கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 54

Saturday, November 02, 2024

கோட்பாடுகளைப் பற்றி அண்மையில் ஒரு சிறு உரையாடல் போயிருந்தது. கோட்பாடுகளை அறிதல்/கற்றல் ஒரு படைப்பாளிக்கு முக்கியமா இல்லையா என்பது தமிழ்ச்சூழலில் அவ்வப்போது தீவிர விவாதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ்ச் சூழலில் கோட்பாடுகளும், புனைவுகளும் ஒன்றோடு ஒன்று ஊடாடி தங்களை செழுமைப்படுத்தியபடியே வந்திருக்கின்றன. அந்தப் புரிதல் இல்லாது இவற்றை இருவேறு துவிதமுனைகளில் வைத்து விவாதிப்பவர்களோடு உரையோடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இன்றைக்கு வாசிப்பு என்பதே சுருங்கிய நிலையில் கோட்பாடுகளின் பக்கம் செல்பவர்கள் மிகச் சொற்பமாகவே இருக்கின்றார்கள். ஏதேனும் ஒரு விடயத்தைக் கோட்பாடுகள் சார்ந்து பேசும்போது தமிழ்ச்சூழலில் எளிதில் எள்ளல் செய்து நகரும் நிலையே இருக்கின்றது. ஆனால் புனைவில் மிகப்பெரும் விருப்பு எனக்கு கோட்பாடுகள் என்னை/என் எழுத்துக்களை செழுமைப்படுத்தியிருக்கின்றன. எழுத்திலும், வாழ்விலும் கரைகளைக் கண்டடைய முடியாச் சிக்கல்களை கோட்பாடுரீதியாக அணுகியபோது அவை தீர்க்கக்கூடிய எளிய விடயங்களாக மாறியிருக்கின்றன. அதேவேளை நான் கோட்பாடுகளை மேலோட்டமாகவே வாசித்து கடந்துபோகின்றவன் என்றே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் அதைச் சொல்லித்தரும் முன்னோடிகள் மீது இன்றும் -எத்தகைய விமர்சனங்கள் அவர்கள் சார்ந்த அரசியல்/தத்துவச் சார்புகளில் இருந்தாலும்- மிகவும் மதிக்கின்றேன்.

தமிழ்ச்சூழலில் கோட்பாடுகள் மிகவும் உரையாடப்பட்ட 80/90கள் ஒரு 'பொற்காலம்' எனலாம். அத்தோடு அதுவரை பெரும்நம்பிக்கையாக இருந்த சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்ட பின்னும், மிக விரிவான உரையாடல்கள் மார்க்ஸிசம் சம்பந்தப்பட்டு உரையாடப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வளவு முன்னே கோட்பாடுகள் சார்ந்து முன்னோக்கி இருந்தோம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.

எனது நண்பர் ஒருவர் 15 வருடங்களுக்கு முன் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கற்கப்போனபோது, முதலாண்டிலே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் பற்றி அறிந்திருப்பதை அவரது முதலாமாண்டு பேராசிரியர் வியப்புடன் பார்த்திருக்கின்றேன். இது எவ்வாறு சாத்தியம் என்றபோது எங்கள் தமிழ்ச்சூழலில் இது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது என அவர் சொல்லியிருக்கின்றார்.

ஆனால் 2000களின் பின் கோட்பாடுகள்/விமர்சனங்கள் சார்ந்து தமிழ்ச்சூழலில் எந்தத் தீவிரமான உரையாடல்களையும் நாம் செய்யவில்லை. கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி விவாதித்த முன்னோடிகளும் உறங்குநிலைக்குப் போய்விட்டிருந்தனர் அல்லது அவ்வாறான ஒரு நிலைமை தமிழ்ச்சூழலில் உருவாக்கப்பட்டு, புனைவு எழுத்தாளர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தின் முகங்களென கட்டமைக்கப்பட்டார்கள். அவர்களும் கோட்பாடுகள்/தத்துவங்கள் புனைவுகளுக்கு எதற்கென திருவாய் மலர், அவர்களின் சீடர்களுக்கு எவர் கோட்பாடு/தத்துவங்களைப் பேசத்தொடங்குகின்றார்களே, அந்த முன்னோடிகளை எல்லாம் நக்கலும்/நளினமும் எளிதாகச் செய்யத் தொடங்கினார்கள்.


நா
ன் எழுத வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது கவிதைகள் மீது பெரும் மோகம் இருந்தபோதும், தமிழகத்தில் இருந்து நூல்களை இணையத்தில் வாங்கியபோது கவிதைப் புத்தகங்களுக்கு நிகராக தமிழில் வந்த கோட்பாடு/தத்துவ நூல்களையும் வாங்கியிருந்தேன். அந்தக் கோட்பாடு நூல்களை எல்லாம் முழுதாக வாசித்தேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் இயன்றளவு நுனிப்புல்லாக வாசித்து அதன் அடிப்படைகளை அறிந்து வைத்திருந்தேன். மேலும் அன்றையகாலத்தில் (இன்றும்) எனக்கு பின்னமைபியல்/பின் நவீனத்துவம் மிக நெருக்கமாக இருந்தது/இருக்கின்றது.

பின்னமைப்பியல்/இருத்தலியம்/தெரிதா/சார்த்தர் என எனக்குத் தெரிந்ததை எழுதியெழுதித்தான் ஒருவகையில் அதன்/அவர்களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன்.  அன்றையகாலத்தில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் வழிகாட்டியாக இவற்றுக்கு இருந்ததென்றால், இன்னொருவகையில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த நாகார்ஜூனன், தமிழவன் (தீராநதி) போன்றவர்களின் ஊடாடங்கள் எனக்கான கற்றல்களாக இருந்தன. நாகார்ஜூனன் போன்றவர்கள் அன்று நான் எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் கூறியும், இது குறித்து உரையாடல்களில் பங்குபற்றியும் எமக்கு (மறைமுகமாக) வழிகாட்டுபவர்களாக இருந்தார்கள்.

அந்த நீட்சியில்தான் மார்க்ஸியம் மீது பெருவிருப்புக் கொண்ட என் சமகாலத்துவர்களோடு, மார்க்ஸிசம் X பின் நவீனத்துவ உரையாடல்களை நிகழ்த்தியிருந்தோம். அது தொடர்ச்சியாக நிகழாமல் போனது எம்மளவில் ஓர் இழப்பே. ஏன் இந்த கோட்பாடுகள் சார்ந்த உரையாடல்கள் புனைவுகளுக்கு முக்கியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.

ஈழத்தில் இலக்கியம் சார்ந்த வரலாற்றை அவதானிப்பவர்க்கு, ஒருகாலத்தில் மார்க்ஸிசம் சார்ந்த முற்போக்கு இலக்கியத்துக்கும், மரபுசார்ந்த இலக்கியத்துக்கும் விவாதங்கள் நடந்ததை அறிந்திருப்போம். அது பின்னாளில் முற்போக்கு இலக்கியத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய மு.தளையசிங்கம், எஸ்.பொ என்பவர்களால் முற்போக்கு இலக்கியம் அதற்கெதிரான எஸ்.பொ முன்வைத்த (நற்போக்கு இலக்கியம்) போன்ற உரையாடல்களாக மாறியது.

இத்தனைக்கும் எஸ்.பொவின் (நற்போக்கு இலக்கியம்), மு.தளையசிங்கத்தின் (பிரபஞ்ச யதார்த்தவாதம்) என்பவை ஒருபோதும் மார்க்ஸிசத்தை முற்றாக நிராகரித்ததும் இல்லை. மார்க்ஸிசம் சில இடங்களில் போதாமையாக இருக்கின்றது என்று சொல்லியே அவர்கள் தமது விவாதங்களை உருவாக்கியபோதும், மார்க்ஸிசத்துக்கு ஒரு பெரும் மதிப்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது. 



வ்வாறு முற்போக்கு இலக்கியம் X நற்போக்கு இலக்கியம் X பிரபஞ்ச யதார்த்தம் என்று பல்வேறு போக்குகள் ஈழத்தில் உரையாடப்பட்டபோது புனைவுலகும் செழித்திருந்ததை நாம் பார்க்க முடியும். தத்துவமும் புனைவும் ஒன்றோடொன்று உரசி முரணும் உறவும் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. நிறையப் படைப்பாளிகள் அந்தச் சூழலில் முளைவிட்டு எழும்பினர். கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் புனைவின் பக்கம் வராதபோதும் (அதேயே எஸ்.பொ அவர்கள் மீதான விமர்சனமாக பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும்), அவர்கள் புனைவெழுத்தாளர்களை ஊக்குவித்தார்கள். அவர்களின் நூல்களுக்கு முன்னுரையும்/ திறனாய்வும் எழுதினார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்து எழுதிய படைப்பாளிகள் பிறகு விகாசித்தார்களா இல்லையா என்பது விமர்சனமாக ஒருபுறமாக இருந்தாலும், 'அப்படியென்றால் நாம் படைப்பது இலக்கியம் இல்லையா' என்று மு.தளையசிங்கமும், எஸ்.பொவும், வ.அ.இராசரட்ணமும் எனப் பலர் மறுபுறத்தில் கிளைத்தெழுந்தார்கள்.

இவ்வாறான ஒரு சூழலின் ஒளி புகுந்திருக்காவிட்டால் பிரமிள் போன்ற ஒருவர் எல்லாவற்றையும் திருகோணமலையில் துறந்துவிட்டு இலக்கியப் பித்துப் பிடித்து அன்று தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தே இருக்கமாட்டாரெனவே நம்புகின்றேன். எஸ்.பொவின் 'தீ'யுக்கு, பிரமிள், எஸ்.பொ, மு.தளையசிங்கம் நடத்திய உரையாடல்களை அவதானித்தால், தனியே அந்த நாவலுக்கு மட்டும் அது நடக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

இன்றைக்கு தமிழ்ப் புனைவெழுத்து ஈழத்திலும்/தமிழகத்திலும்/புலம்பெயர்விலும் தேங்கிப் போனதற்கு இந்த கோட்பாட்டு/விமர்சனச் சூழல் அருகிப் போனதையே முக்கிய காரணம் என்பேன். அதனால்தான் புதிய முயற்சிகள்/பரிசோதனைகள் அடிக்கடி தமிழில் புனைவெழுத்து சார்ந்து நடப்பதைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.

கோட்பாடு/தத்துவங்களை மட்டும் வைத்து புனைவைப் படைத்து முடியுமா என்று தேய்வழகான கேள்விகளோடு எவரும் வரத்தேவையில்லை. எந்த ஒரு படைப்புமே கோட்பாடுகள் சார்ந்து எழுதப்படுவதில்லை. அது பின்னர் வாசிப்பு எளிமைக்காய் ஒரு பிரிவிற்குள் வகுக்கப்படுகின்றது. புனைவுகள் மட்டும் அல்ல, பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ வாதிகள் என்று இன்று நாம் சொல்கின்ற எந்த ஒரு அறிஞரும் கூட அப்படி ஒரு சட்டகத்துள் தம்மை வைப்பதை மறுதலிப்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நாம்தான் அவர்கள் சொல்வதை எளிதாக விளங்கிகொள்வதற்காக ஒரு சட்டகத்திற்குள் வைத்துப் பேசுகின்றோம். மார்க்ஸே கூட,  தனக்கான காலத்தின் பின் அவர் பேசியவை எல்லாம் தன் பெயரிலே பொதுமைப்படுத்தி 'மார்க்ஸிசம்' என்று பேசப்படுமென நினைத்திருப்பாரா என்ன?

************* 


(Oct 20, 2024)

ஓவியம்: ஜி.கோபிகிருஷ்ணன்

 

கார்காலக் குறிப்புகள் - 53

Friday, November 01, 2024

( ஓவியம்: முரளிதரன் அழகர்)

 

ன் வாழ்வில் பயணம் என்பது மிக முக்கியமான பகுதியென நினைத்துக் கொள்பவன். எனது பதின்மங்களிலோ, இருபதுகளிலோ அவ்வளவாகப் பயணித்தவன் அல்லன். பயணங்கள் தரும் பேரனுபவத்தை எவருமே அருகில் இருந்து அன்றைய காலங்களில் எடுத்துச் சொல்லவும் இல்லை.

கனடா போன்ற புதிய நாடொன்றுக்கு எதுவுமே இல்லாமல் வந்து, தொடக்கத்தில் நாளாந்த வாழ்வில் அல்லாடியது ஒருபுறமென்றால், இன்னொருபுறம் படிப்பின் நிமித்தம் கடன் எடுத்து அதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் மேலாக எடுத்தும் இருந்தது. இதற்கிடையில் ஒரு தீவிரமான காதல், அதன் நிமித்தம் வந்த பொறுப்புகள் மேலும் எனக்கான பயணங்களைத் தள்ளி வைத்திருந்தன.

ஆனால் இன்று இவற்றையெல்லாம் நிதானமாகப் பின்னோக்கிப் பார்த்தால், இத்தகைய பொறுப்புக்கள்/ தத்தளிப்புக்களுக்கிடையில் அன்றே பயணங்களைத் தொடங்கியிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ஒரு ஆற்றுப்படுத்தலுக்காய் தற்செயலாகப் பயணமொன்றைத் தொடங்கிய எனக்குள் அன்றே 'பயணப்பூச்சி' நுழைந்துவிட்டது. ஆகவே பயணங்கள் இல்லாது ஒரு வருடத்தைக் கடந்துவிட்டால் எதையோ இழந்துவிட்டதான உணர்வை இந்தப் பூச்சி குடைந்து கொடுக்கத் தொடங்கிவிடும்.

சிலர் சொகுசான பயணங்களைச் செய்வார்கள். இன்னுஞ் சிலர் மிக எளிமையான (backpack) பயணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் புத்தரின் சொற்களை நம்புகின்றவன் என்பதால் மத்திய பாதையைத் (middle path) தேர்ந்தெடுப்பவன். ஆடம்பரமான பயணங்கள் எனக்கு உரித்தானதல்ல, ஆனால் அதேசமயம் ஒரு பயணத்தில் ஒன்று பிடித்துவிட்டால்அதை அனுபவிப்பதற்கு எதையும் செலவழிக்கும் மனோநிலையையும் வைத்திருப்பவன்.

தாய்லாந்து-கம்போடியா பயணத்தில் தெருக்கடைகளில் (5$,10$ இல்) சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அருமையான மீன் உணவு கிடைக்கின்றது என்று அறிந்து ஓரிடத்தில் 75$ கொடுத்து சாப்பிட்டிருக்கின்றேன். கனடாவிற்குள் பயணிக்கும்போது 30,000 தீவுகள் இருக்கும் இடத்தில் , அதை வானத்தில் இருந்து பார்ப்பது அவ்வளவு அழகு என்று சொன்னார்கள். அதற்காய் helicopter tour இற்காய், அந்தப் பயணத்திற்கான இரண்டு நாள் செலவை விட, கூடக் கொடுத்து அந்த அழகை இரசித்திருக்கின்றேன். இவ்வாறு வாழ்வதைத்தான் ஒருவகையில் நான் நெருக்கம் கொள்ளும் minimalism கற்றுத் தந்திருக்கின்றது. வாழ்வை எளிமையான வாழுங்கள், ஆனால் உங்களுக்கு விருப்பமான ஒரு விடயத்துக்காய் எந்த எல்லைவரையும் போகலாம் என்பது அதன் சாராம்சம்.

இவ்வாறு பயணங்கள் மீது பெருவிருப்பு இருந்தாலும், 20 நாடுகளுக்கு மேலாகப் பயணித்தாலும், இந்தியா, இங்கிலாந்து, கியூபா போன்ற நாடுகளுக்கு நான்கைந்து முறைகளுக்கு மேலாகப் போயிருந்தாலும், என்னை முழுமையான ஒரு பயணியாக முன்வைக்க மாட்டேன். ஆனால் நான் வியந்து பார்க்கும் ஒரு பயணியாக 60 நாடுகளுக்கு மேலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் துரை கணபதிப்பிள்ளையைச் (https://www.facebook.com/suresh.kanapathypillai) சொல்வேன். நம்மவர்களில் அவர் அசலான backpacker Traveller. அவரளவுக்கு இவ்வளவு எளிமையாகவும், கடுமையான இடங்களை நோக்கியும் என்னால் பயணிக்க முடியாது என்பது அவரின் பயணங்கள் மீது அதிக வாஞ்சையை எனக்கு ஏற்படுத்துகின்றது.

இப்போது அவர் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றார். அதுவும் சாதாரண பயணிகள் செல்லப் பிரியப்படாத குவாத்தமலா, எல்-சல்வடோ, நிக்கரகுவா போன்ற நாடுகளுக்குள் மிகக் குறைந்த செலவில் பயணங்களை தனித்துச் செய்து கொண்டிருக்கின்றார். அதைவிட என்னை வியக்க வைப்பது அவர் தினமும் அதை எழுத்தில் பதிவு செய்து கொண்டிருப்பதாகும்.

எனக்கு தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லையென்றாலும், பயணிக்கும்போது இயன்றளவு அன்றன்று நடக்கும் விடயங்களை எழுதி வைக்க முயல்வேன். ஏனெனில் இதையெல்லாம் பின்னர் எழுதலாம் என்று நினைத்தாலும், ஒருநாளிலேயே நிறைய விடயங்கள் நடந்திருக்கும். அடுத்த நாள் வரும்போது முதல்நாள் நடந்த சிறிய அழகான விடயங்கள் மறந்து போயிருப்பதை பயணங்களில் பார்த்திருக்கின்றேன். அப்படி என் முதல் மெக்ஸிக்கோப் பயணத்தில் குறிப்புகளாக எழுதியவை பின்னர் என் நாவலுக்கு மிகவும் உபயோகமாகவும் இருந்தது.

இவ்வாறு நாளாந்த பயண அனுபவங்களை சிறுகுறிப்புகளாக எழுதி வைப்பதே எவ்வளவு கடினமென்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒருநாளில் நிறைய விடயங்களைச் செய்து விடுதி வரும்போது அவ்வளவு அலுப்பாக இருக்கும். காலை எழும்பி எழுதலாம் என்றாலும் அன்றைய நாளுக்கான திட்டங்கள் முன்னே வந்து நிற்கும்.

இவ்வளவுக்கிடையிலும் தினமும் பயண நாட்குறிப்புக்களை அதுவும் விரிவாக சுரேஷ் எழுதிக் கொண்டிருப்பதற்கு நிறைய பொறுமையும், உழைப்பும் வேண்டியிருக்கும். சுரேஷ் இப்படி பயணக் குறிப்புகளை விரிவாக எழுதினாலும் அதை தொகுத்து நூலாக்கும் விருப்பு அவருக்கு இருந்ததில்லை. அது அவரது தெரிவு/விருப்பு என்றாலும், முகநூலைத்தாண்டி அவர் இதை ஏதேனும் ஒரு வலைப்பதிவிலோ/இணையத்தளத்திலோ சேகரம் செய்ய வைக்க வேண்டும்.

என் இருபதுகளில் இப்படி எதனையும் பயணங்கள் சார்ந்து வாசிக்கச் சாத்தியம் இருக்கவில்லை. இன்று இருபதுகளில் இருப்பவர்களுக்குப் பயணிப்பதற்கான எல்லைகள் விரிந்தாலும், அவர்களின் பயணங்கள் ஆழமற்றதாக இருப்பதையும் கண்டிருக்கின்றேன். எனவே இவ்வாறான பல்வேறு வகையான அனுபவங்களை வாசிக்கும்போது நாம் பயணங்கள் பற்றி புரிந்து வைத்திருப்பதை மீளாய்வு செய்து நம்மை நேர்த்தியாக்க உதவலாம்.

இப்படித்தான் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கம்ரன் (https://www.facebook.com/KamranOnBike) என்பவர் சைக்கிளில் ஆர்ஜெண்டீனாவில் இருந்து அலாஸ்கா வரை சென்றதைப் பின் தொடர்ந்திருக்கின்றேன். அதற்கு முன்னர் அவர் வசித்துக் கொண்டிருந்த ஜேர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றார். அண்மையில் பாகிஸ்தானில் இருந்து பாலைவனங்களினூடாக ஆபிரிக்காக் கண்டத்தினூடு பயணித்து தென்னாபிரிக்காவின் கடைசி முனையை நேற்றுத் தொட்டிருந்தார்.

ஒரு கணம் நிதானித்து, யோசித்துப் பாருங்கள். இவையெல்லாம் எவ்வளவு பெரும் சாதனைகள். இதனூடாகக் கிடைக்கும் அனுபவத்துக்கு முன் எதுவுமே நிகர் ஆகாது இல்லையா? அந்த மனிதரையும் இந்தக்கணம் ஆதூரமாக தோளணைத்துக் கொள்கிறேன். பக்கத்தில் ஒரு கடை இருந்தால் கூட, நடந்து போகாது காரையோ, மோட்டார்சைக்கிளையோ எடுத்துச் செல்லும் கதிகதி உலகில் அல்லவா நாம் இருக்கின்றோம். அப்படியான உலகில் ஒருவர் வட- தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா (அரைவாசிப் பகுதி) என அனைத்து நிலப்பரப்புக்களையும் சைக்கிளால் மிக மெதுவாகத் தாண்டியிருக்கின்றார் என்று நினைக்கும்போது எவ்வளவு வியப்பாக இருக்கின்றது.

இப்படித்தான் எத்தனையோ மனிதர்கள் தமது பெரும் சாதனைகளை நிகழ்த்திவிட்டு அமைதியாக வாழ்ந்துவிட்டு இப்பூமியிலிருந்து நீங்கிவிடுகின்றனர். அவர்கள் இதையெல்லாம் அங்கீகாரத்துக்காகவோ, எவருக்கும் நிரூபிப்பதற்காகவோ செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது. ஆனால் நமக்கு இந்த சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் 'லைக்' கிடைக்கவில்லை என்றாலே -அதனால் எந்தப் பயனும் இல்லை என்றால் கூட- மனஞ்சுருங்கி விடுகின்றவர்களாக இருக்கின்றோம். ஒவ்வொரு சிறுசிறு செயலுக்கும் நாம் யாரினதோ அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்பவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் கொஞ்சம் இந்த மெய்நிகர் உலகிலிருந்து வெளியே வந்து பார்க்கலாம். இந்த உலகில் தாங்க முடியாத தனிமை என்று எதுவுமே இல்லை. இந்தத் தனிமை தாங்க முடியாதது என்று மறைமுகமாக கற்பித்துக் கொண்டிருப்பதும் இந்த மெய்நிகர் சமூக ஊடகங்கள்தான். அதிலிருந்து தப்பித்து கொஞ்சம் பயணிக்கவோ, புத்தகங்களை விரித்து வாசிக்கவோ செய்தால் இன்னும் ஒரு உலகம் விரியும். அது அவ்வளவு அழகானதாக, நம் ஆழ்மனதின் விருப்புக்களோடு உரையாடும் ஒரு இனிய தோழமையாக மாறிவிடவும் கூடும்.

************

( Oct, 2024)

கார்காலக் குறிப்புகள் - 52

Tuesday, October 22, 2024

 

1. ஹேமா கமிட்டி

 
'ஹேமா கமிட்டி'யின் அறிக்கை மலையாள திரைப்பட உலகை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் இதன் பொருட்டு அந்தப் பெண்கள் என்னவெல்லாம் இழந்தார்கள் என்பதைப் பார்வதி இந்த நேர்காணலில் சொல்கின்றார். பாலியல் சுரண்டல் குறித்து  பல பெண்கள் இணைந்து கூட்டாகப் பேசிய பின் எவ்வாறு அந்தப் பெண்கள் திரைப்படத்துறையில் இருந்து வாய்ப்புக்கள் இழக்க வைக்கப்பட்டார்கள், நாளாந்த வாழ்க்கைக்காய் வேறு தொழில்களைத் தேடிச் செல்லவேண்டியிருந்தது என்பதைப் பற்றி பார்வதி கூறுவதையெல்லாம் கவனித்தாக வேண்டும். இவ்வாறான பல காரணங்களால்தான் பெண்கள் first place இல் தமது பாலியல் சுரண்டல்களைப் பேசக் கூட வருவதில்லை.


இது சினிமாத் துறைக்கு என்றில்லை. எல்லாத் துறைக்கும் பொருத்தமானது. நமது தமிழ்த் திரைப்படச் சூழலில் இவ்வாறாக பெண்கள் Collective ஆகப் பேச இன்னும் தீவிரமாகப் பேச வரவில்லை. அவ்வாறு தமிழ்ச்சூழலில் பேச வந்த சிலரின் குரல்கள் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்பதையும் நாமறிவோம்.  நாம்  அதிகம் புழங்கும் இலக்கிய/அரசியல் சூழலில் கூட இத்தகைய பாலியல் சுரண்டல்களுக்கு நாம் Collective ஆகப் பேசவில்லை என்பது மட்டுமின்றி ஒடுக்குமுறையாளர்களைப் பாதுகாக்கத்தான் பலர் தங்களை கவசமாக்கினார்கள் என்பதையும் கண்டிருக்கின்றோம்.


இந்த நேர்காணலில் பார்வதி மலையாளத் திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்தாலும், இந்த அறிக்கை வர இவ்வளவு வருடங்கள் எடுத்ததற்கு கவலைப்பட்டாலும், இந்த அறிக்கை வருவதற்கு கேரள மக்கள் collective ஆக கொடுத்த அழுத்தமும், அரசு/மக்களியே இருந்த விழிப்புணர்வும், polarized ஆகாததும் மிக முக்கியமானது என்கின்றார். இதைத்தான் தமிழர்களாகிய நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு ஒடுக்குமுறை பேசப்பட்டாலும், நாம் உடனே polarized ஆகி பேச வருபவர்களின் குரல்களை வீரியமிழக்க வைத்துவிடுவதைப் பல இடங்களில் பார்த்திருக்கின்றோம்.


ஒரு ஆணோ/பெண்ணோ அல்லது ஆணோ/ஆணோ, பெண்ணோ/பெண்ணோ தமது விருப்பின்படி தமது பாலியல் விருப்புக்களைத் தெரிவு செய்வது என்பது வேறுவிதமானது என்ற பாலபாடத்தைக் கூட உணராது, இவ்வாறு சுரண்டப்பட்டவர்கள் பேசவரும்போது, 'ஏன் அப்போது பேசவில்லை/உங்களுக்குப் பிடித்துத்தான் செய்தீர்கள்' என்று  சொல்லி அவர்களைப் பேசவிடாது செய்வதில் நாம் மிக வல்லவர்கள். 


கலையாக இருந்தாலென்ன, பெண்களாக இருந்தாலென்ன, அந்த அனுபவத்தை அடைவதற்காய் நமது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இயல்பான சூழ்நிலையில் அவை கனிகையில் கிடைக்கும்போதே அது நமக்கான விடுதலையாகவும், பெருமகிழ்வாகவும் மாறுகின்றது என்று உணர்ந்தார்களாயின் இவ்வாறான சுரண்டல்களில் எவரும் ஈடுபட முடியாது. 


அதுதான் கலை நமக்குத் தரும் மிகப்பெரும் திறப்பாக இருக்க முடியும்!


2. மெய்யழகன்


அண்மைக்கால தமிழ்ச் சினிமா தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றது எனத்தான் சொல்லவேண்டும். தங்கலான், வாழை, கொட்டுகாளி, லப்பர்பந்து (இதை இன்னும் பார்க்கவில்லை), இப்போது 'மெய்யழகன்' என ஆரோக்கியமான திசையில் நகர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. 


நுண்ணுணர்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கதையில், அரசியல் மட்டுமில்லை, தமிழின் முக்கியத்துவமும் பேசப்பட்டிருக்கின்றது. எனக்குப் பிடித்த 'ஜல்லிக்கட்டு' பாடல் (ஆகக்குறைந்தது படம் முடிந்தபின்னாவது சேர்த்திருக்கலாம்) இங்கே ஏன்  சேர்க்கப்படவில்லையோ தெரியவில்லை. படத்தில் சில இடங்களில் அளவுக்கதிகமான அழுகைகளும், நீண்ட  உரையாடல்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாமென்றாலும், நல்லதொரு அனுபவத்தை இந்தப் படம் தருகின்றது.  


முக்கியமாக எதிர்மறைகளுக்கே அதிக இடம் கொடுக்கும் சமகாலத்தில் நெகிழ்ச்சியான வாழ்க்கைத் தருணங்களைக் கொண்டு ஒரு திரைக்கதை அமைத்தல் எளிதல்ல. ஒரு மனிதன் இவ்வளவு நல்லவனாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுதல் இயல்பு.  அப்படி ஒருவனால் இருக்க முடிந்தால், இப்படி ஒரு மெய்யழகனைப் போல இருப்பான் என நம்பும்படியாக, கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.



3. வேட்டையன்


கெளதம் வாசுதேவனின் திரைப்படங்களை அங்கே காட்சிப்படுத்தும் காதல் உறவுகளின் அழகியலுக்காகப் பலருக்குப் பிடிக்கும். மணிரத்னத்துக்குப் பிறகு கெளதம் வாசுதேவனை இந்தவகை நுண்ணழகியலைக் கவனமாகத் திரையில் செதுக்கியவர் என்று கூட சொல்லலாம். நானும் இந்த அழகியலை இரசிப்பவன் என்றாலும், அதேயளவுக்கு கெளதம் வாசுதேவனால் glorify செய்யப்படும் encounter killingsகளை வெறுப்பவன். 


சோகம் என்னவென்றால் எனது தோழிகள் பலருக்கு, கெளதம் அவரின் திரைப்படங்களில் பெண்களைச் சித்தரிக்கும்/காதலைக் காட்சிப்படுத்தும் விதம் பிடிக்கும் என்பதால் எப்போதும் எங்களுக்கிடையில்  இந்த encountersஐ normalized செய்வதை (அழகியலை முதன்மைப்படுத்துவதில்) நாம் கவனிக்காமல் இருப்பதைப் பற்றி ஓர்  எதிர் உரையாடல் நடந்தபடி இருக்கும். 


'வேட்டையன்' திரைப்படம், மெக்காலே கல்வித்திட்டம் அனைவர்க்குமான கல்வியைக் கொண்டுவந்ததைச் சொல்லிவிட்டு, இன்று அனைவருக்கான  கல்வியின் ஏற்றத்தாழ்வு நிலைமை சொல்வது ஒருபுறம் என்றாலும், இது அதிகம் கவனப்படுத்துவது encountersகளை எனத்தான் சொல்லவேண்டும்.
 

மிகப்பெரும் திரைநட்சத்திரத்தை வைத்து  encounter killingகளை பற்றி ஓர் உரையாடலை நிகழ்த்த முனைந்திருப்பதற்கான ஞானவேலைப் பாராட்டலாம். கலையோ, அரசியலோ தனக்கு முக்கியமில்லை என்று 'சூப்பர்ஸ்டார்' எனப்படுவர் முதலிட்ட பணத்துக்கு 'கமர்ஷியல் ஹிட்'  மட்டும் கொடுக்கவேண்டும் (பார்க்க: இசை வெளியீட்டு நிகழ்வில் ரஜினி பேசியது) என்று நிர்ப்பந்தம் கொடுத்திருந்தாலும், இயன்றளவு நேர்மையாக encounter பற்றி ஒற்றைக்கோணத்தை மறுத்து ஒரு கதையை இங்கு நெறியாளர் சொல்லியிருக்கின்றார்.


ரஜினியின் 'கோச்சடையான்' பார்த்தபின், இனி ரஜினி படங்களைத் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அதன்பின் ரஞ்சித்திற்காய் 'கபாலி' போய்ப் பார்த்திருந்தேன். இப்போது 'ஜெய்பீம்' எடுத்த ஞானவேலுக்காய் வேட்டையனை முதல்நாளே போய்ப் பார்த்தேன். ஆனால் தொடங்கிய முதல் காட்சியிலே ஒரு சண்டை, சண்டை முடிந்தபின் ஒரு பாடல் என்று கமர்ஷியலைக் கஷ்டப்பட்டுக் கலக்கவேண்டிய பரிதாபத்தையும் அங்கே பார்க்க வேண்டியிருந்தது.  


இந்த படத்தைத் தாங்கிப் பிடிப்பது ரஜினியை விட ஃபாகத் பாஸில்தான். அவர் கடைசிவரை வந்திருந்தால் ரஜினியின் 'நாயக விம்பமே' இத்திரைப்படத்தில் கரைந்து போய் விடுமென்பதால்தான் அவரை இடைநடுவில் கைவிட்டார்களோ தெரியவில்லை. 


விஜயின் 'GOAT', ரஜினியின் 'ஜெயிலர்' போன்றவற்றை விட இத்திரைப்படம் எவ்வளவோ உயர்ந்தது. 'கோச்சடை'யானை விட பன்மடங்கு சிறந்தது.

 

***************

கார்காலக் குறிப்புகள் - 51

Monday, October 14, 2024

 

Anne Hathaway எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. Mothers' Instinct திரைப்படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. நாவலில் சமகாலப் பிரான்சில் நடக்கும் கதையாக எழுதப்பட்டிருந்தாலும், அன்னா நடித்த இத்திரைப்படம் அமெரிக்காவில் 1960களில் நடப்பதாக மாற்றப்பட்டிருக்கின்றது. அயல் வீட்டில் வசிக்கும் இரு குடும்பங்களின் பிள்ளைகள் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். அதில் அன்னாவின் மகன் ஒரு விபத்தில் இறந்துவிடுகின்றார். மகனின் இழப்பிலிருந்து மீளமுடியாத அவர் அயல்வீட்டு பிள்ளையைத் தனது மகனாக நினைக்கத் தொடங்குவதிலிருந்து நாவல் இருளான பக்கங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றது. ஒளிப்பதிவும், இசையும், இழப்பின் துயரமும் இருண்மையை இன்னும் அடர்த்தியாக்குகின்றன. ஒரு பெண் தாய்மையின் நிமித்தம் எந்த எல்லைக்கும் போகமுடியும் என்பதை இத்திரைப்படம் மிகுந்த பதற்றங்களுடன் காட்சிப்படுத்துகின்றது.

Mothers' Instinct இருண்மையான ஒரு திரைப்படம் என்றால், அன்னா நடித்த The Idea of You இளமையும் இசையும் நிறைந்த உறவுச்சிக்கலுடைய ஒரு திரைப்படம் என்று சொல்ல வேண்டும். இங்கே அன்னா, ஒரு பதின்மப் பெண்ணுக்குத் தாயாக வருகின்றார். அத்துடன் அன்னா கணவரை விட்டுப் பிரிந்து தனித்து தனக்கான ஓவியங்களின் கலையகத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றார். மகளுக்குப் பிடித்தமான ஒரு இளைய கலைஞனின் இசைநிகழ்வுக்குச் சென்று, அங்கே தற்செயலாக அந்த இசைஞனோடு உறவு முகிழ்கின்றது. அது உடல் சார்ந்த உறவாக அமெரிக்காவில் மட்டுமில்லாது, ஐரோப்பா எங்கும் போவதாக அமைகின்றது. 

 

ஒரு பிரபல்யம் வாய்ந்தவனோடு இரகசியமாக டேட்டிங் செய்தல், அதுவும் வயது முதிர்ந்த ஒரு பெண் காதலில் வீழ்வதை எவரும் எளிதாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சமூகவலைத்தளங்களில் அன்னா பேசுபொருளாகின்றார். அது நிமித்தம் அன்னாவின் மகளும் பாதிக்கப்படுகின்றார். மகளின் நிமித்தம் தனது காதலை முறித்தாலும், மகளே இந்த stereo type ஐ உடைக்கவேண்டுமென நீயொரு பெண்ணியவாதியல்லவா என அந்த உறவை மீளத் துளிர்க்கச் செய்கின்றார். அதன் பின்னும் அந்த காதல் உறவு ஒரு கட்டத்தில் உடைந்துபோகின்றது. அவர்கள் பிறகு சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் The Idea of You இல் இருக்கும் சுவாரசியம்.

இந்த இந்த இரண்டு திரைப்படங்களை விட அதிகம் என்னைக் கவர்ந்த திரைப்படம் மலையாளத்தில் வந்த 'ஆட்டம்'. 12 ஆண்கள் நடிக்கும் ஒரு நாடகத்தில் ஒருவர் மட்டுமே பெண். நாடக நிகழ்வு முடிந்த கொண்டாட்டத்தின்போது அந்தக் குழுவின் ஓர் ஆணால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார். அதை யார் செய்திருப்பார், அதற்கு என்னமாதிரியான தீர்ப்பு வழங்குவது என்று தொடங்கும் ஆண்களின் விவாதம் எப்படி பலரின் வாழ்க்கையின் இரகசியமான பக்கங்களை வெளிக்கொணர்கின்றது என்பதைச் சுவாரசியமாக இத்திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் இதைவிட கலைத்துறையில் கூட, ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது எப்படி ஆண் 'கலைமனது' சிந்திக்கின்றது என்பதை நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் முடிவைக் கூட மிக அருமையாக அமைத்திருக்கின்றனர். ஒரு நாடகக் குழுவில் நிகழும் துஷ்பிரயோகத்தை பார்வையாளர் பக்கம் திரும்பி நம் ஒவ்வொருவரையும் கேள்விகளையும் பதில்களையும் கேட்க வைக்கின்றது. மலையாளத் திரைப்படங்களின் திரைக்கதைகளும் அதைத் திரைப்படமாக்கும் உத்திகளும் வியப்பில் ஆழ்த்துபவை. இதிலும் அந்த நுட்பம் சிறப்பாக கைவரப் பெற்றிருக்கின்றது.

இத்திரைப்படத்தில் கடைசிக்காட்சியில் இந்த ஆண்களின் மனோநிலையைக் கண்டு சலித்து/கோபமுற்று/ஏமாற்றமுற்று அந்தப் பெண் ஒரு சிரிப்புச் சிரிப்பாரே, அது நம் எல்லோர் மீதும் வீசி எறியப்படும் மிக முக்கியமான விமர்சனமாகும்.

************


(Sept 2024)

கார்காலக் குறிப்புகள் - 50

Sunday, October 13, 2024

குட்டிக்கதை சொல்லட்டுமா என்று எதுகை மோனையுடன் இங்கே ஒரு influencer இருக்கின்றார். அவரின் அழகிய தமிழ் கேட்பதற்கு இனியது என்று இருந்திருக்கலாம். ஆனால் விதி வலியது. அது அவர் நமக்கருகில் 'மதுரை பாண்டியர்கள்' இருக்கின்றார்கள், பாசக்கார மதுரைக்காரர்களைப் போல, சாப்பாடும் இனிது என்று ஒரு காணொளியைப் பதிவு செய்ய எனக்கும் அங்கு போக ஆசை வந்துவிட்டது.

இரண்டு நண்பர்களை கூடவே அழைத்துப் போகும்போது என்ன இருந்தாலும் ஈழத்தவர்களாகிய நமக்கு சோழர்களை விட பாண்டியர்கள்தான் நெருக்கமானவர்கள் என்று வரலாற்றை விவரித்துக் கொண்டு வந்தேன். இப்போது பாருங்கள் சிங்களவர்களுடைய 'மகாவம்சத்தில்' கூட சோழர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் காட்டப்படுகின்றார்கள். எந்த பாண்டியர்களாவது வில்லனாக எழுதப்பட்டிருக்கின்றார்களா என்று கேட்டேன்.

அத்தோடு விஜயனின் குடியேற்றத்தோடு சிங்கள இனம் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும்போது, அவன் ஈழத்தின் பூர்வீக இளவரசியான குவேனியை அதிகாரத்தைக் கைப்பற்ற முதலில் மணம் செய்து அவரைத் துரத்தியபின், யாரை மணம் செய்தான்? ஒரு பாண்டிய இளவரசியைத்தானே. ஆகவே நமக்கு மட்டுமில்லை, சிங்களவர்க்கும் பாண்டியர்கள் உறவுக்காரர்களே என்று பாண்டியாஸில் தரப்போகும் ஆட்டுக்கறியின் சுவையைக் கனவு கண்டபடி இதைச் சொன்னேன்.

உணவகத்தை நெருங்கியபோதுகூட, இலங்கையில் சிங்கள மன்னர்களுக்கு வாரிசுகள் இல்லாதபோது பாண்டிய இளவரசர்களும், வழித்தோன்றல்களும் இலங்கைக்கு வந்து ஆண்டிருக்கின்றார்கள் என கண்டி இராச்சியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்; மதுரை நாயக்கர்களிலிருந்துதான் இந்த பண்டாரநாயக்க, சிறிமாவோ, சந்திரிக்கா எல்லாம் வந்தவர்கள் என்று வரலாற்றை மேலும் அவர்கள் மீது விசிறியெறிந்தேன். ஆங்கிலேயர் வந்தபோது கடைசிமன்னனாக இருந்த 2ம் இராஜசிங்கன் கூட தமிழ் மன்னன்தான். ஆகவேதான் அவனை வெள்ளையர்கள் வேலூர் சிறையில் கொண்டுபோய் கதையை முடித்தனர் என நமது அரசியல் ஆய்வாளர்கள் போல மூச்சுவிடாது கதைக்க மதுரை பாண்டியர்கள் வந்துவிட்டது.

அங்கே நாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் மெனு இருக்காதது கண்டு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. தலைவாழையிலை விரித்துவிட்டு சைவமா அசைவமா என்று கேட்டனர். திருப்பதி லட்டே இப்போது அசைவம் என்பதால் எதற்கு வீண் பிரச்சினை என்று நாமெல்லோரும் அசைவம் என்று ஒருமித்த குரலில் குரல் கொடுத்தோம்.

சாப்பாடு ஒரளவு நல்லாகத்தான் இருந்தது. குட்டிக்கதை சொல்லட்டுமா மாதிரி ஒரு காணொளி செய்தால், உங்கள் கருத்தை எப்படி சொல்வீர்களென நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பர் தான் திரும்பி வரமாட்டேன் என்றார். இன்னொரு நண்பர் யாரேனும் புதிதாக வந்தால் இங்கே அழைத்துவருவேன் என்றார். நான் எனது உண்மையான கருத்தைப் பதிவு செய்ய விரும்பியபோதும், இவர்களுக்கு அவ்வள்வு 'வரலாற்றை'ச்  காதில் இரத்தம் வடிய வடியச் சொன்னதால், பரவாயில்லை, இன்னொருமுறை பரிமாறும் பெண்களின் புன்னகைகளுக்காக வரலாமென என் உணவு விமர்சனப் பார்வையை முடித்துவிட்டேன்.

விலையும் buffet போன்றது. கொஞ்சமாய் கிள்ளிச் சாப்பிடும் எனக்கு ஒருபோதும் buffet சரிவராதது. நல்லாய்ச் சாப்பிடுபவர்கள் இப்படியான meals பிடிக்கக்கூடும். பாயாசம் தந்தார்கள். அதன்பிறகும் மேலதிகக் காசு கொடுத்து குல்ஃபி வாங்கிக் குடித்தோம். நண்பர் பெசண்ட் நகரில் குல்ஃபி குடித்த ஞாபகம் வருகின்றதென்றார். எனக்கு மாட்டுத்தாவணியில் ஜிகர்தண்டா வாங்கித் தந்த  கிரஷ்ஷின் நினைவு வருகிறதெனச் சொல்லமுடியுமா என்ன? அடக்கி வாசித்தேன்.



துரை பாண்டியாஸில் சாப்பிட்டு வந்து மாலை 'நாத சங்கமம்' இசைநிகழ்வுக்குச் செல்வதாக இருந்தது. மன்னாரில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமையவிருக்கும் பல்கலாசார மையத்துக்கான நிதி சேகரிப்புக்கான் நிகழ்வு என்பதால் போக இருந்தேன். அதை நடத்திய அன்புநெறியில் அண்ணாவும் ஒரு பங்கேற்பாளர் என்பதால் குடும்பமாக போக இருந்தோம். ஆனால் மதுரை பாண்டியர்கள் இப்போதுதான் விழித்தெழத் தொடங்கினார்கள்.

மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், அவ்வப்போது கோபக்காரர்கள் என்று அறிந்தாலும், இவ்வளவு உறைப்புக்கார்கள் என்பது முதலில் தெரியாமல் போய்விட்டது. வயிறு உபாதை செய்ய இசை நிகழ்ச்சியை விட்டு எப்போது வீட்டை போகலாம் என்று 'வைச்சு' செய்துவிட்டார்கள்'. குட்டிக்கதை சொல்லும் influencer காரர்களுக்கு உணவும் கொடுத்து, promotions இற்கு கையில் காசும் கொடுப்பார்கள். நமக்கு வயிற்றில் இப்படி தந்துவிட்டார்கள் (பிழையாக நினைக்கவேண்டாம்) என்று விஜயனை மட்டுமில்லை, பாண்டிய இளவரசியைக் கூட, நீங்கள் அங்கேயே இருந்திருக்கலாமே, ஏன் கனடாவுக்கு வந்தீர்களெனத் திட்டத் தொடங்கினேன்.

என்கின்றபோதும் அந்த 'நாத சங்கமம்' அப்படி அரங்கு நிறைந்த நிகழ்வாக பலர் இருக்கை கிடைக்காது நின்று பார்த்தார்கள். ஒரு நல்ல நோக்கத்திற்காக, உண்மையான அர்ப்பணிப்புடன் ஒரு அமைப்பு செயலாற்றும் என்றால், மக்கள் எப்படியும் வந்து ஆதரவு கொடுப்பார்கள் என்பதை இன்னும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தென்னிந்திய கலைஞர்கள் இல்லாது முற்றுமுழுதாக நமது கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் நிகழ்வு பற்றி நேர்மறையான கருத்துக்களையே சொல்லியிருந்தார்கள்.

மரத்தை நட்டுவிட்டு உடனேயே பழம் பறிக்கவேண்டும் என்று ஆசைப்படாது களங்களில் செயலாற்றினால் அதற்கு எப்போததெனினும் பலன் கிடைக்கத்தான் செய்யும். அது அரசியலாக இருந்தால் என்ன, எழுத்தாக இருந்தால் என்ன, நற்பணிகளாக இருந்தால் என்ன.

ஜேவிபியும், அநுரவும் வென்றுவிட்டார்கள்  என்றால் அது அவர்களின் நீண்டகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அவ்வாறு களத்தில் கடுமையாகவும், நம்பிக்கையுடனும் நீண்டகாலம்  பணியாற்றாமல், நாங்களும் அவர்களைப் போல வெற்றிக்கனிகளை இதோ இப்போதே பறிக்கப் போகின்றோம் என்று ஓடுகின்றவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுண்டு: கான மயிலாடக் கண்ட வான்கோழி போல நீங்கள் ஆகிவிடக்கூடாது!


*****

(Sept, 2024)

சாரோன் பாலாவின் 'படகு மக்கள்'

Saturday, October 12, 2024

 The Boat People by Sharon Bala

 

'படகு மக்கள்'  (The Boat People),  கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக வழக்காடும் பிரியாவினதும், அவர்களின் வழக்கை விசாரிக்கும் ஜப்பானிய பின்புலத்தைக் கொண்ட கிரேஸினதும் கதைகள் சமாந்திரமாக இதில் கூறப்படுகின்றது.

கனடா அகதிகோரி வருபவர்களை அரவணைக்கின்ற ஒரு நாடாக இருந்திருக்கின்றது. எனவே எவ்வளவு ஆபத்தாக இருப்பினும், கனடாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் புதிய வளமானதொரு வாழ்வு கிடைத்துவிடுமென்று நம்பி மகிந்தன் மட்டுமில்லை ஏனைய பலரும் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வேறுவிதமான வரவேற்பு கனடாவில் கிடைக்கின்றது. இந்தக் கப்பலில் பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் வருகின்றனர், அவர்கள் முறையாக விசாரிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டு மகிந்தனும், அவனது மகனான செழியனும் தடுப்பு முகாமில் அடைக்கப்படுகின்றனர். செழியன் குழந்தையாததால், அவன் மகிந்தனிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு முகாமில் பெண்களோடு அடைக்கப்படுகின்றான்.

மகிந்தனுக்கு அழகான குடும்பமொன்று கிளிநொச்சியில் இருந்தது.  இந்நாவலில் இறுதி யுத்தத்திற்கு முன்பான சமாதான காலத்தில் இருந்த மகிந்தனது வாழ்வு விரிவாகப் பேசப்படுகின்றது. மகிந்தனின் மனைவியான சித்ரா, செழியன் பிறக்கும்போது இறந்துவிடுகின்றார்.  பின்னர் எப்படியோ இறுதி யுத்தத்தின் அருந்தப்பில் தப்பிப் பிழைத்த மகிந்தன், தனதும் தனது மகனினதும் நல்வாழ்வின் பொருட்டு இந்தக் கப்பல் பயணத்தை கனடாவுக்காக மேற்கொள்கின்றான். மகிந்தனது வழக்கை விசாரிக்கும் கனடிய அரசு சார்பான வழக்கறிஞர்கள் மகிந்தன் உள்ளிட்ட அனைவரினதும் உண்மை விபரங்களை இலங்கை அரசுக்கு அனுப்பிச் சரி பார்க்கின்றனர். ஒருவர், தனது சொந்த நாட்டிலிருந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லையென அகதியாகத் தப்பி வரும்போது, அந்த நபரின் உண்மை விபரங்களை தப்பி வந்த நாட்டுக்கு அனுப்பி உறுதிப்படுத்தல் அறமான விடயமா என்கின்ற கேள்வியை மகிந்தனுக்காக வழக்காடும் பிரியா கேட்கின்றார். அதுவரை இல்லாத ஒரு புதிய முறையை கனடிய அரசு இந்த அகதிகள் விடயத்தில் செய்து பார்ப்பது மனிதவுரிமைகளில் அக்கறை கொள்கின்ற பிரியாவை மனம் நோகச் செய்கின்றது.

இவ்வாறு மகிந்தனும், செழியனும் பிரிக்கப்பட்டதால், மகிழ்ந்தனின் மன உளைச்சல்கள் பேசப்படுவதோடு, மகிந்தன் உள்ளிட்ட பிறர் தமது எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைகளோடு மாதக்கணக்குகளில் தடுப்பு முகாங்களில் இருக்கும் அவதியையும் இந்நூலில் ஆசிரியரான சாரோன் பாலா விரிவாகப் பேசுகின்றார். அதேவேளை சமாந்திரமாக இவர்களின் வழக்கை விசாரிக்கும் கிரேஸின் குடும்பப் பின்னணியும் பேசப்படுகின்றது. கிரேஸ் ஜப்பானியப் பின்புலத்தில் இருந்து வந்தவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது கனடாவிலிருந்த ஜப்பானியர்கள் அனைவரும் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பப்பட்டு ஜப்பானிய அரசுக்கு ஆதரவாளர்கள் என்கின்ற   கண்காணிப்பின் வளையத்தில் வைக்கப்பட்டவர்கள். அந்த வழித்தோன்றல்களில் இருந்து வந்த கிரேஸே மிதவான கனடிய அரசின் கட்டளைகளுக்குப் பணிகின்றவராக, கப்பலில் வந்த அகதிகளை சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார். 


அவர் மட்டுமில்லை அரச தரப்பு வழக்கறிஞரான இந்திய வம்சாளிப் பெயருள்ள மிஸ்.சிங்கும் மிகக் கடுமையான கேள்விகளை ஈழத்தமிழ் அகதிகளை நோக்கி  நீதிமன்றத்தில் வீசுகின்றார். இந்தப் புதினத்தில் அடைக்கலந்தேடி வந்தவர்களின் பின்னணி வாழ்க்கை மட்டுமின்றி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளும் ஆழமாக அலசி ஆராயப்படுகின்றது. இப்படி அடைக்கலந்தேடி வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி அமைப்பான புலிகளின் தாலியென்று அந்த சிங் வம்சாவளிப் பெண்மணி வாதாடுகின்றார். இல்லை அது புலிகள் அணியும் தாலியல்ல, அது அனைவருக்கும் பொதுவான தாலி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க நீண்டகாலம் எடுக்கின்றது. அதனால் அந்தப் பெண்ணின் வழக்கு நெடுங்காலத்துக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.


கிந்தனின் வழக்கும் சிக்கலான நிலைக்குப் போகின்றது. கிளிநொச்சியில் ஒரு மெக்கானிக்காக இருக்கும் மகிந்தன், புலிகளின் வாகங்களைத் திருத்திக் கொடுத்தவர் என்று குற்றஞ் சாட்டப்படுகின்றார். அந்த வாகனத்திலேயே குண்டுகள் நிரப்பப்பட்டு கொழும்பில் ஒரு தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டதென கனடிய அரச வழக்கறிஞர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். மகிந்தன் அந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்ததென விபரிக்க முயல்கின்றான். புலிகள் தமது வாகனத்தைத் திருத்தக் கேட்டபோது வேறு வழியில்லாது தான் திருத்திக் கொடுத்தேனே தவிர அந்த வாகனத்தை குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்று மகிந்தன் கூறுகின்றான். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும்போது புலிகள் சொல்வதைக் கேட்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை என்று மகிந்தன் சொல்வதை நீதிமன்றம் கேட்கத் தயாரில்லாததால், மகிந்தனின் வழக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவ்வாறே இந்த நாவலும் மகிந்தன் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்படப் போகின்றாரா அல்லது கனடிய மண்ணில் வாழ அனுமதிக்கப்படுகின்றாரா என்ற தெளிவான பதில் தெரியாது முடிவடைகின்றது.


மகிந்தனின் வழக்கு இவ்வாறு இழுபறியில் இருக்கும்போது, பிரியாவின் மாமா ஒருவரின் மூலம் இலங்கையின் கடந்தகால வரலாறூ சொல்லப்படுகின்றது. எவ்வாறு தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்குமுறை நிகழ்ந்து இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டனர், 83 ஆடிக்கலவரம் கொடுத்த அழிவுகள் என எல்லாம் பேசப்படுகின்றன. இனி இந்த நாட்டில் இருக்கமுடியாது என்று 80களில் பிரியாவின் தகப்பனார் குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர்ந்துவிட, இந்த மாமாவோ நான் போராப்போகின்றேன் என்று புலிகளோடு இணைகின்றார். அதன்பிறகு இந்திய இராணுவத்தோடு போரிடும்போதும் புலிகளோடு இருக்கின்றார். இந்திய இராணுவ சுற்றிவளைப்பின்போது விளாமரத்தில் ஏறி இவர் தப்பிவிட அந்த மாமாவின் நண்பர் ஒருவர் சுடப்பட்டு இறந்துவிடுகின்றார். அங்கிருந்து இவரும் பின்னர் தப்பி கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அவ்வாறு இருந்தும் புலிகளில் இணைந்த மாமாவுக்கு பின்னரான காலத்துப் புலிகள் பிடிப்பதில்லை. அவர்களை கடும் விமர்சனம் செய்கின்றவராக இருக்கின்றார். ஒருவகையில் சாரோன் பாலா, இந்த மாமாவின் கதையைச் சொல்வதன் மூலம், மகிந்தனின் சிக்கலான கடந்தகால வாழ்க்கைப் புரிந்து கொள்ள வாசகரை மறைமுகமாக அழைக்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ள முடியும். ஒருகாலத்தில் புலிகளில் இணைந்திருந்த பிரியாவின் மாமாவால் கனடிய நீரோட்டத்தில் இணைந்து நல்லதொரு குடிமகனாக இப்போது வாழும்போது, மகிந்தனை புலிகளுக்கு உதவினார் என்ற ஒரு காரணத்துக்காக அவனை அவனின் மகனிடமிருந்து பிரிந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது நியாயமானதா என்பது இங்கே மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது.

சாரோன் பாலா மகிந்தன், பிரியா, கிரேஸ் உள்ளிட்ட பல சிக்கலான பாத்திரங்களை  பல்வேறு பரிணாமங்களில் சிந்திக்கக்கூடிய நிகழ்வுகளினூடாக அவர்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றார்.  தனது வழக்கு தோற்கப் போகின்றது, தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகின்றேன் என நம்பும் மகிந்தனின் நண்பனொருவன் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்கின்றான். அது மகிந்தனை இன்னும் உளாவியல் சிக்கலின் ஆழத்துக்குள் தள்ளிவிடுகின்றது. அதேபோன்று சிலருக்கு வழக்கு வெற்றிகரமாக முடிந்து போக, தாம் எப்போது தடுப்பு முகாங்களில் இருந்து வெளியே போய் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியுமென்று பலர் யோசிக்க அவர்களை வெறுமை பெரும் சுழலென மூடிக்கொள்கின்றது. இவ்வாறு ஒரு உக்கிரமான தடுப்பு முகாம் வாழ்வை, வழக்குகளுக்குப் போகும்போது கால்களிலும் கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் செல்லப்படும் பல பாத்திரங்களை நம்முன்னே உலாவ விடுகின்றார் சாரோன்.


னடாவுக்கு அகதிகள் கப்பல்களில் காலங்காலமாக வந்து கொண்டிருக்கின்றனர். உலக மகா யுத்தங்களில் அகதிகளாக ஐரோப்பாவிலிருந்து தப்பி வந்திருக்கின்றனர். இன்னும் வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்த்தால், 1899 இல் 7,500 டோக்பார்ஸ் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வந்திருக்கின்றனர். அன்றைய ஜார் மன்னன் இம்மக்களை ஒடுக்கத் தொடங்க, அவர்கள் கனடாவுக்கு வந்திறங்கியிருக்கின்றனர். இம்மக்கள் கனடாவுக்கு வர உதவி செய்தவர் பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய். அவர் 'புத்துயிர்ப்பு' என்ற நாவலை எழுதி அது விற்கப்பட்ட பணத்தில் டோக்பார்ஸை கனடாவுக்கு அனுப்பியிருந்தார்.

அவ்வாறே பிரித்தானியா - அமெரிக்கா சிவில் யுத்தத்தின்போது பலர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவின் மிகப்பெரும் துயரார்ந்த வரலாற்றுச் சித்திரமான கறுப்பின் அடிமைகள் தமது விடுதலைக்காக கனடாவைத் தேடியே அமெரிக்காவிலிருந்து முதன்முதலில் தப்பி வந்திருக்கின்றனர்.

இவ்வாறு அடைக்கலந் தேடி வந்த அகதிகளை கனடா எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இருகரம் கூப்பி வரவேற்றதா என்றால் இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இந்தியாவில் இருந்து 1914 இல் Komagata Maru என்ற கப்பலில் வந்த முந்நூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அதற்கு மன்னிப்பை கனடாவின் இருவேறு பிரதமர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தபின் பொதுவெளியில் கேட்டிருக்கின்றார்கள்.

ஈழத்து அகதிகள் முதன்முதலில் வந்த கப்பல் 1986இல் கனடாவில் கிழக்குக்கரையில் இறங்கியது. அன்று கனடிய மக்களிடையே அவ்வளவு எதிர்ப்பு இந்த அகதிகள் மீது இல்லையென்றாலும், அன்றைய பிரதமராக இருந்த மல்ரோனி கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கது - Canada was built by immigrants and refugees, and those who arrive in lifeboats off our shores are not going to be turned away” என்று உறுதியாகச் சொன்னார்.

ஆனால் பின்னர் ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து கப்பல்களில் 2009-2010 இல் புறப்பட்ட மக்களை இதே கனடா மிக மோசமாக வரவேற்றது. பொதுவெளியில் வந்து அந்த அகதிகள் தமது கதைகளைச் சொல்லமுன்னரே, இந்தக் கப்பலில் வந்த அனைவருமே 'பயங்கரவாதிகள்' என அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களின் அபிப்பிராயத்தை அரசே குழப்பியது. அது மட்டுமின்றி கப்பலில் வந்த 500 இற்கு மேற்பட்ட மக்களை தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆண்கள், பெண்களை மட்டுமில்லை, குழந்தைகளாக 10 வயதுகளில் இருந்த சிறுவர்களைக் கூட விசாரணை என்ற பெயரில் ஒரு வருடத்துக்கு மேலாக சிறைக்குள் வைத்து கனடா தனது மனிதாபிமான முகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது.

கிட்டத்தட்ட இன்று பதினைந்து வருடங்கள் முடிந்தபின்னும், அந்தக் கப்பலில் வந்த மூன்றில் இரண்டு பங்கு அகதிகளே கனடாவில் சட்டபூர்வமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற மூன்றிலோரு பங்கினர் எவ்வித உரிய ஆவணங்களும் இல்லாது கனடாவுக்குள் இருக்கின்றனர். இலங்கைக்கு மீண்டும் சென்றால் தமது உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று சொன்னபோதும் சிலர் இலங்கைக்குத் திருப்பி 'பயங்கரவாதிகள்/குற்றவாளிகள்' என்று சொல்லப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர்.

இப்படி இந்த கப்பல் வந்ததன் பின், கனடாவின் அகதிகளுக்கான முக்கிய சட்டத்தை அன்றைய வலதுசாரி அரசாங்கம் திருத்தி எழுதியது. ஒருகாலத்தில் கனடா என்கின்ற நாடு குடிவரவாளர்களாலும் அகதிகளாலும் கட்டியெழுப்பட்டது என்று பெருமையாகச் சொல்லி, நாம் ஒருபோதும் அகதிநிலை கோரி வந்தவர்களைத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்ற ஒரு பிரதமரின் வார்த்தைகள் வெறும் கடந்த கால நினைவுகளாக உதிர்ந்து போயிற்று.

ஈழப்பிரச்சினை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்படும் பல நாவல்கள் 83 இனக்கொலையையே முக்கிய பேசுபொருளாக எடுத்து அதை மட்டுமே சுற்றிக் கட்டியமைக்கப்பட்டிருக்கும். 'படகு மக்கள்' என்கின்ற இந்த நாவல் இறுதி யுத்தத்தை களமாகக் கொண்டு இயன்றளவு தான் எடுத்துக்கொண்ட பின்னணிக்கு நியாயம் சேர்ப்பதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. இதில் மனிதாபிமானம் பற்றியும்,சமத்துவ வாழ்வு பற்றியும் பேசியபடி அனைத்துத் தரப்பையும் அவர்கள் செய்த தவறுகளுக்காக விமர்சிக்கவும் தயங்கவில்லை என்பதை முக்கிய ஓர் அவதானமாக நாம் வைக்க முடியும். நியாயத் தராசின் எந்த முள்ளின் பக்கம் சாயவேண்டும் என்கின்ற எவ்வித முற்சார்பும் இல்லாது எழுத, யுத்ததிற்கு வெளியே இருந்து அதேவேளை யுத்தத்தோடு தொடர்புடைய சாரோன் பாலா போன்ற ஈழத்தமிழரின் இரண்டாம் தலைமுறையால்தான் முடியும் போல இருக்கின்றது.

நமது நாட்டில் நடந்த யுத்தத்தை மட்டுமின்றி நாம் ஏன் அகதிகளாக மேற்கத்தைய நாடுகளுக்கு புகலிடம் தேடி வந்தோம் என்பதையும் இந்த நாவல் எவ்வித அதீத நியாயப்படுத்தல்களும் இல்லாது இயல்பாக முன்வைக்கின்றது. அத்துடன் சூரியக் கடல் (Sun Sea) என்கின்ற கப்பலில் 2010 இல் ஈழத்தமிழர்கள் வந்தபோது ஏற்பட்ட எதிர்ப்புக்குரல்களுக்கு மறுப்பாக அப்படி வந்த அகதிகளுக்கும் ஒரு குரல் இருக்கின்றது, அதைக் கேட்கவேண்டும் என உரத்துச் சொல்கின்ற ஓர் புனைவு ஆவணமாகவும் இது இருப்பது கவனிக்கத்தக்கது. சரி/பிழை, நியாயம்/அநியாயம் என்கின்ற துவிதப் பிரிப்புக்களுக்கு அப்பால் ஏன் அந்த மக்கள் மூன்று மாதங்களுக்கான கடும்பயணத்தில், ஒழுங்கான உணவோ/குளிப்போ/கழிப்போ இன்றி  கனடாவைத் தேடி வந்தார்கள் என்பதைக் கனடிய பொதுப்புத்தி கொஞ்சமேனும் யோசிக்க இந்த நாவல் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.


**********

(நன்றி: எழுநா)


 

கார்காலக் குறிப்புகள் - 49

Friday, October 11, 2024

ம்மாதம் நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை அவ்வளவாகப் பின் தொடர்வதில்லை. இலங்கையில் இருக்கும் (அக்கா குடும்பம்) மருமகளோடும், சில நண்பர்களோடும் இருந்து மட்டும் அவ்வப்போது சில தகவல்களை/களநிலவரங்களை அறிந்து கொள்வேன்.

 

இடதுசாரிகளென தம்மை அழைத்துக்கொள்ளும் ஜேவிபியினர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் சாத்தியம் அதிகமெனச் சொல்கின்றார்கள். அது நடக்குமா, நடக்காதா, அவர்கள் உண்மையான இடதுசாரிகள்தானா என்ற விவாதங்களை ஒரு புறம் இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம். அவர்கள் சர்வ அதிகாரமுடைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மார்க்ஸின் வழியிலா, லெனினின் வழியிலா, ஸ்டாலினின் வழியிலா ஆட்சி செலுத்துவது என்பதை ஜேவிபியினரும் இலங்கை மக்களும் சேர்ந்து முடிவு செய்துகொள்ளட்டும்.

ஆனால் ஜேவிபியினர் வென்றால் அவர்களுக்கு இதுவரை வரலாற்றில் கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். அது அவர்கள் இலங்கை அரசியலை, முற்றுமுழுதாக இலங்கையின் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் மகாநாயக்க தேரர்களிடமிருந்து விடுதலை செய்வதாகும்.

இலங்கையானது பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் இந்த மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களின் பாதிப்பிலிருந்து ஒருபோதும் தப்பி வந்ததில்லை. இலங்கையின் பிரதமர்களின் ஒருவரான SWRD பண்டாரநாயக்காவையே ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தந்தையார்) புத்தபிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லுமளவுக்கு பிக்குகளின் ஆதிக்கம் 1950களிலிருந்தே இலங்கையில் இருக்கின்றது. இன்றைக்கும் இந்த பெளத்த பீடங்களுக்கு எதிராக எதையும் செய்ய எந்த இலங்கை ஜனாதிபதி/பிரதமர்களால் முடிந்ததில்லை.
 
ஆகவே மதத்தை நிராகரித்த மார்க்ஸினதும், 'மதம் ஒரு அபின்' என்று தெளிவாக வரையறுத்த லெனினதும் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வருகின்ற ஜேவிபியினர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், 
அரசியலை மதத்தில் இருந்து விடுதலை செய்வார்களாயின், இலங்கையானது சிங்கள பெளத்த இனவாதத்திலிருந்து தப்பி, சிறுபான்மை இனங்களுக்கு மட்டுமில்லை சிங்களவர்க்கும் மூச்சுவிடக்கூடிய நிம்மதியான ஒரு புதிய அரசியல் களநிலவரத்தைத் தோற்றுவிக்கலாம்.

காலம் ஜேவிபினர்க்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை வழங்குகின்றதென்றால், இந்த இடதுசாரிகள் அரசியலை மதத்திலிருந்து பிரித்துக் கொண்டு செல்வார்களாயின் நாடு எதிர்காலத்தில் சுபீட்சமாவது மட்டுமில்லை, இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைச் சாதித்தவர்கள் எனவும் பதியப்படுவார்கள்.

செய்வார்களா? செய்ய அவர்களுக்கு அந்தளவுக்கு நெஞ்சுரமும், நேர்மையும் இருக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி.


************


(Sept 08, 2024)

இரட்டை இயேசு - வாசிப்பு

Wednesday, October 09, 2024

விஜய ராவணனின் 'இரட்டை இயேசு' அண்மையில் வாசித்தவற்றில் முக்கியமான சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்வேன். எனக்கு முன்னரான தலைமுறை 15 சிறுகதைகளைச் சேர்த்துத் தொகுப்புக்களை வெளியிட்டது. 10 வருடங்களுக்கு முன் என்னைப் போன்றோர் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டபோது 12 சிறுகதைகளாவது அதில் இருந்திருக்கின்றன. இப்போது 6 சிறுகதைகளோடும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என்பதற்கு 'இரட்டை இயேசு' ஓர் உதாரணமாக இருக்கின்றது.

இதில் 'தங்கமீனும்', 'ஆரஞர் உற்றன கண்'ணும் போர்சூழலின் பின்னணியில் இருந்து வந்தவர்களின் கதைகளைக் கூறுகின்றது. அதிலும் 'தங்கமீன்' மிகத் தத்ரூபமாக எழுதப்பட்டிருக்கின்றது. நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் ஜெரூசலத்துக்காக உரிமைகோரும் பாலஸ்தீனியப் போராளியும், இஸ்ரேலிய இராணுவத்தினனுமே இங்கே முக்கியமான பாத்திரங்கள். தங்கமீன்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் ஊடாக சமாதானம் பேசப்படுகின்றது. அதிலும் தங்கமீன்களை காவிக் கொண்டிருப்பவர்க்கு, போரின் மத்தியில் மரணம் நிகழாது என்கின்ற படிமம் என்னை அவ்வளவு கவர்ந்திருந்தது.

அதுபோலவே தங்கமீன்கள் எப்படி ஒரு பாலஸ்தீனியச் சிறுவனிடமிருந்து இஸ்ரேலியச் சிறுவனுக்கு கைமாற்றப்படுகின்றது என்பதைச் சித்தரிக்கும் இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இறுதியில் தமது பால்யகாலத்தைப் பேசிக் கொண்டிருந்த போராளியும்/இராணுவத்தினனும் பிரிந்துபோகும்போது எடுத்துச் செல்லும் துப்பாக்கிகள் ஒரேயிடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டவையாக இருப்பதை ஆசிரியர் உணர்த்துவது இன்னும் சிறப்பானது. எங்கோ தொலைவில் இருக்கும் நாடுகள் தமது பொருளாதாரப் பேராசைக்காக அப்பாவி மனிதர்களைப் பலிவாங்கும் ஆயுதங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து விற்றுக்கொண்டிருக்கின்றன என்கின்ற அரசியல் இந்தக் கதையில் மிக நுட்பமாக உணர்த்தப்படுகின்றது.

வ்வாறே 'இன்னொருவன்' என்கின்ற கதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்து வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவன் சென்னையில் வசதியான இடத்துக்கு ஒரு புரோக்கரால் குறைந்த வாடகையில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்கின்றான். அந்த வீடும் அதன் சூழலும் ஒருவித மர்மமாக இருக்கின்றது. யாரோ எங்கோ இருந்து தொடர்ந்து பந்தை நிலத்தை எறிந்து சத்தங்களை எழுப்பியபடி இருக்கின்றனர். ஒருநாள் வாடகைக்கு இருப்பவன் சத்தத்தைப் பின் தொடர்ந்து சென்று, ஒரு கண்ணாடிக்குப் பின் உள்ளிழுக்கப்படுகின்றான். அங்கே வேறொரு உலகமும், வேறான மனிதர்களும் இருக்கின்றார்கள். அந்த கண்ணாடிகளிலான உலகில் அவன் தொடர்ந்து இருந்தானா, அதிலிருந்து தப்பி வந்தானா என்பதை சுவாரசியமாக இந்தக் கதை சொல்கின்றது.

இத்தொகுப்பில் 'என்றூழ்' என்கின்ற கதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. எப்படி ஒரு அறிவியல் கதை எழுதப்படவேண்டும் என்று முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய கதை. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவுக்கு தன்னியல்பிலே அறிவு வந்து மனிதர்களைப் போல உணர்வுகளும், ஆசைகளும் வந்தால் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைச் சொல்கின்ற அருமையான கதை. இதை அறிவியல் சொற்கள் நிரப்பி வாசகர்களைப் பயமுறுத்தாது, மிக எளிமையாக அதை சமயம் அறிவியல் உண்மைகளில் சமரசம் செய்யாது, வாசிப்பில் எவ்விதத் தொய்வுமில்லாது மிக நேரத்தியாக இந்தக் கதை எழுதப்பட்டிருக்கின்றது.

சமகாலத்தில் எழுதப்படும் பெரும்பாலான கதைகளும்/கதைத் தொகுப்புக்களும் ஒருவித சோர்வைத் தருகின்றதாக இருக்கையில், 'இரட்டை இயேசு' தொகுப்பு வாசிப்பில் அவ்வளவு புத்துணர்ச்சியைத் தருகின்றது. புதிதாக எழுத வருகின்றவர்களும், ஒரு சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை மட்டும் பின் தொடர்கின்றவர்களும் இத்தொகுப்பைக் கட்டாயம் வாசிக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். தமிழில் கதைகள் சொல்லும் வெளிகளை இன்னும் எவ்வளவு தூரம் நீட்சித்துப் பார்க்கலாமென்பதற்கும், மொழியில் எப்படி நுட்பமான விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாமென்பதற்கும் இத்தொகுப்பில் இருக்கும் கதைகளை முன்வைத்து உரையாடிக் கொள்ள முடியும்.


*************

(Sep 05, 2024)

கார்காலக் குறிப்புகள் - 48

Tuesday, October 08, 2024

 கிளிமஞ்சாரோ

எனது முதலாவது தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளை' கனடாவில் வெளியிட்டபோது, அதற்கு அருகில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அது எதோ ஒரு (வைத்தியசாலை?)  நிதிசேகரிப்புக்காக ஒருவர் கிளிமஞ்சாரோவில் ஏறுவதற்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எங்கள் பாடசாலையின் முன்னாள் அதிபரான கனகசபாபதியே (கனக்ஸ்) எனது நூல்களையும் வெளியிட்டு வைத்தார் என்பதால் அது நன்கு நினைவில் இருக்கின்றது. பின்னாட்களில் அந்தத் தமிழர் கிளிமஞ்சாரோவில் ஏறியிருக்கக் கூடும்.

புனைவாக கிளிமஞ்சாரோ என் நினைவில் நுழைந்தது ஹெமிங்வேயின் 'கிளிமஞ்சாரோவில் பனி பொழிகிறது' என்ற நெடுங்கதையினூடாகும். புனைவின் சாத்தியங்கள் எவ்வளவு நீளுமென்பதற்கு ஹெமிங்வே கிளிமஞ்சாரோ மலையில் ஏறாமலே, அதன் அடிவாரத்தில் நின்ற அனுபவத்தை வைத்து ஒருவனின் வாழ்க்கை முழுதையே எழுதியிருப்பார்.

நான் இப்போது இன்னொரு கிளிமஞ்சாரோவைப் பற்றிச் சொல்லப் போறேன். இந்தப் படைப்பாளி ஹெமிங்வே போல அடிவாரத்தில் நிற்காமல், உண்மையாகவே கிளிமஞ்சாரோவின் உச்சியை ஏறி அடைந்தவர். அதை ஒரு அற்புதமான கதையாகவும் எழுதியிருக்கின்றார். இந்தக் கதையில் வரும் கதைசொல்லி ஏதோ ஒரு சொல்லமுடியாத் துயரத்தில் உழன்றாலும், அதை முக்கியப்படுத்தாது கிளிமஞ்சாரோவில் ஏறும் அனுபவத்தை அழகாகச் சொல்கின்றார். 

 

பல நாட்களாக கிளிமஞ்சாரோவில் பகலில் வழிகாட்டிகளுடன் ஏறும் கதைசொல்லி, உச்சியை அடையும் கடைசி நாளில் நள்ளிரவில் ஏறக் கேட்கப்படுகின்றார். ஏன் என வழிகாட்டியிடம் கேட்கும்போது, இனிவருவது மிகச் செங்குத்தான மலையேற்றம், புதிய ஒருவருக்கு கீழே பார்த்தால் அது மிகுந்த பயத்தைத் தரக்கூடியது. எனவேதான் நள்ளிரவில் ஏறத்தொடங்குகின்றோம், சூரியன் வருவதற்குள் மலையுச்சியை அடைந்துவிடுவோம் என்கின்றார். அப்போது கதைசொல்லி இதுவரை இருள் என்பது பயங்கரமானது என்கின்ற தன் கற்பிதத்தை மாற்றி, இருள் என்பது அழகானதும், வழிகாட்டக்கூடியதும் கூட என்கின்ற புரிதலை அடைகிறார்.

அவ்வாறே, இவ்வளவு கடினப்பட்டு மலையுச்சிக்குப் போனால் என்ன அங்கே பார்க்கக் கிடைக்கும் என கதைசொல்லி வழிகாட்டியிடம் வினாவுகின்றார். அங்கே எதுவுமில்லை, பரந்த வெளிமட்டுமே இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது. இப்படி ஒன்றுமே இல்லாமல் செய்வதை விட எங்கள் இந்தியாவின் மலைச்சிகரங்களைப் போல நீங்கள் ஏதேனும் ஒரு கோயிலையோ/கடவுளையோ வைத்திருந்தால், இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறியதற்கு இறுதியில் கடவுளைக் கண்டோம் என்கின்ற திருப்தியாவது வந்திருக்குமே என கதைசொல்லி சொல்கின்றார்.

உங்களுக்கு அங்கே உச்சியில் ஒரு கோயில் என்றால், எங்களுக்கு இந்த மலையே கடவுள்தான். இந்த அன்னை எங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்கின்றார் வழிகாட்டி. அதேபோல மலையை வென்று எளிதில் வாகைசூடிவிடுவோம் என்று மலையை மதிக்காது அகங்காரத்துடன் ஏறத்தொடங்கியவர்கள் எல்லாம் மூச்சுவிடத் திணறி சில நாட்களிலே அடிவாரத்தை நோக்கி ஓடத்தொடங்குவதையும் கதைசொல்லி தன் பயணத்தின் இடைநடுவில் காண்கின்றார்.

'குழந்தை' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட கதைசொல்லி மிகக் கஷ்டப்பட்டு இறுதியில் உச்சியை அடைகின்றார். அதுவரை அடக்கிவைத்த உணர்வுகளை எல்லாம் வழியவிட்டு அழுகின்றார். வாழ்வில் தினமும் போராடிப் போராடி சோர்ந்துவிட்டேன். சந்தோசத்திற்கான வழி என்னவென எனக்குத் தெரியவில்லை' எனத் தன்னை முழுமையாக அந்த மலையுச்சியில் வைத்து அந்நிலத்து பூர்வீக மனிதனின் முன்  வெளிப்படுத்துகின்றார்.

அதற்கு 'எதற்கும் பயப்பிட வேண்டாம் குழந்தை! பயப்பிடும் நிலை வந்தால் வாழ்க்கை சகிக்க முடியாமல் போகும். சிரமம் அதிகமாகி சுகம் குறைந்துகொண்டே போனாலும் -எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு தாங்கும் சக்தி வாழ்க்கைக்கு மட்டுமே உண்டு. கொஞ்சம் பொறுமை வேண்டும். அவ்வளவுதான்! முன்னால் நல்லது காத்திருக்கிறது என்று காத்திருக்க வேண்டும். காலச் சக்கரம் கொஞ்சம் சுழல்வதற்குள் எல்லாம் சரியாகிவிடும். சுகம்-துக்கம் இரண்டுமே வெறும் கற்பனைகள்தான். எதுவுமே இங்கே நிரந்தரமில்லை.' என அந்த மலையேற்ற வழிகாட்டியே குழந்தையின் துயரங்களிலிருந்து மீளும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் மாறுகின்றார்.

குழந்தைக்கு கிளிமாஞ்சாரோ இப்போது வேறொரு வடிவதைக் கொடுக்கின்றது. கடவுளையே நம்பாத குழந்தை அந்த 'மலைகளின் கடவுளுக்கு' மனசார நன்றி சொல்லி தன்னை உணர்ந்து கொள்கின்றார்.

இந்த அருமையான கதை வசுதேந்த்ராவின் 'மோகனசாமி' என்கின்ற சிறுகதைத் தொகுப்பில் இறுதிக் கதையாக இருக்கின்றது. நான் தொகுப்பில் இதையே முதல் கதையாக வாசித்தேன். இதற்குப் பிறகுதான் தொகுப்பின் முதல் கதையான 'சிக்கலான முடிச்சை' வாசித்தேன். இத்தொகுப்பில் இருக்கும் அனைத்துக் கதையுமே 'குழந்தை' என கிளிமஞ்சாரோக் கதையில் அழைக்கப்பட்ட மோகனசாமியைப் பற்றிய கதைகளே. இத்தொகுப்பின் ஒழுங்குவரிசையில் வாசித்திருந்தால் உடனேயே மோகனசாமி ஒரு தற்பாலினர் (கே) என அறிந்திருப்போம். ஆனால் அப்படி அறிந்தாலும், அறியாவிட்டாலும் கிளிமஞ்சாரோ கதையை வாழ்வில் துயரத்திலும்/வெறுமையிலும் உழன்றுகொண்டிருக்கும் யாரும் தம்மோடு பொருத்திக் கொண்டு பார்க்கும்படியாக அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றது.

ஹெமிங்வேயின் 'கிளிமஞ்சாரோவில் பனி பொழிகின்றது' கதையில் வரும் ஹரி எழுதமுடியாத writer's block இல் சிக்கித் திணறுகின்றார். இறப்பை எதிர்நோக்கும் அவர் வீணாக்கிய காலம், எழுதாத பொழுதுகள், உறவுச் சிக்கல்கள் என அனைத்தையும் நினைத்து  அப்போது ஏங்கத் தொடங்குவார்.

'எழுத எத்தனையோ இருக்கின்றது. உலகம் மாறுவதை அவன் பார்த்தான். நிகழ்வுகளை மட்டுமில்லை, மனிதர்கள் மாறுவதையும் கண்டவன். அதில் ஒரு பங்காக தானும் இருந்ததை அவதானித்தவன். தன்னுடைய கடமையாக இவற்றையெல்லாம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் கடைசியில் அவன் எதையும் எழுதவில்லை' என்று ஹெமிங்கே ஹரி பாத்திரத்தினூடாகச் சொல்லியிருப்பார்.

ஹெமிங்வேயின் ஹரி எழுதாமல் விட்டதை, வசுதேந்த்ரா 'மோகனசாமி' என்கின்ற பாத்திரத்தினூடாக 'தொடரேந்திய சுடராக' எழுத வந்திருக்கின்றார்.  அன்று என் புத்தக வெளியீடு நடந்தபோது அருகில் நிகழ்வு நடத்தியவரும் கிளிமஞ்சாரோவில் ஏறிய தன் அனுபவங்களை எங்கேனும் எழுதியோ/பேச்சாகப் பதிந்து கொண்டோ இப்போதும் இருக்கலாம்.

ஆக, இன்னும் கிளிமஞ்சாரோவில் பனி எண்ணற்ற கதைகளாகப் பொழிந்து கொண்டிருக்கின்றது. 'மலைகளின் கடவுள்' மனிதர்களின் துயரங்களைக் கரைத்து மகிழ்ச்சியில் சிலிர்க்க வைக்கும் தனது ஆசிர்வாதங்களை ஒருபோதும்  நிறுத்துவதும் இல்லை.


************** 

(வசுதேந்த்ராவின் 'மோகனசாமி' சிறுகதைகளின் தொகுப்பை கன்னடத்திலிருந்து தமிழுக்கு கே.நல்லதம்பி மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார்.)

 

(Sept 24, 2024)

தங்கலான்

Monday, October 07, 2024


மாய யதார்த்த/ஃபாண்டஸி திரைப்படங்கள் எத்தனையோ இருந்தாலும் அகிரா குரோசாவின் 'கனவுகள்', வூடி அலனின் 'பாரிஸில் நள்ளிரவு',  கு(யி)லரமோ டெல் டோராவின் 'பானினுடைய பதிர்வட்டம்' போன்றவற்றை வெவ்வேறு பின்னணிக்காக  உதாரணங்களாக எடுத்துக் கொள்வேன். அப்படி மாய யதார்த்தப் பாணியில் அமைந்த சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நாவலை, திரையில் அதே வனப்புடன் வரையப்படவில்லை. இத்தனைக்கும் இதன் நெறியாளர் தீபா மேத்தாவுடன், ருஷ்டி திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுமிருந்தார். இவ்வாறு தனது நாவலுக்கு நிகழும் என்று கணித்தபடியால்தான், மார்க்குவெஸ் அவரின் 'தனிமையின் நூறு ஆண்டுகளை'த் திரைப்படமாக்க கேட்டபோதும் 'முடியாது' என்று உறுதியாக மறுத்திருக்கின்றார். அவரின் 'காலராக் காலத்தில் காதல்' கற்பனை வளத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், நாவலின் உள்ளடுக்குகளை அது தவறவிட்டதாக ஓர் எண்ணம் எனக்கிருக்கிறது.


மலையாள சினிமா தன்னை  ஒவ்வொரு காலகட்டத்துக்கும் புதுப்பித்துக் கொண்டிருக்கும். அதற்கான பார்வையாளர்களைத் தயார்படுத்தியபடி நெறியாளர்களும் புதிது புதிதாக வந்துகொண்டிருப்பார்கள். அண்மையில் ஒரு நேர்காணலில் ஃபாகத் பாஸில் 'இப்போது நாம் எல்லாவிதமான பரிசோதனைகளையும் செய்கின்ற காலம் மலையாளத்தில் கனிந்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை எடுங்கள்' என நண்பர்களுக்குச் சொன்னதாக கூறியிருப்பார். அதேசமயம் ஒரு படம் நன்றாக வந்துவிட்டால், அதே சாயலில் மூன்று நான்கு   எடுத்துவிட்டால், மலையாள இரசிகர்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என பார்வதி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.


ஆனால் தமிழிலோ புதிய சூழலுக்கு/புதிய கதைக்களன்களுக்கு பார்வையாளர்களைத் தயார்ப்படுத்தல்களே இல்லை. ஒரு திரைப்படம் தற்செயலாக வெற்றி பெற்றுவிட்டால், ஒரு பத்து படமாவது அதேபோல எடுத்து முதலில் வந்த நல்ல திரைப்படத்தின் அருமையே இல்லாமற் செய்துவிடுவார்கள். தொடர்ச்சியாக காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த செல்வராகவன் சடுதியாக 'ஆயிரத்தில் ஒருவனின்' திகைக்க வைத்தார். அன்றைய செல்வராகவனின் படங்கள் மீது விருப்பு வைத்திருந்த நான் 'ஆயிரத்தில் ஒருவனை' முதற்காட்சியாகப் பார்த்தபோது அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. அப்போது இத்திரைப்படம் குறித்து எதிர்மறையாக வைக்கப்பட்ட விமர்சனங்களை மறுத்து சிறு சிறு குறிப்புக்களாக நான் எழுதியதும் நினைவிலுண்டு. ஆயிரத்தில் ஒருவனின் பிற்பாதி விளங்கவில்லை/சும்மா பாவனை செய்கின்றது என்றபோது அப்படியல்ல என்று விவாதித்திருக்கின்றேன். மேலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து ஒரு பெரும் வெறுமை சூழ்ந்திருந்தபோது,  2010 இல் வெளிவந்த அத்திரைப்படம் பலருக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தையும் தந்திருந்தது. இப்போது கிட்டத்தட்ட 14 வருடங்கள் கடந்தபின், செல்வராகவனின் மற்றப் படங்களை விட, 'ஆயிரத்தில் ஒருவனே' அதிகம் சிலாகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு முரண்நகை..

நேற்று தங்கலானைப் பார்த்தபோதும்  ஆயிரத்தில் ஒருவனைப் போல அது வெளிவந்த காலத்தில் தவறவிடப்பட்டு பின்னரான காலத்தில் அதிகம் உரையாடப்படுமென நினைத்துக் கொண்டேன். ஏனெனில் தங்கலானின் கதைசொல்லல் பாணிக்கு இன்னும் பார்வையாளர்கள் தயார்ப்படுத்தவில்லை என்றே நினைக்கின்றேன். ஏன் பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டாடிய இரசிகர்கள் கூட, ரஞ்சித் முற்றிலும் 360 கோணத்தில் திரைக்கதையை மாற்றியமைத்த தங்கலானை அந்தளவுக்கு வரவேற்பார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.


'தங்கலான்' அதற்குரிய கதைசொல்லல் பலவீனங்களை, தொன்மங்களை எப்படி யதார்த்தத்தோடு இணைப்பதென்ற சிக்கல்களை/ காட்சிப்படுத்தல்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பதை மறுக்கத் தேவையில்லை. அது ஒரு நெறியாளர், அதுவரையில்லாத புதுப்பாணியில் சொல்லவரும்போது வருகின்ற குழப்பங்கள் என எடுத்துக் கொள்ளலாம். 


இன்றைக்கு 90 வீதமான தமிழ்ச் சினிமா வன்முறை என்கின்ற 'ஆபாசத்தில்' சிக்கிச் சின்னபின்னாமாகி அதுவே சமகாலத் தமிழ்ச் சினிமாவின் முகமாக கொள்ளப்படுகின்றபோது 'தங்கலான்' எத்தனையோ மடங்கு உயர்ந்த திரைப்படமாகும். கோலார் வயலுக்கு கொத்தடிமைகளாக குடும்பம் குடும்பமாக கூட்டிச்செல்லப்பட்டவர்களின் கதையை ரஞ்சித்தால் யதார்த்தப் பாணி சினிமா மூலம் சொல்லமுடியாதா என்ன? சார்பட்டா பரம்பரை அதற்கொரு மிகச் சிறந்த உதாரணமாக நம்முன்னால் இருக்கின்றது. அப்படியிருந்தும் இந்தக் கதையை ரஞ்சித் அவருக்குள் இருக்கும் கனவான மாய யதார்த்தப்பாணியில் சொல்ல முயன்றிருக்கின்றார். சில இடங்களில் தடுக்கியும் வீழ்ந்திருக்கின்றார். ஆனால் அதை மட்டும் முன்வைத்து இத்திரைப்படத்தை நிராகரித்தல் முறையாகாது. இத்திரைப்படத்தின் அரசியலும், அது காட்சிப்படுத்தப்பட்டு விதமும் நம்மை அத்திரைப்படத்தின் பாத்திரத்திரங்களின் ஒன்றாக எடுத்துச் சென்றதா இல்லையா எனத்தான் பார்ப்பவர்கள் முதல்கேள்வியாக எழுப்பிக் கொள்ளவேண்டும். 


நான் அத்திரைப்படத்தில் உள்நுழைந்தவனாக இருந்தேன். கோலார் தங்க வயலுக்குள் அழைத்துச் சென்றவர்களினூடாக தமிழகத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களாக/கொத்தடிமைகளாக எங்கோ தொலைவில் இருந்த ஜமேய்க்காவுக்கும், பிஜித்தீவுகளுக்கும், மொரிஸியஸிற்கும் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் துயரத்தை மட்டுமில்லை, காப்பிக்கும்/தேயிலைக்கும் ஆசைகாட்டி இலங்கைக்கும்/மலேசியாவுக்கும் அழைத்துச் சென்ற விளிம்புநிலைமனிதர்களின் வாழ்வியலைக் கண்டேன். ஏன் என்னைப் போன்றவர்களின் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் தெறிப்பைக் கூட இதில் கண்டு சற்றுக் கலங்கியிருக்கின்றேன். 


அவர்களுக்கு வறுமையும், சாதி ஒடுக்குமுறையும் இவ்வாறான இடம்பெயர்தலுக்குக் காரணமெனில் நமக்கு போர் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் எல்லாப் புலம்பெயர்வுகளுகு அப்பால் அது எத்தகைய வாழ்வாக இருந்தாலும், சொந்த மண்ணை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிவதென்பதுதான் எத்தகை துயரமானது. 


அதனால்தான் தங்கலான் 'எனது மண் எமது உரிமை' என்று கடைசிவரை போராடுகின்றான். அதன்மூலமே தனது ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடமுடியும் என்று உறுதியாக நம்பி, அதை மறுக்கும் எவராயினும் ‍அவர்கள் நல்லவர்களாக‌இருந்தாலும்- ‍அவர்களுக்கு எதிராகப் போராடுவதில் தங்கலான் பின்னிற்பதில்லை. இறுதியில் அவன் அடைகின்ற புரிந்துணர்வும்/இலக்கும் தற்காலிகமாக இருந்தாலும், அதுவும் முக்கியமானதே. 


இவ்வாறு பலரின் இடைவிடாத போராட்டங்களின் மூலந்தான் இன்று இந்த நிலைக்கு வந்து நாம் வாழ/சிந்திக்க முடிகின்றது. அத்துடன் எவ்வகையான ஒடுக்குமுறை என்றாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க மட்டுமின்றி, நாம் ஒடுக்குமுறையாளராக மாறக்கூடிய ஒவ்வொரு தருணங்களிலும் நம்மை கவனமாக அவதானிக்கவும் இவ்வாறான படைப்புக்களே நம்மை உந்தித்தள்ளுகின்றன.


**************
(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி)