரை வறுமை விரட்டுகின்றது. தங்கள் வீட்டில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததால் பக்கத்துவீட்டில் தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு இருப்பதற்கு இடமிருக்கின்றதே தவிர, பசிக்கு உணவிருப்பதில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்மணியோ சற்று மனப்பிறழ்வான இளைஞனை பணஞ்சம்பாதிக்கத் துரத்துகின்றார். வேறு வழியில்லாத அவர் ஒரு திருடனாகின்றார். இனியும் பட்டினி தாங்க இயலாது என்கின்ற நிலை வருகின்றபோது பக்கத்துவீட்டு பெண்ணிடம் அகதி முகாமிலிருந்தபோது செய்த பாலியற்தொழிலை தனக்கும் கற்றுத்தாவென்று புத்தளத்திலிருந்து வந்த குடும்பத்தின் மகள் கதறியழுகின்றார். இப்படியாக நமது நிலை போய்விட்டதேயென்று பித்துப்பிடித்தபடி மிதிவெடி அகற்றப்படாத வீட்டிற்குள் அந்த பெண்ணின் தகப்பன் கதறியபடி ஓடுகின்றார்.

பல்வேறு கிளைகளாய் கதை நகரும் இப்படத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருப்பது போர் தந்த வலிகளும், அதிலிருந்து எப்போதாவது மீள்வோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் அசையமுடியாத நம்பிக்கையும்தான். இனங்களை, மொழிகளை மீறி நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது மனித நேயமே என்று கூறியபடி படம் முடிகின்றது. கடந்தகாலத்தை இனி மாற்றமுடியாது ஆயினும் நமது எதிர்காலத்திலாவது போரில்லாது வாழும் சிந்தனையாவது நாமெல்லோரும் வளர்க்கவேண்டும் என்ற சிறுவிதையை இப்படம் விதைக்கின்றது. சமாதானம் மிக மிக அழகானதுதான். வேறு வழியில்லாது பாலியல் தொழில் செய்தாவது பிழைப்போம் என்று கதறுகின்றபோது அந்த முஸ்லிம் பெண் சொல்வார்.... சமாதானமாம் சமாதானம் மண்ணாங்கட்டி! அதுதான் நம் நிகழகாலமாய்ப் போய்க்கொண்டிருப்பதுதான் மிக அவலமானது.

இப்படத்தின் உரையாடல்கள் மிகக் கூர்மையானவை. உரையாடுகின்றபோது மொழிப்பிரச்சினை வருகின்றபோது நதிக்கு, தமிழ் இளைஞர் கூறுவார், அரசகரும மொழியாக இருக்கும் மொழியையே நீங்கள் கற்றுக்கொள்ள முன்வராதபோது எப்படி எங்களுக்கான உரிமைகளை புரிந்துகொள்ளுவீர்களென்று. அதேபோன்று போரின் அழிவுகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்....? கொழும்பில் குண்டுவெடிக்கும்போதும், கனத்தை மயானத்தில் இராணுவ உடல்கள் எரியூட்டப்படும்போதும் மட்டுமே கொழும்பிலிருப்பவர்களுக்கு போர் நடப்பது தெரிகின்றது. மற்றும்படி போரின் அழிவுகளை உணர்ந்திருக்கின்றீர்களா? என்பது கத்தியாய் இறங்கும் வசனம்.


இன்னொரு காட்சியில் குளித்துவிட்டு நதி குங்குமப்பொட்டை வைத்து அழகுபார்க்கும்போது, அந்த இளைஞன் சலனமடைந்து அவரைத் தொட முயல்வார். அதற்கான காரணமாய் இளைஞன் கூறுவார், உனது குங்குமப்பொட்டு என்னைச் சலனமடையச் செய்துவிட்டது என்று. அதற்கு நதி, எந்தப்பொண் குளித்துவிட்டு வந்தாலும் எந்த ஆணும் ஆசைப்படத்தான் செய்வான்; உன் தமிழ் அடையாளத்தை சாட்டாய் வைத்து அதை நியாயப்படுத்தாதேயென்று கூறுவார். அதுபோல், தமது மகன் இரவில் எங்கையோ போய்விட்டார் என்று சிங்களக்குடும்பம் தெருவில் தேடிக்கொண்டிருக்கின்றபோது, அதைப் பார்த்து ஒரு தமிழ்த்தாய், என்னுடைய மகனும் இப்படித்தான் பாடசாலைக்குப் போகின்றேன் என்று போனான் இன்னும் திரும்பிவரவில்லை, யாராவது கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கதறும்போது (செம்மணியையும் இணைத்துப்பார்க்கலாம்) எல்லாத் தாய்மார்களின் சோகமும் ஒன்றுதான் என்பது புரியும். இன்னொரு காட்சியில் காலிழந்து இருக்கும் சிறுமியை சிங்கள இளைஞன் சந்திக்கும்போது, அந்தச் சிறுமி சொல்வார், 'அண்ணா கொழும்பு போனாப்பிறகு ஒரு கால் அனுப்புவீங்களா? நான் நடனம் ஆடவேண்டும்.' இந்த வார்தைகளின் பின்னிருக்கும் பெருஞ்சோகத்தை வேறு எது சொல்லிவிடும்? படத்தில் படிமமாய் ஒரு பெண் சிவப்புச் சேலை கட்டியபடி போய்க்கொண்டிருக்கின்றார். சிலருக்கு மட்டுமே - போராளி இளைஞனுக்கு, சிங்களக் குடும்பத்த் தலைவருக்கு, அவரின் மகனுக்கு- மட்டும் தெரியவதாய்க் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணை பார்க்கும் நாம் சமாதானமாய் உருவகித்துக்கொள்ளலாம். கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்தாலும் ஒவ்வொருமுறையும் நழுவியபடி இருக்கின்றது சமாதானம் என்றவகையிலும் விளங்கிக்கொள்ளலாம்.

இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு, எளிமையான உரையாடல்களால் கூட மிகப்பெரும் அரசியல் புள்ளிகளைக்கொண்டுவரும் நெறியாள்கையாளரின் படைப்புத்திறன் எவ்வளவு நுட்பமானது என்பது புரியும். இதைப் படமாய்ப் பார்த்தாலும், ஒரு தொலைக்காட்சி தொடராய் இது எடுக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். எந்த முறையில் எடுக்கப்ப்ட்டாலும் பார்க்கும்போது அது நம்மை பாதிக்கின்றதா இல்லையா என்ற கேள்விதான் முக்கியமானது. அந்தவகையில் இந்தப்ப்படைப்பு வெற்றி பெறுகின்றது. எல்லா நடிகர்களும் மிக இயல்பாய் நடிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நடக்கும் காட்சிகளில் வரும் உரையாடல்கள் எல்லாம் அப்படியே ஊரின் பேச்சு வழக்கை நமக்கு நினைவூட்டுகின்றன. புலம்பெயர்ந்த நாட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் கூட செயற்கைத்தனமான உரையாடல்கள் இருக்கும்போது ஒரு சிங்கள இயக்குனரால் இதிலெல்லாம் எப்படி கவனம் எடுக்க முடிந்தது என்ற வியப்பு வராமல் இருக்க்முடியவில்லை என்பது மட்டுமில்லை இப்படி யதார்த்தமாய் சின்ன சின்ன காட்சிகளின் மூலம் போர் தந்துகொண்டிருக்கும் அழிவுகளை நம் எல்லோரையும் பாதிக்கச் செய்வதைப்போல ஏன் எந்தவொரு தமிழ் படைப்பாளியாலும் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வருகின்றது. இன்னமும் தேசியம் X எதிர்த்தேசியம் என்ற உரையாடலை விட்டு வெளியேறாத ஈழத்தமிழ்ச்சூழ்லிருந்து இதையெல்லாம் எதிர்ப்பார்ப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.

படைப்பாளி என்றவகையில் A Lankan Mosaic என்ற தொகுப்பிலிருந்து அசோக ஹந்தகமவின் ஒரு கதையை (Don't Open the door Parvathi) அண்மையில் வாசித்தேன். அது இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்தால் ஒரு தமிழ்ப்பெண் பாலியல் வன்முறைக்குள்ளாகும் புள்ளியுடன் முடிகின்றது. அதில், இந்திய இராணுவத்தில் நம்பிக்கை கொள்ளும் தமிழ் மக்களை நோக்கி படைப்பாளி ஒரு கேள்வி எழுப்புவார். இத்தனை காலம் சொந்தமண்ணிலேயே இருக்கும் இராணுவமே இத்தகை கொடூரங்களைச் செய்ததைப் பார்த்தபின்னும் எப்படித்தான் இந்தமக்கள் இன்னொரு நாட்டு இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்று. இதிலிருந்து, நாம் அருகிலிருக்கும் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் புரிந்துகொள்ளாது வேறு நாடுகள் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பதன் அரசியலையும் ஒருமுறை மீளாய்வு செய்யலாம்.

கலைஞர்களுக்கு இனம், மொழி என்ற பாகுபாடு இருப்பதில்லை. மானிட நேசம் என்பதே அவர்களின் விரிந்த எல்லையாக இருக்கும். நாம் நமது நடுநிலை என்ற புள்ளிகளை நிரூபிப்பதற்கு பெரும்பாடு பாடுவதை விடுத்து, உண்மைகளை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிப்பதே உன்னதமாயிருக்கும்.

அசோக ஹந்தகமாவின் பிற படங்கள்:
Chanda Kinnari
Me Mage Sandai (This is my Moon)
Thani Thatuwen Piyambanna (Flying with one wing)
Aksharaya (Letter of Fire)

?

Monday, February 05, 2007

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது
பகிர முடியாத நம் வலிகள்

கொடுங்காற்று வீச
தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்
தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட
போரை
கெட்டவார்த்தையால் திட்டுகிறான்

உன்னை
காரின் பின்சீட்டில்
புணர்ந்துகொண்டிருக்கையில்
யோனியில்
கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள்
குறுக்காய் கடந்துபோகின்றாள்.

.......................

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
............................

கடிகாரத்தின்
இருமுட்களுக்குமிடையில் சிக்கிய
பல்லி நான்

முன்னே நகரும் முள் நீ
பின்தொடரும் முள் கடந்தகாலம்

கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.

(Feb 04, 2007)